மயங்க் யாதவ்: ஐ.பி.எல்.லில் மையம் கொண்டுள்ள 156 கி.மீ. வேக புயல் - இந்தியாவுக்கு கிடைத்த புதிய பொக்கிஷம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், க.போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
“மயங்க் யாதவ் வேகப்பந்துவீச்சு உண்மையில் சிறப்பாக இருந்தது. அவரின் வேகப்பந்துவீச்சை நான் எதிர்க்கொண்டபோது எனக்கே வியப்பாக இருந்தது. ஆனாலும், அவரின் பந்துவீச்சை எதிர்கொள்ள விரும்பினேன். அவரின் வேகப்பந்துவீச்சு எங்களை தோற்கடித்துவிட்டது”
இது இந்திய அணி வீரரும், பஞ்சாப் கிங்ஸ் கேப்டனுமான ஷிகர் தவண் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் பற்றி சிலாகித்து கூறியது.

பட மூலாதாரம், Getty Images
அது மட்டுமல்ல ஆஸ்திரேலிய ஜாம்பவான் டேல் ஸ்டெயின், ஆஸ்திரேலிய புயல் பிரட் லீ, இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் உள்ளிட்ட பலரும் இந்திய அணிக்கு அதிவேகப் பந்துவீச்சாளர் கிடைத்துவிட்டார் என்று மயங்க் யாதவ் பந்துவீச்சைப் பார்த்து புகழ்ந்திருந்தனர்.
இந்திய அணிக்கு பும்ரா, ஷமி, சிராஜ் ஆகிய வேகப்பந்துவீச்சாளர்கள் இருந்தபோதிலும் இவர்களின் சராசரி வேகம் என்பது மணிக்கு 135 கி.மீ வேகத்தில் பந்துவீசுவது தான்.
சமீபத்திய கண்டுபிடிப்பாக சன்ரைசர்ஸ் அணியில் உம்ரான் மாலிக் 150 கி.மீ வேகத்தில் பந்துவீசினாலும் அவரின் பந்துவீச்சில் கட்டுப்பாடு, ஒழுக்கம், துல்லியத்தன்மை, லைன்-லென்த்தை பின்பற்றுவது போன்றவை பெரும்பாலும் இருப்பதில்லை.
அதிவேகம், துல்லியம் இரண்டும் கலந்து ஐபிஎல்லில் எதிரணிகளை மயங்க் யாதவ் மிரளச் செய்வது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச வேகம் எவ்வளவு?
ஐபிஎல் வரலாற்றில் ஷான் டெய்ட், பிரட்லீ, பெர்குஷன், நோர்க்கியா, உம்ரான் மாலிக், ஜோப்ரா ஆர்ச்சர் என பல வேகப்பந்துவீச்சாளர்கள் வந்து விளையாடினாலும் மயங்க யாதவ் போல் நிலைத்தன்மை கொண்ட வேகம், துல்லியம் இருந்தது இல்லை.
ஐபிஎல் தொடரில் அதிகபட்சமாக ராஜஸ்தான் அணிக்காக ஆடிய ஷான் டெய்ட் 157 கி.மீ வேகத்தில் வீசியுள்ளார், அதன்பின் நியூசிலாந்து பந்துவீச்சாளர் லாக்கி பெர்குஷன் 157 கி.மீ வேகத்தில் வீசியுள்ளார். அடுத்ததாக உம்ரான் மாலிக்(157) நோர்க்கியா(156.2) வேகத்தில் வீசியுள்ளனர்.
கடைசியாக ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மயங்க் அகர்வால் வீசிய வேகம் 156.8 கி.மீ.
துல்லியத்தன்மை, கட்டுக்கோப்பு அதிகம்
உம்ரான் மாலிக் 150 கி.மீ வேகத்தில் பந்துவீசும்போது, பெரும்பாலும் அவரின் பந்து அவுட் ஸ்விங்கிலேயே செல்லும். இவ்வாறு செல்லும் பந்துகளை பேட்டர்கள், பந்தின் வேகத்தின் போக்கிலேயே பேட்டை வைத்து தட்டினாலே சிக்ஸர் அல்லது பவுண்டரி எளிதாகச் சென்றுவிடும். அதனால்தான் உம்ரான் மாலிக்கின் டி20 சராசரி 10 ரன்களுக்கு மேல் வைத்துள்ளார்.
வேகப்பந்துவீச்சாளர்கள் அதிவேகமாகப் பந்துவீசும் போது துல்லியத்தன்மையும், லைன்லென்த் மாறாமல் வீசினால் பேட்டர்கள் எதிர்கொண்டு விளையாடுவது கடினம். இதுபோன்ற கட்டுக்கோப்பான, ஒழுக்கமான பந்துவீச்சு 1980களில் மேற்கிந்தியத்தீவுகள் வேகப்பந்துவீச்சாளர்களிடம் இருந்தது.
கரீபியன் ஜாம்பவான்கள் உதாரணம்
கர்ட்லி அம்புரோஸ், கர்ட்னி வால்ஷ், மால்கம் மார்ஷல், ஆன்டி ராபர்ட்ஸ், இயான் பிஷப், மைக்கேல் ஹோல்டிங் உள்ளிட்ட பல பந்துவீச்சாளர்களிடம் இருந்தது. அதனால் தான் கிரிக்கெட் உலகை மேற்கிந்தியத்தீவுகளின் வேகப்பந்துவீச்சாளர்கள் ஆட்டுவித்து, தொடர்ந்து இரு உலகக் கோப்பைகளை வெல்ல முடிந்தது.
வேகப்பந்துவீச்சில் அதிவேகமும், துல்லியத்தன்மையோடும், லைன்லென்த்தில் பந்துவீசும் பந்துவீச்சாளர்கள் குறைந்துவரும் நிலையில் அத்திபூத்தார் போல் இந்திய அணிக்கு கிடைத்துள்ள வீரர் மயங்க் யாதவ்.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக அறிமுகமாகிய மயங்க் யாதவ் முதல் பந்தை மணிக்கு 147 கி.மீ வேகத்தில் வீசத் தொடங்கி படிப்படியாக தனது வேகத்தை அதிகரித்து 156 கிமீ வேகத்தில் வீசினார். 2024ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் மயங்க் யாதவ் வீசிய பந்துதான் அதிகபட்ச வேகமாகும்.
லக்னோ சூப்பர் ஜெயிட்ன்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளரான தென் ஆப்பிரிக்கா வீரர் மோர்கல் கூட, மயங்க் யாதவின் பந்துவீச்சைப் பார்த்து மிரண்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
'மயங்க் மீது நம்பிக்கை வைத்தோம்'
மோர்ன் மோர்கல் கூறுகையில் “மயங்க் யாதவ் பந்துவீச்சைப் பார்த்தேன். காற்றில் பந்து சீறிச் செல்கிறது மிரட்சியாக இருக்கிறது. கடந்த சீசனில் விளையாட வேண்டியவர் ஆனால் காயம் காரணமாக விளையாடவில்லை. மயங்க் யாதவின் வேகப்பந்துவீச்சு மீது நம்பிக்கை வைத்துதான் அவரை ஏலத்தில் தக்கவைத்தோம். நல்ல விக்கெட்டாக இருக்கிறது, நன்றாகப் பந்துவீசு முடிந்தவரை யார்கர்கள், பவுன்ஸர்கள், லைன்-லென்த்தில் வீசு என்று அறிவுரை தெரிவித்தேன். அதை சிறிதும் மாறாமல் மயங்க் வீசியது என்னை பிரமிப்பூட்டியது” எனத் தெரிவித்தார்.
வந்தார், வென்றார் மயங்க்
மயங்க் யாதவ் பந்துவீச வருவதற்கு முன் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றியை நோக்கி பயணித்தது. ஷிகர் தவண், பேர்ஸ்டோ அருமையான ஃபார்மில் இருந்தனர். ஆனால், மயங்க் யாதவ் பந்துவீச வந்தபின், அவரின் முதல் ஓவரைத் தவிர மற்ற 3 ஓவர்களிலும் விக்கெட்டை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்தார்.
50 டெஸ்ட்களுக்கு மேல் விளையாடிய அனுபவம் கொண்ட பேர்ஸ்டோ, ஷிகர் தவண் போன்ற பெரிய பேட்டர்கள்கூட, மயங்க் யாதவ் வீசும் பந்தின் வேகத்துக்கு ஏற்ப பேட்டை கொண்டுவர முடியாமல் சிரமப்பட்டனர். அதனால்தான், பேர்ஸ்டோ தனக்கு வீசப்பட்ட ஷார்ட் பந்தை சமாளிக்க முடியாமல் மூக்கு மேல் ராஜாவாக கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
மயங்க் யாதவ் பந்துவீச்சில் இருக்கும் சிறப்பம்சம் என்னவெனில் அவரின் பந்துவீச்சில் அதிவேகத்தோடு, துல்லியத்தன்மை, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது, பெரும்பாலான பந்துகளை பேட்டர்களின் இடுப்பு வரை இன்ஸ்விங்காக வீசுவதுதான். இவ்வாறு பந்துவீசும்போது, பேட்டர்கள் ரன்சேர்க்க கடுமையாகத் திணறுவார்கள், ஒரு கட்டத்தில் நெருக்கடி முற்றி, பெரிய ஷாட்டுக்கு முயலும்போது கிளீன் போல்ட் அல்லது கேட்ச் கொடுத்து வெளியேறுவார்கள்.

பட மூலாதாரம், SPORTZPICS
யார் இந்த மயங்க் யாதவ்?
புதுடெல்லியைச் சேர்ந்த மயங்க் யாதவ் 2002, ஜூன் 17ம் தேதி பிறந்தார். இவரின் தந்தை பிரபு யாதவ். ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரும் தீவிரமான கிரிக்கெட் ரசிகர். அதிலும் மேற்கிந்தியத்தீவுகள் வேகப்பந்து ஜாம்பவான் கர்ட்லி ஆம்புரோஸ், வால்ஷ் ஆகியோரின் தீவிர ரசிகராக இருந்தவர். தனது மகனையும் கரீபியன் வேகப்புயல்கள் ஆம்புரோஸ் போன்று உருவாக்க வேண்டும் என தீவிரமான வேட்கையுடன் தயார் செய்துள்ளார்.
மேற்கு டெல்லியில் உள்ள மோதி நகரில் தான் மயங்க் யாதவ் குடும்பம் வசித்து வருகிறது. மோதி நகருக்கு அருகே தான் விராட் கோலியும் வளர்ந்தார். மோதி நகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் தான் தொடக்கத்தில் மயங்க் யாதவுக்கு அவரின் தந்தை பந்துவீச பயிற்சி அளித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
'கரீபியன் விதையை விதைத்தேன்'
மயங்க் யாதவ் குறித்து அவரின் தந்தை பிரபு யாதவ் ஒரு ஆங்கில நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் “ நான் தினமும் தொழிற்சாலையில் இருந்து வந்தபின் சிறுவயதில் இருந்தே மயங்க் யாதவிடம் கரீபியன் வேகப்பந்துவீச்சாளர்கள் குறித்த கதைகளைக் கூறுவேன். சிறுவயதில் இருந்தே வேகப்பந்துவீச்சுக்கான விதையை மயங்க் மனதில் விதைத்துவிட்டேன்."
"ஆம்புரோஸ், வால்ஷ் போன்று நீயும் ஒரு வேகப்பந்துவீச்சாளராக மாற வேண்டும், உன் பந்துவீச்சைப் பார்த்து பேட்டர்கள் அஞ்ச வேண்டும் என்று சொல்லி இருக்கிறேன். டெல்லி வெங்கடேஷ்வரா கல்லூரி அருகே இருக்கும் சோனெட் கிளப்பில் மயங்க் பந்துவீசி பயிற்சி எடுப்பதை தொலைவில் இருந்து ரசித்துவிட்டு வீடு திரும்புவேன்."
"ஆம்புரோஸை பார்த்து ஏன் சர்வதேச பேட்டர்கள் அஞ்சினார்கள் தெரியுமா? ஏனென்றால், அவரின் பந்து பேட்டர்களின் தலையை பதம் பார்த்துவிடும். அந்த பயத்தை நீயும் விதைக்க வேண்டுமென்றால், உருவாக்க வேண்டுமென்றால் இப்போதிருந்து பயிற்சி எடு என்று மயங்கிடம் தெரிவிப்பேன்."
"சிறுவயதில் டெல்லி சுற்றுவட்டாரத்தில் மயங்க் பந்துவீச்சு என்றாலே பேட்டர்கள் அச்சப்படுவார்கள். அவருக்கு செல்லமாக 'தலைக்கு வீசும் பந்துவீச்சாளர்' என்று பெயரும் வைத்தனர்” எனத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், SPORTZPICS
தந்தை-மகனுக்கும் சண்டை
மயங்க் யாதவுக்கும் அவரின் தந்தை பிரபு யாதவுக்கும் அடிக்கடி சண்டை வரும். அதாவது மயங்க் யாதவ், தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயினின் ரசிகர்கள், மயங்க் தந்தை பிரபு, ஆம்புரோஸ் ரசிகர். இரு பந்துவீச்சாளர்களில் யார் சிறந்தவர் என்று மயங்கிற்கும், அவரின் தந்தைக்கும் அடிக்கடி சண்டை வரும் என்று பிரபு யாதவ் தெரிவித்தார்.
ரிஷப் பந்த் பயிற்சியாளர் அளித்த வாய்ப்பு
மயங்க் யாதவ் சிறுவயது குறித்து அவரின் தந்தை பிரபு யாதவ் கூறுகையில் “என் மகன் மயங்க், 14 வயதுக்குட்பட்டோர், 16 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளி்ல் விளையாடவில்லை. அவர் நேரடியாக ஏ லிஸ்ட் போட்டிகளில் பங்கேற்றார். மயங் யாதவ் பந்துவீச்சு வேகத்தைப் பார்த்த ரிஷப் பந்த் பயிற்சியாளர் தராக் சின்ஹா அவரை அழைத்துச் சென்று வாய்ப்பளித்தார்” எனத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
சர்வீசஸ் வாய்ப்பை மறுத்த மயங்க்
டெல்லியில் சோனெட் கிளப்பி்ல்தான் மயங்க் யாதவ் தொடக்கத்தில் விளையாடி வந்தார். அதன் பின்பு தான் ஏ லிஸ்ட் போட்டிகளில் பங்கேற்றார். இந்த சோனெட் கிளப் நடத்திவரும் தேவந்தர் சர்மா கூறுகையில் “மயங்க் யாதவிடம் வேகப்பந்துவீச்சு எனும் திறமை இருப்பதை கண்டறிந்து வெளிக்கொண்டு வந்தவர் தராக் சின்ஹா தான். ரிஷப்பந்த், மயங்க் யாதவ் இருவரையும் பிரித்துப் பார்த்தது இல்லை.
மயங்க் யாதவுக்கு சர்வீசஸ் அணியிலும் விளையாட தாரக் சின்ஹா வாய்ப்பு பெற்றுக் கொடுத்தார், வேலையும் வாங்கித் தருவதாக உறுதி தெரிவித்தார். 3 விதமான ஃபார்மெட்டிலும் விளையாட வைப்பதாக தாரக் சின்ஹா உறுதியளித்தார். ஆனால், அதை மயங்க் அகர்வால் ஏற்க மறுத்துவிட்டார்.
ஆனால், துரதிர்ஷ்டமாக கொரோனா 2வது அலையில் 2021, நவம்பர் மாதம் தாரக் சின்ஹா காலமாகிவிட்டார். ஆனால், அவர் இறந்தபின் தனது பயிற்சியாளர் தாரக் சின்ஹாவின் ஆசையான டெல்லி அணிக்கு விளையாடும் கனவை மயங்க் யாதவ் நிறைவேற்றினார்.
சண்டிகரில் நடந்த விஜய் ஹசாரே கோப்பையில் டெல்லி அணிக்காக மயங்க் யாதவ் அறிமுகமாகினார். கடைசி இரு ஓவர்களில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவை என்றபோது, மயங்க் 49-வது ஓவரை மெய்டனாக வீசி அணியை வெற்றி பெறச் செய்தார்” எனத் தெரிவித்தார்

பட மூலாதாரம், Getty Images
'தாரக் சின்ஹா கடவுள்'
தாரக் சின்ஹா குறித்து மயங்க் யாதவ் தந்தை பிரபுயாதவ் கூறுகையில் “தாரக் சின்ஹா எனக்கு கடவுள் போன்றவர். அவர்தான் என் மகனை இந்த அளவு வளர்த்தெடுத்தவர். கொரோனா காலத்தில் எனக்கு சரியான வேலையும், ஊதியமும் இல்லை. என் மகனை கோடைகால வகுப்பில் சேர்த்து பயிற்சி அளித்து ரூ.65 ஆயிரம் செலவிட்டது தாரக் சின்ஹா தான். என்னிடம் ரூ.20 ஆயிரம் தான் இருந்தது. அதை தாரக் சின்ஹாவிடம் திருப்பிக் கொடுத்தேன். ஆனால் அவர் அதை வாங்க மறுத்துவிட்டு, இந்த முறை என்னுடைய பணத்தை செலவிடுகிறேன் என்றார்” எனத் தெரிவித்தார்.
மயங்க் யாதவின் அறிமுகம்
மயங்க் யாதவின் தொழில்முறை கிரிக்கெட் 2022ம் ஆண்டில்தான் தொடங்கியுள்ளது. 2022ம் ஆண்டில் அக்டோபரில் டெல்லி அணிக்காக டி20 போட்டியில் மயங்க் யாதவ் அறிமுகமாகி, மணிப்பூர் அணிக்கு எதிராக களமிறங்கினார். அதன்பின் லிஸ்ட் ஏ பிரிவில் டெல்லி அணிக்காக மயங்க் விளையாடியுள்ளார்.
ஒரே ஒரு முதல் தரப் போட்டியில் டெல்லி அணியில் விளையாடிய மயங்க், மகாராஷ்டிரா அணிக்கு எதிராக விளையாடியுள்ளார். 2023ம் ஆண்டில் ஐபிஎல் ஏலத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி ரூ.20 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது.
ஆனால், காயம் காரணமாக ஒரு போட்டியில்கூட விளையாடாமல் விலகினார். இருப்பினும் மயங்க் யாதவின் வேகப்பந்துவீச்சு மீது லக்னோ அணிக்கு தீவிரமான நம்பிக்கை இருந்ததால், ஏலத்தில் அவரை தக்கவைத்தது.

பட மூலாதாரம், Getty Images
'சர்வீசஸ் வாய்ப்பை நிராகரித்தேன்'
டெல்லி அணிக்காக மட்டுமே விளையாட வேண்டும் என்ற தீவிரமான எண்ணம் கொண்டவர் மயங்க் யாதவ். அது குறித்து அவர் கூறுகையில் “என்னுடைய ஆட்டத்தைப் பார்த்த சர்வீசஸ் அணி எனக்கு அணியில் இடமும் வேலையும் தருவதாக கூறினார்கள். நான் ஒரு சில பந்துகளும், பவுன்சர்களும் தான் வீசியிருந்தேன். என்னுடைய திறமையில் 50 சதவீதத்தைத் தான் வெளிப்படுத்தினேன். எனக்கு வேலையும், அணியில் இடமும் தருவதாக கூறிய அவர்களின் வேண்டுகோளை நிராகரித்தேன். டெல்லி நான் வளர்ந்த மண் அந்த அணிக்காகத்தான் விளையாடுவேன் என்று கூறி டெல்லிக்காக களமிறங்கினேன்." என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "எனக்கு சிறுவயதில் இருந்தே வேகம் என்றால் மிகவும் பிடிக்கும். விமானம், சூப்பர் பைக் அல்லது ராக்கெட் வேகத்தோடு எது இருந்தாலும் எனக்குப் பிடிக்கும். அதனால்தான் 155 கி.மீ வேகத்தில் பந்துவீசுவதை விரும்பினேன். முதல் முறையாக 156 கி.மீ வேகத்தை நெருங்கி இருக்கிறேன். கடந்த 2 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் எனது முதல் பந்தை எவ்வாறு வீசுவது என்று கற்பனை செய்திருந்தேன். அதனால்தான் முதல் பந்தை வீசும்போது நான் பதற்றப்படவில்லை” எனத் தெரிவித்தார் மயங்க் யாதவ்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












