கால்பந்து கோல் கம்பம் மரண தண்டனையை நிறைவேற்றும் தூணாக மாறியது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், நைமா சயீத் சலாஹ்
- பதவி, மொகடிஷு, சோமாலியா
(எச்சரிக்கை: இந்தக் கதையின் சில விவரங்கள் உங்களுக்கு வருத்தம் அளிக்கலாம்.)
சோமாலியாவின் தலைநகரான மொகடிஷு கடற்கரையில் ஆறு பெரிய கான்கிரீட் தூண்கள் நிற்கின்றன. அருகில் இந்தியப் பெருங்கடலின் பிரகாசமான நீல அலைகள் மோதுகின்றன. ஆனால் இந்த அலைகள் இதயத்தை வலிக்கச் செய்யும் சில நிகழ்வுகளுக்கு சாட்சியாகவும் உள்ளன.
பாதுகாப்புப் படையினர் யாரையாவது கைது செய்து இங்கு அழைத்து வரும் போதெல்லாம், பிளாஸ்டிக் கயிறுகளால் கோல் கம்பங்களில் அவர்களை கட்டி, முகத்தை கருப்புத் துணியால் மூடி பின்னர் அவர்களை தலையில் சுடுவார்கள்.
சிறப்புப் பயிற்சி பெற்ற துப்பாக்கிச் சூடு படையைச் சேர்ந்தவர்களின் முகங்களும் மறைக்கப்பட்டிருக்கும்.
சுடப்பட்ட பிறகு அவர்களின் தலைகள் குனிந்தாலும் உடல் தூணில் தொங்கியபடியே இருக்கும்.
இவர்களில் சிலர் அல்-ஷபாப் இஸ்லாமியக் குழுவின் ராணுவ நீதிமன்றத்தின் தண்டனை பெற்றவர்களாக இருப்பார்கள். சோமாலியாவின் பெரும்பகுதியை அல்-ஷபாப் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளது. எனவே அந்நாட்டில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக அல்-ஷபாப் குறித்து அச்சம் நிலவுகிறது.
தண்டனை விதிக்கப்பட்டவர்களில் சிலர் ராணுவத்தினர். சிவிலியன்கள் அல்லது தங்கள் தோழர்களை கொன்றதற்காக குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்கள் இவர்கள். சில சமயங்களில் சில கடுமையான குற்றங்களுக்காக சாமானிய குற்றவாளிகளையும் நீதிமன்றம் தண்டிக்கும்.
கடந்த ஆண்டு இதே கடற்கரையில் 25 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
மிக சமீபத்தில் மார்ச் 6 ஆம் தேதி சையத் அலி மோலிம் தாவூத் என்ற நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தனது
மனைவியை அறையில் அடைத்து வைத்து தீ வைத்து எரித்த குற்றத்திற்காக அவருக்கு தண்டனை அளிக்கப்பட்டது.
விவாகரத்து கேட்ட மனைவியை உயிருடன் எரித்துக்கொன்றதாக தாவூத் கூறியிருந்தார்.
ஹமர் ஜஜாப் மாவட்டத்தில் ஒரு இறைச்சிக் கூடத்திற்குப் பின்னால் சுமார் 50 குடும்பங்கள் வசிக்கும் ஒரு சிறிய குடியிருப்பு உள்ளது. இங்கு ஒரு காலத்தில் போலீஸ் அகாடமி இருந்தது.

பட மூலாதாரம், AFP
பெற்றோர் எதற்காக பயப்படுகிறார்கள்?
"என்னுடைய ஐந்து மகன்களும் பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்தவுடன் கால்பந்து விளையாட கடற்கரைக்குச் செல்வார்கள்" என்று பழைய காவல் மையத்தின் இடத்தில் கட்டப்பட்ட குடியிருப்பில் வசிக்கும் ஃபார்துன் முகமது இஸ்மாயில் கூறுகிறார்.
"அவர்கள் கோல் கம்பங்களை மரண தண்டனையின் தூண்களாகப் பயன்படுத்துகிறார்கள்," என்று அவர் குறிப்பிட்டார்.
"என் குழந்தைகளின் உடல்நிலை குறித்து நான் கவலைப்படுகிறேன். ஏனென்றால் மக்கள் சுடப்பட்ட இடத்தில் அவர்கள் விளையாடுகிறார்கள். அங்கு ரத்தம் பரவியிருக்கும். தண்டனைக்குப் பிறகு அந்த இடம் சுத்தம் செய்யப்படுவதில்லை," என்றார் அவர்.
இறந்தவர்கள் அதே கடற்கரையில் அடக்கம் செய்யப்படுவார்கள்.
"என் குழந்தைகள் மொகாதிஷுவில் பிறந்ததால் வன்முறை மற்றும் பாதுகாப்பின்மைக்கு இடையில் வளர்கிறார்கள். இந்த நகரம் 33 ஆண்டுகளாக வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.
குற்றவாளிகளின் ரத்தத்திற்கு அருகே குழந்தைகள் விளையாடுவது வருத்தம் அளிக்கிறது என்று அவரும், மற்ற பெற்றோரும் கூறுகிறார்கள்.
ஆனால் பெற்றோர்கள் அன்றாட வேலைகளில் மும்முரமாக இருப்பதாலும், குழந்தைகளைக் கவனிக்க நேரமில்லாததாலும் குழந்தைகள் கடற்கரையில் விளையாடுவதைத் தடுப்பது கடினம்.
இந்த மரண தண்டனைகள் வழக்கமாக காலை ஆறு முதல் ஏழு மணிக்குள் நிறைவேற்றப்படும்.
தண்டனை வழங்கப்படுவதை பார்க்க செய்தியாளர்கள் மட்டுமே அழைக்கப்படுகிறார்கள். ஆனால் குழந்தைகள் உட்பட உள்ளூர் மக்கள் அங்கு நின்று பார்ப்பதற்கு எந்த தடையும் இல்லை.

பட மூலாதாரம், NAIMA SAID SALAH
கால்பந்து கோல் கம்பம் மரண தண்டனைக்கான தூணாக மாறியது எப்படி?
சியாத் பாரே 1975 இல் சோமாலியாவின் அதிபராக பதவியேற்றபோது, சுற்றியுள்ள மக்கள் பார்க்கும் வகையில் இந்த இடத்தை மரண தண்டனைக்கான இடமாகத் தேர்ந்தெடுத்தார்.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் வாரிசுரிமையில் சம உரிமை அளிக்கும் புதிய குடும்பச் சட்டத்தை எதிர்த்த சில இஸ்லாமிய மதகுருக்களை சுடுவதற்காக அவரது ராணுவ அரசு இந்தத் தூண்களைக் கட்டியது.
இன்று அந்த தூண்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. இருப்பினும் மக்கள் கூட்டம் தண்டனையை பார்ப்பதற்கு முன்புபோல ஊக்குவிக்கப்படுவதில்லை.
இந்த மைதானத்தில் விளையாடும் குழந்தைகளும் தோட்டாக்களுக்கு பலியாகி விடுவார்களோ என்று பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர்.
தங்கள் குழந்தைகள் போலீஸ் மற்றும் ராணுவ வீரர்களை கண்டு பயப்படுவதாக அவர்கள் கூறுகிறார்கள்.
மைதானத்தில் இருந்து சில மீட்டர் தொலைவில் வசிக்கும் ஃபதுமா அப்துல்லாஹி காசிம், "எனக்கு இரவில் தூக்கமே வராது. மன அமைதி இல்லாமல் இருக்கிறேன்," என்று கூறுகிறார். "சில நேரங்களில் அதிகாலையில் துப்பாக்கி சத்தம் கேட்கும். யாரோ ஒருவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டதை தெரிந்துகொள்வேன்,” என்றார் அவர்.
"நான் என் குழந்தைகளை வீட்டிற்குள்ளேயே வைத்திருக்கிறேன். நாங்கள் சோகமாகவும் ஆதரவற்றவர்களாகவும் இருக்கிறோம். நான் வெளியே சென்று மணலில் ரத்தம் சிந்தியிருப்பதை பார்க்க விரும்பவில்லை," என்று அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
விடுமுறை நாள்களில் சேரும் மக்கள் கூட்டம்
மக்கள் பலர் அச்சத்துடன் இருந்தாலும், பெரும்பாலான சோமாலியர்கள் மரண தண்டனையை ஆதரிக்கின்றனர், குறிப்பாக அல்-ஷபாப் உறுப்பினர்கள்.
ஆனால் காசிம் இதை எதிர்க்கிறார். 2022 அக்டோபரில் மொகதிஷுவில் நிகழ்ந்த இரட்டை கார் குண்டுவெடிப்பில் அவரது 17 வயது மகன் கொல்லப்பட்டார். ராணுவ பாரில் சுத்தம் செய்பவராக அவர் பணியாற்றிவந்தார்.
இந்த சம்பவத்தில் 120 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 300 பேர் காயமடைந்தனர். இதற்காக அல்-ஷபாப் மீது குற்றம் சாட்டப்பட்டது.
"மரண தண்டனை வழங்கப்படுபவர்களை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியாது. ஆனால் இந்த முறை மிகவும் மனிதாபிமானமற்றது என்று நான் நினைக்கிறேன்,"என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தக் கடற்கரையில் உள்ள தூண்களுக்கு அருகில் சுற்றுவட்டாரப் பிள்ளைகள் விளையாடுவது மட்டுமின்றி சோமாலியாவில் விடுமுறை தினமான வெள்ளிக்கிழமைகளில் நகரின் பிற பகுதிகளிலிருந்தும் மக்கள் இங்கு வருகிறார்கள்.
"நானும் எனது சகோதரனும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கடற்கரைக்கு நீந்தவும், கால்பந்து விளையாடவும் வருகிறோம். என் சகோதரியும் வருவாள். நன்றாக உடை அணிந்து வரும் அவளை நாங்கள் படம் எடுக்கும் போது அவள் அழகாகத் தெரிவாள்,” என்று அவர்களில் ஒருவரான 16 வயது அப்திரஹ்மான் ஆதம் கூறினார்.

பட மூலாதாரம், AFP
அவருக்கும், இங்கு வரும் அவரைப் போன்ற மற்றவர்களுக்கும் இங்கு மரண தண்டனை கொடுக்கப்படுகிறது என்று தெரியும். கல்லறைகள் எங்கே உள்ளன என்றும் தெரியும். ஆனாலும் அவர்கள் இங்கு வருகிறார்கள்.
இடம் அழகாக இருப்பது அவர்களைப் பொருத்தவரை மிகவும் முக்கியம்.
"இந்தப் படங்களைப் பார்க்கும் போது என் வகுப்புத் தோழர்கள் பொறாமைப்படுகிறார்கள். மரண தண்டனை விதிக்கப்படும் இடத்தில் நாங்கள் உல்லாசமாக இருக்கிறோம் என்பது அவர்களுக்கு தெரியாது," என்கிறார் ஆதம்.
(நைமா சயீத் சலாஹ், சோமாலியாவில் மகளிர் மட்டுமே பணியாற்றும் ஒரே ஊடக நிறுவனமான பிலான் மீடியாவில் செய்தியாளர்)
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)








