தோனியிடம் சிக்காமல் தப்பிய டெல்லி அணி, சுனில் நரேனிடம் சரணடைந்தது ஏன்?

டெல்லி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், க.போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தோல்வி உறுதி எனத் தெரிந்தபின் அந்த ஆட்டத்தில் விளையாட வீரர்களுக்கும் ஆர்வம் இருக்காது, பார்க்கும் ரசிகர்களுக்கும் ஆர்வம் குறைந்துவிடும். அதுபோன்ற ஆட்டம்தான் நேற்று ஹைதராபாத்தில் நடந்தது. பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்துமே ஒருதரப்பாகவே நடந்து முடிந்தது.

ஒருநாள் போட்டியில் அடிக்க வேண்டிய ‘டீசன்ட்டான ஸ்கோரை’, டி20 தொடரில் அடித்தபிறகு, அதை சேஸிங் செய்ய முற்பட்டால் என்ன ஆகும். எதிரணி நிச்சயமாக நம்பிக்கை இழந்து தோல்விமுகம் காட்டி ஓடும். அதுதான் கொல்கத்தா - டெல்லி இடையேயான ஆட்டத்தில் நடந்தது.

ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 16-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 106 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் சேர்த்தது. 273 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 17.2 ஓவர்களில் 166 ரன்களுக்கு ஆட்டமிழந்து 106 ரன்களில் தோல்வி அடைந்தது.

ரஸல் விழுந்தார், வரலாறு தப்பியது

இந்த ஐபிஎல் டி20 வரலாற்றில் 2ஆவது அதிகபட்ச ஸ்கோரை கொல்கத்தா அணி நேற்று பதிவு செய்தது. சன்ரைசர்ஸ் அணி அடித்த வரலாற்று ஸ்கோரான 277 ரன்களை கொல்கத்தா அணி நேற்று முறியடித்திருக்கும். கடைசி ஓவரில் ஆந்த்ரே ரஸலுக்கு யார்க்கர் வீசி கீழே விழச்செய்து இஷாந்த் சர்மா ஆட்டமிழக்கச் செய்யாமல் இருந்தால், கொல்கத்தா அணி சன்ரைசர்ஸ் ஸ்கோரை நிச்சயமாக முறியடித்திருக்கும்.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் அதிகபட்ச ஸ்கோர் 2018ம் ஆண்டில் இந்தூரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 218 ரன்கள் சேர்த்ததுதான்.

272 ரன்கள் எனும் ஸ்கோர் எதிரணிக்கு தோல்வியை பரிசளிக்கும் இலக்குதான். நரேன் 85(39பந்துகள்), ரகுவன்ஷி54 (27பந்துகள்), ரஸல்41 (19 பந்துகள்) ரிங்கு சிங் 26(8பந்துகள்) என கொல்கத்தா ஸ்கோர் உயர்வுக்கு இவர்கள்தான் காரணம். இந்த 4 பேட்டர்களுமே நேற்று 200 க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில்தான் பேட் செய்தனர்.

இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி 3 ஆட்டங்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் நிகர ரன்ரேட்டில் 2.518 என வலிமையாக முதலிடத்துக்கு முன்னேறியது. டெல்லி கேபிடல்ஸ் அணி 3 ஆட்டங்களில் ஒரு வெற்றி, 2 தோல்விகளுடன், நிகர ரன்ரேட்டில் மைனஸ் 1.347புள்ளிகளுடன் 9-வது இடத்துக்கு சரிந்துள்ளது. 106 ரன்களில் டெல்லி அணி தோற்றது அந்த அணியின் நிகர ரன்ரேட்டை மோசமாகக் குறைத்துவிட்டது.

ஐபிஎல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேபிடல்ஸ்

பட மூலாதாரம், Getty Images

ஆட்டநாயகன் நரைன்

கடந்த போட்டியில் பேட்டிங்கில் ஜொலித்து கேமியோ ஆடி அரைசதத்தை தவறவிட்ட சுனில் நரேன் இந்த முறை அதைச் சரியாகச் செய்தார். சிக்ஸர், பவுண்டரி எனப் பறக்கவிட்ட நரேன் 21 பந்துகளில் அரைசதம் என 85 ரன்கள்,ஒரு விக்கெட் எடுத்து ஆட்டநாயகன் விருது வென்றார்.

சுனில் நரைன் அமைத்துக் கொடுத்த வலிமையான அடித்தளத்தில்தான் கொல்கத்தா அணியால் பயணிக்க முடிந்தது. பவர்ப்ளே ஓவருக்குள் நரைன் 3ஆவது முறையாக அரைசதம் அடித்துள்ளார். டேவிட் வார்னர்தான் பவர்ப்ளே ஓவருக்குள் அதிகபட்சமாக 6 முறை அரைசதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுனில் நரைன் நேற்று சேர்த்த 85 ரன்கள்தான் அவரின் டி20 வாழ்க்கையில் அதிகபட்ச ஸ்கோர். இதற்குமுன் 2017ல் பர்படாஸ் டிரிடென்ட்ஸ் அணிக்கு எதிராக 79 ரன்கள் சேர்த்ததே அவரின் அதிகபட்சமாக இருந்தது.

டெல்லி

பட மூலாதாரம், Getty Images

‘நினைத்துப் பார்க்காத ஸ்கோர்’

கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறுகையில் “ நாங்கள் தொடக்கத்தில் பேட் செய்தவிதத்தை பார்த்தால் 200 ரன்கள் சேர்ப்போம் என்று நினைத்தேன், ஆனால் 270க்குமேல் ரன்களை நினைத்துப்பார்க்கவில்லை. பவர்ப்ளேயில் நரைன் அடித்து ஆட வேண்டும் அவர்இல்லாவிட்டால் ரகுவன்ஷி ஆட வேண்டும் என திட்டம் வகுத்திருந்தோம்.

இளம் வீரர் ரகுவன்ஷி அச்சமில்லாத பேட்டர், சூழலை அறிந்து சிறப்பாக பேட் செய்கிறார். அவரின் ஷாட்கள் அனைத்தும் தேர்ந்த, முதிர்ச்சி அடைந்த பேட்டர் போன்று இருந்தது. பந்துவீச்சாளர்களும் அவர்களின் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டனர். வெற்றிக்கு அனைவரும் பங்களிப்பு செய்தனர். 3 வெற்றிகள் பெற்றாலும் அடுத்தடுத்து தொடர்ந்து பயணிக்க வேண்டியுள்ளது. இதே வெற்றி தொடரும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

கொல்கத்தா

பட மூலாதாரம், Getty Images

சுவாரஸ்ய புள்ளிவிவரங்கள்

இந்த ஆட்டத்தில் மட்டும் விசாகப்பட்டினம் மைதானத்தில் கொல்கத்தா அணி பேட்டர்கள் 18 சிக்ஸர்களை விளாசியதுதான் ஒரு இன்னிங்ஸில் அதிகபட்சமாகும். இதற்கு முன் 2019-இல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே 17 சிக்ஸர்களை விளாசி இருந்தது.

இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி பவர்ப்ளே ஓவரில் விக்கெட் இழப்பின்றி 88 ரன்கள் குவித்தது, ஐபிஎல் வரலாற்றில் அந்த அணியின் 2வது அதிகபட்சமாகும். இதற்கு முன் 2017ல் ஆர்சிபி அணிக்கு எதிராக 105 ரன்களை கொல்கத்தா அணி பதிவு செய்திருந்தது.

ஐபிஎல் வரலாற்றில் முதல் 10 ஓவர்களில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த 3வது அணியாக கொல்கத்தா அணி மாறியது. இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி 10 ஓவர்களில் 135 ரன்களைச் சேர்த்தது. இதற்கு முன் சன்ரைசர்ஸ் அணி 148 ரன்களும், மும்பை அணி 141 ரன்களும் 10 ஓவர்களில் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேபிடல்ஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரகுவன்ஷி நேற்றைய ஆட்டத்தில் 25 பந்துகளில் அரைசதம் அடித்தார்

18 வயது ரகுவன்ஷி அடித்த அரைசதம்

கொல்கத்தா அணியில் நேற்று களமிறங்கி அரைசதம் அடித்த ரகுவன்ஷிக்கு 18வயது முடிந்து 303 நாட்கள் ஆகிறது.அதாவது இளம் வயதில் அறிமுகமாகி அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியிலில் இணைந்து பெருமை பெற்றார். இதற்கு முன் 2008ல் ஸ்ரீவத் கோஸாமி 19 வயதில் அரைசதம் அடித்திருந்தார்.

ஒட்டுமொத்தமாக ஐபிஎல் வரலாற்றில் இளம் வயதில் களமிறங்கி அரைசதம் அடித்த 7-ஆவது பேட்டராக ரகுவன்ஷி இடம் பெற்றார். கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை இளம் வயதில் அறிமுகமாகி அரைசதம் அடித்த 2வது பேட்டர் ரகுவன்ஸி. சுப்மான் கில் 18வயது 237 நாட்களில் கொல்கத்தா அணியில் அறிமுகமாகினார்.

அதேபோல ரகுவன்ஸி நேற்றைய ஆட்டத்தில் 25பந்துகளில் அரைசதம் அடித்தார். அறிமுக ஆட்டத்திலேயே அதிவேகமாக அரைசதம் அடித்த 2வது பேட்டராக ரகுவன்ஸி இடம் பெற்றார். இதற்கு முன், 2008ல் ஜேம்ஸ் ஹோப் அறிமுக ஆட்டத்திலேயே 24 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

ஷாருக் கான்

பட மூலாதாரம், Getty Images

பந்துவீச்சாளர்களின் தோல்வி

டெல்லி பந்துவீச்சாளர்கள் கலீல் அகமது, இசாந்த் சர்மா சிஎஸ்கே அணிக்கு எதிராக சிறப்பாகப் பந்துவீசினார்கள். ஆனால், நேற்றை ஆட்டத்தில் அவர்களின் “லைன் லென்த்”, “பவுன்ஸர்”, “ஷார்ட் பால்” எங்கே போனது எனத் தெரியவில்லை. இருவரும் நரைன் பேட்டிங்கிற்கு கடிவாளம் போட நினைத்தாலும் பந்துகள் பவுண்டரி, சிக்ஸருக்கு பறந்தவாறு இருந்தது.

நரைனுக்கு பவுன்ஸர் பந்துகளை எதிர்த்து பேட் செய்ய வராது, குறிப்பாக ஷார்ட் பவுன்ஸர்களை வீசினால் பொறுமை இழந்து விக்கெட்டுகளை இழந்துவிடுவார். இதுபோன்ற முறைக்கு டெல்லி வேகப்பந்துவீச்சாளர்கள் முயற்சிக்கவேவில்லை. பெரும்பாலான பந்துகளை ஸ்லாட்டிலும், ஆஃப் சைடு விலக்கியும் வீசி, மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். அதிலும் இசாந்த் சர்மா, கலீல் அகமது பந்துவீச்சில் ஸ்விங் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் பேட்டரை நோக்கியும், ஸ்டெம்ப் நோக்கியும் எறிவதுபோன்றுதான் பந்துவீச்சு இருந்தது.

ஐபிஎல் தொடரில் அதிவேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான நோர்க்கியா சிறப்பாகப் பந்துவீசி நரைன், ரகுவன்ஸி பேட்டிங் வேகத்தைக் கட்டுப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் இசாந்த், கலீலை விட மோசமாகப் பந்துவீசி வாங்கிக்கட்டிக்கொண்டார்.

டெல்லி அணியின் பந்துவீச்சு ஒட்டுமொத்தத்தில் மிக மோசமாக அமைந்திருந்தது. கேப்டன் ரிஷப் பந்த் 7 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தி கொல்கத்தா ரன் வேகத்தை கட்டுப்படுத்த முயன்றார். ஆனால் 6 பந்துவீச்சாளர்கள் இரட்டை இலக்க ரன்களைத்தான் சராசரியாக விட்டுக்கொடுத்தனர். கலீல் அகமது, இசாந்த் சர்மா, நோர்க்கியா, சலாம் ஆகிய 4 பேர் சேர்ந்து 192 ரன்களை விட்டுக் கொடுத்தனர். அதாவது ஓவருக்கு சராசரியாக 15 ரன்களை வாரி வழங்கினர்.

ரிஷப்

பட மூலாதாரம், Getty Images

அக்ஸரை பயன்படுத்தாதது ஏன்?

இதில் அக்ஸர் படேல் ஒரு ஓவர் வீசி 18 ரன்கள் கொடுத்ததற்காக அவருக்கு தொடர்ந்து ஓவர்கள் வழங்கப்படாதது தவறான முடிவாகவே கருதப்படுகிறது. அக்ஸர் படேல் சிறந்த விக்கெட் டேக்கிங் பந்துவீச்சாளர், ஒரு ஓவரில் ரன் வழங்கினாலும் அடுத்த ஓவரில் விக்கெட்டுகளை எடுக்கும் திறமை படைத்தவர் அக்ஸர்படேல் அவரை நேற்று சரியாகப் பயன்படுத்தாததால்தான் பேட்டிங்கிலும் களமிறங்கியவுடன் பெரிய ஷாட்டுக்கு முயன்று அதிருப்தியில் டக்அவுட்டாகினார்.

சுமித் குமார், ரஷிக் சலாம் என அனுபவமற்ற பந்துவீச்சாளர்களை டெல்லி கேபிடல்ஸ் பந்துவீசச் செய்தது. அந்த அணியில் லலித் யாதவ் என்ற ஆப்ஸிபின்னர் ஆல்ரவுண்டர் இருக்கிறார் அவரை இதுவரை பயன்படுத்தவில்லை. குல்தீப், அக்ஸர் தவிர்த்து சிறப்பாகப் பந்துவீசக்கூடிய சுழற்பந்துவீச்சாளர்கள் யாரும் இல்லை என்பது பெரிய பலவீனமாகும். ஆர்சிபி அணி எந்தமாதிரியான சிக்கலில் சிக்கி இருக்கிறதோ அதேபோன்ற சிக்கலில் டெல்லி அணியும் மாட்டிக்கொண்டுள்ளது.

ஐபிஎல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேபிடல்ஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 273 ரன்கள் சேஸிங் என்றபோதே டெல்லி அணி தோல்வியை மறைமுகமாக ஒப்புக்கொண்டது

நரைன், ரகுவன்ஷி, ரஸல் வேகம்

கொல்கத்தா அணிக்கு மென்ட்டராக கவுதம் கம்பீர் வந்தபின் அந்த அணியின் போக்கிலும், போட்டியை அணுகும் விதத்திலும் பெரிய மாற்றங்கள் தென்படுகிறது. கடந்த சீசனில் பேட்டிங்கில் ஜொலிக்காத சுனில் நரைன், கடந்த இரு போட்டிகளிலும் அதிரடியான தொடக்கத்தை அளித்து வருகிறார்.

பவர்ப்ளே ஓவர்களை சிறப்பாகப் பயன்படுத்தும் வகையில் நரைன் பேட்டிங் அமைந்துள்ளது. கொல்கத்தா அணி 3.5 ஓவர்களில் 50 ரன்களைக் கடந்தநிலையில் பவர்ப்ளேயில் ஒரு விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் குவித்தது. பில்சால்ட்-நரைன் கூட்டணி 4.3 ஓவர்களில் 60 ரன்கள் சேர்த்து சால்ட் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த ரன்களில் நரைன் அரைசதமும் அடங்கும்.

2வது விக்கெட்டுக்கு நரைன், ரகுவன்ஸி கூட்டணி டெல்லி பந்துவீச்சை துவம்சம் செய்தது. இருவரும் சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு104 ரன்கள் சேர்த்தனர். இருவரும் பேட் செய்யத் தொடங்கியபின், டெல்லி பீல்டர்கள் மைதானத்தில் பீல்டிங் செய்யாமல் பார்வையாளர்கள் மாடத்தில் பீல்டிங் செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். நரைன், ரகுவன்ஸி இருவரும் ஒவ்வொரு பந்துவீச்சாளர்களையும் வெறுத்து ஓடும்வகையில் பவுண்டரி, சிக்ஸர் என விளாசினர். அதிலும் நரைன் தான் சந்தித்த ஒவ்வொரு 3 பந்துகளுக்கும் ஒரு பவுண்டர் என்ற கணக்கில் விளாசினார். மார்ஷ் பந்துவீச்சில் நரைன் 85 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து ஆந்த்ரே ரஸல் களமிறங்கியபின், ரன்ரேட் இன்னும்வேகமாக உயர்ந்தது. டெல்லி பந்துவீ்ச்சை வெளுத்த ரஸல், பவுண்டரி, சிக்ஸர்களாகப் பறக்கவிட்டார். ரகுவன்ஸி(54), ஸ்ரேயாஸ்(18) என விக்கெட்டுகள் சரிந்தாலும் ரஸலின் அதிரடி மட்டும் குறையவில்லை. கடந்த சில போட்டிகளாக பேட்டிங் செய்ய வாய்ப்புபெறாத ரிங்கு சிங் 8 பந்துகளில் 3 சிக்ஸர் உள்பட 26 ரன்களுடன் வெளியேறினார்.

மதம்பிடித்த யானை போன்று களத்தில் ஆக்ரோஷத்துடன் ரஸல் பேட் செய்தார். ரஸலின் பேட்டிங்கைப் பார்த்தபோது, கொல்கத்தா அணி பெரிய ஸ்கோருக்கு முயற்சிக்கும் என ரசிகர்கள் கருதினர். ஆனால் இஷாந்த் சர்மா வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில், துல்லியமான யார்கரை சமாளிக்க முடியாமல் க்ளீன் போல்டாகி, ரஸல் கால் இடறிகீழே விழுந்தார். 19 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்து ரஸல் ஆட்டமிழந்தார், செல்லும்போது இசாந் சர்மா பந்துவீச்சுக்கு கைதட்டல் கொடுத்து சென்றார்.

டெல்லி

பட மூலாதாரம், Getty Images

தோல்வியை ஒப்புக்கொண்ட டெல்லி

273 ரன்கள் சேஸிங் என்றபோதே டெல்லி அணி தோல்வியை மறைமுகமாக ஒப்புக்கொண்டது. மிகப்பெரிய ஸ்கோரை துரத்தும்போது பேட்டர்களிடம் ஒருவிதமான நெருப்பு இருக்க வேண்டும், அந்த நெருப்பு நேற்று ரிஷப் பந்த், ஸ்டப்ஸ் இருவரிடம் மட்டும்தான் வெளிப்பட்டது. வார்னர்(18), பிரித்வி ஷா(10),மார்ஷ்(0),போரெல்(0) அக்ஸர் படேல்(0) என எந்த பேட்டரிடமும் காணப்படவில்லை.

கேப்டன் என்ற பொறுப்புணர்வுடன் தன்னால் முடிந்த பங்களிப்பை ரிஷப் பந்த் அளித்து, 25ப ந்துகளில் 55 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில்5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும். குறிப்பாக வெங்கடேஷ் பந்துவீச்சில் ரிஷப் பந்த் ஒரே ஓவரில் 28 ரன்கள் விளாசியது திருப்புமுனை.

அதேபோல டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் 32 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இருவரும் அடித்த ஸ்கோர்தான் டெல்லி கேபிடல்ஸில் அதிகபட்சமாகும். மற்ற பேட்டர்கள் நம்பிக்கை இழந்து பேட் செய்தனர்.

கொல்கத்தா பந்துவீச்சாளர்களுக்கு அதிகமான அழுத்தத்தை அந்த அணியின் பேட்டர்களும் தரவில்லை, டெல்லி கேபிடல்ஸ் பேட்டர்களும் சிரமம் கொடுக்கவில்லை. கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் ஸ்டார்ஸ், அரோரா, ரஸல், வருண் சக்ரவர்த்தி வீசிய சாதாரண பந்துகளிலேயே விக்கெட்டுகளை தூக்கிக் கொடுத்துவிட்டு டெல்லி பேட்டர்கள் வெளியேறினர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)