பாட்டி குளிப்பாட்டிய குழந்தை பருவ படத்தை பதிவேற்றியதால் ஜிமெயில் கணக்கை முடக்கிய கூகுள் - என்ன காரணம்?

குஜராத்தி பொறியாளரின் கணக்கை முடக்கிய கூகுள்

பட மூலாதாரம், GETTY/NEEL SHUKLA

    • எழுதியவர், பார்கவ பரிக்
    • பதவி, பிபிசி குஜராத்திக்காக

"என்னுடைய பாட்டி சிறுவயதில் என்னைக் குளிப்பாட்டிய போது எடுத்த படத்தைப் பதிவேற்றுவதால் கூகுளுக்கு என்ன பிரச்னை? அந்தக் குழந்தைப் பருவப் புகைப்படத்தால் கூகுள் எனது கணக்கைத் முடக்கியுள்ளது." என்கிறார் அகமதாபாத்தில் வசிக்கும் நீல் சுக்லா என்ற 26 வயது இளைஞர்.

தனது குழந்தைப் பருவத்தின் புகைப்படம் தொடர்பான கூகுள் போன்ற ஒரு மாபெரும் நிறுவனத்தை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் நீல்.

தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப (ICT) பொறியாளராக பணியாற்றுகிறார் நீல் சுக்லா. தனது குழந்தைப் பருவப் புகைப்படத்தை (அவரது பாட்டி அவரைக் குளிப்பாட்டும் புகைப்படம்) டிஜிட்டல் வடிவத்தில் கூகுள் கணக்கில் பதிவேற்றிய பிறகு, அவரது கணக்கை கூகுள் நிறுவனம் முடக்கியது.

குஜராத் உயர் நீதிமன்றத்தில் நீல் தாக்கல் செய்த விண்ணப்பத்தின்படி, படம் ஆபாசமாக உள்ளதா இல்லையா என்பது கூகுள் பயன்படுத்தும் செயற்கை நுண்ணறிவு திட்டம் மூலம் சரிபார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுளில் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மேல்முறையீட்டு மனுக்களின் முடிவும் செயற்கை நுண்ணறிவு திட்டத்தால் தீர்மானிக்கப்பட்டது என்று நீல் தனது விண்ணப்பத்தில் கூறியுள்ளார்.

இது மட்டுமின்றி, கூகுள் கொள்கையின்படி, தொழில்முறை சார்ந்த, தனிப்பட்ட மற்றும் கல்வி தொடர்பான ஆவணங்கள், கூகுள் பே (யுபிஐ) போன்ற நிதி பரிவர்த்தனை வசதி போன்றவற்றின் தரவுகள் அடங்கிய மின்னஞ்சல்களின் தரவை நீக்குமாறும் ஒரு செய்தி கொடுக்கப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனம், குஜராத் அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, குஜராத் காவல்துறையின் சைபர் கிரைம் துறை என பல இடங்களுக்கு எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தும் இந்தப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்காததால், குஜராத் உயர் நீதிமன்றத்தில் நீல் சுக்லே வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த விவகாரத்தில், மாண்புமிகு உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், குறிப்பிட்ட கேள்விகளுக்கு நிறுவனத்தால் பதிலளிக்க முடியாது என்று பிபிசியிடம் கூகுள் தெரிவித்தது.

ஆனால் கூகுள் நிறுவனம் CSAM (Child Sexual Abuse Material- குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகப் பொருள், சிஎஸ்ஏஎம்) உள்ளடக்கம் தொடர்பான தனது கொள்கை மற்றும் திட்டத்தை மேற்கோள் காட்டியதுடன், குழந்தைகள் தொடர்பான சிஎஸ்ஏஎம் அல்லது பாலியல் உள்ளடக்கம் உடனடியாக அகற்றப்பட்டு கணக்கு நிரந்தரமாக முடக்கப்படும் என்றும் கூறியது.

குஜராத்தி பொறியாளரின் கணக்கை முடக்கிய கூகுள்

பட மூலாதாரம், Getty Images

இந்த வழக்கு சர்ச்சையானது ஏன்?

இந்தியாவில் மில்லியன்கணக்கான மக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் தங்கள் கணக்குகள் மூலம் பல்வேறு கூகுள் சேவைகளைப் பயன்படுத்துவதால், விஷயம் நாம் நினைப்பதை விட மிகவும் தீவிரமானது.

இதுபோன்ற பிரச்னைகளுக்கு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்கான புரிதலும் வசதியும் எல்லா மக்களுக்கும் இல்லை. கூகுள் பெரும்பாலும் இந்தச் சேவைகளை இலவசமாக வழங்குகிறது, ஆனால் சில சேவைகளுக்கு மக்களும் நிறுவனங்களும் கூகுளுக்கு பணம் செலுத்துகின்றன.

இது குறித்து நீலின் தந்தை சமீர் சுக்லா கூறும்போது, ​​”இது வாடிக்கையாளருக்கும் நிறுவனத்துக்கும் இடையிலான மோதல் மட்டுமல்ல. மில்லியன்கணக்கான மக்களின் தனியுரிமை மீறப்பட்டதற்கு எதிராக சட்டத்தின் பாதுகாப்பைக் உறுதி செய்வதற்கான வழக்கு இது” என்றார்.

நீல் மற்றும் அவரது குடும்பத்தினரின் கூற்றுப்படி, “கூகுள் மற்றும் அதன் பணியாளர்கள் உங்களின் தனிப்பட்ட தரவை உங்கள் அனுமதியின்றி அணுகலாம். அந்த தரவுகளை தனக்கு ஏற்றவாறு பயன்படுத்தவும் நிறுவனத்தால் முடியும்.

இதுமட்டுமின்றி வழக்கை முன்வைக்க உங்களுக்கு நியாயமான வாய்ப்பை வழங்காமல் உங்கள் கணக்கை முடக்குவதால், உங்களுக்கு நிதி இழப்பு, மன உளைச்சல் மற்றும் உங்கள் சமூக பிம்பத்திற்கு எதிராக கேள்விகளை இந்தப் பிரச்னை எழுப்பலாம்' என்கிறார்கள்.

நீல் சுக்லாவும் இதேபோன்ற கேள்விகளுடன், கூகுள் தனது கணக்கை நீக்குவதை நிறுத்துமாறு உயர் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்துள்ளார்.

ஆகஸ்ட் 2023 முதல் தனது கணக்கை நீக்குவதைத் தடுக்க நீல் சுக்லா கூகுளுக்கு அனுப்பிய சட்டப்பூர்வ அறிவிப்புக்கு கூகுள் நிறுவனம் இதுவரை பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2024ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று குஜராத் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில் கூட கூகுள் நிறுவனத்தின் வழக்கறிஞர் யாரும் ஆஜராகவில்லை.

நீல் சுக்லாவின் கணக்கு ஏப்ரல் 5ஆம் தேதி நிரந்தரமாக நீக்கப்படும் என்று கூகுளால் கூறப்பட்டது. ஆனால் அவரது தரவைப் பதிவிறக்க அவரது முடக்கப்பட்ட கணக்கிற்கான அணுகல் அவருக்கு வழங்கப்படவில்லை.

எனினும், இந்த வழக்கில் மறு உத்தரவு வரும் வரை நீல் சுக்லாவின் கணக்கை நீக்க கூகுள் நிறுவனத்துக்கு குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி வைபவி நானாவதி தடை விதித்துள்ளார்.

குஜராத்தி பொறியாளரின் கணக்கை முடக்கிய கூகுள்

பட மூலாதாரம், Getty Images

‘கூகுளின் எதேச்சதிகாரம்’

பிபிசியிடம் பேசிய நீல் சுக்லா, "என்னுடைய பாட்டி என்னைக் குளிப்பாட்டுவதைப் பற்றி கூகுள் ஏன் கவலைப்பட வேண்டும்? எனது குழந்தைப் பருவத்தின் புகைப்படத்தால் கூகுள் எனது கணக்கைத் முடக்கியுள்ளது.

கூகுளுடன் இணைக்கப்பட்ட எனது அனைத்து சமூக ஊடகக் கணக்குகளும் அதனால் தடுக்கப்பட்டுள்ளன. எனது வணிகச் செயல்பாடுகள், எனது சேமிப்பு மற்றும் முதலீட்டுத் தரவு அனைத்தும் அந்தக் கணக்கில் இருந்தன. கூகுளின் இந்த எதேச்சதிகாரத்துக்கு என்னைப் போல் மற்றவர்கள் பலியாகிவிடக் கூடாது என்பதற்காக குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன்” என்றார்.

தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப (ICT) பொறியியல் படிப்பை முடித்துள்ள நீல், தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்படும் விரைவான மாற்றங்களைத் தெரிந்துகொள்ள ஆன்லைன் படிப்புகளைத் தொடர்ந்தார்.

“2013ஆம் ஆண்டு முதல் இந்த கூகுள் கணக்கை வைத்திருந்தேன். படிப்பு முடிந்ததும் ஒரு தொழிலைத் தொடங்கி, அந்த கணக்கு மூலம் தொழிலை வளர்க்க மார்க்கெட்டிங் மற்றும் ப்ரோமோஷன் செய்தேன். எனக்கும் புதிய வாய்ப்புகள் கிடைத்து வந்தது” என்கிறார் நீல்.

தொடர்ந்து அவர் கூறுகையில், "மென்பொருள் துறையின் புதிய மேம்பாடுகள் குறித்து அறிந்து கொள்ள இந்த கணக்கு மூலம் செயற்கை நுண்ணறிவு குறித்த பல்வேறு ஆன்லைன் படிப்புகளை முடித்துள்ளேன். எனது அனைத்து திட்டங்களையும் சமூக ஊடகங்களில் தான் பதிவிட்டு வைத்துள்ளேன். ஆன்லைன் படிப்புகளின் சான்றிதழ்களும் மின்னஞ்சலில் தான் உள்ளன."

"எனது பங்குச் சந்தை முதலீடுகள், எனது வங்கிக் கணக்கு விவரங்கள், எனது வாடிக்கையாளர்களுடனான வணிக மின்னஞ்சல் தொடர்புகள் அனைத்தும் அந்தக் கணக்கில் தான் இருந்தன. இது முடக்கப்பட்டுள்ளதால், எனது வாடிக்கையாளர்கள் எனக்கு அனுப்பும் மின்னஞ்சல்களை என்னால் பார்க்க முடியவில்லை." என்கிறார்.

கூகுள் நிர்ணயித்த கட்டணத்தில் தனது தரவை ஆன்லைனில் சேமித்து வைப்பதற்காக 2 TB (2 டெராபைட்) சேமிப்பக இடத்தையும் கூகுளிடமிருந்து வாங்கினார் நீல்.

"எங்கள் குடும்பத்தின் புகைப்படங்கள் அதிகமாக இருந்தன. அவற்றை டிஜிட்டல்மயமாக்கி ஆன்லைன் டிரைவில் சேமிக்க முடிவு செய்தேன், ஏனென்றால் ஹார்ட் டிஸ்க்குகள் கூட வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகின்றன. எங்களிடம் உள்ள நூற்றுக்கணக்கான படங்களில் ஒன்று தான், சிறுவயதில் என் பாட்டி என்னைக் குளிப்பாட்டும் புகைப்படம்" என்கிறார் நீல்.

நீல் தனது கூகுள் கணக்கில் படத்தைப் பதிவேற்றிய சிறிது நேரத்திலேயே, அவருக்கு மே 11, 2023 அன்று கூகுளில் இருந்து ஒரு அறிவிப்பு வந்தது. கணக்கு முடக்கப்பட்டதாக அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. கூகுளின் கூற்றுப்படி, நீல் அவர்களின் சேவை விதிமுறைகளை மீறியுள்ளார்.

நீலின் குற்றச்சாட்டுகள் என்ன?

கூகுள் செயற்கை நுண்ணறிவு திட்டத்தால் தனது தனிப்பட்ட உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக நீல் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், “நீல் சுக்லாவின் உரிமைகளை ஐந்து விஷயங்களில் கூகுள் நிறுவனம் மீறியுள்ளது.

அவரது தரப்பு வாதத்தைக் கேட்காமல் அவரது கணக்கு முடக்கப்பட்டது

அவர்களின் உரிமைகளை மீறும் இந்த முடிவு முற்றிலும் தொழில்நுட்பத்தால் எடுக்கப்பட்டதே தவிர மனிதர்களால் அல்ல.

கூகுளின் சேவை விதிமுறைகள் சிஎஸ்ஏஎம் திட்டத்தை ஆதரிக்கின்றன (ஆபாச உள்ளடக்கத்தைக் கண்டறிய கூகுள் பயன்படுத்தும் செயற்கை நுண்ணறிவு திட்டத்தின் பெயர்) இது பொருத்தமற்றது மற்றும் இடையூறு விளைவிக்கக்கூடியது.

சிஎஸ்ஏஎம் முடிவுகள் உலகெங்கிலும் உள்ள பயனர்களைப் பாதிக்கிறது, ஆனால் வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவர்களிடமிருந்து பெற்ற தவறான நடத்தை மற்றும் பாரபட்சமான அணுகுமுறைகள் தொடர்பான தரவுகள் மூலம் சிஎஸ்ஏஎம் திட்டத்திற்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.

நீலின் குழந்தைப் பருவத்தின் கடந்தகால புகைப்படங்கள் உட்பட, குழந்தையின் உடலை குழந்தைகளின் உரிமை மீறலாகக் காட்டும் அனைத்துப் பொருட்களையும் கருத்தில் கொள்ள சிஎஸ்ஏஎம் திட்டத்திற்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.

1999-2000 காலகட்டத்தில் எடுக்கப்பட்ட படங்கள் என்று விண்ணப்பத்தில் கூறப்பட்டுள்ளது. கண்காணிப்பு இல்லாத தொழில்நுட்பம் மக்களின் வாழ்க்கையை மாற்றும் முடிவுகளை எடுக்கும் என்று அந்த நேரத்தில் யாரும் கற்பனை செய்திருக்க முடியாது.

"கூகுள் விதிமுறைகளின் கீழ் அந்த படங்களை எனது சேமிப்பகத்திலிருந்து அகற்ற வேண்டும், ஆனால் அவற்றை அகற்ற கூட எனக்கு எந்த வழியும் இல்லை" என்று நீல் கூறினார்.

சிஎஸ்ஏஎம் திட்டத்தைப் பற்றி கூகுள் கூறுவது என்ன?

இந்த விவகாரம் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் குறிப்பிட்ட கேள்விகளுக்கு எங்களால் பதிலளிக்க முடியாது என்று கூகுள் நிறுவனம் பிபிசியிடம் மின்னஞ்சலில் தெரிவித்தது. ஆனால் சிஎஸ்ஏஎம் உள்ளடக்கம் தொடர்பான எங்கள் கொள்கைகள் மற்றும் திட்டங்களைத் தெரிவிக்கலாம் என்று கூறியது.

கூகுள் பிபிசியிடம், "சட்டவிரோதமான குழந்தை பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கம் எங்களின் எந்தவொரு தளத்திலும் விநியோகிக்கப்படுவதை நாங்கள் தடுக்கிறோம். சுரண்டலில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்"

"சிஎஸ்ஏஎம் அல்லது குழந்தைகளை உள்ளடக்கிய பாலியல் உள்ளடக்கத்தை நாங்கள் கண்டறிந்தால், உடனடியாக அதை அகற்றிவிட்டு கணக்கை நிறுத்தவும் கூடும்" என்று கூகுள் கூறியுள்ளது.

“எங்கள் தளத்தில்பதிவேற்றப்பட்ட அல்லது பகிரப்பட்ட உள்ளடக்கத்தில் உள்ள சிஎஸ்ஏஎம் உள்ளடக்கத்தின் அளவு மிகக் குறைவாக இருந்தாலும், இந்த விஷயத்தில் நாங்கள் மிகவும் கவனமாக இருக்கிறோம்”

“எங்களின் சிஎஸ்ஏஎம் உள்ளடக்க வரையறையைப் பூர்த்தி செய்யும் எந்தவொரு பதிவேற்றப்பட்ட உள்ளடக்கத்தையும் விரைவாகக் கண்டறிந்து அகற்றும் ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

சிஎஸ்ஏஎம் உள்ளடக்கத்தை அடையாளம் காண, செயற்கை நுண்ணறிவு மற்றும் ஹாஷ்-பொருந்தும் தொழில்நுட்பத்தின் கலவையைப் பயன்படுத்துகிறோம்”

"எங்கள் தொழில்நுட்பம் உலகம் முழுவதிலும் இருந்து பதிவேற்றப்படும் இந்த வகையான வெறுக்கத்தக்க உள்ளடக்கத்தின் அளவையும் வேகத்தையும் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது" என்று கூகுள் தெரிவித்துள்ளது.

குஜராத்தி பொறியாளரின் கணக்கை முடக்கிய கூகுள்

பட மூலாதாரம், GUJARATHIGHCOURT.NIC.IN

உயர் நீதிமன்ற வழக்கு அவசியமா?

நீலின் தந்தை சமீர் சுக்லா ஒரு கட்டடக் கலைஞர் மற்றும் சட்டமும் படித்தவர். அவர் பிபிசியிடம் கூறியதாவது, "இந்திய கலாசாரம் மற்றும் இந்தியர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு கூகுள் பெரிய நிறுவனமாக மாறிவிட்டதா? இந்திய கலாசாரத்தில், பாட்டி குழந்தையை குளிப்பாட்டுவது ஆபாசம் அல்ல. இங்கு செயற்கை நுண்ணறிவு உதவியுடன் தானாகவே முடிவுகள் எடுக்கப்படுகின்றன" என்றார்.

“இது போன்ற விஷயங்களில் நடவடிக்கை எடுக்க தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் சிவில் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்பது மற்றொரு பெரிய பிரச்னை. இந்த நடவடிக்கை 2000ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட புதிய விதியின்படி சைபர் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்கிறார் சமீர் சுக்லா.

தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் விதிகளின்படி, இதுபோன்ற வழக்குகளில் குற்றவியல் புகார்கள் காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவால் விசாரிக்கப்பட வேண்டும் மற்றும் சர்ச்சைகள் மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் செயலாளரால் ஒரு நீதிபதியின் பொறுப்பில் இருந்து விசாரிக்கப்பட வேண்டும்.

இந்த விவகாரம் தொடர்பாக நீல் சுக்லா, குஜராத் மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை முதன்மைச் செயலர் மோனா கந்தரிடம் முறையிட்டார். இந்த விவகாரம் குறித்து மோனா கந்தர் பிபிசியிடம், “தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ், இதுபோன்ற புகார்கள் எங்களுக்கு வருகின்றன” என்றார்.

இருப்பினும், விவரங்களை சரிபார்க்காமல் ஒரு தனிப்பட்ட வழக்கில் கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.

குஜராத்தி பொறியாளரின் கணக்கை முடக்கிய கூகுள்

பட மூலாதாரம், Getty Images

மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப (ஐடி) சட்டம் கூறுவது என்ன?

குஜராத் அரசாங்கத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இந்தச் செயலை நன்கு அறிந்த அதிகாரி ஒருவர், பெயர் குறிப்பிட விரும்பாமல், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 9வது அத்தியாயத்தில் பிரிவுகள் (43) மற்றும் 43(A) இருந்ததாகக் கூறினார்.

இந்தச் சட்டப்பிரிவு 43(A)ன் கீழ், இந்த விவகாரத்தில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து பதில் கேட்கலாம். ஆனால் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம், 2023 (DPDP Act, 2023)க்குப் பிறகு, மத்திய அரசு ஐடி சட்டத்தில் இருந்து பிரிவு 43(A) ஐ நீக்கியுள்ளது. எனவே இந்த சம்பவத்தில் என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்பதில் தெளிவு இல்லை.

இருப்பினும், சைபர் சட்ட நிபுணரும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான பவன் துக்கல் கருத்துப்படி, ஐடி சட்டத்தின் பிரிவு 43(A) இந்த வழக்கில் பயன்படுத்தப்படலாம்.

அவர் கூறுகையில், "அரசு தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் திருத்தம் செய்து, 43(ஏ) பிரிவை நீக்கியது உண்மை தான். ஆனால், டிபிடிபி சட்டம்-2023 இன்னும் செயல்படுத்தப்படாமல் உள்ளது. எனவே நாம் இப்போது பேசுவது போல், 43(ஏ) சட்டமன்ற செயல்முறை தகவல் தொழில்நுட்பச் சட்டம் இன்னும் நிலுவையில் உள்ளது. அவற்றை பயன்படுத்த முடியும்" என்கிறார்.

நீல் சுக்லாவின் வழக்கறிஞர் தீபன் தேசாய் பிபிசியிடம் பேசுகையில், “இந்த விவகாரத்தில் பதில் அளிக்க குஜராத் அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கும், மத்திய அரசின் சைபர் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திற்கும் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் உத்தரவு வரும் வரை நீல் சுக்லாவின் கணக்கு கூகுள் நிறுவனத்தால் நீக்கப்பட்டுள்ளது" என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மேலும் விசாரணை ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெறும்.

செயற்கை நுண்ணறிவின் ஆபத்து என்ன?

கூகுள் போன்ற உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களின் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு மற்றும் அதன் ஆபத்துகள் பற்றி டாக்டர். பவன் துக்கல் பேசுகையில், "தொழில்நுட்பம் மனித விவகாரங்களுக்கான முடிவுகளை எடுக்கத் தொடங்கும் போது, ​​தவறுகள் நடக்கும். ஏனென்றால், மனித கலாச்சாரம், மனித உணர்வுகள் மற்றும் மனித நடத்தை ஆகியவற்றின் நுணுக்கங்களைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு தொழில்நுட்பம் இன்னும் முதிர்ச்சியடையவில்லை."

"தொழில்நுட்பம் படத்தில் உள்ள மனிதனை ஒரே வகையான தரவுகளாகப் பார்க்கிறது, பின்னர் அந்தத் தரவை சிஎஸ்ஏஎம் (குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் பொருள்) விதிகளுக்கு எதிராக ஒப்பிடுகிறது, அது விதிகளை பூர்த்தி செய்தால், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அந்த முடிவுகளை எடுக்கும். அதனால் இது நடந்திருக்கலாம்" என்கிறார் சைபர் சட்ட நிபுணரும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான பவன் துக்கல்.

இந்த சம்பவத்தை ஒரு எச்சரிக்கையாக பார்க்கிறார் துக்கல், "இது ஒரு பெரும் எச்சரிக்கை. இனியும் இது நடக்காமல் இருக்க கூகுள் ஏதாவது செய்ய வேண்டும்."

"கூகுள் போன்ற இடைத்தரகர்கள் தங்கள் செயல்பாடுகள் மற்றும் நோக்கங்களுக்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தத் தொடங்கும் போது, ​​மனிதக் கட்டுப்பாட்டின் சரியான அளவைப் பராமரிக்க வேண்டுமா என்ற பெரிய கேள்வியை இந்தச் சிக்கல் சுட்டிக்காட்டுகிறது. செயற்கை நுண்ணறிவுக்கு முழு உரிமையும் சுயாட்சியும் வழங்குவது நியாயமற்றது." என்கிறார்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)