மோதி பங்கேற்ற 'வந்தே பாரத்' தொடக்க விழாவுக்கு பல கோடி ரூபாய் செலவு - ஆர்.டி.ஐ தகவல் என்ன?

பட மூலாதாரம், ANI
- எழுதியவர், அர்ஜுன் பர்மார்
- பதவி, பிபிசி நியூஸ் , குஜராத்தி
பிரதமர் நரேந்திர மோதி கடந்த மாதம் தனது குஜராத் பயணத்தின் போது அகமதாபாத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்ச்சியில் பல திட்டங்களுடன் கூடவே பத்து புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில் சேவைகளின் எண்ணிக்கை 100ஐ எட்டியுள்ளது.
வந்தே பாரத் ரயில்கள் அவற்றின் வேகம், சிறப்பம்சங்கள் மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றிற்காக பேசு பொருளாக இருந்தாலும் மிகச் சிலரே அறிந்த ஒரு விஷயம் உள்ளது.
இந்த ரயில்களின் துவக்க விழாவிற்கு பொதுமக்களின் எவ்வளவு பணம் செலவிடப்பட்டுள்ளது?
பத்து நிகழ்ச்சிகளுக்கு 1.89 கோடி ரூபாய் செலவிடப்பட்டது

பட மூலாதாரம், ANI
இந்திய ரயில்வே கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து அனுப்பிவைக்கும் பத்து நிகழ்ச்சிகளுக்கு 1.89 கோடி ரூபாய் செலவிட்டதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பிபிசி கண்டறிந்துள்ளது.
அதாவது ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் சராசரியாக 19 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டு விவரங்களும் ஆர்டிஐ மூலம் கோரப்பட்டது. ஆனால் அவை வழங்கப்படவில்லை.
வந்தே பாரத் ரயில் இந்தியாவின் 'முதல் செமி அதிவேக ரயில்' என்று வர்ணிக்கப்படுகிறது. இது மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடியது.
2019 ஆம் ஆண்டில் புது டெல்லி மற்றும் வாரணாசி இடையே முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன்பிறகு பலமுறை நேரிலும், வீடியோ கான்பரன்சிங் மூலமாகவும் அவர் இதைச் செய்துள்ளார்.
மற்ற நாடுகளைப் போலவே, குறைந்த கட்டணத்தில் பயணிகளின் வசதி, பாதுகாப்பு மற்றும் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் வந்தே பாரத் ரயில்கள் தொடங்கப்பட்டன என்று இந்திய ரயில்வே தெரிவிக்கிறது.
முதலில் பிபிசி, இந்திய ரயில்வேயில் ஆர்டிஐ தாக்கல் செய்தது. 2019 ஜனவரி முதல் வந்தே பாரத் ரயில்கள் தொடர்பான திட்டங்களுக்கு செலவழிக்கப்பட்ட பணத்தின் விவரங்கள் இந்திய ரயில்வேயிடம் இருந்து கோரப்பட்டது.
ரயில்வே அமைச்சகம் இந்த தகவலை தெரிவிக்க மறுத்துவிட்டது. இதே விழாவில் பிரதமர் மோதி வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்ததோடு கூடவே வேறு பல திட்டங்களையும் தொடங்கி வைத்ததால், துல்லியமான தகவல்களைத் தர முடியவில்லை என்று அது கூறியது.

பட மூலாதாரம், ANI
எந்த மண்டலத்தில் எவ்வளவு பணம் செலவிடப்பட்டது?
இதற்குப் பிறகு வெவ்வேறு ரயில்வே மண்டலங்கள் மற்றும் கொங்கன் ரயில்வே உட்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில்வே மண்டலங்களையும் உள்ளடக்கி மொத்தம் 17 RTI விண்ணப்பங்களை பிபிசி தாக்கல் செய்தது.
இதில் ஆறு பேரிடம் இருந்து மட்டுமே பிபிசி பதில் பெற்றது.
2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் வந்தே பாரத் ரயில்கள் தொடர்பான பத்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதற்கு மட்டும் 1.89 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக, கிடைக்கப்பெற்ற தகவல்களின் பகுப்பாய்வு காட்டுகிறது.
கொங்கன் ரயில்வே 2023 ஆம் ஆண்டில் இரண்டு வந்தே பாரத் ரயில்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சிக்காக 1 கோடியே 6 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் செலவிட்டுள்ளது. இதில் உணவு மற்றும் பானங்களுக்கான செலவுகள் சேர்க்கப்படவில்லை.
2022 ஆம் ஆண்டில் இரண்டு வந்தே பாரத் ரயில்களை கொடியசைப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு தென்மேற்கு ரயில்வே 49 லட்சத்து 29 ஆயிரத்து 682 ரூபாய் செலவிட்டுள்ளது.
தென்-மத்திய ரயில்வே மண்டலம் 2023 ஆம் ஆண்டில் இரண்டு வந்தே பாரத் ரயில்களின் தொடக்க நிகழ்ச்சிக்காக 16 லட்சத்து 58 ஆயிரத்து 983 ரூபாய் செலவிட்டது.
இது தவிர கடந்த இரண்டு ஆண்டுகளில் மத்திய ரயில்வே, மேற்கு ரயில்வே, வடக்கு ரயில்வே முறையே 4,46,083 ருபாய், 7,44,084 ருபாய் மற்றும் 5,52,450 ரூபாய் செலவிட்டுள்ளன.
வந்தே பாரத் ரயிலுடன் கூடவே 2023 ஆம் ஆண்டில் மற்ற ரயில்வே சொத்துகள் மீதும் தனியாக 9 லட்சத்து 5 ஆயிரத்து 915 ரூபாய் செலவிட்டதாக தென்மேற்கு ரயில்வே மண்டலம் தனது எழுத்து மூலமான பதிலில் தெரிவித்துள்ளது.
செலவு விவரங்களைக் கேட்டபோதிலும் ரயில்வே தோராயமான புள்ளிவிவரங்களைக் கொடுத்தது.
இருப்பினும் கிழக்கு, கிழக்கு மத்திய, கிழக்கு கடற்கரை, வட மத்திய, வடகிழக்கு, வடகிழக்கு எல்லை, வடமேற்கு, தெற்கு, தென்கிழக்கு, தென்கிழக்கு மத்திய மற்றும் மேற்கு மத்திய ரயில்வே மண்டலங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை.

பட மூலாதாரம், ANI
நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனங்கள்
“கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்ற பெரிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய, நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனங்களை ரயில்வே பணியமர்த்தி வருகிறது. இந்த ஏஜென்சிகள் உணவு ஏற்பாடுகள், உபகரணங்கள், ஒளிப்பதிவு மற்றும் நிகழ்வின் ஒளிபரப்பு போன்ற பணிகளை கையாளுகின்றன. இந்த நிகழ்வுகள் நேரடியாக நடந்தாலும், வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்தாலும் பெரும் கூட்டத்தை ஈர்ப்பது உறுதி செய்யப்படுகிறது,” என்று முன்னாள் ரயில்வே ஊழியரும், ஆர்டிஐ ஆர்வலருமான அஜய் போஸ் தெரிவித்தார்.
இது தவிர வேறு சில ரயில்வே அதிகாரிகளுடனும் பிபிசி பேசியது. இதற்கு முன்பு இதுபோன்ற பெரிய துவக்க விழா நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை என்றும் ரெயில்வே எளிமையான நிகழ்ச்சிகளை நடத்தியே செய்தி குறிப்புகள் மற்றும் விளம்பரங்களை வெளியிட்டு வந்தது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
தற்போது இந்த நிகழ்ச்சிகள் அதிகமாக அரசியல்மயமாவதாக இந்திய ரயில்வேயின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியும், ரயில்வே வாரியத் தலைவருமான ஆர்.என்.மல்ஹோத்ரா கூறினார்.
எனது பதவிக் காலத்தில் ரயிலை பிரதமர் கொடியசைத்து துவக்கி வைத்ததாக எனக்கு நினைவில்லை என்றார் அவர்.
மற்றொரு முன்னாள் அதிகாரி பெயர் வெளியிடப்படக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில் "இதுபோன்ற நிகழ்வுகளுக்கு செலவழிப்பதற்கு பதிலாக ரயில்வே தனது சொந்த விளம்பரப் பிரிவை நம்பவேண்டும். இதன் மூலம் குறைந்த கட்டணத்தில் குடிமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்,” என்றார்."
மேற்கு ரயில்வேயின் பயனர்கள் கமிட்டியின் உறுப்பினரான அனில் திவாரி, சிவசேனை (யுபிடி) தலைவர் சஞ்சய் ராவத்தால் பரிந்துரைக்கப்பட்டவர்.
பிபிசியிடம் பேசிய அவர் துவக்கவிழா நிகழ்ச்சிகளில் தேவையற்ற செலவுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.
“வந்தே பாரத் ரயிலுக்கு முன், ஷதாப்தி, துரந்தோ மற்றும் கரிப் ரத் உள்ளிட்ட பல ரயில்கள் மிகக் குறைந்த ஆரவாரத்துடன் தொடங்கப்பட்டன. இது ஒரு புதிய போக்கு,”என்றார் திவாரி.

பட மூலாதாரம், ANI
'முன்பு இனிப்புகளை விநியோகித்தாலே போதுமானது'
“புதிய ரயில்களுக்கு கொடியசைக்கும் போது நிகழ்ச்சிகள் கண்டிப்பாக இருந்தன. ஆனால் கொண்டாட்டங்கள் பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்படவில்லை. ஒரு சில பயணிகளுக்கு இனிப்புகளை வழங்குவது போதுமானதாக முன்பு கருதப்பட்டது,” என்று முன்னாள் ரயில்வே அதிகாரி ஒருவர் பெயர் வெளியிடப்படக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில் பிபிசியிடம் தெரிவித்தார்.
2009 செப்டம்பர் 10 ஆம் தேதி அப்போதைய ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி நாட்டின் முதலாவது எங்கும் நிற்காத அதிவிரைவு துரந்தோ எக்ஸ்பிரஸை துவக்கி வைத்தார் என்பதை முந்தைய அறிக்கைகளை ஆய்வு செய்த பிபிசி கண்டறிந்தது.
2002 ஏப்ரல் 16 ஆம் தேதி அப்போதைய ரயில்வே அமைச்சர் நிதீஷ் குமார், மற்ற அமைச்சர்களைப் போலவே, பல ரயில்களை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். இருப்பினும், இந்த நிகழ்ச்சிகள் தொடர்பான தகவல்கள் கிடைக்கவில்லை.
முன்னாள் அதிகாரிகள் எழுப்பிய கேள்விகளுடன் கூடவே இதுவரை பதில் வழங்கப்படாத எங்கள் ஆர்டிஐ விண்ணப்பத்தில் உள்ள கேள்விகளுக்கும் பதிலளிக்குமாறு ரயில்வே அமைச்சகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பினோம்.
பிபிசிக்கு இதுவரை எந்த பதிலும் வரவில்லை.
ரயில்வேயின் பட்ஜெட் மேம்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக அதிக மக்களைச் சென்றடைய முடிகிறது என்றும் ரயில்வே அதிகாரிகள் கூறுகிறார்கள்.
2003-04 நிதியாண்டை ஒப்பிடும்போது 2023-24 நிதியாண்டில் ரயில்வேக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை அரசு முப்பது மடங்கு அதிகரித்துள்ளது என்று PIB இன் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
புதிய ரயில்கள் தொடங்குவதுடன் கூடவே தண்டவாளங்கள் அமைப்பதை விரைவுபடுத்தவும், ரயில்வே செயல்பாட்டில் பாதுகாப்பை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரப்பூர்வ அறிக்கைகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












