சிஎஸ்கே பேட்ஸ்மேன்களை விளாச விடாமல் கட்டிப் போட்ட பேட் கம்மின்சின் வியூகம் - என்ன செய்தார்?

CSK vs SRH

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

ஒரு மைதானத்தின் விக்கெட்டை(ஆடுகளம்) ஒரு கேப்டனும், பந்துவீச்சாளர்களும் விரைவாக உணர்ந்துகொண்டாலே எதிரணியை எளிதாகக் கட்டுப்படுத்திவிட முடியும், ரன் குவிப்பை தடுத்து, வெற்றியை எளிதாக்க முடியும்.

எந்த அளவுக்கு விக்கெட்டின் தன்மைக்கு ஏற்ப தங்களின் பந்துவீச்சை மாற்றி அமைத்துக் கொள்கிறார்களோ அந்த அளவுக்கு வெற்றியின் கடினம் தீர்மானிக்கப்படும். அந்த உத்தியை நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸும், பந்துவீச்சாளர்களும் செய்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சிறைபிடித்தனர்.

ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 18வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் சேர்த்தது. 166 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 11 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி 4 போட்டிகளில் 2 வெற்றி, 2 தோல்வி என 4 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட்டில் பிளஸ் 0.409 ஆக இருக்கிறது. சொந்த மைதானத்தில் சன்ரைசர்ஸ் அணி தொடர்ந்து பெறும் 2வது வெற்றி இது.

தவறவிட்ட சன்ரைசர்ஸ்

ஐபிஎல் 2024: சிஎஸ்கே vs எஸ்ஆர்ஹெச்

பட மூலாதாரம், Sportzpics

உண்மையில் 4வது இடத்துக்கு சன்ரைசர்ஸ் அணி வரவேண்டியது. ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கடைசி 30 ரன்களை சேர்க்க அதிகமான ஓவர்களை பேட்டர்கள் வீணடித்தனர்.

சன்ரைசர்ஸ் வசம் 8 விக்கெட்டுகள் வரை இருந்த நிலையில் துணிச்சலாக பெரிய ஷாட்களுக்கு முயன்றிருக்கலாம்.

அவ்வாறு பெரிய ஷாட்களை அடித்து இலக்கை குறைந்த ஓவர்களில் எட்டியிருந்தால், லக்னௌ அணியைவிட நிகர ரன்ரேட்டில் முன்னேறி 4வது இடத்துக்கு நகர்ந்திருக்க முடியும். ஆனால், தேவையின்றி கடைசி நேரத்தில் சன்ரைசர்ஸ் மெதுவாக பேட் செய்து, நிகர ரன்ரேட்டை கோட்டைவிட்டனர்.

சிஎஸ்கேவுக்கு கட்டம் சரியில்லை

அதேநேரம் சிஎஸ்கே அணி தொடர்ந்து 2வது தோல்வியைச் சந்தித்துள்ளது. 4 போட்டிகளில் 2 வெற்றி, 2 தோல்விகளைச் சந்தித்தாலும், அதன் நிலை குறையாமல் தொடர்ந்து 3வது இடத்திலேயே நீடிக்கிறது.

ஆனால் நிகர ரன்ரேட் 0.517 ஆகக் குறைந்துவிட்டது. ஒரு நேரத்தில் ஒரு புள்ளிக்கு மேல் நிகர ரன்ரேட் வைத்திருந்த சிஎஸ்கே அணி தற்போது பாதியாகக் குறைந்துவிட்டது.

இப்போதே பரபரப்பு

ஐபிஎல் 2024: சிஎஸ்கே vs எஸ்ஆர்ஹெச்

பட மூலாதாரம், Sportzpics

தற்போது புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் 5 அணிகள் இருக்கின்றன. இந்த 5 அணிகளின் நிகர ரன்ரேட்டும் பெரிய அளவில் வேறுபாடு இல்லாமல் குறைந்த இடைவெளியே இருப்பதால் அடுத்தடுத்து வரும் ஆட்டங்கள், சிஎஸ்கே, சன்ரைசர்ஸ், லக்னௌ, குஜராத், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 5 அணிகள் பெறும் வெற்றிகள், சந்திக்கும் தோல்விகளைப் பொறுத்து அதன் இடங்கள் மாறிக்கொண்டே செல்லும்.

ஐபிஎல் தொடங்கி பாதி அட்டவணைப் போட்டிகள் முடியும் முன்பே சுவாரஸ்யம் தொற்றிக்கொண்டு, புள்ளிகளைப் பெற அணிகளுக்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

ஆட்டநாயகன் அபிஷேக்

சன்ரைசர்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் பந்துவீச்சாளர்கள்தான். பந்துவீச்சாளர்கள் தங்கள் பணியை நேர்த்தியாக, மிகச் சரியாகச் செய்து கொடுத்ததால்தான், சிஎஸ்கே போன்ற பெரிய அணிகளுக்கு எதிராக பேட்டர்கள் அழுத்தமின்றி பேட் செய்ய முடிந்தது.

அதிலும் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா 12 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் உள்பட 37 ரன்கள் சேர்த்து சிறப்பான கேமியோ ஆடி பவர்ப்ளேவில் சன்ரைசர்ஸ் அணியை பாதிக் கடலை கடக்க வைத்தார்.

பவர்ப்ளே ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் சேர்க்க அபிஷேக் அதிரடியே காரணம். வெற்றிக்கான பாதையையும் எளிதாக்கியதால் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

கம்மின்ஸின் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்

ஐபிஎல் 2024: சிஎஸ்கே vs எஸ்ஆர்ஹெச்

பட மூலாதாரம், Sportzpics

புவனேஷ்வர் குமார் வீசிய 19வது ஓவரை ஜடேஜா எதிர்கொண்டார். 4வது பந்தை புவனேஷ்வர் யார்க்கராக வீசவே, பந்தைத் தட்டிவிட்டு ஜடேஜா ஓட முயன்றார்.

ஆனால், பந்தைப் பிடித்த புவனேஷ்வர் ஜடேஜாவை ரன்-அவுட் செய்ய ஸ்டெம்பை நோக்கி எறிந்தார். ஆனால், ஸ்டெம்பை மறைத்து ஜடேஜா ஓடியதால், அவர் மீது பந்து பட்டது.

கிரிக்கெட் விதியின்கீழ் பேட்டர் ஓடும்போது ஸ்டெம்பை மறைத்து ஓடக்கூடாது. ஆனால், ஜடேஜா அவ்வாறு ஓடியதால் 3வது நடுவரிடம் அப்பீல் சென்றது.

ஆனால், இதைக் கவனித்த கேப்டன் கம்மின்ஸ் நடுவரிடம் சென்று அப்பீல் வேண்டாம் தேவையில்லை என்று கூறித் தனது ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பை வெளிப்படுத்தினார்.

மினி தோனியாக மாறி கம்மின்ஸ்

கடந்த வாரம் ஹைதராபாத்தில் நடந்த ஆட்டத்தில் சிவப்பு மண் கொண்ட விக்கெட் பயன்படுத்தப்பட்டது. மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் எனும் பெரிய ஸ்கோரை சன்ரைசர்ஸ் எட்டியது. ஆனால், அதே மைதானம்தான் ஆனால் கறுப்பு மண் கொண்ட விக்கெட்டாக இருந்தது.

இந்த விக்கெட் மாறுதலை கேப்டன் கம்மின்ஸும், சக பந்துவீச்சாளர்களும் விரைவாகப் புரிந்து கொண்டதால் தங்கள் பந்துவீச்சை அதற்கு ஏற்ற வகையில் மாற்றிக்கொண்டனர்.

இந்த கறுப்பு மண் கொண்ட விக்கெட்டில் பந்து பேட்டர்களை நோக்கி என்னதான் விரைவாக வீசினாலும் மெதுவாகவே செல்லும் என்பதைப் புரிந்துகொண்ட பந்துவீச்சாளர்கள், ஸ்லோவர் பால், ஸ்லோபவுன்சர் ஆயுதங்களைக் கையில் எடுத்தனர்.

அவர்கள் கையில் எடுத்த ஆயுதங்கள், மிகச் சரியாகப் பலன் அளித்து சிஎஸ்கே பேட்டர்களை வெல்ல முடிந்தது. குறிப்பாக சன்ரைசர்ஸ் வேகப்பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் ஏராளமான ஸ்லோவர் பந்துகளை வீசி சிஎஸ்கே பேட்டர்களை திக்குமுக்காடச் செய்தனர்.

குறிப்பாக உனத்கட், நடராஜன், புவனேஷ்வர் குமார் ஏராளமான ஸ்லோவர் பந்துகளையும், பேட்டர்களை ஏமாற்றும் விதத்தில் ஸ்லோ ஷார்ட் பவுன்சர்களையும் வீசி ரன்சேர்ப்புக்கு பெரிய கடிவாளம் போட்டனர்.

'ஹோம் ஓர்க்' செய்த கம்மின்ஸ்

ஐபிஎல் 2024: சிஎஸ்கே vs எஸ்ஆர்ஹெச்

பட மூலாதாரம், Sportzpics

இதனால் புவனேஷ்வர், நடராஜன், கம்மின்ஸ், உனத்கட் ஆகியோரின் நிகர ரன்ரேட் 7 சராசரிக்கும் மேல் செல்லவில்லை. அதிலும் நடராஜன் வீசிய கடைசி ஓவரில் ஒரு பவுண்டரியை கோட்டைவிடாமல் இருந்தால் இன்னும் குறைந்திருக்கும். வேகப்பந்துவீச்சாளர்கள் 4 பேரும் சேர்ந்து 34 டாட் பந்துகளை வீசியுள்ளனர், அதாவது ஏறக்குறைய 6 ஓவர்கள் மெய்டன்களாக மாறியுள்ளன.

ஆடுகளத்தின் தன்மையையும், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவரும் எவ்வாறு விளையாடுவார்கள், எந்தப் பந்துவீச்சில் பலவீனம், யாருக்கு எவ்வாறு பந்து வீசலாம் என்பதை கேப்டன் கம்மின்ஸ் நன்கு படித்து “ஹோம்ஓர்க்” செய்து வந்திருந்தார்.

அதனால்தான், ஒவ்வொரு பேட்டருக்கு ஏற்றாற்போல், நேற்றைய ஆட்டத்தில் பந்துவீச்சாளர்களை மாற்றி, மாற்றி பந்துவீசி எந்த பேட்டரையும் களத்தில் நங்கூரமிடவிடாமல் துரத்திக்கொண்டே இருந்தார்.

அதுமட்டுமல்லாமல் ஆடுகளத்தின் தன்மையை விரைவாக உணர்ந்து கொண்ட கம்மின்ஸ், சக பந்துவீச்சாளர்களுக்கும் எவ்வாறு பந்துவீச வேண்டும், எந்த மாதிரியான பந்துகளை அதிகம் வீச வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்தி சிஎஸ்கே பேட்டர்களை ரன் சேர்க்கவிடாமல் சித்தரவதை செய்தார்.

ஐபிஎல் 2024: சிஎஸ்கே vs எஸ்ஆர்ஹெச்

பட மூலாதாரம், Sportzpics

குறிப்பாக ஷிவம் துபே சுழற்பந்துவீச்சுக்கு எதிராக நன்கு பேட் செய்யக் கூடியவர், ஸ்ட்ரைக் ரேட்டும் அதிகம் வைத்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்ட கம்மின்ஸ் விரைந்து முடிவெடுத்தார். மார்க்கண்டே, ஷான்பாஸ் ஓவர்களை ஷிவம் துபே குறிவைத்து சிக்ஸர், பவுண்டரிகளா அடித்தவுடன், கம்மின்ஸ் அடுத்தடுத்து நடராஜன், உனத்கட்டை பந்துவீசச் செய்து துபேவுக்கு நெருக்கடி கொடுத்தார். இறுதியில் ஷிவம் துபேயின் விக்கெட்டை கம்மின்ஸ் தனது பந்துவீச்சில் எடுத்துக் கொடுத்தார்.

ஃபீல்டிங் அமைப்பதிலும் கம்மின்ஸ் தனது அனுபவத்தை வெளிப்படுத்தினார். எந்தப் பந்துவீச்சாளரைப் பயன்படுத்தினால் எந்தப் பந்துவீசுவார், அதற்கு ஏற்றாற்போல், பேட்டர் எவ்வாறு ஷாட்களை அடிப்பார் என்பதை மனக்கணக்கில் புரிந்து கொண்டு ஃபீல்டிங்கை அருமையாக கம்மின்ஸ் அமைத்தார். இந்த ஆட்டத்தில் ஒரு கேட்சை கூட விக்கெட் கீப்பர் கிளாசன் பிடிக்கவில்லை, மாறாக மைதானத்தில் நின்றிருந்த பீல்டர்களே கேட்சுகளை பிடித்தனர்.

தோனி கேப்டனாக இருக்கும்போது, எதிரணியின் ஒவ்வொரு பேட்டருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்துச் செயல்படுவார். பந்துவீச்சிலும் அதற்கு ஏற்ற வகையில் அடிக்கடி மாற்றம் செய்து கொண்டே இருப்பார்.

எந்த மைதானமாக இருந்தாலும் ஆடுகளத்தின் தன்மையை விரைந்து புரிந்துகொண்டு பந்துவீச்சாளர்களை அதற்கு ஏற்றாற்போல் மாற்றுவார். தோனி செய்த அத்தனை பணிகளையும் நேற்று கம்மின்ஸ் கேப்டன்சியில் காண முடிந்தது. அதனால்தான் நேற்றைய ஆட்டத்தில் கம்மின்ஸ் தோனிக்கு எதிராக “மினி தோனி”யாக செயல்பட்டார் எனக் குறிப்பிடப்படுகிறது.

அபிஷேக் அதிரடியால் ‘டென்ஷன்’ குறைந்தது

ஐபிஎல் 2024: சிஎஸ்கே vs எஸ்ஆர்ஹெச்

பட மூலாதாரம், Sportzpics

சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் எளிய இலக்கு என்பதைப் புரிந்து கொண்டு தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக பேட் செய்தார். டிராவிஸ் ஹெட் பொறுமையாக ஆட, அபிஷேக் வெளுத்து வாங்கினார்.

முகேஷ் சௌத்ரி வீசிய 2வது ஓவரில் அபிஷேக் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் ஒரு நோபால் சிக்ஸர் என 27 ரன்களை குவித்தார். தீபக் சஹர் வீசிய 3வது ஓவரிலும் அபிஷேக் ஒரு சிக்ஸர், பவுண்டரி அடித்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 12 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து அபிஷேக் தனது கேமியோவை நிறைவு செய்தார்.

அடுத்து வந்த மார்க்ரம், ஹெட்டுடன் சேர்ந்தார். இருவரும் ஓவருக்கு ஒரு பவுண்டரி வீதம் ரன்ரேட் குறையாமல் கொண்டு சென்றதால் பவர்ப்ளேவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் சேர்த்தது சன்ரைசர்ஸ். வெற்றிக்கான இலக்கில் பாதியைக் கடந்திருந்தது. 8.5 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 100 ரன்களை அடைந்தது.

சவாலான மார்க்ரம் பேட்டிங்

ஐபிஎல் 2024: சிஎஸ்கே vs எஸ்ஆர்ஹெச்

பட மூலாதாரம், Sportzpics

தீக்சனா வீசிய 10வது ஓவரில் ரவீந்திராவிடம் பவுண்டரி லைனில் கேட்ச் கொடுத்து ஹெட் 31 ரன்னில் விக்கெட்டை இழந்தார். இருவரும் 2வது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். 3வது விக்கெட்டுக்கு வந்த ஷான்பாஸ் அகமது, மார்க்ரமுக்கு நன்கு ஒத்துழைப்பு அளித்தார்.

பொறுப்புடனும், நேர்த்தியாகவும் பேட் செய்த மார்க்ரம், சிஎஸ்கே பவுலர்கள் தன்னை ஆட்டமிழக்கச் செய்ய எந்த வாய்ப்பும் வழங்கவில்லை, பெரிய ஷாட்களுக்கும் செல்லவில்லை.

ஆனால், ஷான்பாஸ் பெரிய ஷாட்களுக்கு முயன்றும் அது பலன் அளிக்கவில்லை. 35 பந்துகளில் மார்க்ரம் அரை சதத்தை நிறைவு செய்தார்.

அதன்பின் மொயீன் அலி பந்துவீச்சில் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் ஆட முற்பட்டு மார்க்ரம் கால்காப்பில் வாங்கி 50 ரன்களில் ஆட்டமிழந்தார். பொறுமையாக பேட் செய்த ஷான்பாஸ் ஒரு சிக்ஸர் உள்பட 18 ரன்கள் சேர்த்து மொயீன் அலி பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார்.

ஐபிஎல் 2024: சிஎஸ்கே vs எஸ்ஆர்ஹெச்

பட மூலாதாரம், Sportzpics

ஏமாற்றிய கிளாசன்

ஐந்தாவது விக்கெட்டுக்கு கிளாசன், நிதிஷ் குமார் ரெட்டி இருவரும் சேர்ந்தனர். குறைவான இலக்கு இருந்தாலும் பெரிய ஷாட்களுக்கு செல்ல இருவரும் தயங்கினர்.

நிதிஷ் குமார் துணிச்சலாக ஒரு பவுண்டரி அடித்தார், கிளாசன் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. தீபக் சஹர் ஓவரில் நிதிஷ் ஒரு சிக்ஸர் விளாசி வெற்றி பெற வைத்தார். கிளாசன் 10 ரன்களிலும், நிதிஷ் குமார் 14 ரன்களிலும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

சன்ரைசர்ஸ் அணி 8.5 ஓவர்களில் 100 ரன்களை எட்டிய நிலையில் அடுத்த 66 ரன்களை சேர்க்க 10 ஓவர்களை தேவையின்றி எடுத்துக்கொண்டு வெற்றியைத் தள்ளிப் போட்டது. 5 ஓவர்கள் குறைவாக இலக்கை அடைந்திருந்தால் சன் ரைசர்ஸ் நிகர ரன்ரேட் சிஎஸ்கேவுக்கு அருகே வந்திருக்கும்.

சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?

சிஎஸ்கே அணி தொடர்ந்து 2வது தோல்வியைச் சந்தித்துள்ளது. பலமான பேட்டிங் வரிசையை வைத்துள்ள சிஎஸ்கே அணியால், நேற்றைய ஆடுகளத்தில் ரன்களை சேர்க்க முடியவில்லை.

இதற்குக் காரணம் பேட்டர்கள் ஆடுகளத்தை நன்றாகப் புரிந்து கொண்டு பேட் செய்யாததும், பெரிய ஷாட்களுக்கு தொடர்ந்து முயற்சி செய்தததும்தான்.

ஐபிஎல் 2024: சிஎஸ்கே vs எஸ்ஆர்ஹெச்

பட மூலாதாரம், Sportzpics

ரச்சின் ரவீந்திரா நியூசிலாந்து போன்ற வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் மைதானத்தில் ஆடிப் பழகியவர். திடீரென இந்திய ஆடுகளத்துக்கு ஏற்ப மாறும்போது கடந்த 2 போட்டிகளாகத் தடுமாறுகிறார்.

ரஹானே அனுபவம் நிறைந்த பேட்டராக இருந்தாலும் 105 கி.மீ வேகத்தில் உனத்கட் வீசிய ஸ்லோவர் பந்துவீச்சுக்கு விக்கெட்டை இழந்தார். பெரும்பாலான சிஎஸ்கே பேட்டர்கள் ஸ்லோவர் பால், ஸ்லோவர் பவுன்சர்கள், ஷார்ட் பவுன்ஸர்கள் விளையாடுவதற்குத் திணறுகிறார் என்பது நேற்றைய ஆட்டத்தில் வெளிப்பட்டுவிட்டது.

பவர்ப்ளேவில் சன்ரைசர்ஸ் அணியால் 78 ரன்கள் சேர்க்க முடிந்த நிலையில், சிஎஸ்கே அணியால் பவர்ப்ளேவில் 30 ரன்கள் குறைவாக 48 ரன்கள்தான் சேர்க்க முடிந்தது. பவர்ப்ளே ஓவர்களை சன்ரைசர்ஸ் அணி பயன்படுத்திய அளவுக்கு சிஎஸ்கே பேட்டர்கள் பயன்படுத்தவில்லை.

சன்ரைசர்ஸ் பேட்டர்கள் பவுன்டரி அடிக்க 16 பந்துகளை முயற்சி செய்தனர் என்றால் சிஎஸ்கே பேட்டர்கள் 8 பந்துகளில் மட்டுமே முயன்றனர். சிஎஸ்கே பேட்டர்களின் பலவீனத்தை உணர்ந்து சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதால் கடைசி 7 ஓவர்களில் சிஎஸ்கே அணி 50 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. டேரல் மிட்ஷெல்(13) நடராஜன் வீசிய ஸ்லோவர் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

சிஎஸ்கே அணியில் ஷிவம் துபே 24 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்துதான் ஓரளவுக்கு கௌரமான ஸ்கோர் வருவதற்குக் காரணமாக அமைந்தது. அதிலும் சுழற்பந்துவீச்சை துபே வெளுக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டு வேகப்பந்துவீச்சுக்கு மாற்றி அவரையும் சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்கள் வெளியேற்றினர்.

ஷிவம்துபே 45 ரன்களை கழித்துப் பார்த்தால் சிஎஸ்கே ஸ்கோர் 120 ரன்கள்தான். பெரிய பேட்டர்களான ரவீந்திரா(12), கேப்டன் கெய்க்வாட்(26), ரஹானே(35), மிட்ஷெல்(13) ஆகியோர் ஏமாற்றினர்.

ஐபிஎல் 2024: சிஎஸ்கே vs எஸ்ஆர்ஹெச்

பட மூலாதாரம், Sportzpics

அதேபோல பந்துவீச்சிலும் சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்கள் ஆடுகளத்தைப் புரிந்து பந்துவீசிய அளவுக்கு சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் புரிந்து பந்துவீசவில்லை. அதாவது ஸ்லோவர் பால், ஸ்லோவர் பவுன்ஸர்கள் பெரிதாக சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் வீசவில்லை.

வழக்கமாக வேகப்பந்துவீச்சு, வழக்கமான சுழற்பந்துவீச்சு என்ற போக்குதான் வெற்றியை இழக்க வைத்தது. அதிலும் முகேஷ் சௌத்ரி 2022, டிசம்பர் மாதத்துக்குப் பின்பு முதல்முறையாக நேற்றுதான் போட்டியில் பங்கேற்றார் என்றால் அவரின் பந்துவீச்சு எந்தத் தரத்தில் இருந்திருக்கும். அதனால்தான் முதல் ஓவரிலேயே 27 ரன்களை வாரிக் கொடுத்தார்.

ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றாற்போல் சுழற்பந்துவீச்சாளர்களும் வேகத்தைக் குறைத்து மணிக்கு 90 கி.மீக்குள் வீசியிருந்தால், பந்து நன்றாக டர்ன் ஆகி இருக்கும், சன்ரைசர்ஸ் பேட்டர்களின் ரன்வேகம் குறைந்திருக்கும்.

ஆனால், தீக்சனா, ஜடேஜா,மொயீன் அலி, ரவீந்திரா ஆகிய 4 சுழற்பந்துவீச்சாளர்களும் மணிக்கு 98 முதல் 100 கி.மீ வேகத்தில் பந்து வீசினர். ஆனால் அவ்வப்போது வேகத்தைக் குறைத்து மொயீன் அலி பந்துவீசியபோது பந்து நன்கு டர்ன் ஆனதைக் காண முடிந்தது. அதன்பின்புதான் அவர் பந்துவீச்சில் வேகத்தை சற்று குறைத்தார்.

அதேபோல வேகப்பந்துவீச்சில் தேஷ்பாண்டே, சஹர், முகேஷ் சௌத்ரி என ஒருவருமே பெரிதாக சன்ரைசர்ஸ் பேட்டர்களுக்கு அழுத்தம் தரவில்லை. பந்துவீச்சில் வேறுபாடுகளைக் கொண்டு வரவில்லை. குறிப்பாக ஸ்லோவர் பால், பவுன்ஸர்கள் என்ற ஆயுதத்தை மறந்துவிட்டனர். பதிரணா, முஸ்தபிசுர் ரஹ்மான் இருவரும் இல்லாத வெற்றிடம் நன்கு தெரிந்தது.

பவர்ப்ளே ஓவர்களை பயன்படுத்தவில்லை

ஐபிஎல் 2024: சிஎஸ்கே vs எஸ்ஆர்ஹெச்

பட மூலாதாரம், Sportzpics

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறுகையில் “சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்கள் நன்கு பந்து வீசினர். கடைசி 5 ஓவர்களை எங்கள் பேட்டர்கள் சரியாகப் பயன்படுத்தவில்லை.

நல்ல நிலையில் இருந்து அதைப் பராமரித்துக் கொண்டு செல்லத் தவறிவிட்டோம். கறுப்பு மண்ணில், ஸ்லோவர் பந்துகளைத் தவறவிட்டோம்.

பந்து தேய்ந்தபின் இன்னும் பேட்டர்களை நோக்கி மெதுவாக வரத் தொடங்கியது. விக்கெட் நன்கு புரிந்துகொண்டு சன்ரைசர்ஸ் பந்து வீசினர். பவர்ப்ளேவில் நாங்கள் நன்கு பந்து வீசவில்லை, அவர்கள் பவர்ப்ளேவில் ஆட்டத்தை கையில் எடுத்துக்கொண்டனர்.

நாங்கள் 175 ரன்கள் எடுத்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம். பவர்ப்ளே ஓவர்ளில் நன்கு பந்துவீசி இருந்தால், ஆட்டம் எங்கள் பக்கம் திரும்பியிருக்கும். கடைசி நேரத்தில் லேசான பனியும் இருந்தது,” எனத் தெரிவித்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)