ஆர்.சி.பி. அணியை சரித்த மயங்க் யாதவ் - 156 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் ரகசியம் என்ன?

பட மூலாதாரம், SPORTZPICS
- எழுதியவர், க.போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
முதல் இரு போட்டிகளிலும் இரு ஆட்டநாயகன் விருதுகள், ஒவ்வொரு போட்டியிலும் பந்துவீச்சில் அதிகரிக்கும் வேகம், கண்ணிமைக்கும் நேரத்தில் பேட்டர்களை ஏமாற்றிச் செல்லும் பந்துகளை வீசும் உத்தி என அறிமுகமாகிய இரண்டாவது போட்டியிலேயே லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் இந்தியக் கிரிக்கெட்டின் பேசுபொருளாகி இருக்கிறார்.
அதேநேரம், பெங்களூரு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கோலி(K) கிளென் மேக்ஸ்வெல்(G) பா டூப்பிளசிஸ்(F) ஆகிய மூன்று பலம் பொருந்திய பேட்டர்களும் ஏமாற்றி, ஆர்சிபியை கைவிட்டனர்.
பெங்களூரு சின்னசாமி அரங்கில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 15-வது லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.
முதலில் பேட் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்தது. 182 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி 19.4 ஓவர்களில் 153 ரன்களுக்கு ஆட்டமிழந்து 28 ரன்களில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் 2024 ஐபிஎல் சீசனில் முதல்முறையாக ஒரு ஆட்டத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த முதல் அணி என்ற பெயரை ஆர்சிபி பெற்றுள்ளது.

பட மூலாதாரம், SPORTZPICS
இந்த வெற்றியால் லக்னோ அணி 3 போட்டிகளில் 2 வெற்றி, 4 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நிகர ரன்ரேட்டும் 0.483 என்று சாதகமாக அமைந்துள்ளது. அதேநேரம், 3 போட்டிகளில் சொந்த மண்ணில் இரு தோல்விகள், ஒரு வெற்றி என 2 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் ஆர்சிபி இருக்கிறது.
லக்னோ அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் தமிழக வீரரும், முதல் போட்டியில் அறிமுகமாகியவருமான சித்தார்த் மணிமாறன் மற்றும் வேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் ஆகிய இருவரும்தான். 5-ஆவது ஓவரிலேயே மிகப்பெரிய விக்கெட்டான விராட் கோலியை தனது சுழற்பந்துவீச்சால் மணிமாறன் வெளியேற்றிஆர்சிபிக்கு அதிர்ச்சி அளித்தார். அடுத்த ஓவரில் டூப்பிளசிஸ் ரன் அவுட் ஆனார்.
அதிவேகமெடுத்த ‘மயங்க் புயல்’
மயங்க் யாதவ் பந்துவீச வந்தபின் ஆர்சிபியின் அஸ்திவாரமே ஆட்டம் கண்டது எனலாம். 156 கி.மீ. வேகத்தில் வீசிய மயங்க் யாதவின் பந்துகளை அடிப்பதற்கு ஆர்சிபியின் மேக்ஸ்வெல் போன்ற வீரர்களால் கூட முடியவில்லை. பேட்டில் உரசியபடி கீப்பரிடம் தஞ்சமடைந்தது. அடுத்ததாக கேமரூன் கிரீன் பேட்டை தூக்குவதற்குள் கண்இமைக்கும் நேரத்தில் பந்து ஸ்டெம்பில் பட்டு கிளீன் போல்டாகியது.
மயங்க் யாதவின் ராக்கெட் வேகப்பந்தை கிராஸ்பேட் போட்டு அடிக்க முயன்ற பட்டிதாரும் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இந்த 3 பெரிய விக்கெட்டுகளை வீழ்த்தி ஆர்சிபியின் ஆனிவேரை மயங்க் பிடுங்கி எறிந்தார்.
முதல் ஆட்டத்தில் 155.8 கிமீ வேகத்தில் பந்துவீசிய மயங்க் யாதவ் நேற்றைய ஆட்டத்தில் 156 கி.மீ வேகத்தில் பந்துவீசி ஆர்சிபி பேட்டர்களை நடுங்க வைத்தார். 4 ஓவர்கள் வீசிய மயங்க் யாதவ் 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார், இதில் 17 டாட் பந்துகள் அடங்கும்.
லக்னோ வெற்றிக்கு மூலகாரணமாக இருந்த மயங்க் யாதவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அறிமுகப் போட்டியைத் தொடர்ந்து 2வது போட்டியிலும் தொடர்ந்து ஆட்டநாயகன் விருதை மயங்க் பெற்றுள்ளார்.

பட மூலாதாரம், SPORTZPICS
பந்துவீச்சு வேகத்தின் ரகசியம் பற்றி மயங்க் யாதவ் கூறியது என்ன?
ஆட்டநாயகன் விருது வென்ற மயங்க் யாதவ் கூறுகையில் “தொடர்ந்து இரு போட்டிகளில் ஆட்டநாயகன் விருது வென்றது மகிழ்ச்சி, இரு போட்டிகளிலும் வென்றிருக்கிறோம். இந்திய அணிக்காக விளையாடுவதுதான் இலக்கு. இது வெறும் தொடக்கம்தான், நான் என்ன நினைக்கிறேனோ அதுதான் என் இலக்கு. கேமரூன் கிரீன் விக்கெட் கண்இமைக்கும் நேரத்தில் நடந்துவிட்டது. அந்த வேகத்தில் பந்துவீசும்போது பல அம்சங்கள் முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக சரியான உணவுமுறை, தூக்கம், பயிற்சி அவசியம். நீங்கள் வேகமாகப் பந்துவீசினால், பல விஷயங்களில் சரியாக இருக்கலாம். என்னுடைய உணவு முறையில் சரியாக இருந்து உடல்நலம் தேறினேன்” எனத் தெரிவித்தார்

பட மூலாதாரம், SPORTZPICS
மயங்க் வேகம் பற்றி வியந்து பேசும் வீரர்கள்
மயங்க் யாதவ் பந்துவீச்சு குறித்து ஏற்கெனவே ஷிகர் தவண் பெருமையாகப் பேசியுள்ளார். தன் அணி வீரர்களிடம் யாரும் கிராஸ்பேட் போட்டு மயங்க் பந்துவீச்சை முயற்சிக்க வேண்டாம், பந்தின் போக்கிலேயே பேட் செய்யுங்கள் என அறிவுரை அளித்திருந்தார்.
இந்த ஆட்டத்தில் ஆர்சிபி கேப்டன் டூப்பிளசிஸ் “ மயங்க் பந்துவீச்சுக்கு ஏற்ப பேட்டர்கள் தங்களை தயார் செய்துகொள்ளக்கூட அவகாசம் இல்லாமல் பந்து அதிவேகமாகக் கடக்கிறது. அவரின் பந்துவீச்சு ஆக்ஸன், வேகம், லைன்லென்த்தில் வீசுவது ஆகியவை இன்னும் சிறப்பாக அமைந்து பேட்டர்களுக்கு பெரிய சிக்கலாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்
லக்னோ விக்கெட் கீப்பர் டீ காக் கூறுகையில் “மயங்க் யாதவ் பந்துவீசவில்லை, ராக்கெட் வீசுகிறார். எங்கள் அணியில் இருப்பது மிக்க மகிழ்ச்சி” எனத் தெரிவித்தார்
அதேபோல லக்னோ கேப்டன் கே.எல்ராகுல் பேசுகையில் “மயங்க் பந்துவீசும்போது அவர் வீசும் பந்தை பிடிக்கும்போது கிளவ் அணிந்திருந்தாலும் வலிக்கிறது. 155 கி.மீ வேகத்தில் பந்துவீசுவது சாதாரணமல்ல. அதிலும் வேகத்தைக் கட்டுப்படுத்தி,லைன் லென்த்தில் வீசுவது அசாத்தியம்” எனத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், SPORTZPICS
பெங்களூரு சின்னசாமி அரங்கில் லக்னோ அணி சேர்த்திருந்த 181 ஸ்கோர் என்பது எளிதாக அடைந்துவிடக்கூடிய ஸ்கோர்தான். ஆனால், ஆர்சிபி அணி தொடர்ந்து செய்த தவறுகள், வீரர்களி்ன் பொறுப்பற்ற பேட்டிங், பொறுமையின்மைதான் தோல்வியில் தள்ளியது.
அதிலும் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் நேற்றைய ஆட்டத்தில் மட்டும் 5 சிக்ஸர்களை வழங்காமல் இருந்திருந்தால் இந்த போட்டியில் ஆர்சிபி வென்றிருக்கும் என் விமர்சகர்கள் கூறினர்.
ஆர்சிபி வெற்றி பெறுவதற்கு பெரிய அளவு ரன்கள் வித்தியாசமில்லை, 28 ரன்கள் இடைவெளிதான். டாட் பந்துகளை குறைத்திருந்தாலே ஆர்சிபி வென்றிருக்கும். அது மட்டுமல்லாமல் ஆசிபி அணியின் கேஜிஎப் பேட்டர்கள் தொடர்ந்து 3ஆவது போட்டியாக நிலைத்து பேட் செய்யவில்லை. இந்த கேஜிஎப் பேட்டர்கள்தான் ஆர்சிபி அணியின் தூண்கள், இவர்களை கட்டம் கட்டி எதிரணி பந்துவீசி வெளியேற்றினாலே ஆர்சிபி தோல்வி ஏறக்குறைய உறுதியாகிவிடுகிறது.
அதிலும் மேக்ஸ்வெல், தொடர்ந்து 3ஆவது ஆட்டத்தில் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினார். களத்துக்கு வந்தவுடன் மயங்க் பந்துவீச்சை கவனித்து ஆடாமல், 2ஆவது பந்திலேயே பெரிய ஷாட்டுக்கு முயன்றது மேக்ஸ்வெல் பேட்டிங் முற்றிலும் தவறானது என்பதையே வெளிப்படுத்தியது. டூ பிளசிஸ் நல்ல டச்சில் இருந்தாலும் நேற்றைய ஆட்டத்தில் அவர் தேவையின்றி, அவரே எதிர்பாராமல் ரன்அவுட்டில் விக்கெட்டை இழந்தார். விராட் கோலி தொடர்ந்து சுழற்பந்துவீச்சுக்கு இரையாகிறார் என்ற கூற்றை நேற்று மீண்டும் நிரூபித்தார்.

பட மூலாதாரம், SPORTZPICS
அது மட்டுமல்ல டீக் காக் 32 ரன்கள் சேர்த்திருந்தபோது மேக்ஸ்வெல் கேட்சை கோட்டைவிட்டார், அதேபோல நிகோலஸ் பூரனுக்கு கேட்சை தவறவிட்டது ஆகியவற்றுக்கு ஆர்சிபி பெரிய விலை கொடுத்தது. இந்த இரு கேட்சுகளையும் பிடித்திருந்தால் லக்னோவின் ஸ்கோர் இன்னும் 30 முதல் 40 ரன்கள் குறைந்திருக்கும்.
ஆர்சிபி அணி பவர்ப்ளே ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்தது அந்த அணிக்க பெரிய பலவீனமாகும். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி 48 ரன்கள் மட்டுமே சேர்த்தது. கோலி, டூப்பிளசிஸ், மேக்ஸ்வெல் என கேஜிஎப் வெளியேறினர். அதன்பின் 100 ரன்களை எட்டுவதற்கு 8 ஓவர்கள்வரை ஆர்சிபி எடுத்துக்கொண்டது. அதாவது சாரசரியாக 6 ரன்ரேட்டில் மட்டுமே பயணித்தது வெற்றிக்கு உதவாது.
அது மட்டுமல்லாமல் ஆர்சிபி அணி கடைசி 60 ரன்களுக்கு மட்டும் நேற்று 5 விக்கெட்டுகளை இழந்தது. அதிலும் கடைசி 17 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை ஆர்சிபி இழந்தது தோல்விக்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாகும். ஆர்சிபி அணியில் லாம்ரோர் சேர்த்த 33 ரன்கள்தான் அதிகபட்சம். மற்ற அனைத்து பேட்டர்களும் 20 ரன்களுக்குள் ஆட்டமிழந்தனர்.

பட மூலாதாரம், SPORTZPICS
“கேட்சைவிட்டோம், வெற்றியை இழந்தோம்”
ஆர்சிபி கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ டீகாக், பூரனுக்கு கேட்ச்சுகளை விட்டபோதே வெற்றியை விட்டுவிட்டோம். மயங்க் வீசும் பந்துக்கு பேட்டரால் எதிர்வினையாற்றமுடியவில்லை. அந்த அளவுக்கு பேட்டரை வேகமாகப் பந்து கடந்துவிடுகிறது. அவரின் வேகம், கட்டுக்கோப்பு, ஒழுக்கம், துல்லியம் அற்புதமாக இருக்கிறது. எங்களின் பந்துவீச்சு சிறப்பானது என சொல்லமுடியாது. பவர்ப்ளேயில் ஏராளமான தவறுகள் செய்தோம். டெத் ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசி லக்னோவை கட்டுப்படுத்தினாலும் தேவையற்ற ரன்கள் சென்றது. ஓய்வறையில் வலிமையான உற்சாகப்பேச்சு அவசியம்” எனத் தெரிவித்தார்
லக்னோ அணியிலும் தொடக்க ஆட்டக்காரர் குயின்டன் டீ காக்(81), நிகோலஸ் பூரன்(40) ஆகிய இரு பேட்டர்களைத் தவிர மற்றவர்கள் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. 3வது விக்கெட்டுக்கு டீ காக்-ஸ்டாய்னிஷ்(24) கூட்டணி 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஸ்கோர் உயர்வுக்கு வழிகாட்டினர். அதேபோல பதோனி, பூரன் கூட்டணி 33 ரன்கள் சேர்த்தனர். மற்றவகையில் கேப்டன் ராகுல்(20) ரன்களில் வெளியேறினார். தேவ்தத் படிக்கல் லக்னோ அணிக்கு வந்தபின் 3வது போட்டியிலும் சொதப்பலாக பேட்செய்து 6 ரன்னில் ஆட்டமிழந்தார்.
லக்னோ அணிக்கு டீகாக், ராகுல் நல்ல தொடக்கத்தை அளித்தனர். ஆனால், ராகுல் 20 ரன்னில் பவர்ப்ளே ஓவருக்குள் ஆட்டமிழந்தார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் லக்னோ ஒரு விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் சேர்த்தது.
அதிரடியாக ஆடிய டீகாக் 32 பந்துகளில் அரைசதம் அடித்தார். டீகாக் 32 ரன்களில் ஆட்டமிழந்திருக்க வேண்டியது ஆனால் மேக்ஸ்வெல் கேட்சை தவறவிட்டதால், கூடுதலாக 49 ரன்களை டீகாக் சேர்த்தார். 56 பந்துகளில் 81 ரன்களுடன் டீகாக் ஆட்டமிழந்தார். இதில் 5 சிக்ஸர்கள், 8பவுண்டரிகள் அடங்கும்.

பட மூலாதாரம், SPORTZPICS
ஆர்சிபிக்கு ஆறுதல்
மேக்ஸ்வெல் பேட்டிங்கில் ஜொலிக்காவிட்டாலும் பந்துவீச்சில் 4 ஓவர்கள் வீசி 23 ரன்கள் கொடுத்து ராகுல், ஸ்டாய்னிஸ் என இரு பெரிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் 12 டாட்பந்துகள் அடங்கும். அதேபோல டாகர் 2 ஓவர்கள் வீசி 23 ரன்கள் கொடுத்தார்.
வேகப்பந்துவீச்சில் யாஷ் தயால் அற்புதமாகப் பந்துவீசி 4 ஓவர்களில் 24 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார், இதில் 12 டாட் பந்துகளும் அடங்கும். ஆர்சிபியை பலவீனப்படுத்தியது சிராஜ்(47), டாப்ளி(39) ஆகிய இருவரின் பந்துவீச்சும்தான். இதில் சிராஜ் மட்டும் கட்டுக்கோப்பாக பந்துவீசி இருந்தால் லக்னோவுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)













