சூரிய கிரகணத்தின் போது ராட்சத ஆமைகள் உற்சாகமாக இனச் சேர்க்கையில் ஈடுபடுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரான்கி அட்கின்ஸ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
சூரிய கிரகணம் எப்போதுமே மனிதர்களுக்கு ஆச்சரியமூட்டும் நிகழ்வாகவே உள்ளது. ஆனால், விலங்குகளின் உலகத்தில் ஒரு பகலின் குறிப்பிட்ட பகுதி இரவாக மாறும் நேரத்தில் அவை என்ன மாதிரியான உணர்வை எதிர்கொள்கின்றன?
இந்த நாளில் சந்திரன் சூரியனை மறைப்பதன் காரணமாக ஒட்டுமொத்த வானமும் இருளால் சூழப்படுகிறது.
சூரிய கிரகணம் ஏற்படும்போது குறிப்பிட்ட நேரமே அது நீடிக்கும் என்றாலும், மனிதர்களிடம் உணர்ச்சிபூர்வமான ஆச்சரிய உணர்வை அது உண்டாக்குகிறது. ஆனால், இதே நிகழ்வு விலங்குகள் மத்தியில் என்ன மாதிரியான உணர்வை ஏற்படுத்துகிறது என்பதை கணிப்பது கடினம்.
தூக்கம், உணவு தேடுதல் மற்றும் வேட்டையாடுதல் என விலங்குகளின் அன்றாட செயல்பாடுகளும் 24 மணிநேர உயிரியல் நேரத்தின்படியே கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் கிரகணம் ஏற்படும் நேரத்தில் இந்த செயல்பாட்டு முறை எப்படி பாதிக்கப்படுகிறது என்பது குறித்து பெரிய அளவில் எந்த ஆய்வும் செய்யப்பட்டதில்லை.
காரணம் இந்த நிகழ்வுகள் பலநூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை அரிதாக நிகழும் ஒன்று. அதே சமயம் அனைத்து விதமான விலங்குகளும் ஒரே மாதியான எதிர்வினைகளை வெளிப்படுத்துவதில்லை.

பட மூலாதாரம், Getty Images
“ஒளி என்பது தாவரங்கள் முதல் விலங்குகள் வரை அனைத்தின் மீது தாக்கம் செலுத்தும் ஒன்று. உயிரியலாளர்களாக நம்மால் எப்போதும் சூரியனை ஒளி தராமல் நிறுத்த முடியாது, ஆனால் இயற்கை அதுவாகவே அந்த பணியை செய்கிறது” என்கிறார் ஸ்வீடனை சேர்ந்த லண்ட் பல்கலைக்கழக நடத்தை சூழலியல் நிபுணர் சிசிலியன் நில்சன்.
100 ஆண்டுகளுக்கு முன்பு நியூ இங்கிலாந்தைச் சேர்ந்த பூச்சியியல் வல்லுநர் ஒருவர் சூரியன் மறைவதை சோதனைக்கு உட்படுத்தினார்.
1932இல் நடந்த சூரிய கிரகணத்தின் போது விலங்குகளின் நடத்தையில் ஏற்படும் மாற்றங்களை பதிவு செய்வதற்காக வில்லியம் வீலர் உள்ளூர் செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுத்து பொதுமக்களை பணியமர்த்தினார்.
அதில் அவர் 500க்கும் மேற்பட்ட நிகழ்வுகளை பதிவு செய்தார். அவர்கள் ஆந்தைகள் கூச்சலிடத் தொடங்குவது மற்றும் தேனீக்கள் தங்கள் கூட்டிற்குத் திரும்புவது உள்ளிட்ட பறவைகள், பாலூட்டிகள், பூச்சிகள் மற்றும் தாவரங்களில் ஏற்பட்ட மாற்றங்களை பதிவு செய்தனர்.

பட மூலாதாரம், Getty Images
ஆகஸ்ட் 2017 இல், இரண்டு நிமிடங்கள் மற்றும் 42 வினாடிகளுக்கு சூரியனின் கதிர்களை மறைக்கும் ஒரு கிரகணம் நிகழ்ந்த போது விஞ்ஞானிகள் மீண்டும் இந்த பரிசோதனையை செய்தனர்.
இந்த முறை, மேலும் ஆச்சரியமான முடிவுகள் கிடைத்தன. இருள் நெருங்க நெருங்க, ஒட்டகச் சிவிங்கிகள் பதற்றத்துடன் ஓடின. தெற்கு கரோலினா உயிரியல் பூங்காவில் ஆமைகள் இனச்சேர்க்கை செய்தன. மேலும் ஓரிகான், இடாஹோ மற்றும் மிசோரி மாநிலங்களில் வண்டுத்தேனீக்கள் (Bumble bee) ஒலி எழுப்புவதை நிறுத்திவிட்டன.
இந்நிலையில் அடுத்த சூரிய கிரகணம் திங்கள்கிழமை (ஏப்ரல் 8) அன்று நிகழவிருக்கும் நிலையில், அது மீண்டும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. மெக்ஸிகோவிலிருந்து மெய்னே வரையிலான ஒரு குறுகிய நிலப்பரப்பில், விஞ்ஞானிகள் முழுமையான கிரகணப் பாதையை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
வேறு ஏதாவது மர்மமான நிகழ்வுகள் நடக்கிறதா என்று கண்காணிக்க மக்களுக்கும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
'மிருகக்காட்சிசாலையே அன்று வழக்கத்திற்கு மாறானதாக இருந்தது’
தெற்கு கரோலினாவில் உள்ள ரிவர்பேங்க்ஸ் மிருகக்காட்சிசாலையில் பணிபுரியும் விஞ்ஞானி ஆடம் ஹார்ட்ஸ்டோன்-ரோஸ் கூறுகையில்,“ஆரம்பத்தில் மிருகக்காட்சிசாலையில் இருக்கும் விலங்குகளுக்கு 2017இல் ஏற்பட்ட கிரகணத்தால் தாக்கம் ஏற்படாது என்றே கருதினோம்” என்று கூறினார்.
அன்று கிரகணத்திற்கு முன்பும், பின்பும் 17 உயிரினங்களின் நடவடிக்கைகளை கவனிப்பதற்காக பயிற்சி பெற்ற ஆய்வாளர்களும், மக்களும் அங்கு கூடியிருந்தனர்.
“ஆனால், கிரகணத்தின் போது மிருகங்கங்களின் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகளால் அன்றைய நாள் குறிப்பிடத்தகுந்த ஒன்றாக மாறிவிட்டது. அங்கிருந்த மக்கள் அனைவரும் ஆரவாரமாக இருந்தனர்.”
அங்கிருந்த முக்கால்வாசி விலங்குகள் ஏதோ அற்புதமான மற்றும் வாழ்க்கையையே மாற்றப்போகும் நிகழ்வை எதிர்கொள்வது போன்ற நடவடிக்கைகளை வெளிப்படுத்தின என்று கூறுகிறார் ஹார்ட்ஸ்டோன்-ரோஸ்.
இந்த கலவையான எதிர்வினைகள் நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டது. அதில் சாதாரணமாக இருந்த விலங்குகள், தங்கள் மாலை நேர நடைமுறைகளைச் வழக்கமாக செய்தவை, கவலை அல்லது புதுமையான நடத்தைகளைக் காட்டியவை என பிரிக்கப்பட்டன.
கிரிஸ்லி கரடிகள் போன்ற சில விலங்குகள் ஒரு அரிய பிரபஞ்ச நிகழ்வை அனுபவிப்பதில் முற்றிலும் ஆர்வமில்லாமல் இருந்தன. "கிரகணம் முழுமையாக நிகழும் போது போது அவை உண்மையில் தூங்கிக்கொண்டும், இயல்பாகவும் இருந்தன," என்கிறார் ஹார்ட்ஸ்டோன்-ரோஸ்.
"ஒட்டுமொத்தத்தில் அவற்றில் ஒன்று தலையை குனிந்துகொண்டு என்ன நடந்தால் எனக்கென்ன கவலை என்பது போல இருந்ததாக," அவர் கூறுகிறார்.
"மறுபுறம் இரவுநேரப் பறவைகள் மிகவும் குழப்பமான மனநிலையில் காணப்பட்டன. தவளைகளின் தோற்றம் அழுகிய மரத்தின் பட்டைகளை போல இருந்தது” என்று கூறினார் ஹார்ட்ஸ்டோன்-ரோஸ்.
இரவு நேரங்களில் உணவுகளை தேடுவதற்காக பறவைகள் தங்களது உடலை மறைத்துக் கொள்வது போல, கிரகணத்தின் உச்சத்திலும் அதையே செய்தன. கிரகணம் முடிந்த பிறகு மரக்கிளையில் தங்களது வழக்கமான இடங்களுக்கு அவை நகர்ந்து விட்டன என்று கூறுகிறார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
ஆமைகள் உற்சாகமாக இனச் சேர்க்கையில் ஈடுபடுவது ஏன்?
இதில் சோகம் என்னவெனில், கிரகணத்தின் போது சில விலங்குகள் கவலை மற்றும் துன்பமாக இருப்பது போன்ற அறிகுறிகளைக் காட்டின. "பொதுவாகவே நிதானமான விலங்குகளாக கருதப்படும் ஒட்டகச்சிவிங்கிகள், காடுகளில் வேட்டையாடப்படும் போது ஓடுவது போல் திடுக்கிட்டு ஓட ஆரம்பித்தன. இது டென்னசியில் உள்ள நாஷ்வில்லி மிருகக்காட்சிசாலையில் இருந்த ஒட்டகச்சிவிங்கிகளின் நடவடிக்கையை பிரதிபலித்தது.
ஆனால் இவற்றில் கலாபகோஸ் ராட்சத ஆமைகளே விசித்திரமான நடத்தையைக் கொண்டிருந்தன. "பொதுவாக, ஆமைகள் மிகவும் சாதுவாக அமர்ந்திருக்கும். அவை மிகவும் உற்சாகமாக இருக்கும் விலங்குகள் அல்ல," என்கிறார் ஹார்ட்ஸ்டோன்-ரோஸ்.
இருப்பினும், கிரகணம் உச்சமடையும் வேளையில் அவை வேகமாக ஒன்றுக்கொன்று இனப்பெருக்கத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டதாக கூறுகிறார் அவர்.
கிரகணத்தை பார்த்து விலங்குகள் எப்படி எதிர்வினையாற்றுகின்றன என்பதை உற்றுநோக்க மிருகக்காட்சிசாலை ஒரு தனித்துவமான சூழலாக இருந்தபோதிலும், அதில் குறைபாடுகளும் இருந்தன.
"கிரகணம் உற்சாகத்தை தரக்கூடியது என்பதால், அன்று மக்கள் மிகவும் பரபரப்பாகவும் சத்தமிட்டுக் கொண்டும் இருந்தனர்" என்கிறார் ஹார்ட்ஸ்டோன்-ரோஸ்.

பட மூலாதாரம், Getty Images
விரிவான தரவு சோதனை
அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையிலிருந்து மேற்கு கடற்கரை வரை பரவியுள்ள சுமார் 143 வானிலை நிலையங்களில் கிடைத்த தரவுகளைப் பயன்படுத்துவதே தரவு சார்ந்த அணுகுமுறை.
"எங்களிடம் எப்போதும் வானத்தை கண்காணிக்கும் இந்த நெட்வொர்க் உள்ளது, இது இந்த அரிய நிகழ்வுகளை பெரிய அளவில் ஆராய ஒரு சிறந்த வாய்ப்பாகும்" என்று அந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய நில்சன் கூறுகிறார்.
சூரியன் மறையும் போது ஒளியின் மாற்றத்தை தவறாக நினைத்துக் கொண்டு, பறவைகள் மற்றும் பூச்சிகள் வானத்திற்கு திரண்டு வருமா என்று விஞ்ஞானிகள் ஆச்சரியப்பட்டனர். இருப்பினும், கிரகணத்தின் இருளில் பறவைகளைக் கண்டுபிடிப்பது கடினம். எனவே அங்கு தான் வானிலை நிலையங்கள் உதவி செய்கின்றன.
நில்ஸன் கூறுகையில், "தனிப்பட்ட பறவைகளைக் கண்காணிப்பதற்குப் பதிலாக, காற்றில் உள்ள உயிரியல் பொருட்களின் அளவை ஒட்டுமொத்தமாக அளவிடுகிறோம்" என்கிறார்.
ஒரு எளிய ரேடாரின் உதவியோடு பறவைகள் மற்றும் மேகங்கள் ஆகியவற்றை தனித்தனியாக மதிப்பிடுகிறோம்.
சூரியன் மறையும் போது, வானத்தில் செயல்பாடு பொதுவாக உச்சத்தை அடைகிறது. பறவைகள் தங்கள் இரவு நேர இடம்பெயர்வுகளைத் தொடங்குகின்றன. ஆனால் நடுப்பகலில் ஒரு அசாதாரணமான இருள் சுற்றுச்சூழல் மாற்றத்திற்கான அறிகுறியாக செயல்படுமா?
"உண்மையில் வானில் பறவைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதை நாங்கள் கண்டோம். பெரும்பாலான பறவைகள் கிரகணம் முடியும் வரை தரைக்கு சென்றுவிட்டன அல்லது பறப்பதை நிறுத்தி விட்டன.
இதில் ஒரு கோட்பாடு என்னவென்றால், ஒரு புயல் நெருங்கி வரும் போது அவை என்னை செய்யுமோ, அதையே தான் கிரகணத்தின் போதும் அவை செய்தன" என்று நில்ஸன் கூறுகிறார்.
இரண்டாம் கட்ட விளைவுகள்
பறவைகளின் முக்கியமான கூடு கட்டும் தளமாகவும், புலம்பெயர்ந்த பறவைகளுக்கு ஒரு இடைநிறுத்தப் புள்ளியாகவும் உள்ள நெப்ராஸ்காவின் பிளாட் நதி பள்ளத்தாக்கில், 2017 கிரகணத்தில் ஏற்பட்ட நடத்தை போக்குகளை தனிமைப்படுத்திப் பார்ப்பது எளிதாக இருந்தது.
வனவிலங்குகளைக் கண்காணிக்க விஞ்ஞானிகள் குழு ஒன்று இயற்கை பாதைகளில் டைம்-லேப்ஸ் கேமராக்கள் மற்றும் ஒலிக் கருவிகளை பொருத்தியது.

பட மூலாதாரம், Getty Images
இருப்பினும், பறவைகள் பல்வேறு வழிகளில் எதிர்வினையாற்றின என்று கீர்னியில் உள்ள நெப்ராஸ்கா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் எம்மா பிரின்லி பக்லி கூறுகிறார்.
வெஸ்டர்ன் மெடுலார்க்ஸ் பறவைகள் 95% கிரகணத்தின்போது மழுங்கடிக்கப்பட்ட நிலைக்கு சென்றன அல்லது ஒருகட்டத்தில் மொத்தமாக பறப்பதை நிறுத்திவிட்டன. மறுபுறம், அமெரிக்க கோல்ட்ஃபின்ச் மற்றும் சாங் ஸ்பாரோஸ் சிட்டுக்குருவிகள் கிரகண உச்சத்தின்போது சத்தமிடுவதை அதிகரித்தன என்று அவர் கூறுகிறார்.
மனிதர்களைப் போலவே, விலங்குகளும் கிரகணங்களின் போது வெவ்வேறு வழிகளில் எதிர்வினையாற்றுகின்றன. சில ஆய்வுகளில், மீன்கள் அடைக்கலம் தேடி ஓடின, சிலந்திகள் தங்களது வலைகளை அழித்தன.
மிகச் சமீபத்திய பரிசோதனையில், கிரகணத்தின் போது தேனீக்கள் ஒலியெழுப்புவதை நிறுத்தி விடுகின்றன.
ஆனால் அனைத்து மாற்றங்களுக்கும் நாம் ஒளியை காரணமாக கூற முடியாது, முழு கிரகணத்தால் ஏற்படும் இரண்டாம் நிலை விளைவுகளும் இருக்கின்றன என்று கூர்கிறார் பிரின்லி பக்லி.
நெப்ராஸ்காவில், வெப்பநிலை சுமார் 6.7 டிகிரி செல்சியஸ் (12 எஃப்) குறைந்து, ஈரப்பதம் 12% உயர்ந்தது. இது ஒரு குறுகிய காலத்திற்குள்ளான கடுமையான மாற்றமாகும்.
"அங்கு குறைந்த சூரிய ஒளி உள்ளது, இதன் விளைவாக சுற்றுப்புற வெப்பநிலை குறைகிறது, மேலும் இது காற்றில் ஏற்படும் மாற்றங்களால் அதிகரிக்கிறது" என்று அவர் கூறுகிறார். இந்நிலையில், மாற்றத்திற்கான துல்லியமான காரணத்தை கூறுவது கடினம்.

பட மூலாதாரம், Getty Images
மக்களின் பங்கேற்பு
இந்த ஏப்ரல் மாதத்தில், வட கரோலினாவில் உள்ள ரிவர்பேங்க் மிருகக்காட்சிசாலை அதிக பொது மக்களுடன் கிரகணம் குறித்த தங்கள் கண்காணிப்பை விரிவுப்படுத்தியுள்ளது.
"சிலர் இதை மிகவும் அமைதியாக, தனியாக செய்ய விரும்புகிறார்கள். சிலர் தங்கள் நண்பர்களுடன் இதைச் செய்ய விரும்பலாம் அல்லது சிலர் ஏதாவது ஒருவகையில் பங்களிக்க விரும்பலாம்" என்று ஹார்ட்ஸ்டோன்-ரோஸ் கூறுகிறார்.
சூரிய கிரகண சஃபாரி திட்டம் ஆயிரக்கணக்கான மக்களை விலங்குகளின் நடத்தையைக் கவனிக்க ஊக்குவிக்கிறது. இருப்பினும் அவர்கள் உயிரியல் பூங்காக்களையும் தாண்டி, இதில் பண்ணை விலங்குகள் மற்றும் செல்லப்பிராணிகளை இணைக்க விரும்புகிறார்கள்.
அக்டோபர் 2023 வருடாந்திர கிரகணத்திலிருந்து ஆரம்பக்கட்ட தரவுகள் ஏற்கனவே சேகரிக்கப்பட்டுள்ளது. மொத்த சூரிய கிரகணத்தைப் போலல்லாமல், வருடாந்திர கிரகணம் என்பது சந்திரன் சூரியனை ஓரளவு மட்டுமே மறைக்கும். இதையே சிலர் ஒரு ‘நெருப்பு வளையம்’ என்று அழைக்கின்றனர்.
நாசா எக்லிப்ஸ் சவுண்ட்ஸ்கேப்ஸ் திட்டத்தை நடத்தி வருகிறது. இதில் அமெரிக்கா முழுவதிலும் இருந்து கிட்டத்தட்ட 1,000 தரவு சேகரிப்பாளர்கள் பணியாற்றுகின்றனர்.
இந்த பங்கேற்பாளர்கள் ஆடியோமோத்ஸ் எனப்படும் சிறிய தரவு ரெக்கார்டர்களைப் பயன்படுத்தலாம், அவை மூன்று ஏஏ பேட்டரிகளின் அளவு கொண்டவை. இந்த ஆடியோ தரவு ரெக்கார்டர்கள் கிரகணத்தின் போது வனவிலங்குகளிடமிருந்து வரும் ஒலிகளை பதிவு செய்யும்.
"குறிப்பாக ஒலிகள் விலங்குகள் மீது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்பதை நாங்கள் கவனித்து வருகிறோம்" என்று கூறுகிறார் ஹென்றி ட்ரே விண்டர். இவர் ஒரு சோலார் இயற்பியலாளர்.
அசாதாரண தூண்டுதல்களுக்கு விலங்குகள் எதிர்வினையாற்றும் விதம், மனிதனால் தூண்டப்படும் இடையூறுகளைப் பற்றிய புரிதலை வழங்கக்கூடும் என்று விண்டர் கூறுகிறார்.
"மரம் வெட்டுதல் அல்லது இரவு முழுவதும் விளக்குகள் ஒளிரும் கட்டுமான தளங்கள் காரணமாக ஒரு பகுதியில் எழும் உரத்த ஒலிகளின் விளைவை நீங்கள் கேட்கலாம்".
2044க்கு முன்பாக அமெரிக்காவில் தெரியும் கடைசி முழு சூரிய கிரகணம் இதுவாகும். எனவே பல மக்கள் விலங்குகள் மீதும் தங்கள் கவனத்தை திருப்பியுள்ளனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












