கடலில் மிதக்கும் 'விண்மீன்கள்' - நீங்கள் இந்த அற்புத காட்சியை எங்கே, எப்போது பார்க்கலாம்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சாரா ஹார்வி
- பதவி, பிபிசி செய்தியாளர்
‘சீ ஆஃப் ஸ்டார்ஸ்’ அல்லது 'நட்சத்திரங்களின் கடல்' (Sea of stars) என்ற இடம் மாலத்தீவின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும். பலருக்கும் புரியாத புதிராகவும் இந்த இடம் உள்ளது.
வானிலிருந்து கீழே இறங்கிய விண்மீன்கள் கடல் நீரில் மிதப்பது போல, இந்தியப் பெருங்கடல் இங்கே இருளில் நீல நிறத்தில் ஒளிர்கிறது.
கடலோரப் பகுதி முழுவதும், சிறிய நட்சத்திரங்கள் போன்ற புள்ளிகள் அலைகளுடன் கரை ஒதுங்குகின்றன. ஈரமான மணல் இரவு வானத்தைப் பிரதிபலிக்கிறது. சில நிமிடங்களில் அவை அனைத்தும் மறைந்துவிடும்.
நான் கடற்கரை முழுவதும் அலைந்து, என் கால் தடங்களை வெளிச்சத்தில் பார்த்தேன். என் கால் விரலை நீல நீரில் நனைத்தபோது, பிரகாசமான ஒளி என்னைச் சூழ்ந்தது போல் தோன்றியது.
கண்களுக்கு விருந்தளிக்கும் இந்தப் பகுதி 'நட்சத்திரங்களின் கடல்' (Sea of stars) என்று அழைக்கப்படுகிறது. இது மாலத்தீவில் அதிகம் பார்வையிடப்படும் சுற்றுலா தலங்களில் ஒன்றாகும்.
இந்த அழகிய காட்சிகளை இணையத்தில் காணும் சுற்றுலாப் பயணிகள், அந்த இடத்திற்கு நேரில் சென்று 'நட்சத்திரங்களின் கடலை' கண்டுகளிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

பட மூலாதாரம், PETR HORALEK
நட்சத்திரங்களின் கடல் தோன்றுவது எங்கே?
ஆனால், இந்த கடற்கரைப் பகுதி துல்லியமாக எங்கே இருக்கிறது என்று யாராலும் சொல்ல முடியாது. ஏனெனில் 'நட்சத்திரங்களின் கடல்' என்ற பகுதி உண்மையில் இல்லை.
இரவில் கடலில் ஒளிரும் இந்த மந்திர விளக்குகள், உயிரொளிர்வு மிதவைவாழிகள் அல்லது பயோலுமினசென்ட் பிளாங்க்டன் (Bioluminescent plankton) எனப்படும் உயிரினங்களால் ஏற்படுகின்றன. அலைகளில் மிதக்கும் பயோலுமினசென்ட் பிளாங்க்டனால் ஏற்படும் ஒளியைக் கண்டு தான் சுற்றுலாப் பயணிகள் மெய்சிலிர்த்துப் போகிறார்கள்.
'நட்சத்திரங்களின் கடல்' தோன்றும் காட்சியை எப்போது பார்க்கலாம்?
"மாலத்தீவில் உள்ள நட்சத்திரக் கடலைப் பார்க்க வேண்டும் என்று மக்கள் கூறும்போது, பயோலுமினசென்ட் பிளாங்க்டனால் ஏற்படும் வேதியியல் எதிர்வினையைப் பார்க்க விரும்புகிறார்கள் என்று தான் அர்த்தம்" என்கிறார் கடல் உயிரியலாளரும் வனவிலங்கு தொகுப்பாளருமான லாரன் ஆர்தர். இவர் மாலத்தீவில் எட்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
பயோலுமினெசென்ஸ் என்பது ஒரு வேதியியல் எதிர்வினை. இது ஒளி அலைகளை உருவாக்குகிறது. பிளாங்க்டன் என்பது நுண்ணிய உயிரினங்களின் குழுவைக் குறிக்கும் சொல். அந்த உயிரினங்களால் தங்கள் இயக்கங்களை கட்டுப்படுத்த முடியாது.
அவை அலைகளில் மிதக்கின்றன. அதேவேளையில் அனைத்து நுண்ணுயிரிகளும் ஒளியை வெளியிடுவதில்லை.
"பயோலுமினசென்ட் பிளாங்க்டனைக் காண்பதற்கான குறிப்பிட்ட பகுதி என எதுவும் இல்லை. மாலத்தீவில் அல்லது உலகில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் பிளாங்க்டனைக் காணலாம். மாலத்தீவில் உள்ள பல தீவுகளில் பலமுறை பயோலுமினசென்ட் பிளாங்க்டன்களைப் பார்க்க முடிந்ததை நான் எனது அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன்" என்று ஆர்தர் கூறினார்.
ஒரு வாரம் அல்லது சில நாட்கள் விடுமுறைக்காக மாலத்தீவுக்கு வரும் பெரும்பாலான பயணிகளைப் போலல்லாமல், ஐந்து ஆண்டுகள் இந்த பவளத் தீவில் வசித்ததாக கூறினார் ஆர்தர்.
சில நாட்களுக்கு மட்டுமே மாலத்தீவுகளுக்கு வரும் பயணிகள், இந்த பவளத் தீவில் உள்ள 'நட்சத்திரங்களின் கடலைப்' பார்க்க என்ன செய்ய வேண்டும் என்று ஆர்தரிடம் கேட்டபோது, ஏப்ரல் தொடக்கத்தில் இருந்து அக்டோபர் நடுப்பகுதி வரை நீடிக்கும் தென்மேற்கு பருவமழையின் போது அங்கு செல்லுமாறு அவர் பரிந்துரைத்தார்.
அந்த நேரத்தில் கடல் நீரோட்டங்களால் தென்மேற்கிலிருந்து வடகிழக்கு நோக்கி பிளாங்க்டன்கள் இழுத்துச் செல்லப்படும், இதனால் அவற்றை அதிக எண்ணிக்கையில் காண முடியும்.
“நிலத்தை விட நீர்நிலைகளில் அவற்றைப் பார்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். கடற்கரையில் அமர்ந்து இவற்றைப் பார்க்க முடிந்தால், நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி. ஆனால் அந்த அதிர்ஷ்டம் எல்லோருக்கும் கிடைக்குமா என்பது தான் இங்கே கேள்வி" என ஆர்தர் கூறுகிறார்.

பட மூலாதாரம், PETR HORALEK
மாலத்தீவின் ஸ்நோர்கெலிங் பயணங்கள்
அமாவாசையின் போது இந்த பயோலுமினசென்ட் பிளாங்க்டனை பலமுறை பார்த்ததாக ஆர்தர் கூறுகிறார்.
அந்த நேரத்தில் வானத்தில் நிலவொளி இருப்பதில்லை, முழுமையாக இருள் சூழ்ந்திருக்கும். இந்த நேரத்தில் சுற்றுலா பயணிகள் எடுக்க வேண்டிய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆர்தர் பரிந்துரைக்கிறார்.
"முதலில், உங்கள் குழு ஒன்றாக தண்ணீரில் இறங்கி பிறகு, உங்களிடம் இருக்கும் நீர்ப்புகா டார்ச் லைட்டுகளை அணைக்க வேண்டும். அவை அணைந்த பிறகு, இருளில் ஒரு பயத்தை உணரலாம்.
நீங்கள் உங்கள் கைகளையும் கால்களையும் அசைக்கத் தொடங்கும் போது, அது தண்ணீரின் இயக்கத்தை பாதிக்கிறது. ஒளியை வெளியிடும் பிளாங்க்டனையும் அவை பாதிக்கும். நீரில் நடக்கும்போது ஒளி அலைகளின் நடுவில் பயணிப்பது போல தோன்றும்,'' என்றார் ஆர்தர்.
மஃபுஷி டைவ் மற்றும் வாட்டர்ஸ்போர்ட்ஸ் போன்ற சில டைவிங் மற்றும் நீர் விளையாட்டு மையங்கள், பயோலுமினசென்ட் பிளாங்க்டனைப் பார்க்க விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்காக ஸ்நோர்கெலிங் பயணம் செய்வதற்கான வசதிகளை செய்து கொடுக்கின்றன.
கூகுளில், ஒரு மாதத்தில் 'Sea of Stars' என்று உலகம் முழுவதும் தேடும் 3,20,000 பேரில் நீங்களும் ஒருவர் என்றால், வதூ தீவுக்குச் செல்வதற்கான பரிந்துரைகளைப் பெறலாம்.
வதூ என்பது மாலத்தீவின் ரா அட்டோலில் இருக்கும் ஒரு தீவாகும். இங்கு 626 பேர் வசிக்கிறார்கள். இதேபோல், ஆதாரன் பிரெஸ்டீஜ் வதூ (Adaran Prestige Vadoo) ஒரு தனியார் ரிசார்ட் தீவு. தெற்கு மாலே அட்டோலில் இருந்து 120 மைல்கள் தொலைவில் உள்ளது.
2013ஆம் ஆண்டில், இந்த இரண்டு தீவுகளின் கடற்கரைகளின் அற்புதமான பயோலுமினசென்ட் பிளாங்க்டன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இவை இன்றும் இணையத்தில் பிரபலமாக உள்ளன.
இருப்பினும், வதூ தீவு தவறாகப் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனென்றால், பயோலுமினசென்ட் பிளாங்க்டன் இங்கு அரிதாகவே காணப்படுகிறது. கடந்த காலத்தில் பயோலுமினசென்ட் பிளாங்க்டனின் ஒரு சிறிய அளவு மட்டுமே புகைப்படம் எடுக்கப்பட்டது. அவை எதிர்பாராத விதமாக வைரலாகிவிட்டன.

பட மூலாதாரம், PETR HORALEK
வதூ தீவு
வதூ தீவு இணையத்தில் வைரலானதால், உள்ளூர் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு அது பெரும் பங்களித்தது. நான்கு மாதங்களுக்கு முன்பு, இஸ்மாயில் 'இஸ்ஸே' நசீர் என்பவர் வதூ தீவின் முதல் விருந்தினர் மாளிகையான ‘வதூ வியூ இன்’ (Vadoo view inn) விடுதியைத் திறந்தார்.
மாலத்தீவில் எல்லா இடத்திலும் பயோலுமினசென்ட் பிளாங்க்டனைப் பார்க்க முடியும் என்றாலும், வதூவின் வைரலான புகைப்படங்கள் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது என்று நசீர் கூறினார்.
முன்னதாக பயணிகள் அருகிலுள்ள தனியார் ரிசார்ட் தீவுகளில் மட்டுமே தங்க முடிந்தது, அதன் பிறகு படகுகளில் வதூ செல்வது வழக்கம். ஆனால் நசீர் தனது சமூகத்திற்கு நேரடியாக பயனளிக்கும் வகையில் வதூவில் சுற்றுலாவை மேம்படுத்த முடிவு செய்தார்.
"உலகின் பல பகுதிகளில் இருந்து வரும் பயணிகளுக்கு வதூவில் தங்கும் வசதியை ஏற்படுத்தியிருப்பதை ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக நாங்கள் பார்க்கிறோம்," என்கிறார் நசீர்.
பயோலுமினசென்ட் பிளாங்க்டன் மற்றும் டைவிங் ஹோல்ஸ் (Diving holes) போன்ற அற்புதமான இயற்கை வளங்கள் இந்தத் தீவில் இருந்தபோதிலும், தங்கும் விடுதி இப்போது தான் கிடைத்துள்ளது.
"என்னால் உத்தரவாதம் அளிக்க முடியாது. ஆனால் வருடத்தின் 90 சதவிகித நாட்களில் ஓரளவு பயோலுமினசென்ட் பிளாங்க்டனைப் இந்தத் தீவில் பார்க்க முடியும் என்று என்னால் சொல்ல முடியும்,'' என்கிறார்.
சுற்றுலாப் பயணிகள் பயோலுமினசென்ட் பிளாங்க்டனைப் பார்ப்பதற்கான ஒரே தீவாக வதூ இல்லை என்றாலும் கூட, அவற்றைப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகள் மூலம் கிடைக்கும் வருமானம், மளிகைக் கடைகள் மற்றும் கஃபேக்கள் போன்ற பல உள்ளூர் தொழில்களைத் தொடர்ந்து நடத்த உதவுகிறது.
2009ஆம் ஆண்டு முதல் தீவுக் குழுக்களில் விருந்தினர் மாளிகைகள் சட்டப்பூர்வமாக்கப்பட்டதிலிருந்து மாலத்தீவில் இந்த வகையான சுற்றுலா அனுமதிக்கப்படுகிறது.
முன்பு பெரிய ஹோட்டல் நிறுவனங்கள் நடத்தும் தனியார் ரிசார்ட் தீவுகளில் மட்டுமே சுற்றுலாப் பயணிகள் தங்க அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் பூர்வீக மக்களிடமிருந்து முற்றிலும் அந்நியப்பட்டு இருந்தார்கள்.

பட மூலாதாரம், PETR HORALEK
தூய்மையான, மக்கள் தொகை குறைவான தீவுகள்
மாலத்தீவில் மக்கள் வசிக்கும் 188 தீவுகளில், வதூ ஒரு மிகச் சிறிய தீவு தான். இதுபோன்ற சிறிய தீவுகளில் கடற்கரைகள் அதிக மாசுபாடுகள் இல்லாமல், சுத்தமாக இருக்கும். ஏனென்றால் மற்ற கடற்கரைகளில் வெளிநாட்டவர்களுக்கு கடற்கரை வில்லா சேவைகளை வழங்குவதற்காக கட்டப்பட்ட ரிசார்ட் போலன்றி, இந்தத் தீவின் கடற்கரையோரத்தில் எந்த கட்டுமானமும் இல்லை.
தீவுக் கிராமங்களின் கடற்கரைகளைச் சூழ்ந்திருக்கும் இருள், பயோலுமினசென்ட் பிளாங்க்டனை எளிதாகக் கண்டறிய உதவுகிறது. வாவ் பவளப்பாறையில் உள்ள புலிதூ, தெற்கு அரி அட்டோலில் உள்ள திகுரா மற்றும் தங்கேதி ஆகியவை தான் மாலத்தீவின் குறைந்த மக்கள் தொகை கொண்ட தீவுகள். இங்கே தான் இருண்ட கடற்கரைகளும் உள்ளன.
“மக்கள்தொகை குறைவாக உள்ள ஓல்அஹாலி தீவில் நண்பர்களுடன் முகாமிடச் சென்றபோது பயோலுமினசென்ட் பிளாங்க்டனைப் பார்க்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது. சூரிய அஸ்தமனத்தில் கடற்கரைக்குச் சென்றோம். கடலில் சில நீல விளக்குகள் என் தலைக்கு மேல் பறப்பதை உணர்ந்தேன்.” என்கிறார் ஆர்தர்.
“கண்ணாடிக் குளத்தில் சிறிய நீல நட்சத்திரங்கள் ஒளிர்வதைக் கண்டேன். நானும் என் நண்பர்களும் உடனே கடற்கரையில் இறங்கி ஓட ஆரம்பித்தோம். பிறகு, சூரியன் அஸ்தமித்தது. கடற்கரை பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது.
அப்போது பிளாங்க்டன் எதிர்பார்த்ததை விட அதிக ஒளியை வெளியிட்டது. தலையை தண்ணீரில் நனைத்தோம். அந்த அற்புதக் காட்சியைப் பார்த்ததும், கடலின் கருவறையில் சிறிய வைரங்களைப் பார்ப்பது போல் இருந்தது. அதுதான் நான் பார்த்ததில் மிகவும் அழகான காட்சி'' என்று தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார் ஆர்தர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












