வேலூரில் திமுகவுக்கு சவால் தரும் பாஜக - சிறுபான்மையினர் வாக்குகளை அதிமுக கவருமா?

- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் கவனிக்கப்படும் தொகுதிகளில் ஒன்றாக வேலூர் உள்ளது. உதயசூரியன், இரட்டை இலை, தாமரை நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் சில தொகுதிகளில் ஒன்றாக இருக்கும் வேலூரில் இந்த முறை கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதே வேலூர் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. தேர்தல் நேரத்தில் 11 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதால், அந்தத் தொகுதியின் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. சில மாதங்கள் கழித்து நடத்தப்பட்ட தேர்தலில், முதல் இரண்டு வேட்பாளர்களில் யார் வெல்லப் போகிறார்கள் என்று கடைசிக் கட்டம் வரை தெரியாத வகையில் கடுமையான போட்டி நிலவியது. இறுதியில் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார்.
இந்த முறையும் சுவாரஸ்யமான தேர்தல் களமாக வேலூர் அமைந்துள்ளது. கடந்த முறை முதல் இரண்டு இடங்களைப் பிடித்த வேட்பாளர்கள் மீண்டும் களத்தில் மோதுகின்றனர். நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகனின் மகனான டி.எம்.கதிர் ஆனந்த் உதய சூரியன் சின்னத்திலும், அவரை எதிர்த்து தாமரை சின்னத்தில் நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகமும் போட்டியிடுகிறார்.
கடந்த முறைச் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தபோது, ஏ.சி.சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டிருந்தார். அதிமுகவும் பாஜகவும் இந்த முறை தனித்தனியே போட்டியிடும் நிலையில், ஏ.சி.சண்முகம் பாஜக கூட்டணியில் இணைந்து அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நழுவி வரும் வெற்றி வாய்ப்பை இந்த முறை வசப்படுத்திவிட வேண்டும் என்ற முனைப்புடன் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த மும்முனைப் போட்டியில் அதிமுக தனது வேட்பாளராக புதுமுகமான அரசு மருத்துவர் பசுபதியை நிறுத்தி களம் காண்கிறது. தொகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் வாக்குகளைப் பெறுவதில் கவனமாக உள்ளது.
தந்தை வழியில் கதிர் ஆனந்த்

வேலூர் தொகுதி இது வரை திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகளின் வசம் இருந்துள்ளது. வேலூர், கே.வி.குப்பம், அணைக்கட்டு, ஆம்பூர், வாணியம்பாடி, குடியாத்தம் என ஆறு சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட வேலூரில் கணிசமான எண்ணிக்கையில் இஸ்லாமியர்கள் வசிக்கின்றனர்.
தொகுதியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் கதிர் ஆனந்த், பாஜகவை எதிர்த்தே தனது பிரசாரத்தை வகுத்துள்ளார். அவரது கடந்த ஐந்து ஆண்டு காலப் பணிகள் குறித்து மக்களிடமும் கட்சித் தொண்டர்களிடமும் அதிருப்தி நிலவினாலும், பாஜகவை வீழ்த்தக்கூடிய பலம் திமுகவுக்கு மட்டுமே உள்ளது என்பதை மக்களிடம் அடிகோடிட்டுக் காட்ட அவர் தவறுவதில்லை.
“தங்கம் ஒரு சவரன் ரூ.50 ஆயிரமாம். காதுக்கு ஒரு மாட்டல் வாங்க முடியுமா? வளையல் வாங்க முடியுமா?” என்று பிரசாரத்தில் மக்களிடம் கேள்வி எழுப்பும் அவர், “மோதி ஐயா மீண்டும் வந்தால் கேஸ் விலை ரூபாய் 2 ஆயிரம் ஆகிவிடும் என டெல்லியில் உள்ள எனது நண்பர்கள் கூறுகிறார்கள்” என்று தனது தந்தையின் பாணியில் எளிய வாக்காளர்களை ஈர்க்கப் பார்க்கிறார்.
வேலூரில் கே.வி குப்பம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பனைமடங்கி கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்ட பிறகு பிபிசி தமிழிடம் பேசிய அவர், “மோதி தமிழக மக்களுக்கு காசு கொடுக்காமல் வஞ்சித்து விட்டார் என்று மக்களுக்குத் தெரிகிறது. இந்த கிராமங்களில் 100 நாள் வேலைத் திட்டம் செயல்பட நிதி இல்லை, அதனால் பல பெண்களுக்கு வேலை கிடைப்பதில்லை. அவருடைய புகைப்படத்தை எல்லாவற்றிலும் ஒட்டியிருப்பதால், இதற்குக் காரணம் மோதி என்று மக்கள் தெரிந்து கொள்வது எளிது,” என்கிறார்.
கட்சிக்குள்ளும் மக்களிடமும் ஆதரவு இருப்பதால்தான் அவர் திமுக வேட்பாளராக கட்சியால் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் அவர். கீழ்மடுக்கூரில் கட்சி நிர்வாகி வினோபா கூறுகையில், “கட்சிக்குள் பலரும் பல விதமாகப் பேசுவார்கள். இந்தப் பகுதியில் மோர்தானா அணையிலிருந்து பாசனத்துக்கு நீர் கொண்டு வந்தது திமுகதான். அதற்கு என்றென்றும் அவர்களுக்கு வாக்களிக்கலாம்,” என்றார்.
“எங்க ஏழு ஊருக்கும் அவர்தான் வேண்டும், அவர் வந்தால்தான் மாடு விடுவதற்கு அனுமதி கிடைக்கிறது,” என்கிறார் அந்தப் பகுதியில் உள்ள சந்திரா.
சிறுபான்மையினரின் வாக்குகள் யாருக்கு?

வேலூரில் திமுக, அதிமுக வேட்பாளர்கள்ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பாஜக வேட்பாளர் மற்றொரு பிரதான சமூகத்தைச் சேர்ந்தவர். திமுக மற்றும் பாஜக வேட்பாளர்கள் வேலூரின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்க, அதிமுக வேட்பாளர் அரசியலுக்குப் புதுமுகம். இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் வேலூரில் சிறுபான்மையினரின் பாதுகாவலர் தாங்கள் தான் என திமுகவும், பாஜகவிடமிருந்து விலகி வந்துவிட்டோம் பாருங்கள் என அதிமுகவும் மாறி மாறிக் கூறுகின்றன.
பெரும் தொழிலதிபரான ஏ.சி.சண்முகம், பல கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் நடத்தி வருகிறார். இலவச மருத்துவ முகாம்கள், வேலைவாய்ப்பு திட்டங்கள், இலவச மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவற்றை தனிப்பட்ட முறையில் மக்களுக்கு வழங்கி வருகிறார்.
வேலூர் சைதாப்பேட்டையில் பிபிசி தமிழிடம் பேசிய அவர், “கடந்த 11 மாதங்களில் 2.2 லட்சம் மக்களை எனது நலத் திட்டங்கள் சென்றடைந்துள்ளன. இலவச ஜிம், இலவச திருமண மண்டபங்கள் எனப் பலவற்றை செய்து கொடுத்துள்ளேன்,” என்றார்.
“கடந்த முறை ஜஸ்ட் மிஸ் என்கிறார். அவருக்குப் பணம் பிரதானம் அல்ல, மக்கள் சேவைதான் பிரதானம். அவர் நிறைய செய்திருக்கிறார், மக்கள் அதைப் புரிந்து கொண்டுள்ளனர். அதிமுக அல்லாமல் பாஜகவில் நிற்பது அவருக்கு சாதகமாகத்தான் அமையும்,” என்றார் பிரசாரத்துக்கு ஆதரவு தெரிவித்து வந்த தமிழ் மாநில காரங்கிரஸ் மகளிரணி நிர்வாகி தமிழ்செல்வி.
ஏ.சி.சண்முகம் வெவ்வேறு கட்சி சின்னங்களில் போட்டியிடுவதைச் சாடுகிறார் கதிர் ஆனந்த். “என்னவானாலும் நான் கடைந்து எடுத்த திமுககாரன். ஆனால் ஏ.சி.சண்முகம் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு சின்னத்தில் நிற்கிறார், அவருக்குப் பதவி மட்டுமே முக்கியம். அவர் மருத்துவ முகாம்கள் நடத்துவதாகக் கூறுகிறார்கள். கொரோனா காலத்தில் எங்கே போனார்? ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் அலைந்த போது அவர் வெளியே வரவில்லையே!” என்கிறார் கதிர் ஆனந்த்.
இஸ்லாமியர்கள் அதிகமுள்ள தொகுதியில் தாமரை சின்னத்தில் நிற்பது தனக்கு ஆதரவு கிடைக்குமா என்று கேட்டதற்கு, “இஸ்லாமியர்கள் கண்டிப்பாக கதிர் ஆனந்துக்கு வாக்களிக்க மாட்டார்கள், அதில் 40% வாக்குகள் எனக்குக் கிடைக்கும். ரம்ஜான் பண்டிகைக்கு 30 ஆயிரம் பேருக்கு பரிசுப் பொருட்கள் வாங்கித் தந்துள்ளேன்,” என்றார் ஏ.சி.சண்முகம்.
திமுக Vs அதிமுக

அதிமுக சார்பாக ஆலங்காயம் பகுதி அரசு மருத்துவர் பசுபதி நிறுத்தப்பட்டுள்ளார். அரசியலுக்கு புதுமுகமான அவரது பிரசாரத்துக்கு, அதிமுக கட்சி கட்டமைப்புப் பலமாக இருக்கிறது. அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வேலூரின் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது மற்றொரு பலம்.
கடந்த முறை ஏ.சி.சண்முகம் பெற்ற வாக்குகளில் சுமார் 3 லட்சம் வரை இரட்டை இலை சின்னத்துக்காகவே விழுந்தவை என்று நம்புகிறது அதிமுக. எனவே இந்த முறை ஏ.சி.சண்முகத்தால் வெற்றிக்கு நெருக்கமாக வர முடியாது என்று கூறும் அதிமுக, களத்தில் போட்டி தங்களுக்கும் திமுகவுக்கும்தான் என்கிறது.
பேர்ணாம்பட்டு பங்களாமேடு பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட பசுபதி, “நான் அரசியலுக்குத்தான் புதிது. மக்கள் சேவைக்கு அல்ல. அரசு மருத்துவராக இருந்து மக்களுக்கு ஏற்கெனவே சேவை புரிந்து வருகிறேன்,” என்றார். அரசு மருத்துவரானதால் ஆலங்காயம் மட்டும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் நல்ல அறிமுகம் கொண்டவராக உள்ளார்.
ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் இஸ்லாமியர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். அவர்களின் வாக்குகள் கடந்த முறை திமுகவின் கதிர் ஆனந்த் வெற்றி பெறுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தன. இந்த முறையும் பெரும்பாலான இஸ்லாமியர்களின் வாக்குகள் திமுக கூட்டணிக்கே என்கின்றனர் இஸ்லாமிய சமூகத்தினர்.

மனித நேய மக்கள் கட்சியின் திருப்பத்தூர் மாவட்ட தலைவர் நசீர் அஹ்மத், “திமுக கூட்டணியில் எங்களுக்கு இந்த முறை சீட் ஒதுக்கவில்லை என்பது மிகுந்த வருத்தம். கடந்த முறையும் எங்களுக்குத் தரவில்லை. திமுக, அதிமுக இரு கட்சிகளுமே இஸ்லாமியர்களை தங்கள் வேட்பாளர்களாக நிறுத்தவில்லை.
எனினும்கூட எங்கள் சுயநலத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, இஸ்லாமிய சமூகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தத் தேர்தலை அணுக வேண்டும் என்று முடிவு செய்தோம்.
இஸ்லாமியர்களுக்கு எதிராகப் பல வன்முறைகள் தொடர்ந்து நடைபெறுகிறது. அவற்றைத் தடுப்பதற்கு திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கே வாக்களிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம்,” என்றார்.
சிறுபான்மையினர் வாக்குகளை அதிமுக கவருமா?

பாஜக கூட்டணியில் இருந்து விலகி வந்துள்ள அதிமுக, சிறுபான்மையினரான இஸ்லாமிய சமூகத்தினரிடம் இழந்த செல்வாக்கை மீண்டும் பெற முயன்று வருகிறது. வாணியம்பாடியை பகுதியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நிலோபர் கபிலை மீண்டும் கட்சியில் இணைத்து பிரசாரம் மேற்கொள்கிறது.
அதிமுக பிரசார கூட்டங்கள் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தொகுதி மக்களுக்கு எந்த நலத் திட்டத்தையும் அமல்படுத்தவில்லை என்பதை மையப்படுத்தியே நடைபெறுகிறது. தமிழக அரசு வழங்கும் ரூ.1000 மகளிர் தொகை குறித்து அவர் கூறிய கருத்துகள் சர்ச்சையாகியுள்ள நிலையில், அதையும் ஒவ்வொரு பிரசார சந்திப்பில் குறிப்பிடத் தவறுவதில்லை அதிமுகவினர்.
அதிமுகதான் பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்டதாகக் கூறுகிறதே என்று கேட்டதற்கு, “யாரும் அதை நம்பத் தயாராக இல்லை. நாடாளுமன்றத்தில் அதிமுக அளித்த 11 வாக்குகளால்தான் அன்று சிஏஏ இயற்றப்பட்டது. அதை யாராலும் மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது. பாஜகவில் போட்டியிடுவதால் ஏ.சி.சண்முகம் கண்டிப்பாக வெற்றி பெற முடியாது,” என்கிறார் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் பேச்சாளர் முகமது ஃபைசன்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












