வெப்ப அலை: கர்ப்பிணிகள், குழந்தைகள், நீரிழிவு நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images
தமிழகம் முழுவதும் கோடை காலம் துவங்கி கடும் வெப்ப அலை வீசுவதால் மக்கள் கடுமையாக பாதித்துள்ளனர். வெப்ப அலையில் இருந்து காத்துக்கொள்ள, வயது அடிப்படையில் மக்களை ஐந்து வகையாக பிரித்து மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெப்ப அலை அதிகரிக்கும் பாதுகாப்பாக இருக்குமாறு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தனது அறிக்கையில், ஏப்ரல், மே மற்றும் ஜூன் வரையிலான கோடை காலத்தில், இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்ப அலை வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரையில் கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல், வேலூர், சென்னை, கடலூர், சேலம், தருமபுரி, கோவை என பரவலாக பல மாவட்டங்களில் கடும் வெயில் நிலவுவதை பார்க்க முடிகிறது.
வழக்கமாக மே மாதம் கத்தரி வெயில் அல்லது அக்னி நட்சத்திர காலத்தில் தான் அதிக வெப்பம் இருக்கும். ஆனால், வழக்கத்திற்கு மாறாக இந்தாண்டு கத்தரி வெயில் துவங்கும் முன்பே வெயில் சுட்டெரிக்கிறது.
வெப்ப அலையும் வீசுவதால் மக்கள் கடுமையாக பாதித்துள்ளனர். வெயிலின் தாக்கத்தை முறையாக கண்டுகொள்ளாமல் விட்டால் மரணம் நேரிடும் வாய்ப்பு கூட உள்ளதென எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். வெப்ப அலை வீசும் கோடையில் நாம் என்னென்ன செய்யக்கூடாது என, வயதுக்கேற்ப பிரித்து அறிவுரையை கூறுகின்றனர் மருத்துவர்கள்.
குழந்தைகளை எப்படி பராமரிக்க வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images
பிபிசி தமிழிடம் பேசிய, கோவை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் உதவி சித்த மருத்துவ அலுவலர் வித்யாதேவி, ‘‘ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வியர்வையால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, பருத்தி துணிகள் மட்டுமே அணிவிக்க வேண்டும்.
ஒரு நாளைக்கு இருமுறை லேசான சூட்டிலுள்ள நீரில் குளிக்க வைப்பதுடன், தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தேங்காய் எண்ணெய் கொண்டு கை கால்களுக்கு மசாஜ் செய்யும் போது, வியர்வை சுரப்பிகள் அடைத்துக்கொள்ளும். எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தவுடன் சில நிமிடங்கள் கழித்து சூடான நீரில் கழுவிவிட வேண்டும்,’’ என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
குழந்தைகள் பாதுகாப்பு
3 – 12 வயதுள்ள குழந்தைகளை, குறிப்பாக காலை 11:00 – மாலை 4:00 மணி வரையில் வெளியில் விளையாட அனுமதிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
ஐஸ்கிரீம், கூல்டிரிங்ஸ்களை கொடுப்பதற்கு பதிலாக, தயிர் சேர்த்த கம்மங்கூழ், பழச்சாறு, இளநீர், நுங்கு கொடுக்க வேண்டும். வியர்வையால் நம் உடலில் இருந்து தாது உப்புகள் வெளியேறி பற்றாக்குறை ஏற்படும்.
இதை தடுக்க எலுமிச்சை ஜூஸ் தயாரித்து அதில் சர்க்கரை மட்டுமின்றி உப்பு சேர்த்து கொடுக்க வேண்டும். வேர்க்குரு அல்லது அம்மை போன்ற பாதிப்புகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
"வெயில் என்று கூறி விளையாட அனுமதிக்காமல் விட்டால் செல்போனுக்கு அடிமையாகிவிடுவார்கள், கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். இரவு, 6 – 9 மணி வரையில் வேண்டுமானாலும் விளையாட அனுமதிக்கலாம்", என்கிறார் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் நிர்மலா.
கர்ப்பிணிகளுக்கு பாதிப்பு அதிகம்

வெப்ப அலையால் கர்ப்பிணிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்பதால், கூடுதல் கவனத்துடன் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
‘‘கர்ப்ப காலத்தில் சாதாரணமாகவே நீர் குடித்தால் வாந்தி வரும் என்பதால், பல பெண்கள் நீர் குடிப்பதை தவிர்ப்பார்கள். இதனால், பிரசவிப்பதே பெரும் சிக்கலுக்கு உள்ளாகி, குழந்தையின் உயிருக்கே ஆபத்து ஏற்படும். பனிக்குடத்தில் குழந்தைக்கு தேவையான நீர் இருக்க வேண்டுமென்பதால், கர்ப்பிணிகள் சிரமப்பட்டாவது அடிக்கடி போதிய நீர் குடிக்க வேண்டும்,’’ என்கிறார் மருத்துவர் வித்யாதேவி.
கர்ப்பிணிகள், மற்றவர்களைப் போலவே இளநீர், பழச்சாறு போன்றவற்றை குடிக்கலாம்.
அதிக நீர் குடித்து சிறுநீர் கழிக்க வேண்டும்; போதிய அளவு சிறுநீர் போகாமல் விட்டாலும் அலர்ஜி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
"வெயிலால் திடீர் மயக்கம் ஏற்படும் என்பதால், வெளியில் சென்றால் தனியாக செல்லக்கூடாது. வெயிலால் வாந்தி, குமட்டல், மயக்கம் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்", என்று பிபிசி தமிழிடம் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் நிர்மலா கூறினார்.
‘முதியவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்’

பட மூலாதாரம், Getty Images
கோவை மருத்துவக் கல்லூரி முதல்வர் நிர்மலா, ‘‘தேர்தல் வருவதால் முதியவர்கள் முடிந்த வரையில், பகல் நேரங்களில் தேர்தல் பணிகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். முதியவர்களின் தோல் மிகவும் வறண்டு இருப்பதால், வெப்ப அலையினால் சரும பாதிப்புகள் ஏற்படும். இதை தடுக்க வெயிலில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும். அதேபோல், பருத்தி மூலம் தயாரிக்கப்பட்ட வெளிர் நிற துணிகளை உடுத்த வேண்டும்,’’ என்கிறார்.
முதியவர்களுக்கான அறிவுரைகளை முன்வைக்கும் சித்த மருத்துவர் வித்யாதேவி, ‘‘சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரையில் கோடை காலத்தில் மலச்சிக்கல் ஏற்படுவது வழக்கம். இதை தவிர்க்க நார்ச்சத்து அதிகம் உள்ள உணகளை எடுத்துக்கொள்ள வேண்டும். உடலில் பொட்டாசியம் குறையும் என்பதால் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும்.,’’ என்கிறார் வித்யாதேவி.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images
நீரிழிவு நோய் மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சில அறிவுரைகளை முன்வைக்கிறார் வித்யாதேவி.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் பழம் சாப்பிட்டு உடலில் சர்க்கரை அளவை உயர்த்திக்கொள்ள கூடாது. இதற்கு மாற்றாக அதிகம் நீர் மோர் மற்றும் இளநீர் (தேங்காய் மிகக்குறைவாக நீர் அதிகமுள்ள இளநீர்) பருக வேண்டும். நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், கோடை காலத்தில் மது அருந்துவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். உரிய நேரத்தில் சாப்பிட்டு மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும்,’’ என்கிறார் மருத்துவர் வித்யாதேவி.
வெளியில் செல்லும் போது அனைவரும் கட்டாயம் கையில் குடையும் குடிநீர் பாட்டிலும் எடுத்துச்செல்வதுடன், வாகனங்களை வெயிலில் நிறுத்திவிட்டு அதில் உடனடியாக பயணிக்கக் கூடாது. மதியம் 12:00 – 4:00 மணி வெயிலை தவிர்ப்பது சிறந்தது என, சில பொதுவான அறிவுரைகளையும் தெரிவிக்கிறார் கோவை மருத்துவக்கல்லூரி முதல்வர் நிர்மலா.
‘கவனக்குறைவு கூடாது உயிருக்கே ஆபத்தாகும்’
கோடையின் வெப்ப அலை வீசும் காலத்தில், சிலவற்றில் நாம் கவனக்குறைவாக இருந்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்கிறார், கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் (டீன்) நிர்மலா.
அதை விளக்கிய நிர்மலா, ‘‘வெயிலின் தாக்கத்தால் ஹீட் ஸ்டிரோக் (வெப்ப பக்கவாதம்) மட்டுமின்றி, இதயம் பலவீனமாக இருப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. தேர்தல் பணியோ அல்லது சாதாரண பணியோ எதுவாக இருந்தாலும், மதிய நேர வெயிலில் சுற்றுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
வெயிலின் தாக்கத்தால் திடீரென தற்காலிகமாக சில நிமிடங்களுக்கு ஞாபகம் இழப்பது, நெஞ்சு எரிச்சல், மயக்கம், திடீரென வியர்ப்பது போன்றவை ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. இது ஹீட் ஸ்டிரோக் (வெப்ப பக்கவாதம்) அல்லது மாரடைப்புக்கான அறிகுறிகளாக இருக்கலாம். இது போன்றவை ஏற்பட்டால், சாதாரணமாக நினைத்து கவனக்குறைவாக இருந்தால் உயிருக்கே ஆபத்தாகும், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்,’’ என்கிறார் அவர்.
சுகாதாரத் துறை அறிவுரைகள்

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை வெப்ப அலை பாதிப்பு குறித்து பொதுவான அறிவுரைகளையும் வெளியிட்டுள்ளது.
- பயணத்தின் போது கட்டாயம் குடிநீர் எடுத்துச் செல்லவும். உடலில் நீர் பற்றாக்குறையை போக்க போதிய நீர் குடிக்க வேண்டும்.
- நீர் பற்றாக்குறையை போக்க ஓ.ஆர்.எஸ் (Oral Rehydration Solution) கரைசல், எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் குடிக்கவும்.
- வெளியில் செல்லும் போது பருத்தி ஆடை, காலணிகளை அணிய வேண்டும். வெறும் காலில் வெயிலில் செல்வதை தவிர்க்கவும்.
- செயற்கை குளிர்பானங்கள், மது அருந்துதல் மற்றும் புகை பிடிப்பதை தவிர்க்க வேண்டும்.
- வெயிலில் பாதித்தவர்கள் ஆடையின் மேல் குளிர்ந்த நீரை ஊற்றவும்.
- குழப்பமான மனநிலையில், சோர்வாக உள்ளவர்களிடம் அவர்களின் நலன் குறித்து விசாரிக்க வேண்டும்.
- அதிக உடல் வெப்பநிலையில் மயக்கம் அடைந்தால், 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை சிகிச்சையில் சேர்க்கவும்.
- மிகவும் சோர்வாக இருந்தால் அருகில் உள்ள துணை சுகாதார நிலையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மருத்துவமனை சென்று ஓ.ஆர்.எஸ் வாங்கி குடித்து, மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












