தமிழ்நாட்டு கர்ப்பிணி பெண்களுக்கு அதிக வெப்பத்தால் கருச்சிதைவு ஆபத்து அதிகரிப்பு - புதிய ஆய்வு முடிவுகளால் அதிர்ச்சி

காலநிலை மாற்றம்
    • எழுதியவர், துலிப் மஜூம்தார்
    • பதவி, சர்வதேச சுகாதார செய்தியாளர்

கர்ப்பிணிப் பெண்கள் அதிக வெப்பமான சூழலில் பணிபுரிவதால், அவர்களுக்கு கருச்சிதைவு மற்றும் குழந்தை இறந்து பிறக்கும் அபாயம் இரட்டிப்பாவதாக இந்தியாவின் புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.

மேலும், தாய்மார்களுக்கு ஏற்படும் ஆபத்துகள் முன்பு நினைத்ததை விட, தற்போது கணிசமாக அதிகமாகியிருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

வெப்பம் நிறைந்த கோடைக்காலம் கொண்ட வெப்பமண்டலங்களில் வாழும் பெண்களை மட்டுமின்றி, பிரிட்டன் போன்ற நாடுகளில் வாழும் பெண்களுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்துகிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

உலகளவில் பணிபுரியும் கர்ப்பிணிப் பெண்களுக்கு சரியான சுகாதார ஆலோசனைகளை வழங்க வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள்.

சென்னையில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (SRIHER) இயங்கி வரும் பொது சுகாதார துறையால் 2017 இல் தொடங்கப்பட்ட ஆய்வில், தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள 800 கர்ப்பிணிப் பெண்கள் பங்கேற்றனர்.

இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் பாதி பேர் விவசாயம், செங்கல் சூளைகள் மற்றும் உப்பு அடுக்குகள் போன்ற அதிக வெப்பத்தை எதிர்கொள்ளும் வேலைகளில் பணிபுரிந்தனர்.

மற்றவர்கள் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற குளிர்ச்சியான சூழலில் பணிபுரிந்தனர். இருப்பினும் அதில் சில தொழிலாளர்கள் அந்த வேலைகளிலும் அதிக அளவு வெப்பத்தை எதிர்கொண்டனர்.

உலகளவில் மனித உடலுக்கு எந்த அளவிற்கான வெப்பம் அதிகமானது என்ற அளவீட்டு எல்லைகள் எதுவும் இல்லை.

"[வெப்பத்தின் தாக்கம்] என்பது நீங்களும், உங்களது உடலும் எந்த சூழலுக்கு பழகியுள்ளீர்கள் என்பதோடு தொடர்புடையது" என்று கூறுகிறார்.இந்த ஆய்வில் அங்கம் வகித்த விஞ்ஞானிகளில் ஒருவரான பேராசிரியர் ஜேன் ஹிர்ஸ்ட்.

காலநிலை மாற்றம்
படக்குறிப்பு, உலகளவில் மனித உடலுக்கு எந்த அளவிற்கான வெப்பம் அதிகமானது என்ற அளவீடுகள் எதுவும் இல்லை.

பசுமையான புல்வெளிகள் நிறைந்த திருவண்ணாமலையில், இந்த ஆய்வில் பங்கேற்ற கர்ப்பிணி பெண்ணான சுமதியை நான் சந்தித்தேன். கடந்த இரண்டு மணி நேரமாக வெள்ளரிகளை பறித்துக்கொண்டிருந்த அவர், தனது தடிமனான கையுறைகளை அகற்றி, விரல்களை வெளியே நீட்டினார். தனது விரல் நுனிகளை மெதுவாக தடவிக்கொண்டே "இந்த வெப்பத்தால் என் கைகள் எரிகின்றன," என்று என்னிடம் கூறினார்.

கோடைக்காலம் இன்னும் தொடங்கவே இல்லை. ஆனால் ஏற்கனவே இங்கு 30 டிகிரி வெப்பநிலை காணப்படுகிறது. மேலும் ஈரப்பதத்துடன் கூடிய வெப்பத்தையும் உணரமுடிகிறது.

வெள்ளரிக்காய்களில் உள்ள சிறிய கூர்முனைகள் கையை குத்தாமல் இருப்பதற்காக சுமதி கையுறை அணிய வேண்டியுள்ளது. ஆனால், அந்த கையுறையோ கைகளில் அதிக வியர்வையை ஏற்படுத்துகிறது.

தனது முகமும் கூட எரிவதாக அவர் கூறினார்.

தனது பிரதான பணியான பள்ளியில் சமையல் செய்யும் வேலையை முடித்த பிறகு அல்லது அதற்கு முன்பாக, தினமும் வெள்ளரி தோட்டங்களுக்கு வேலைக்கு வருகிறார் சுமதி.

இந்த ஆய்வில் பங்கேற்ற முதல் பெண்களில் சுமதியும் ஒருவர்.

மேலும் இந்த ஆய்வில் இறந்து போன முதல் குழந்தைகளில் அவரது குழந்தையும் ஒன்று.

"கர்ப்பமாக இருந்ததாலும் , வெயிலில் வேலை செய்ததாலும் நான் மிகவும் சோர்வாக உணர்ந்தேன்," என்று கூறினார் அவர்.

ஒரு நாள், சுமதி தன் கணவருக்கு மதிய உணவை கொடுக்க சென்றபோது, அவருக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனது. அன்று மாலை, அவர் மருத்துவரிடம் சென்றார். அவரை சோதனை செய்து பார்த்த மருத்துவர் சுமதிக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். அது சுமதிக்கு 12-ஆவது வாரம்.

காலநிலை மாற்றம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவில் அதிக வெப்பநிலையில் பணிபுரிவது கர்ப்பகால அபாயங்களை இரட்டிப்பாக்கலாம்

"என் கணவர் எப்போதும் என்னை மடியில் படுக்க வைத்து ஆறுதல் கூறுவார். அவர் இல்லாமல் நான் என்ன செய்திருப்பேன் என்று எனக்குத் தெரியவில்லை," என்று கூறுகிறார் சுமதி.

தனது கணவரைப் பற்றி மிகவும் அன்புடன் பேசும் சுமதி, தற்போது அவர் இல்லாமல் வாழ கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது என்று கூறினார்.

ஆம் அவரது கணவர் சமீபத்தில் இறந்துவிட்டார். இப்போது சுமதிதான் அவரது மொத்த குடும்பத்தையும் பார்த்துக் கொள்கிறார்.

கர்ப்ப காலத்தில் வெயிலில் வேலை செய்ததற்கும், முதல் குழந்தையை இழந்ததற்கும் ஏதும் தொடர்பு இருக்கிறதா என்று நிச்சயம் சுமதிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, குளிரான சூழலில் பணிபுரிபவர்களைக் காட்டிலும், சுமதியை போன்று வெப்பமான நிலைமைகளில் பணிபுரியும் பெண்களுக்கு குழந்தை இறந்து பிறப்பது அல்லது கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றம்
படக்குறிப்பு, திருவண்ணாமலையின் சூடான கரும்பு வயல்களில், பகல் நேர வெப்பத்தை அளவிட்டு கொண்டிருக்கிறார் முன்னாள் செவிலியரும், ஸ்ரீஹர் ஆய்வின் தலைமை ஆய்வாளருமான ரேகா சண்முகம்.

உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கு முக்கியமான தகவல்

இந்தியாவில் ஆய்வில் பங்கேற்றுள்ள கர்ப்பிணிப் பெண்கள் தான் உண்மையில் "காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் முன்னணியில் உள்ளனர்" என்று பிரிட்டனைச் சேர்ந்த மகப்பேறு ஆலோசகரும், மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமான தி ஜார்ஜ் இன்ஸ்டிடியூட்டில் உலகளாவிய மகளிர் சுகாதார பேராசிரியருமான ஹிர்ஸ்ட் கூறுகிறார்.

தொழிற்புரட்சிக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில், இந்த நூற்றாண்டின் இறுதியில் பூமியின் சராசரி வெப்பநிலை ஏறக்குறைய மூன்று டிகிரி உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் உலக சுகாதார அமைப்பு (WHO), கர்ப்பிணி பெண்களுக்கான சில கடுமையான விளைவுகளோடு சேர்த்து, "நம் அனைவருக்குமான காலநிலை நெருக்கடி அச்சுறுத்தல்" குறித்தும் எச்சரித்துள்ளது.

முந்தைய ஆய்வு முடிவுகளின்படி, வெப்ப அலைகளின் போது முன்கூட்டியே பிறத்தல் மற்றும் குழந்தை இறந்து பிறத்தல் அபாயம் 15% உயர்ந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இவை பொதுவாக அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற அதிக வருமானம் கொண்ட நாடுகளில் நடத்தப்படுகின்றன.

இந்தியாவின் சமீபத்திய கண்டுபிடிப்புகள், அப்பட்டமான மற்றும் கவலைக்குரிய உண்மைகள் என்று பேராசிரியர் ஹிர்ஸ்ட் கூறுகிறார். மேலும் பரந்துபட்ட தாக்கங்களையும் இவை கொண்டுள்ளது கூறுகிறார் அவர்.

"இந்தியா அளவிற்கு இல்லையென்றாலும், பிரிட்டனில் கோடை வெப்பம் அதிகரித்து வருகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் இந்த பாதகமான விளைவுகள் மிதமான காலநிலை கொண்ட பிரிட்டன் போன்ற குறைந்த வெப்பநிலை கொண்ட பகுதியிலும் காணப்படுகின்றன."

இருப்பினும், அவர்களையும் "கருத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்" என்று கூறுகிறார் அவர். அபாயம் இரட்டிப்பாக இருந்தாலும் கூட, குழந்தை இழப்பை எதிர்கொள்வது இன்னும் "பெரும்பாலான பெண்களுக்கு அரிதான நிகழ்வாகவே" இருக்கும் என்று அவர் தெரிவிக்கிறார்.

காலநிலை மாற்றம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வெப்பசூழலில் பணிபுரியும் கர்ப்பிணிப் பெண்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றும் அவர் கூறுகிறார்.

தற்போதைய நிலையில் வெப்ப சூழலில் பணிபுரியும் கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிகாரப்பூர்வமான சர்வதேச ஆலோசனைகள் எதுவும் இல்லை.

1960 மற்றும் 70களில் அமெரிக்க ராணுவத்தில் 70-75 கிலோ எடையும் 20% உடல் கொழுப்பையும் கொண்ட ஒரு மனிதரைப் பற்றி செய்யப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், வெப்பமான காலநிலையில் வேலை செய்வதற்கு முக்கிய வழிகாட்டுதல் மட்டுமே தற்போது உள்ளது.

ஆனால், தற்போதைய ஆய்வும் இனி வரும் ஆய்வுகளும் இந்த நிலையை மாற்றும் என்று நம்புகிறார் பேராசிரியர் ஹிர்ஸ்ட். இதற்கிடையில், வெப்பசூழலில் பணிபுரியும் கர்ப்பிணிப் பெண்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றும் அவர் கூறுகிறார்.

  • நீண்ட நேரம் வெப்பத்தில் இருப்பதை தவிர்ப்பது
  • வெயில் காலங்களில் வெளியில் வேலை செய்தால் அடிக்கடி நிழலில் சென்று ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • நாளின் வெப்பமான பகுதியில் நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வதையோ அல்லது சூரிய ஒளியில் படுவதையோ தவிர்த்தல்
  • அதிக தண்ணீர் குடித்து நீர்ச்சத்து உடலில் இருக்கும்படி பார்த்துக் கொள்வது

இந்தியாவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வுக்காக, ஆராய்ச்சியாளர்கள் வெட்-பல்ப்-குளோப்-வெப்பநிலை (WBGT) என்ற அளவீட்டு முறையை பயன்படுத்தினர். இது மனித உடலின் வெப்பநிலை, ஈரப்பதம், காற்றின் வேகம் மற்றும் கதிர்வீச்சு வெப்பத்தின் விளைவுகள் ஆகியவற்றை அளவிடுகிறது.

WBGT அளவீடுகள் பெரும்பாலும் தொலைக்காட்சி அல்லது வானிலை பயன்பாட்டில் கணிக்கக்கூடிய வெப்பநிலையை விட குறைவாக இருக்கும்.

அமெரிக்க தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிர்வாகத்தின்படி, கடுமையான வேலை செய்யும் நபர்களுக்கான பாதுகாப்பான வெப்ப வரம்பு 27.5C WBGT ஆகும்.

காலநிலை மாற்றம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, "இந்தப் பெண்களுக்கு வெயிலில் வேலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை - அவர்களுக்குப் பணம் தேவை" என்கிறார் ரேகா சண்முகம்.

'வெயிலில் உடற்பயிற்சி செய்வதைத் தவிர வேறு வழியில்லை'

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வின்படி, நிழலான பகுதிகளில் ஓய்வெடுக்கும் ஆரோக்கியமான மக்களுக்கு, பாதுகாப்பான வரம்பிற்கு மேல் வெப்பநிலை இருக்கும் உலகின் முதல் நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

2050 ஆம் ஆண்டிற்குள், இந்தியாவில் வெப்பமான பகல் மற்றும் வெப்பமான இரவுகளின் எண்ணிக்கை ( உடல் பகல்நேர வெப்பத்திலிருந்து மீளப் போராடும் நேரம்) இருமடங்காக அல்லது நான்கு மடங்காக கூட அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையின் சூடான கரும்பு வயல்களில், பகல் நேர வெப்பத்தை அளவிட்டு கொண்டிருக்கிறார் முன்னாள் செவிலியரும், ஸ்ரீஹர் ஆய்வின் தலைமை ஆய்வாளருமான ரேகா சண்முகம்.

எங்களைச் சுற்றி, இரண்டு டஜன் தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தனர். அவர்களில் பாதிப் பெண்கள் கரும்பின் தடிமனான தண்டுகளை சிறிய கத்திகளால் வெட்டிக் கொண்டிருந்தார்கள்.

"இந்தப் பெண்களுக்கு வெயிலில் வேலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை - அவர்களுக்குப் பணம் தேவை" என்கிறார் ரேகா.

அவர் ஒரு அளவீட்டுக் கருவியில் தண்ணீரை ஊற்றி சில பட்டன்களை அழுத்தினார். அது WBGT வெப்பநிலை 29.5C என்று காட்டியது. இது இந்த மாதிரியான உடல் உழைப்பு தேவைப்படும் வேலைகளை செய்வதற்கு உண்டான பாதுகாப்பான வெப்பநிலை வரம்பை விட அதிகம்.

“இந்த பணியாளர்கள் நீண்டகாலத்திற்கு இதே வெப்பநிலையில் பணிபுரிந்து கொண்டிருந்தால் வெப்பம் தொடர்பான உடல் சார் பிரச்னைகளுக்கு ஆளாக நேரிடும். அதே சமயம் இது கர்ப்பிணி பெண்களுக்கு அபாயமானது” என்று என்னிடம் கூறினார் அவர்.

காலநிலை மாற்றம்
படக்குறிப்பு, சந்தியா

28 வயதாகும் சந்தியா, இது போன்ற முதுகை பதம்பார்க்கும் வேலையைத் தவிர தங்களுக்கு வேறு வழியில்லை, இதில் எனக்கு ஒரு நாளைக்கு 600 ரூபாய் சம்பளம் கிடைக்கிறது என்று என்னிடம் கூறினார்.

அவர் இரண்டு சிறு குழந்தைகளுக்கும், பெரிய குடும்பத்திற்கும் உணவளிக்க வேண்டிய பொறுப்பை சுமந்துக் கொண்டிருக்கிறார்.

இந்த ஆய்வில் பங்கேற்றுள்ள சந்தியாவும், தனது ஆறு மாத கருவை இழந்தவர்.

அவர் குணமடைவதற்காக பல மாதங்கள் வேலைக்கு விடுப்பு எடுக்க வேண்டியிருந்தது, அந்த நேரத்தில் வாங்கிய கடனை இன்னும் செலுத்தி வருவதாகக் கூறுகிறார் அவர்.

"எனது ஆசைகள் அனைத்தும் என் குழந்தைகளை மையமாகக் கொண்டது" எனக் கூறும் சந்தியா, "அவர்கள் நன்றாகப் படித்து நல்ல வேலையில் சேர வேண்டும் என்று விரும்புகிறேன். அவர்கள் என்னைப் போல் இங்கு வயல்களில் வேலை செய்யக் கூடாது" என்று தெரிவித்தார்.

காலநிலை மாற்றம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கர்ப்பிணி தாய் வெப்பத்தை உணரும்போது, கருவுக்கு செல்லும் ரத்த ஓட்டம், தாயை குளிர்விப்பதற்காக திருப்பி விடப்படும்.

சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை

கர்ப்பிணிப் பெண்களையும் அவர்களின் வளரும் குழந்தைகளையும் வெப்பம் எப்படி, ஏன் பாதிக்கிறது என்பதை சுற்றியுள்ள வழிமுறைகள் இங்கு முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை.

காம்பியாவில் நடைபெற்ற முந்தைய ஆய்வில், அதிக வெப்பநிலை கருவின் இதயத் துடிப்பை அதிகப்படுத்தலாம் மற்றும் தொப்புள் கொடியின் வழியாக இரத்த ஓட்டத்தை மெதுவாக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் ஒரு கோட்பாடு என்னவென்றால், தாய் அதிக வெப்பத்தை உணரும்போது, கருவுக்கு செல்லும் ரத்த ஓட்டம், தாயை குளிர்விப்பதற்காக திருப்பி விடப்படும்.

இந்த பிரச்னைக்கு கழிவறை பற்றாக்குறையும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கருதுகிறார் ரேகா.

முந்தைய ஆய்வில், பல பெண்கள் பொதுவெளியில் சிறுநீர் கழிக்க வேண்டும் என்பதற்காகவே சிறுநீர் கழிக்காமலும், தண்ணீர் குடிக்காமலும் இருப்பது, சிறுநீர் பாதை தொற்றை ஏற்படுத்தியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

"புதர்களில் இருக்கும் பூச்சிகள் மற்றும் பாம்புகள் குறித்தும், சில நேரங்களில் எட்டிப்பார்க்கும் ஆண்கள் குறித்தும் அவர்கள் கவலைப்படுகிறார்கள்” என்று அவர் கூறுகிறார்.

“அவர்கள் பெரும்பாலும் பாதுகாப்பாக உணராத காரணத்தினால், நாள் முழுவதும் சிறுநீரை அடக்கி வைத்துவிட்டு, இரவு வீட்டிற்கு சென்ற பிறகுதான் அவற்றை வெளியேற்றுகிறார்கள்.”

காலநிலை மாற்றம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தமிழ்நாட்டை சேர்ந்த ஏழை கர்ப்பிணி பெண்கள் 12 வார கர்ப்பத்தை அடையும் போது, அவர்களின் நிதிச் சுமையை குறைப்பதற்காக 18,000 ரூபாய் மாநில அரசால் வழங்கப்படுகிறது.

தீர்வு என்ன?

தமிழ்நாட்டில் செய்யப்பட்டுள்ள இந்த ஆய்வின் முடிவுகள் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக மாநில பொது சுகாதார இயக்குநர் டாக்டர் டி.எஸ்.செல்வவிநாயகம் கூறியுள்ளார்.

"நாங்கள் ஏற்கனவே கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதி இழப்பீடு வழங்குகிறோம், அதேசமயம் மாற்று வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கான தேர்வுகளையும் உருவாக்க வேண்டும்," என்று அவர் கூறுகிறார்.

தமிழ்நாட்டை சேர்ந்த ஏழை கர்ப்பிணி பெண்கள் 12 வார கர்ப்பத்தை அடையும் போது, அவர்களின் நிதி சுமையை குறைப்பதற்காக 18,000 ரூபாய் மாநில அரசால் வழங்கப்படுகிறது.

இருப்பினும், குறைந்த ஊதியம் பெறும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களைப் பாதுகாக்கும் வாய்ப்பு அதிகமாக அவர்களின் முதலாளிகளிடமே உள்ளது.

சென்னை புறநகரில், செங்கல் சூளை நடத்திவரும் தில்லை பாஸ்கர், தனது தொழிலாளர்கள் நிழலில் வேலை செய்ய வேண்டும் என்பதற்காக சிறப்பு வெப்ப-பாதுகாப்பு பூச்சுகளுடன் கூடிய பெரிய இரும்பு கூரைகளை அமைத்துள்ளார்.

காலநிலை மாற்றம்
படக்குறிப்பு, செங்கல் சூளை நடத்திவரும் தில்லை பாஸ்கர்

"பணியாளர்களை எவ்வாறு தக்கவைத்துக்கொள்வது என்பதை முதலாளிகள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்," என்று கூறும் அவர், "நீங்கள் அவர்களை கவனித்துக்கொண்டால், அவர்கள் உங்களை கவனித்துக்கொள்வார்கள்" என்கிறார்.

மேலும், பெண்களுக்கு மட்டுமான கழிப்பறைகள் கட்ட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் எங்களிடம் கூறினார்.

சில நிறுவனங்கள் பெண்கள் வெப்பத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள எடுக்க வேண்டிய சில எளிய வழிமுறைகள் குறித்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சிகளையும் வழங்குகின்றனர்.

குடிநீரை குளிர்ச்சியாக வைத்திருக்க இன்சுலேட்டட் பாட்டில்களும் கூட வழங்கப்படுகின்றன.

கருச்சிதைவு ஏற்பட்ட ஓரிரு வருடங்களில், மீண்டும் கருவுற்றபோது சுமதி வேறு வழியின்றி கடும் வெயிலில் தொடர்ந்து வேலை செய்தார்.

ஆனால் இந்த முறை தன்னை எவ்வாறு சரியாக பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து மருத்துவர்கள் மற்றும் ஸ்ரீஹர் ஆராய்ச்சியாளர்களிடமிருந்து தேவையான ஆலோசனையைப் பெற்றார்.

இப்போது சுமதிக்கு ஆரோக்கியமான மகளும் மகனும் பிறந்துள்ளனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)