சீக்கியர் தலைப்பாகை அணிந்து தேர்தலில் போட்டியிடும் இந்த தமிழர்கள் யார்?

- எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் தேர்தல் பிரசார களம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. முன்னணி அரசியல் கட்சிகள் கடைசிக் கட்ட வாக்குச் சேகரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் சீக்கியர்களைப்போல் தலைப்பாகை கட்டி, இடுப்பில் வாள் ஏந்தி வாக்காளர்களிடம் பிரசாரம் செய்யும் சில தமிழர்கள் மிகுந்த கவனம் பெற்றுள்ளனர்.
அவர்கள் அவ்வாறு தங்கள் தோற்றத்தை மாற்றிக் கொண்டதற்கு, தாங்கள் சீக்கிய மதத்துக்கு மாறிவிட்டதே காரணம் என்று கூறுகிறார்கள். தமிழர்களான அவர்கள் சீக்கிய மதத்திற்கு மாறியது ஏன்? அவ்வாறு செய்ய அவர்களை தூண்டியது எது?
தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல், வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் கடைசிநேர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு தேர்தலிலும் வழக்கமான பரப்புரை பாணியைத் தாண்டி நடனமாடி பிரசாரம், தங்களது சின்னங்கள் போல வேடமிட்டு சென்று வாக்கு சேகரிப்பது, வடை சுட்டுக்கொடுத்து வாக்கு கேட்பது போன்ற வித்தியாசமான பாணியில் பிரசாரம் செய்வதை பார்த்திருக்கிறோம்.
ஆனால், இந்த முறை மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் சீக்கியர்களின் தோற்றத்தில் 7 தமிழ் வேட்பாளர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர். 'பகுஜன் திராவிட கட்சி' என்ற பெயரில் களமிறங்கியுள்ள இந்த வேட்பாளர்கள் அனைவரும் சீக்கிய மதக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அந்த மதத்தில் தங்களை இணைத்துக்கொண்டதாகக் கூறுகின்றனர்.

பெரியார், கான்ஷிராம் கொள்கையை முன்னிறுத்தி தேர்தல் பிரசாரம்
இவர்களில் ஒருவரான விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரும், அந்த கட்சியின் மாநிலச் செயலாளருமான கொற்கை பழனி சிங்கிடம் பேசினோம்.
“எனது இயற்பெயர் பழனிசாமி. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த எனக்கு சமூகம் சார்ந்து பல்வேறு நெருக்கடிகள் இருந்தன. இதனால் அம்பேத்கர் வழியில் புத்த மதத்தின் கொள்கைகளை பின்பற்றி வந்தேன். கடந்த 2021-ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்திற்குச் சென்ற போது, சீக்கியர்கள் தங்கள் கொள்கையின் மீது உறுதியாக இருப்பதை நேரடியாகப் பார்த்தேன். அவர்களின் உறுதியால் மத்திய அரசு மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெற்றது. இதனால் சீக்கிய மதத்தின் மீது ஈர்ப்பு வந்தது,” என்று கூறுகிறார் அவர்.
அதனைத் தொடர்ந்து சீக்கிய மதத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு அதனை ஏற்றுக் கொண்டதாக கூறும் இவர், தனது பெயரை கொற்கை பழனி சிங் என்று மாற்றிக் கொண்டாராம். தற்போது அரசு ஆவணங்களிலும் தனது பெயரை மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கிறார் பழனி சிங்.
அவரும் அவரது கட்சியை சேர்ந்த மற்றவர்களும் ‘அம்ரித் சக்னா’என்று சொல்லக்கூடிய சீக்கிய மத சடங்குகளை பின்பற்றி முறையாக சீக்கியத்தை தழுவியதாக கூறுகின்றனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கான்ஷிராம் மற்றும் பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அதை நாடு முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக ஜீவன் சிங் என்பவரால் பகுஜன் திராவிட கட்சி தொடங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

'சமூக மாற்றம் மற்றும் பொருளாதார உரிமை வேண்டி போட்டி’
நாட்டின் 95 சதம் மக்களின் சமூக மாற்றத்திற்காகவும், பொருளாதார உரிமைக்காகவும் தேர்தலில் போட்டியிடுவதாக குறிப்பிட்ட பழனி சிங், இதுவரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ், பாஜக கட்சியினர் மனுவாதத்தை பின்பற்றுபவோர் மட்டுமே முன்னேறும் வகையில் ஆட்சி நடத்தி வந்துள்ளதாக குற்றம் சாட்டுகிறார்.
இதுகுறித்து பேசிய அவர், “பட்டியல் பிரிவு மக்களின் நிலையை மேம்படுத்துவதற்காகவே கட்சியைத் தொடங்கி நாடாளுமன்றத்தில் அதிகாரத்தை பெறுவதற்கான பயணத்தைத் தொடங்கி இருக்கிறோம்” என்று கூறினார்.
பழனி சிங் பேசுகையில், “தமிழகத்தில் சமூக நீதி பேசினாலும் சாதிய ரீதியான ஒடுக்குமுறை இன்னமும் இருக்கிறது. தென் தமிழகத்தில் 70க்கும் மேற்பட்ட தாக்குதல்கள், கொலைகள், வன்கொடுமைகள் பட்டியல் பிரிவு மக்கள் மீது நடத்தப்பட்டிருக்கிறது. இதிலிருந்து விடுபட்டு பாகுபாடற்ற சமூகத்தை உருவாக்க வேண்டும் என சீக்கிய மதம் வலியுறுத்துகிறது. எனவே அரசியல் ரீதியான மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்பதற்காக பகுஜன் திராவிட கட்சியை தொடங்கி இருக்கி்றோம்” என்று கூறினார்.

எந்தெந்த தொகுதிகளில் போட்டி?
பகுஜன் திராவிட கட்சியின் வேட்பாளர்கள் தென் தமிழகத்தில் உள்ள 7 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.
மதுரையில் பாண்டியன், ராமநாதபுரத்தில் மணிவாசகம், விருதுநகரில் கொற்கை பழனி சிங், திருநெல்வேலியில் செல்வம் சிங்,தென்காசியில் சீதா கவுர், கன்னியாகுமரியில் ராஜன் சிங், தூத்துக்குடியில் சண்முக சுந்தரம் சிங் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
சீக்கிய மதத்தை ஏற்றுக்கொண்ட போதிலும் சட்ட ரீதியாக தங்கள் பெயரை சீக்கிய மதம் சார்ந்து மாற்றுவதில் சிக்கல் இருப்பதாக இந்த கட்சியின் வேட்பாளர்கள் கூறுகின்றனர்.
பழனிசிங் என்ற பெயரில் போட்டியிட விண்ணப்பித்த போது, போதிய ஆவணங்கள் இல்லையென்று கூறி அனுமதி மறுக்கப்பட்டதால் தனது இயற்பெயரிலேயே போட்டியிடுவதாக தெரிவித்தார் பழனிசாமி.
அதேநேரம், கன்னியாகுமரியில் போட்டியிடும் தமது கட்சியின் வேட்பாளர் ராஜன் சிங் என்ற பெயரிலேயே போட்டியிடுவதாக அக்கட்சியின் தேசிய தலைவரான ஜீவன் சிங் கூறினார்.

இருசக்கர வாகனம் மற்றும் பேருந்தில் சென்று தேர்தல் பிரசாரம்
தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள பல கட்சிகள் பெரிய வாகனங்கள், மக்கள் திரள் என பிரசாரம் செய்து வரும் நிலையில், இந்த கட்சியின் வேட்பாளர்கள் இருசக்கர வாகனங்களில் சென்று பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்த வேட்பாளர்கள் அனைவரும் பொருளாதார ரீதியாக பின்தங்கியிருப்பதால் தாங்கள் போட்டியிடும் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு இருசக்கரத்தில் தனியாகச் சென்று ஒலிபெருக்கியை மாட்டிக் கொண்டு கிராமம் கிராமமாக துண்டு பிரசுரங்களை விநியோகித்து வருகின்றனர்.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பகுஜன் திராவிட கட்சி தமிழ்நாட்டில் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் 40 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இதுகுறித்து பேசிய ஜீவன் சிங், “இந்தியாவில் பட்டியல் பிரிவினர், பழங்குடிகள், பிற்படுத்தப்பட்டோர், மத சிறுபான்மையினர் ஆகியோரின் சுயமரியாதை உறுதி செய்யப்பட வேண்டும். இதற்காகவே பகுஜன் சமாஜ் கட்சியை தொடங்கினார் கான்ஷிராம். 85 சதவீத மக்களின் முன்னேற்றத்திற்காக அவர் போராடினார். பெரியார் 97 சதவீத மக்களுக்கு முன்னேற்றம் வேண்டுமென குரல் கொடுத்தார். பகுஜன் திராவிட கட்சி 95 சதவீத மக்களுக்காக குரல் கொடுக்கும்.” என்று தெரிவித்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












