இரானின் 300 ட்ரோன்கள், ஏவுகணைகளை இஸ்ரேலுடன் அமெரிக்கா, பிரிட்டன் இணைந்து வழியிலேயே தாக்கி அழித்தது எப்படி?

இஸ்ரேல் vs இரான்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், டாம் ஸ்பென்டர்
    • பதவி, பிபிசி செய்திகள்

முதன்முறையாக இஸ்ரேல் மீது இரான் நேரடியாக தாக்குதல் நடத்தியிருக்கிறது.

கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) நள்ளிரவில், இஸ்ரேலில் விமானத் தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. வான் பாதுகாப்பு இயக்கப்பட்டது. வெடிச்சத்தம் கேட்டபோது, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

இரான் ஏவிய பல பல ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளால் இஸ்ரேலிய எல்லையை அடைவதற்கு முன்பே சுட்டு வீழ்த்தப்பட்டன. நாடு முழுவதும் பல இடங்களில் இந்த இடைமறிப்புகள் இரவு வானத்தை ஒளிரச்செய்தன.

பூமியின் வளிமண்டலத்திற்கு வெளியே குறைந்தபட்சம் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையாவது சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூட கருதப்படுகிறது.

இந்தத் தாக்குதல்-இடைமறிப்புச் சம்பவத்தில் குறைந்தது ஒன்பது நாடுகள் ஈடுபட்டுள்ளன. இரான், இராக், சிரியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டன. இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜோர்டன் ஆகிய நாடுகள் அவற்றைச் சுட்டு வீழ்த்தின.

இரான் ஏன் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது? இது எப்படி இடைமறிக்கப்பட்டது?

இதுவரை நாம் அறிந்த தகவல்கள் இங்கே.

இஸ்ரேல் மீது இரான் நடத்திய தாக்குதல், மத்திய கிழக்கு

இரான் என்னென்ன ஏவுகணைகளை பயன்படுத்தியது?

தாக்குதலில் ட்ரோன்கள், கப்பல் ஏவுகணைகள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஈடுபட்டுள்ளன

இரான், இஸ்ரேலை நோக்கி 300-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவியது என்று இஸ்ரேலிய ராணுவம் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 14) தெரிவித்துள்ளது.

இதில் 170 ட்ரோன்கள் மற்றும் 30 க்ரூயிஸ் ஏவுகணைகள் அடங்கும். அவற்றில் எதுவும் இஸ்ரேலிய எல்லைக்குள் நுழையவில்லை. குறைந்தது 110 பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்படன. அவற்றில் வெகு சில ஏவுகணைகளே இஸ்ரேலை அடைந்தன என்று இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தொலைக்காட்சி அறிக்கையில் தெரிவித்தார்.

பிபிசி இந்த புள்ளிவிவரங்களை சுயாதீனமாக சரிபார்க்கவில்லை.

இரானுக்கும் இஸ்ரேலுக்குமான குறுகிய தூரம் இராக், சிரியா மற்றும் ஜோர்டான் வழியே 1,000 கி.மீ. ஆகும்.

இஸ்ரேல் மீது இரான் நடத்திய தாக்குதல், மத்திய கிழக்கு
இஸ்ரேல் மீது இரான் நடத்திய தாக்குதல், மத்திய கிழக்கு

பல நாடுகளில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதல்

சனிக்கிழமை (ஏப்ரல் 13) இரவு, இரானின் புரட்சிகர காவலர் படை (IRGC) இஸ்ரேல் மீது ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவியதாகக் கூறியது.

இராக் வானில், இஸ்ரேலின் திசை நோக்கி ஏவுகணைகள் பறந்ததாக இராக் பாதுகாப்பு வட்டாரங்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தன.

மெதுவாக நகரும் ட்ரோன்கள் ஏவப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டதாக இரான் புரட்சிகர காவலர் படை கூறியது. அவை இரண்டும் இஸ்ரேலை ஏறக்குறைய ஒரே நேரத்தில் தாக்கும் என்றும் இரானின் புரட்சிகர காவலர் படை கூறியது.

இந்நிலையில், இரான், இராக், சிரியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் இருந்து ஏவப்பட்ட டஜன்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை அமெரிக்கப் படைகள் இடைமறித்ததாக அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

லெபனானில் உள்ள இரான் ஆதரவு ஹெஸ்பொல்லா குழு, சிரியாவில் இருக்கும் கோலன் குன்றுகளில் இருக்கும் இஸ்ரேலிய ராணுவத் தளத்தின் மீது சரமாரியாக ராக்கெட்டுகளை ஏவியதாகக் கூறியிருக்கிறது. இந்த கோலன் குன்றுகள் பகுதி இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியாகும். இஸ்ரேலின் இந்த ஆக்கிரமிப்பை பெரும்பாலான நாடுகள் ஏற்றுக் கொள்ளவில்லை.

இஸ்ரேல் மீது இரான் நடத்திய தாக்குதல், மத்திய கிழக்கு

இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை எப்படி எதிர்கொண்டது?

இரான் ஏவிய 99% ஏவுகணைகள் இஸ்ரேலிய வான்வெளிக்கு வெளியே அல்லது இஸ்ரேலின் வான்வெளியிலேயே இடைமறிக்கப்பட்டன என்று ரியர் அட்மிரல் ஹகாரி கூறினார்.

இவற்றில், நேரான பாதையில் செல்லும் ட்ரோன்கள், மற்றும் புவியீர்ப்பு விசையைப் பயன்படுத்தி வளைந்த பாதையில் செல்லும் ஏவுகணைகள் ஆகியவை அடங்கும்.

பெரும்பாலான ஏவுகணைகள் தொலைவில் இருந்து வந்ததால், அவற்றை இடைமறிக்க இஸ்ரேல் தனது F-35 போர் விமானங்களை அனுப்ப முடிந்தது. இரான் அனுப்பிய 30 குரூஸ் ஏவுகணைகளில் 25 நாட்டிற்கு வெளியே சுட்டு வீழ்த்தப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.

இந்த முதல் நிலை தற்காப்பினைக் கடந்துவந்த ஏவுகணைகளைச் சமாளிக்க, இஸ்ரேல் அதன் வான்வழி பாதுகாப்பு அமைப்பைப் பயன்படுத்தியது. இது கடந்த அக்டோபர் 7 முதல் செயல்பாட்டிலிருக்கும் மூன்று-அடுக்கு ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்பாகும்.

இதன் மிக உயர்ந்த அடுக்கு ஏரோ (arrow) ஆகும். இது நீண்ட தூர ஏவுகணைகளை நேரடியாக இடைமறிக்கப் பயன்படுகிறது. இஸ்ரேல் மீது ஏவப்பட்ட பெரும்பாலான பாலிஸ்டிக் ஏவுகணைகளை இந்த ஏரோ அமைப்பே இடைமறித்ததாகக் கருதப்படுகிறது.

இந்த ஏவுகணைகளில் ஒன்று பூமியின் வளிமண்டலத்திற்கு வெளியே சுட்டு வீழ்த்தப்படும் காட்சிகள் வெளியாகின. இக்காட்சிகளின் மூலம், இதனைச் செய்தது ஏரோ 3 அமைப்பு என்று புலப்படுகிறது. இது மிகவும் மேம்பட்ட அமைப்பு. இது வளிமண்டலத்திற்கு வெளிப்புறத்தில் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி உள்வரும் ஏவுகணைகளை இடைமறிக்கிறது.

இந்த அமைப்பின் அடுத்த நிலை, ‘தாவீதின் உண்டிவில்’ (David's Sling) என்றழைக்கப்படுகிறது. இது குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகள், மற்றும் ட்ரோன்கள் ஆகியவற்றை அழிக்க பயன்படுத்தப்படுகிறது. அவற்றை 300கி.மீ. தொலைவிலேயே இது இடைமறிக்கும்.

இஸ்ரேலின் நட்பு நாடுகள் எப்படி உதவின?

கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 14) பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இரானால் ஏவப்பட்ட அனைத்து ட்ரோன்களையும், ஏவுகணைகளையும் வீழ்த்த இஸ்ரேலுக்கு அமெரிக்கப் படைகள் உதவியதாக கூறினார். முன்னோடியில்லாத இந்தத் தாக்குதலைச் சமாளிக்க அமெரிக்கா விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை அப்பகுதிக்கு நகர்த்தியதாக அவர் கூறினார்.

இரண்டு விமானங்களும் இரண்டு கப்பல்களும் இடைமறிக்கும் பணியில் ஈடுபட்டன.

அமெரிக்க மத்திய கட்டளை (Centcom), தனது படைகள் 80-க்கும் மேற்பட்ட ட்ரோன்களையும், குறைந்தது ஆறு பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் அழித்ததாகக் கூறுகிறது.

இப்பகுதியில் ரகசிய தளங்களில் இருந்து செயல்பட்ட அமெரிக்கப் படைகள் ஜோர்டான் எல்லைக்கு அருகே தெற்கு சிரியாவில் இரானிய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாகப் பாதுகாப்பு வட்டாரங்கள் ராய்ட்டர்ஸிடம் செய்தி முகமையிடம் தெரிவித்தன.

ஆனால், முன்னாள் இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் ஜியோரா ஐலாண்ட் அமெரிக்காவின் மிகப்பெரிய உதவி, ‘மிகவும் துல்லியமான உளவுத்துறை தகவல்கள் தான்’ என்று ஃபைனான்ஷியல் டைம்ஸ் பத்திரிகையிடம் கூறினார்.

பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக், இங்கிலாந்தின் RAF டைஃபூன் ஜெட் விமானங்கள் பல இரானிய தாக்குதல் ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்தியதை உறுதிப்படுத்தியுள்ளார். இரானிய தாக்குதல் ‘ஆபத்தான மற்றும் தேவையற்ற செயல், இதை நான் கடுமையாக கண்டித்துள்ளேன்’ என்று சுனக் கூறினார்.

பிரான்ஸ் வான்வெளியில் ரோந்து செல்ல உதவியது, ஆனால் அது ட்ரோன்கள் அல்லது ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்தியதா என்பது இன்னும் தெளிவாக இல்லை என்று இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மீது இரான் நடத்திய தாக்குதல், மத்திய கிழக்கு

எத்தனை ஏவுகணைகள் இஸ்ரேலில் நுழைந்தன? என்ன சேதத்தை ஏற்படுத்தின?

ஜெருசலேமில் இருந்த பிபிசி நிருபர்கள் சைரன்களைக் கேட்டதாகவும், இஸ்ரேலின் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு செயல்படுவதைப் பார்த்ததாகவும் தெரிவித்தனர்.

ஒரு சில ஏவுகணைகள் இஸ்ரேலிய எல்லைக்குள் நுழைந்து தாக்கியதாக ரியர் அட்மிரல் ஹகாரி கூறினார்.

அவற்றில் ஒன்று தெற்கு இஸ்ரேலில் உள்ள நெகேவ் பாலைவனத்தில் உள்ள நெவாடிம் விமானப்படை தளத்தை ‘லேசாகத் தாக்கியது’, ஆனால் இந்தத் தளம் ‘இன்னும் செயல்படுகிறது’ என்றார்.

இரண்டு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்கக் கூட்டாளியான சி.பி.எஸ் செய்தி சேனலிடம், ஐந்து ஏவுகணைகள் வான் பாதுகாப்பை மீறி இஸ்ரேலிய பிரதேசத்தைத் தாக்கியதாக தெரிவித்தனர்.

F-35 போர் விமானங்கள் இருக்கும் தளத்தை நான்கு ஏவுகணைகள் தாக்கியதாகக் கூறினார். இத்தளமே இரானின் முதன்மை இலக்கு என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒரு ஏவுகணை இத்தளத்தின் ஓடுபாதையைத் தாக்கியது, மற்றொன்று காலியாக இருந்த ஒரு விமானம் நிறுத்திமிடத்தைத் தாக்கியது, மேலும் ஒன்று பயன்பாட்டில் இல்லாத விமானம் நிறுத்துமிடத்தைத் தாக்கியது. ஐந்தாவது ஏவுகணை வடக்கு இஸ்ரேலில் உள்ள ரேடார் தளத்தை குறிவைத்ததாகத் தோன்றியது, ஆனால் அதன் இலக்கைத் தவறவிட்டது.

இரானால் ஏவப்பட்ட 120 பாலிஸ்டிக் ஏவுகணைகளில் பாதி ஏவுவதில் தோல்வியுற்றன அல்லது நடுவானில் நொறுங்கியதாக ஒரு அதிகாரி சி.பி.எஸ்-இடம் தெரிவித்தார்.

இரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ஐ.ஆர்.என்.ஏ, இந்தத் தாக்குதல் விமானப்படை தளத்திற்கு ‘கடுமையான சேதத்தை’ ஏற்படுத்தியதாகக் கூறியது.

ஒரு ஏழு வயது சிறுமி, தெறித்து விழுந்த ஒரு இடிபாட்டுத் துண்டால் பலத்த காயம் அடைந்ததாக, ரியர் அட்மிரல் ஹகாரி தெரிவித்தார். அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்.

‘எந்தவொரு குறிப்பிடத்தக்க சேதமோ, குடிமக்களுக்கு எந்த காயமோ ஏற்படாமல்’ சில இடிபாட்டுத் துண்டுகள் தன் பிரதேசத்தில் விழுந்ததாக ஜோர்டன் கூறியது.

இஸ்ரேல் மீது இரான் நடத்திய தாக்குதல், மத்திய கிழக்கு

அடுத்து என்ன நடக்கும்?

இஸ்ரேலின் சேனல் 12 தொலைக்காட்சி, இரானின் இந்தத் தாக்குதலுக்கு ‘குறிப்பிடத்தக்க பதிலடி’ இருக்கும் என்று ஒரு பெயரிடப்படாத இஸ்ரேலிய அதிகாரியை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டது.

இஸ்ரெலின் போர்க்குழு திங்கட்கிழமை (ஏப்ரல் 16) கூடி இதுபற்றி விவாதித்தது.

இஸ்ரேலிய வான்வெளி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் இரானுடனான மோதல் ‘இன்னும் முடிவடையவில்லை’ என்று பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் கூறினார்.

இதற்கிடையில், "இஸ்ரேல் இரானுக்கு பதிலடி கொடுத்தால் இரானின் நடவடிக்கை சனிக்கிழமையின் ராணுவ நடவடிக்கையை விட பெரிதாக இருக்கும்," என்று இரான் இஸ்ரேலை எச்சரித்துள்ளது. இரானின் ஆயுதப்படை தலைமை தளபதி மேஜர் ஜெனரல் முகமது பாகேரி இதனை இரானின் அரசு தொலைக்காட்சியிடம் தெரிவித்தார்.

இஸ்ரேலின் பதிலடியில் அமெரிக்கா பங்கேற்றால் அமெரிக்க தளங்களும் தாக்கப்படும் என்றார்.

இரானின் புரட்சிகர காவலர் படை கமாண்டர் ஹொசைன் சலாமி, இஸ்ரேலிய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றார்.

ஆனால், இரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நாசர் கனானி, இரானின் தாக்குதல்கள் நன்கு திட்டமிடப்பட்ட தற்காப்பு நடவடிக்கை என்றும், இரானின் ‘கட்டுப்பாட்டுடன் செயல்பட்டதை’ மேற்கத்திய நாடுகள் பாராட்ட வேண்டும் என்றும் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை (ஏபரல் 14) ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தில், பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ், மத்தியக் கிழக்கு ‘போரின் விளிம்பில் இருப்பதால்’, இரு தரப்பிலும் பதற்றத்தை தணிக்க அழைப்பு விடுத்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)