அண்ணா முதல்‌ தமிழச்சி வரை – தென் சென்னையில் அரசியல் அலை இந்த முறை யார் பக்கம் வீசுகிறது?

தமிழச்சி தங்கபாண்டியன், ஜெயவர்த்தன், தமிழிசை சௌந்தரராஜன்
    • எழுதியவர், சாரதா வி
    • பதவி, பிபிசி தமிழ்

சென்னையில் உள்ள தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.

திமுக சார்பில்‌ தற்போதைய‌ நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும் களத்தில் உள்ளார். அவரை எதிர்த்து அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் இரட்டை இலை சின்னத்தில் களமிறங்குகிறார். அவர்‌ இந்த தொகுதியில் ஏற்கனவே உறுப்பினராக இருந்தவர்.‌

மூன்றாவதாக, பாஜக சார்பில்‌ தமிழிசை சௌர்ந்தரராஜன் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா‌ செய்து, தேர்தல் அரசியலுக்கு வந்து‌ இங்கே‌ போட்டியிடுகிறார்.

மூன்று பிரபல வேட்பாளர்களும் அரசியல் குடும்பத்திலிருந்து வருகிறார்கள்.

விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தி.நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை கொண்டது தென் சென்னை. இங்கே‌ தகவல் தொழில்நுட்ப‌ நிறுவனங்கள்‌ செயல்படுகின்றன. தியாகராயநகர், போன்ற வணிக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளும் உள்ளன.

இவ்வளவு முக்கியம்வாய்ந்த தென் சென்னை தொகுதியின் களநிலவரம் என்ன?

தென் சென்ன் நாடாளுமன்ற தொகுதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தென் சென்னையில் தகவல் தொழில்நுட்ப‌ நிறுவனங்கள்‌ செயல்படுகின்றன

அலையின் போக்கில் தென் சென்னை

தமிழ்நாட்டின் அரசியல் போக்கிற்கு ஏற்ப முடிவெடுக்கும்‌ தொகுதியாகவே தென் சென்னை அமைந்திருப்பதை‌ கடந்த கால வரலாறு காட்டுகிறது.

தொடக்கத்தில்‌ காங்கிரஸ் உறுப்பினர்களை தேர்ந்தெடுத்த தென் சென்னை, 1967-ஆம் ஆண்டி‌ல் தமிழ்நாட்டில் நடைபெற்ற‌ ஆட்சி மாற்றத்திற்கு கட்டியங்கூறியது. இங்கிருந்துதான் நாடாளுமன்ற‌ மக்களவைக்கு‌ தேர்வானார்‌ அறிஞர் அண்ணா.

அதே‌ சமயம் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி‌ பெரும்பான்மை பெற்றதால், தனது எம்.பி., பதவியை ராஜினாமா செய்து முதலமைச்சராக பதவியேற்றார்.‌ அதனை தொடர்ந்து நடந்த இடைத்தேர்தலில்‌ முரசொலி மாறன் வெற்றிபெற்று மக்களவைக்கு சென்றார். மீண்டும் அடுத்த தேர்தலிலும் அவரே தேர்வானார்.

1977 தேர்தலில் அதிமுக-வுடன் கூட்டணி அமைத்த காங்கிரஸ் கட்சி இந்த தொகுதியில் போட்டியிட்டு வென்றது. 1980 தேர்தலில் காங்கிரஸ்‌ கட்சியின் இந்திரா அணி திமுகவுடன் அணி அமைத்து‌‌ இதே‌ தொகுதியில் போட்டியிட்டு‌ வெற்றியடைந்தது. 1984 மற்றும் 1989 தேர்தல்களில் ஒருங்கிணைந்த காங்கிரஸ் கட்சிக்கு‌ இந்தத் தொகுதியை அதிமுக ஒதுக்கியது.‌ இருமுறையும் நடிகை வைஜயந்தி மாலா வெற்றி பெற்றுள்ளார்.

1991‌ தேர்தலில் அதிமுக இந்த தொகுதியில்‌ நேரடியாக களமிறங்கி வென்றது.‌ ஆனால், அதனை தொடர்ந்து 1996-ஆம் ஆண்டு முதல் 2004-ஆம் ஆண்டு வரை இந்த தொகுதி திமுகவின் வசம் சென்றது.

டி.ஆர்.பாலு தொடர்ந்து வென்றார். ஒட்டுமொத்தமாக 7 முறை தென் சென்னை தொகுதியை திமுக வசமாக்கியுள்ளது. 2009 மற்றும் 2014-ஆம் ஆண்டுகளில் அதிமுக வென்றது.‌ 2019 நடைபெற்ற தேர்தலில் சுமதி (எ) தமிழச்சி தங்கப்பாண்டியன் திமுக சார்பில் போட்டியிட்டு வென்றார். அதன் பின்னர் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக-வே பெரும்‌ வெற்றியை பதிவு செய்தது.

தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி

சாதகமான அலையை நம்பும்‌ திமுக

மாநிலம் முழுவதுமே‌ திமுக-விற்கு ஆதரவான சூழல் இருப்பதாகக் கருதப்படுவதால் அது தென் சென்னையில் பலன் கொடுக்கும்‌ என திமுக-வினர் நம்புகிறார்கள். திமுக-வின் வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் இரண்டாவது முறையாக போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. திமுக களமிறங்கும் 20 தொகுதிகளில் மீண்டும்‌ வாய்ப்பு பெற்ற ஒன்பது வேட்பாளர்களில் இவரும் ஒருவர்.

தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இவரது சகோதரர் ஆவார். இவரது தந்தை வி.தங்கபாண்டியன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.

திமுக-வின் பிரச்சாரம் மோதி அரசை விமர்சித்தே பிரதானமாக நடைபெறுகிறது. தென் சென்னை தொகுதியில் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து வாக்கு சேகரித்த கனிமொழி, “அவர்கள் (தமிழிசை சௌந்தரராஜன்) பாவம், இன்னும் நான்கு மாதங்கள் ஆளுநராக இருந்திருக்கலாம். பாஜக-விலிருந்து போட்டியிட்டு கண்டிப்பாக வெற்றி பெறபோவதில்லை. கடந்த முறை தூத்துக்குடியில் என்னிடம் தோற்றார்கள். இந்த முறை இங்கும் தோல்வி தான். திமுக அல்லது காங்கிரஸ்-ல் சேர்ந்தால் வெற்றிக்கு வாய்ப்பிருக்கலாம். ஆனால் இது என்ன பாஜக-வா இணைந்த உடனே தேர்தலில் வாய்ப்பளிக்க? எனவே அதுவும் நடக்காது,” என்று கூறினார்.

விவசாயிகள் போராட்டத்தில் நடந்த அடக்குமுறை, கச்சத்தீவு விவகாரத்தை தேர்தல் நேரத்தில் எழுப்புவது, கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக இருப்பது என பாஜக மீது குற்றச் சாட்டுகளை அடுக்கிய கனிமொழி, இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்த பின் விஸ்வ கர்ம யோஜனா, நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை ஆகியவை தூக்கி எறியப்படும் என்றார்.

தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி

மாற்றத்தை உருவாக்குமா‌ தாமரை?

தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி

தமிழக பாஜக தலைவராக நீண்ட காலம்‌ இயங்கிய தமிழிசைக்கு இது மறு பிரவேசம் எனலாம். தென் சென்னை தொகுதியில் அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது பலருக்கும் ஆச்சர்யமே. தீவிர காங்கிரஸ்காரர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குமரி அனந்தனின் மகள். மகப்பேறு‌ மருத்துவர்.‌ இரண்டு மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் ஆளுநராக இயங்கியவர், தென் சென்னையில் ஜெயித்தால்‌ மத்திய அமைச்சராக வருவார்‌ என பாஜக-வினர் நம்பிக்கையோடு பேசுகிறார்கள்.‌

அடையாறு பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தமிழிசை சௌந்தரராஜன், "திமுக தென் சென்னைக்கு எதுவுமே செய்யாததால், தாங்கள் செய்த பணிகளை மக்களிடம் எடுத்து சொல்லி வாக்கு சேகரிக்க முடியவில்லை. அதனால் தான் மோதி அரசை திட்டுவதையே வேலையாக கொண்டிருக்கிறார்கள். இளைஞர்களை அதிகமாக கொண்டது தென் சென்னை தொகுதி. ஏராளமான இளைஞர்களுக்கும் பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க என்ன திட்டம் வைத்துள்ளார்கள்? நான் நாடாளுமன்ற உறுப்பினரானால், இந்த தொகுதியின் வாகன நெரிசலை குறைக்கவும், இந்த தொகுதியில் உள்ள மீனவ சமூகத்துக்கு தனி அதிகாரம் வழங்கவும் திட்டங்களை அறிவித்துள்ளேன்," என்று பிரசாரம் செய்கிறார்.

தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி

பட மூலாதாரம், X/@TamilisaiSoundararajan

மெளன புரட்சியில் அதிமுக?

மருத்துவரும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகனும் ஆன‌ ஜெயவர்த்தன், தென் சென்னையில் வெற்றி சாத்தியமே என்று நம்புகிறார்.‌ இவர்‌ ஏற்கனவே‌ தென் சென்னை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக 2014-ஆம் ஆண்டு மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் வெற்றிபெற்றவர்.

பிபிசி தமிழிடம் பேசும் போது, “மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும், தமிழகத்தின் கோரிக்கைகளை நாங்கள் தான் நாடாளுமன்றத்தில் பேசுவோம். காவிரி விவகாரத்தில் நாடாளுமன்றத்தை முடக்கினோம். அதை எல்லாம் மக்கள் மறக்கவில்லை. பிரச்சாரத்தில் செல்லும் இடமெல்லாம் குறிப்பாக பெண்களின் ஆதரவு இருப்பதைக் காண முடிகிறது,” என்றார்.

கடந்த முறை 2.6 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் திமுக-விடம் தான் இழந்த தொகுதியை மீண்டும் கைப்பற்ற தீவிரமாகவுள்ளது அதிமுக. இந்த தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களில் இவர் மட்டுமே ஏற்கனவே நாடாளுமன்றத்திற்கு‌ தேர்வானவர். அது இவரது போட்டிக்கு கூடுதல் முக்கியத்துவம் தருகிறது.

தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி

பட மூலாதாரம், X/@drjjavardhan

மக்கள் என்ன சொல்கிறார்கள்?

தென் சென்னையின் வாக்காளர்கள் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுகிறார்கள்.

யார் ஜெயித்தாலும்‌ மக்களுக்கு என்ன பலன் என்று கேட்கிறார் தூய்மை பணியாளரான குப்பு.

"யார் வெற்றி பெற்று வந்தாலும் மக்களுக்கு உதவ வேண்டும். மோதி வீடு தர்றேன்னு சொல்றாரு, கிடைக்குமா தெரில. ஸ்டாலின் ரூ.1,000 தர்றேன்னு சொன்னாரு. ஆனா நான் பென்ஷன் வாங்குறதால, என் மருமகளுக்கு கிடையாதுன்னு சொல்லிட்டாங்க. நிறைய பேருக்கு வரல. மக்கள் நொந்து போயிட்டாங்க," என்கிறார்.

தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி
படக்குறிப்பு, குப்பு, தூய்மை பணியாளர்

மோதி ஆட்சி மாற வேண்டும்‌ என்ற எதிர்பார்ப்பை வெளிப்படுத்தினார் சாலையோரம் தர்பூசணி விற்கும் ஜெகன்.

"மத்தியில் காங்கிரஸ் ஆட்சி தான் வரணும். மோதிக்கு இரண்டு முறை வாய்ப்பு கொடுத்தாச்சு. கடந்த ஐந்து வருஷத்துல என் வாழ்க்கைல எந்த மாற்றமும் இல்ல. இந்த தொகுதியிலும் எந்த முன்னேற்றமும் இல்ல. அதுக்கு முன்னாடி ஐந்து வருஷமும் அப்படி தான். வெற்றி பெற்ற பிறகு யாரும் தொகுதி பக்கம் வருவதில்லை. ஆனா மத்தியில் மோதி வரக்கூடா," என்கிறார்.

தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி
படக்குறிப்பு, ஜெகன், தர்பூசணி விற்பனையாளர்

தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பானு, “தேர்தலுக்கு முன் எல்லாரும் நன்றாகப் பேசுகிறார்கள். ஆனால் அதற்கு பிறகு காணாமல் போய்விடுகிறார்கள். புதிதாக ஒருவருக்கு வாய்ப்பளிக்கலாம் என்று தோன்றினாலும் எவர் மீதும் உடனடியாக நம்பிக்கை வரவில்லை,” என்கிறார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)