சிதம்பரம்: திருமாவளவனுக்கு கடும் சவால் தருவது யார்? அதிமுக, பாஜக வேட்பாளர்கள் கூறுவது என்ன?

- எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
விவசாயமும், மீன் பிடி தொழிலும் அதைச் சார்ந்த தொழிலாளர்களும் நிறைந்த சிதம்பரம் மக்களவை தொகுதியானது பல்வேறு போராட்டங்களை தைரியமாக முன் நின்று நடத்திய மக்கள் நிறைந்த பகுதியாகும்.
தமிழகம் முழுவதும் 1938 -ஆம் ஆண்டு இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் தீவிரமாக நடைபெற்றபோது சிதம்பரத்தில் மாணவர்கள் துணிச்சலுடன் போராட்ட களத்தில் ஊர்வலமாக வந்தனர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மாணவர் ராஜேந்திரன் இறந்தார்.
அதேபோல் அரியலூர், சிதம்பரம் பகுதிகளில் விவசாயிகள் நடத்திய போராட்டங்கள், சிதம்பரம் நடராஜர் கோவிலின் நிர்வாகத்தை தீட்சிதர்களிடம் இருந்து மீட்க கோரி போராட்டங்கள் என பல உறுதியான போராட்டங்களை சிதம்பரம் சந்தித்துள்ளது. போராட்ட மனிதர்கள் நிறைந்த சிதம்பரத்தில் நாடாளுமன்ற தேர்தல் களம் எப்படி உள்ளது? பிபிசி கள ஆய்வில் கண்டதை விரிவாகக் பார்க்கலாம்.
சிதம்பரம் மக்களவை(தனி) தொகுதி கடலூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய 3 மாவட்டங்களிலும் பரந்து விரிந்துள்ளது. இந்த தொகுதியில் 7,49,623 ஆண் வாக்காளர்கள், 7,61,206 பெண் வாக்காளர்கள், 86 இதர வாக்காளர்கள் என மொத்தம் 15,10,915 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் சிதம்பரம்(அதிமுக), அரியலூர்(மதிமுக), ஜெயங்கொண்டம்(திமுக), புவனகிரி(அதிமுக), காட்டுமன்னார்கோயில்(விசிக) (தனி), குன்னம்(திமுக )ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

இதுவரை வெற்றி பெற்றவர்கள்
1957-ல் ‘இரட்டை உறுப்பினர்’ தொகுதியாக இந்த தொகுதி இருந்தது. அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆர்.கனகசபை பிள்ளை, எல்.இளையபெருமாள் ஆகியோர் எம்.பி.க்களாக வெற்றி பெற்றனர்.
1962-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆர்.கனகசபை, 1967, 1971-ல் திமுகவைச் சேர்ந்த வி.மாயவன், 1977-ல் அதிமுகவைச் சேர்ந்த ஏ.முருகேசன், 1980-ல் திமுகவைச் சேர்ந்த வே.குழந்தைவேலு ஆகியோர் வெற்றி பெற்றனர்.
1984, 1989. 1991 ஆகிய 3 முறையும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டாக்டர் ப.வள்ளல்பெருமான், 1996-ல் திமுகவைச் சேர்ந்த சி.வெ.கணேசன் (தற்போதைய தொழிலாளர் நலத் துறை அமைச்சர்), 1998-ல் பாமகவைச் சேர்ந்த தலித் எழில்மலை, 1999, 2004-ல் பாமகவைச் சேர்ந்த இ.பொன்னுசாமி, 2009-ல் விசிக தலைவர் திருமாவளவன், 2014-ல் அதிமுகவைச் சேர்ந்த மா.சந்திரகாசி ஆகியோர் வெற்றி பெற்றனர்.
2019-ல் மீண்டும் திருமாவளவன் வெற்றி பெற்று, எம்.பியாக இருக்கிறார். சிதம்பரம் (தனி) தொகுதியில் நடைபெற்ற 16 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 5 முறையும், திமுக 4 முறையும், பாமக 3 முறையும், அதிமுக 2 முறையும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2 முறையும் வென்றுள்ளன.
இங்கு 5 முறை போட்டியிட்ட திருமாவளவன் 2 முறை வெற்றி பெற்றுள்ளார். 2019- தேர்தலில் திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரசேகரை எதிர்த்து போட்டியிட்டு, வெற்றி பெற்றார். தற்போது 6-வது முறையாக போட்டியிடுகிறார். இம்முறையும் பானை சின்னத்தில் களம் காண்கிறார்.
கடைசி வரை போராடி வென்ற திருமாவளவன்
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே இரு வேட்பாளர்களும் மாறி, மாறி முன்னிலை வகித்தனர். இறுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் 5,00,229 வாக்குகள் பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகர் 497010 வாக்குகள் பெற்றார். கடும் இழுபறிக்கு பிறகு, சுமார் 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் வெற்றிபெற்றார்.
மீண்டும் திருமாவளவன்
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பாஜக வேட்பாளர் பி.கார்த்தியாயினி, அதிமுக வேட்பாளர் மா.சந்திரகாசன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.ஜான்சிராணி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் க.நீலமேகம் மற்றும் 9 சுயேச்சைகள் போட்டியில் உள்ளனர் . ஆனாலும், முக்கிய போட்டியாளர்களாக விடுதலை சிறுத்தைகள், அதிமுக, பாஜக வேட்பாளர்கள்தான் உள்ளனர்.

'எனக்கான அங்கீகாரத்தையும் அடையாளத்தையும் வழங்கிய தொகுதி'
தற்போதைய தேர்தல் களத்தின் சூழல் குறித்து பிபிசி தமிழிடம் திருமாவளவன் தொலைபேசியில் விரிவாக கூறினார்..
"எனது சொந்த தொகுதி என்பதாலும், நான் இந்தப் பகுதிக்கு நன்கு அறிமுகமானவன் என்ற அடிப்படையிலும் இங்கு களம் காண்கின்றேன். மேலும் எனக்கான அங்கீகாரத்தையும் அடையாளத்தையும் வழங்கிய இந்த தொகுதியை நான் மறக்க முடியாது. எனக்கு தொகுதி மாற வேண்டிய சூழலும் இல்லை. எனவே மீண்டும் நான் இங்கு போட்டியிடுகின்றேன்" என்று கூறினார்.
"என்னை எதிர்த்து இங்கு அதிமுக போட்டியிட்டாலும் தேசிய அளவில் பார்க்கின்ற பொழுது இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் கடந்த 10 ஆண்டு நடத்திய ஆட்சி மக்களிடம் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா கூட்டணிக்கு உள்ள நல்ல மதிப்பு எனக்கு நல்ல ஆதரவை தரும்.
நாடாளுமன்ற உறுப்பினராக எனது தொகுதிக்காக என்னால் இயன்றதை நான் செய்துள்ளேன். அகில இந்திய அளவில் சிதம்பரத்தை பற்றி அறிந்து கொள்ளும் அளவிற்கு பாராளுமன்றத்தில் நான் எடுத்து கூறியுள்ளேன் இதை நான் மக்கள் மன்றத்திலும் கூறுவேன். திமுக கூட்டணியின் பலமும் இந்தியா கூட்டணிக்கு உள்ள மதிப்பும் மக்களுடனான எனது நெருக்கமும் எனக்கு கூடுதல் பலம் அளிக்கும்" என்று உறுதியாக கூறினார்.
தொடர்ந்து தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்வீர்களா என்று கேள்வியை பிபிசி தமிழ் முன் வைத்த போது, ”மிக குறுகிய காலம் என்பதால் சற்று கடினம் தான், 16 நாட்களே உள்ளன. நான் எனது தொகுதி முழுக்க சுற்றிவர வேண்டும் போதிய அவகாசம் இல்லை என்பதால் சற்று கடினம் தான்” என்றும் கூறினார்.
பானை சின்னம் கிடைத்தது எப்படி? திருமா விளக்கம்
"அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னத்தையும், ஜி.கே. வாசனுக்கு சைக்கிள் சின்னத்தையும் வழங்கிய தேர்தல் ஆணையமானது எனக்கு மறுத்தது. இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் ஏற்புடையதாக இல்லை. நான் மட்டும்தான் எங்களது கட்சியில் பானை சின்னத்தில் போட்டியிட்டு 1 சதவீதம் மேலான வாக்குகளை பெற்றேன். ஆனால் நான் வாங்கவில்லை என்று தேர்தல் ஆணையம் மறுத்தது. இதை நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் பதிவு செய்தோம். டெல்லி நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு அறிவுரை கூறியது என்ற போதிலும் தேர்தல் ஆணையம் உடனடியாக வழங்கிட வில்லை."
"தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்கவில்லை. ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் அமைப்புகளின் தூண்டுதலின் பேரில் தேர்தல் ஆணையம் செயல்படுவதாக தெரிகின்றது. இது மிகவும் ஆபத்தானது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரியாக தயாரித்து உள்ளார்களா? அதன் பயன்பாடு எப்படி இருக்கும் என்பது தற்போது எனக்கு கேள்விக்குறியாக உள்ளது. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு தேசத்திற்கு தீங்கானது" என்று வேதனையுடன் தெரிவித்தார் திருமா.
இறுதியில் அவருக்கு பானை சின்னம் கிடைத்துள்ளது.

திருமாவை ஆதரித்து ஸ்டாலின், உதயநிதி பிரசாரம்
சிதம்பரம் தொகுதி விசிக வேட்பாளர் திருமாவளவனை ஆதரித்து சிதம்பரத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
சிதம்பரம் தெற்கு வீதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில், "ரூ 15 கோடியில் புதிய பேருந்து நிலையம், புதிய மழைநீர் வடிகால் குளங்கள், கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம், 45 கோடியில் வேறு சில பணிகளும் சிதம்பரத்தில் நடைபெற்று வருகிறது. சிதம்பரம் நகரில் வடிகால் அமைக்கும் பணி, அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் பழுதடைந்த சாலைகள் அனைத்தும் இங்கு செய்யப்படும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். " என்று பிரச்சாரம் செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினும் திருமாவளவனை ஆதரித்து சிதம்பரத்தில் பிரசாரம் செய்துள்ளார்.

அதிமுக வேட்பாளர் சந்திரகாசன்
அதிமுக வேட்பாளர் மா.சந்திரகாசன் பெரம்பலூர் மாவட்ட அதிமுக இலக்கிய அணி செயலாளராக உள்ளார். வேளாண்மை துறையில் பணியாற்றிய இவர், கட்சிப் பணிக்காக அரசுப் பணியை ராஜினாமா செய்தவர். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் இவரது மனைவி அம்பிகா சந்திரகாசன், அரியலூர் மாவட்ட கவுன்சிலராக, தமிழக அளவில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
சந்திரகாசன் இந்த தொகுதியில் உள்ள அதிமுக வாக்கு வங்கியை நம்பி களம் காண்கிறார். பிபிசி தமிழிடம் அதிமுக வேட்பாளர் சந்திரகாசன் தேர்தல் கள நிலவரம் குறித்து விரிவாக பேசினார்.
'மக்கள் அதிமுக ஆட்சியின் திட்டங்களை மறக்கவில்லை'
"நான் சாதாரணமானவன். கடந்த 2001-ஆம் ஆண்டு சேர்மனாக இருந்தபோது ஆனைவாரி ஓடை பாலம் கட்டி கடலூர் மற்றும் அரியலூர் மாவட்ட மக்கள் பயனடையுமாறு செய்து தந்துள்ளேன். அடிப்படை வசதிகளை மக்கள் தேவைக்கேற்ப அனைத்து பகுதிகளிலும் செய்து தந்துள்ளேன்.
பெண்களும் விவசாயிகளும் எங்களுக்கு உறுதுணையாக உள்ளார்கள். குடிமராமத்து திட்டத்தின் மூலமாக எங்கள் பகுதி விவசாயிகள் நல்ல பயனை அடைந்துள்ளனர். அதை விவசாயிகள் மறக்கவில்லை. அதேபோல் தாலிக்கு தங்கம் பெற்ற பெண்கள், மானிய விலையில் ஸ்கூட்டர் பெற்ற மகளிர் எங்களை மறக்கவில்லை. அது எங்களுக்கு வாக்காக கிடைக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.
"பேரிடர் காலமான புயல் மழை காலங்களில் விவசாயிகள் கடும் அவதிப்படுகின்றனர் அவர்களுக்கு தீர்வு காண்பது எனது முதல் பணியாக இருக்கும். அதே போல் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் அமைத்து விளைபொருட்கள் பாதுகாப்பதற்கான முழு ஏற்பாடுகளும் செய்து தரப்படும். புயல் மழை காரணங்களில் ஏற்படும் பயிர் சேதத்திற்கு முழுமையாக காப்பீட்டுத் தொகை பெறுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்" என்று உறுதியுடன் கூறினார்.
"எனக்கு அரபு, இந்தி ,ஆங்கிலம் என மொழிகளும் தெரியும். சிறுபான்மையினர் மக்களிடம் குறிப்பாக முஸ்லிம் மக்களுடன் அரபி மொழியிலேயே பேசி அவர்கள் உணர்வுகளை முழுமையாக உள்வாங்கி அவர்களுக்கான உதவிகளை நிச்சயமாக செய்திடுவேன். ஏற்கனவே அதிமுக ஆட்சி காலத்தில் நாங்கள் செய்து தந்துள்ளோம்" என்றும் சந்திரகாசன் கூறினார்.

பட மூலாதாரம், Edappadi K Palaniswami / X
எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
சிதம்பரம் பகுதியில் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரத்தின் போது, "புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில்தான் என்எல்சி நிறுவனம் பங்குகளை விற்றபோது அதை தமிழக அரசே வாங்கியது. கடந்த 10 ஆண்டுகளாக என்எல்சி நிறுவனம் நிலத்தை எடுக்க விடாமல் தடுத்தோம். ஆனால் தற்போது விவசாயிகள் நிலம் பறிக்கப்படுகிறது.
மூன்றாவது சுரங்கம் அனுமதிக்க கூடாது எனக்கூறி சட்டப்பேரவையில் எம்எல்ஏ அருண்மொழித்தேவன் குரல் கொடுத்தார். அதிமுக ஆட்சியில்தான் இந்த பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாகவே பல்வேறு தொழிற்சாலைகள் ஹைட்ரோகார்பன் திட்டம் போன்றவை இங்கு வரவில்லை. ஆனால் இந்த திட்டங்களுக்கு ஒப்பந்தம் போட்டது ஸ்டாலின்தான். இதை மக்கள் மறக்க மாட்டார்கள்" என்று கூறி பிரசாரம் செய்தார்.

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் கார்த்தியாயினி
பாஜக வேட்பாளர் பி.கார்த்தியாயினி, திருவண்ணாமலையை சேர்ந்தவர். 2011-ல் அதிமுக சார்பில் வேலூர் மேயரானார். 2017-ல் பாஜகவில் இணைந்து, தற்போது அக்கட்சியில் மாநிலச் செயலாளராக உள்ளார்.
தொகுதிக்கு புதுமுகமான கார்த்தியாயினி, பாமக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வாக்கு வங்கியை நம்பி களம் இறங்கியிருக்கிறார்.
பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பி.கார்த்தியாயினி, பிபிசி தமிழிடம் பேசுகையில் தனக்கான வெற்றி வாய்ப்பு குறித்து பகிர்ந்து கொண்டார்.
'தொகுதி முழுவதும் முக்கிய பகுதிகளில் புகார் பெட்டி வைப்பேன்'
"மத்திய அரசின் திட்டங்கள் எதுவாக இருப்பினும் மக்களுக்கு தேவையான திட்டங்கள் இந்த பகுதிக்கு வரும்பொழுது புகார் பெட்டி வைத்து அந்தத் திட்டம் இந்த பகுதிக்கு தேவையா..? என்பதை மனுக்களாக பெற்று கருத்து கேட்டு புகார் பெட்டி மூலம் கிடைக்கும் கருத்துக்களையும் ஆய்வு செய்து அதையே எனது குரலாக பாராளுமன்றத்தில் பதிவு செய்வேன்" என்று கூறினார்.
நான் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டால் சிதம்பரத்தில் அடிப்படை வசதிகள் அனைத்தும் சரி செய்து தருவேன். இந்தப் பகுதியில் அதிகமாக விளையும் முந்திரிக்கு என தனி தொழிற்சாலை ஏற்படுத்தப்பட்டு வேலை வாய்ப்புகள் அதிகரித்து தரப்படும்.
அதை போல் வீராணம் ஏரி தூர் வாரப்படும். மாணவ மாணவியர்களின் எதிர்கால கல்வித்திறன் மேம்பட ஒவ்வொரு சட்டமன்றத்திற்கும் போட்டி தேர்வுக்கான பயிற்சி மையங்கள் அமைத்து தரப்படும்." என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், ANNAMALAI / X
'சிதம்பரம் தொகுதியை ஒதுக்கி வைத்தவர் திருமாவளவன்'
"திருமாவளவன், தான் ஒதுக்கப்பட்டவன் என்று கூறி சமூக வாக்குகளை சேகரிக்கின்றார். ஆனால் உண்மையிலேயே அவர் தான் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியை ஒதுக்கி வைத்துள்ளார் இதுதான் உண்மை" என்று காட்டமாக கூறினார் கார்த்தியாயினி.
பிரசித்தி பெற்ற சிதம்பரம் கவரிங் நகை தொழில் செய்யும் தொழிலாளர்கள் நலம் மேம்பட தனிக்கவனம் எடுத்து இந்தியா முழுக்க கவரிங் சென்றடைய திட்டங்களை செயல்படுத்துவேன். தொடர்ந்து குரலற்றவர்களின் குரலாக நான் நிச்சயமாக ஒலிப்பேன்" என்று உறுதியாக தெரிவித்தார்.
'விழுப்புரம், சிதம்பரம் கட்சி தான் விசிக'
கார்த்தியாயினியை ஆதரித்து, பாஜக மாநிலதலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்த போது, "விசிக என்பது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் தற்போது தான் விழுப்புரம், சிதம்பரம் கட்சி என்று தெரிகிறது. இத்தொகுதிகளில் மட்டும் போட்டியிடுகிறார்கள்.
பொதுத் தொகுதியை பெறு வதற்கு திருமாவளவன் திமுகவிடம் மன்றாடினார், கிடைக்கவில்லை. திமுக இவர்களை அவமானப்படுத்தியுள்ளது. சமூகநீதி பற்றி திமுக பேசுவது பொய்யானது. இவர்களை சிதம்பரம், விழுப்புரம் தொகுதியில் இருந்து அப்புறப் படுத்த வேண்டும். திருமாவளவன் இந்துக்களின் வழிபாட்டு முறைகளை கொச்சைப்படுத்துகிறார். இவர்களை தோற்கடிக்க வேண்டும்."என்று பேசி வாக்கு சேகரித்தார்.
இவர்களுடன் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.ஜான்சி ராணியும் வாக்குகளை வசப்படுத்த, பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தீர்க்கப்படாத பிரச்னைகள்
- கொள்ளிடத்தில் தடுப்பணை அமைக்கப்படவில்லை.
- நீண்டகாலமாக தொகுதி மக்களால் வலியுறுத்தப்படும் முந்திரி தொழிற்சாலை அமைக்கப்படவில்லை .
- சிதம்பரம், காட்டு மன்னார்கோவில் பகுதிகளில் நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.
- சுற்றுலா மற்றும் ஆன்மிக நகரமான சிதம்பரத்தில் முக்கிய ரயில்கள்கூட நின்று செல்வதில்லை.
- சிதம்பரம்-காட்டுமன்னார்கோவில்- ஜெயங்கொண்டம் ரயில் பாதை திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
- 'பிச்சாவரம் சுற்றுலாத் தலம் உலகத் தரத்துக்கு மேம்படுத்தப்படும், சிதம்பரம் நகரில் கவரிங் வர்த்தகச் சந்தை உருவாக்கப்படும்' என தேர்தல்கள் தோறும் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அப்படியே உள்ளன. ஆனாலும் வெற்றி நம்பிக்கையில் வேட்பாளர்கள் வாக்குகளை சேகரித்து வருவதாக சிதம்பரத்தைச் சேர்ந்த நெடுஞ்செழியன் கூறினார்.

"அதிமுகவிற்கு கடன்பட்டுள்ளோம்"
சிதம்பரம் மக்களவைத் தொகுதி புவனகிரி அருகே வயலூரில் டீக்கடை நடத்தி வரும் நாகராஜன் கூறும் போது, "எடப்பாடியார் ஆட்சியில் மக்கள் குறிப்பாக விவசாயிகளுக்கு நல்ல திட்டங்கள் வழங்கினார். தாலிக்கு தங்கம் தந்தனர். மானிய விலையில் ஸ்கூட்டி வழங்கப்பட்டது. அதேபோல் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கினார்கள். எனது மகள் ஸ்கூட்டி வாங்கி பயன் அடைந்துள்ளார். அதை நாங்கள் எப்படி மறக்க முடியும்.நாங்கள் எப்பொழுதுமே அதிமுகவிற்கு நன்றி கடன் பட்டுள்ளோம்." என்று கூறினார்.

"திருமாவளவன் எங்களுக்காக குரல் கொடுப்பவர்"
சிதம்பரம் தொகுதி கங்கை கொண்ட சோழபுரத்தைச் சேர்ந்த பட்டதாரி வாலிபர் ஜெயராம், "எங்களுக்காக எப்பொழுதும் துணையாக இருப்பவர் ஏழைகளின் தோழனாக இருப்பவர் திருமாவளவன் தான்" என்று தெரிவித்தார்.
புவனகிரி கீரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாஸ்கரன், "மோதி நமக்கு எதுவும் செய்யவில்லை" என்று விமர்சனம் தெரிவித்தார்.
தாமரைக்குத்தான் எனது ஓட்டு
கீழ மூங்கிலடி கிராமத்தைச் சேர்ந்த அமிர்தம் பழக்கடை நடத்தி வருகின்றார். இவர் நான் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர் எனது வாக்கு பிஜேபிக்கு தான் என்று கூறினார் .எங்கள் அய்யா கூறுவதை நாங்கள் செய்வோம் என்று தெரிவித்தார். வயலுரைச் ரங்கசாமியும் புதியவரான கார்த்தியாயினிக்கு தான் எனது வாக்கு என்று கூறினார்.

"கவரிங் சிறப்பு நிலை தொழிற்பேட்டை அமைக்க வேண்டும்"
சிதம்பரம் கவரிங் கடை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் அமைப்பின் நிர்வாகி சேகர் பிபிசி தமிழிடம் கவரிங் தொழில் குறித்து விவரித்தார்.
"கடந்த தேர்தலின் போதே திமுக அரசு உதவி செய்வதாக வாக்குறுதி தந்தது அதன் பேரில் தேர்தல் முடிந்தவுடன் எங்களை அணுகி ஆலோசனை நடத்தினார்கள். தொழிற்பேட்டை அமைப்பது தொடர்பாகவும் ஆய்வு செய்தார்கள் என்ற போதிலும் அது அப்படியே உள்ளது. நிச்சயம் செய்து தருவதாக கூறியுள்ளார்கள்."
சிதம்பரத்தில் பத்தாயிரம் குடும்பத்தார்கள் இந்த கவரிங் தொழிலை நம்பித்தான் இருக்கின்றார்கள். அவர்கள் பயனடையும்படி சிறப்பு தொழிற்பேட்டை அமைத்து தர வேண்டும். அதேபோல் கவரிங் நகைகளுக்கு விதிக்கப்படும் 3 சதவீத வரிகளை ரத்து செய்ய வேண்டும். மற்றும் மானிய விலையில் மூலப்பொருட்களும் கருவிகளும் வழங்கிட வேண்டும்" என்று கோரிக்கை முன் வைத்தார்.
எங்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்படுபவர்களுக்கு தான் இந்த முறை எங்களது வாக்கு என்பதை நாங்கள் வேட்பாளரிடம் தெரிவித்தோம் என்றும் அவர் கூறினார்.

ஒரே சுவற்றில் இரண்டு சின்னங்கள்
சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் சில வீடுகளில் அதிமுகவின் இரட்டை இலை சின்னமும் விசிகவின் பானை சின்னமும் ஒரே இடத்தில் அருகருகே வரையப்பட்டிருந்தது.
அதேபோல் பாரதிய ஜனதா கட்சியின் தாமரை சின்னமும், இரட்டை இலை சின்னமும் பெரும்பான்மையான இடங்களில் ஒரே சுவற்றில் வரையப்பட்டிருந்தது ஆச்சரியத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












