ராகிங் செய்யப்பட்ட கேரள மாணவர் மரணம் - இடதுசாரி அமைப்பை குற்றம்சாட்டும் பெற்றோர் – என்ன நடக்கிறது?

- எழுதியவர், ச.பிரசாந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தின் பூக்கோடு பகுதியில், அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி உள்ளது. கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி, இக்கல்லூரியின் விடுதி கழிவறையில் இருந்து சித்தார்த் (18) என்ற மாணவரின் சடலத்தை போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.
இச்சம்பவத்தில், கேரள கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த மாணவர் அமைப்பினர் மற்றும் இந்திய மாணவர் கூட்டமைப்பை (SFI) சேர்ந்த மாணவர்கள் தான் காரணம் எனவும், வழக்கை ஆளும் கம்யூனிஸ்ட் அரசு முறையாக விசாரிக்காமல் குற்றவாளிகளை காப்பற்றுவதாகவும் சித்தார்த்தின் பெற்றோர் குற்றம்சாட்டி வந்தனர். அதுமட்டுமின்றி வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வலியுறுத்தி சித்தார்த்தின் பெற்றோரான ஜெயபிரகாஷ் – ஷீபா கோரிக்கையை முன்வைத்து வந்தனர்.
கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்தும் இந்த கோரிக்கைகளை முன்வைத்தனர்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பினரும், மாணவர் சித்தார்த் மரணத்தில் மர்மம் உள்ளது என்றும் இவ்விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி, பல போராட்டங்களை நடத்தினர். காங்கிரஸ் மற்றும் பாஜக-வினரும் அரசின் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்தனர். இதனால், சித்தார்த் மரணம் கேரள அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணையை தொடங்கிய சிபிஐ
இந்நிலையில், வழக்கை கேரள போலீஸார் சமீபத்தில் சி.பி.ஐ வசம் ஒப்படைத்துள்ளனர். அப்போது, போலீஸார் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில் சித்தார்த் இறப்பதற்கு முன்பு, 29 மணி நேரம் வரையில் தொடர் துன்புறுத்தல், தாக்குதலுக்கு உள்ளானதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், உடற்கூராய்விலும் சித்தார்த் தாக்கப்பட்டது உறுதியானது.
பிப்ரவரி 18-ஆம் தேதி சித்தார்த் உடல் மீட்கப்பட்ட நிலையில், பிப்ரவரி 16-ஆம் தேதி காலை 9:00 மணி முதல் பிப்ரவரி 17-ஆம் தேதி மதியம் 2:00 மணி வரையில், 29 மணி நேரம், சக மாணவர்கள் அவரை 2 பெல்ட் கொண்டு தாக்கியதாகவும், கடுமையாக ராகிங் செய்து மன உளைச்சலை உண்டாக்கியதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். சித்ரவதை செய்யப்பட்ட அறையின் எண் மற்றும் இடத்தையும் குறிப்பிட்டுள்ளனர்.
விசாரணையை துவங்கியுள்ள சி.பி.ஐ அதிகாரிகள், கடந்த 3 நாட்களுக்கு முன்பு கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டு, தடயங்கள் மற்றும் சாட்சியங்களை விசாரித்தனர்.

பட மூலாதாரம், Getty Images
கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட்
இதுவரை இந்த வழக்கில், 15-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில், கேரள கால்நடைகள் பராமரிப்புத்துறை அமைச்சர் ஜே.சின்சுராணி, பூக்கோடு அரசு கால்நடை மருத்துவக்கல்லூரியின் முதல்வர் எம்.கே.நாராயணன் மற்றும் விடுதியின் வார்டனை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தார்.
இது குறித்து அமைச்சர் சின்சுராணி செய்தியாளர்களிடம் பேசியபோது, "ஆட்கள் பற்றாக்குறை குறித்து கல்லூரி முதல்வர் தெரிவிக்கக்கூடாது. விடுதி பராமரிப்பு அவரது கடமை, அவர் தனது கடமையை, பணியை முறையாக செய்யவில்லை. முதல்வர் மற்றும் விடுதி வார்டன் பணியிடை நீக்கம் செய்யவும், விடுதியில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உத்தரவிட்டுள்ளேன்," எனக்கூறியிருந்தார்.

‘SFI அமைப்பிற்கு சித்தார்த் மீது பொறாமை’
இந்நிலையில், SFI எனப்படும் இந்திய மாணவர் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் தான் சித்தார்த்தை கொலை செய்து விட்டதாக, பிபிசி தமிழிடம் பேசிய போது சித்தார்த்தின் உறவினர் நம்மிடம் தெரிவித்துள்ளார்.
சித்தார்த் மரணம் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அவரது உறவினரான சிபு, "எனது உடன்பிறந்த தங்கை ஷீபாவின் மகன் தான் சித்தார்த். கல்லூரியில் எப்போதும் துடிப்பாக இருந்த சித்தார்த், ஒரு இயற்கை ஆர்வலர், புகைப்படக்கலைஞர் அதுவும் பல்கலையில் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியின் புகைப்படக்கலைஞர்,” என்றார்.
"சித்தார்த் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் போதே மாணவர் தலைவர் பதவியை வகித்தார். இரண்டாமாண்டு ஏதேனும் ஒரு அமைப்பில் இருந்தால் மட்டுமே அந்த பதவியை வகிக்க முடியும் என்ற நிலை வந்தபோது, SFI-யில் இணையுமாறு அந்த அமைப்பினர் சித்தார்த்திடம் கேட்டிருந்தனர், அதற்கு சித்தார்த் மறுத்துள்ளார்,” என்றார்.
"அப்போதிருந்தே சித்தார்த்தின் வளர்ச்சியை கண்டு, SFI அமைப்பினர் மற்றும் கம்யூனிஸ்ட் பின்புலமுள்ள மாணவர்கள் அமைப்புகள் பொறாமை கொண்டதுடன், சித்தார்த் மீது கடும் அதிருப்தியில் இருந்தனர். இதனால், அவர் அடிக்கடி ராகிங் செய்யப்பட்டுள்ளார்," என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
குற்றச்சாட்டுகளை மறுக்கும் SFI
சித்தார்த்தின் பெற்றோர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தையும், இந்திய மாணவர் கூட்டமைப்பின் (SFI) கேரள மாநில செயலாளர் ஆர்ஷோ முற்றிலுமாக மறுத்துள்ளார். கடந்த வாரம் செய்தியாளர்களைஇ சந்தித்த அவர் குற்றச்சாட்டுக்களை மறுத்து பேட்டியும் அளித்துள்ளார்.
சித்தார்த் பெற்றோரின் குற்றச்சாட்டுக்கள் குறித்து பிபிசி தமிழ், இந்திய மாணவர் கூட்டமைப்பின் (SFI) கேரள மாநில செயலாளர் ஆர்ஷோவை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டது.
பிபிசி தமிழிடம் பேசிய ஆர்ஷோ, "ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் விளக்கம் கொடுத்துள்ளேன். இப்போதும் அதையேதான் சொல்கிறேன், சித்தார்த் மரணத்தில் எங்களுக்கு தொடர்பு இல்லை, விசாரணை முடியட்டும் உண்மை தெரியவரும்," எனக்கூறி இணைப்பை துண்டித்தார்.
அமைச்சரின் விளக்கம் என்ன?
கால்நடை மருத்துவக்கல்லூரியில் ராகிங்கால் சித்தார்த் இறந்தது குறித்து, பிபிசி தமிழ் கேரள கால்நடைகள் பராமரிப்புத்துறை அமைச்சர் ஜே.சின்சுராணியை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டது.
நம்மிடம் பேசிய சின்சுராணி, "கல்லூரி முதல்வர் மற்றும் விடுதி வார்டன் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சித்தார்த் விவகாரத்தில் அரசு முறையாக செயல்படுகிறது. இனி இது போன்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க, கல்லூரிகள் மற்றும் விடுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது," என்றார்
ராகிங் நடந்தால் என்ன செய்ய வேண்டும்?
இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழு (UGC), ராகிங் குற்றங்களைத் தடுக்கவும் பாதிக்கப்படுவோரை காக்கவும், ஒவ்வொரு கல்லூரியிலும் முதல்வர் அல்லது தலைவரின் தலைமையில், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் அடங்கிய ராகிங் தடுப்புக் குழுவை (Anti-ragging) அமைக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
ராகிங் குற்றத்தால் பாதிக்கப்படுவோர் கல்லூரிகளில் உள்ள இந்தக் கமிட்டியில் புகாரளிக்கலாம்.
அதேபோல், https://www.antiragging.in/ இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாகவும் புகாரளிக்கலாம்.
ஆன்லைன் அல்லது நேரில் புகாரளிப்பது தொடர்பாக, இந்திய பல்கலைக்கழக மானியக் குழுவான UGC-யின் இலவச எண்ணான 1800 – 180 – 5522 என்ற எண்ணுக்கு அழைத்து ஆலோசனை பெறலாம் என இந்திய பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












