மயிலாடுதுறையில் நடமாடிய சிறுத்தை அரியலூருக்கு வந்துவிட்டதா? எப்படி சாத்தியமாகும்?

சிறுத்தை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
    • எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
    • பதவி, பிபிசி தமிழ்

மயிலாடுதுறை மாவட்ட மக்களை கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அச்சத்தில் ஆழ்த்தியுள்ள சிறுத்தையைப் பிடிக்க 50 பேர் கொண்ட வனத்துறையினர், 45 கேமராக்கள், 7 கூண்டுகள், சிறப்புப் படையினர் களமிறங்கியும் 20 கி.மீ. தாண்டி வனத்துறை கண்ணில் சிக்காமல் வலம் வருகிறது. அடர்ந்த காடுகள் இல்லாத மயிலாடுதுறைக்கு சிறுத்தை வந்தது எப்படி?

கடந்த சில நாள்களாக மயிலாடுதுறையில் சிறுத்தை தென்படாததால், அது வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இந்த நிலையில், அரியலூர் மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் காணப்பட்டிருப்பதால், மயிலாடுதுறையில் இருந்து அந்தச் சிறுத்தை இங்கு வந்திருக்கலாமா என்பது குறித்தும் வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் சிறுத்தை வாழ்விடம்

இந்திய வனவிலங்கு நிறுவனம் (Wildlife Institute Of India) நடத்திய 2022ஆம் ஆண்டு ஆய்வின்படி இந்தியாவில் 13,874 சிறுத்தைகள் உள்ளன. இதில் தமிழ்நாட்டில் 1,070 சிறுத்தைகள் உள்ளன. தமிழ்நாட்டில் 2018ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 852 சிறுத்தைகள் மட்டுமே இருந்தன.

தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலை அமைந்துள்ள தேனி, நெல்லை, விருதுநகர் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலை அமைந்துள்ள ஈரோடு, நீலகிரி, கரூர் போன்ற பகுதிகளில் சிறுத்தைகள் அதிகம் காணப்படுகிறது. புலிகள் வாழும் பகுதியில் சிறுத்தைகள் வசிக்காது.

இவை புலிகள் வாழும் பகுதியிலிருந்து தூரமாக வாழும். சிறுத்தைகளுக்கு அடர்ந்த காடுகள் தேவையில்லை. சிறிய புதர், வயல்வெளிகள் கல்குவாரிகள், மலை அடிவாரங்களே போதுமானதாக இருக்கும்.

கடற்கரை மாவட்டமான மயிலாடுதுறைக்கு சிறுத்தை வந்தது எப்படி? சிறுத்தை எங்கே?

மயிலாடுதுறையில் சிசிடிவியில் சிக்கிய சிறுத்தை

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து சமீபத்தில் பிரிக்கப்பட்டது மயிலாடுதுறை மாவட்டம். இங்கு விவசாயம், மீன்பிடித் தொழில் ஆகியவை பிரதானமாக உள்ளன.

நாகப்பட்டினத்தில் உள்ள கோடியக்கரை பகுதியில் மான், குரங்கு, வெளிநாட்டுப் பறவைகள் மட்டுமே உள்ளன. பெரிய விலங்குகள் இங்கு இல்லை.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி இரவு மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தின் அருகில் உள்ள செங்குளம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

அங்கு வந்த போலீசார் அருகிலிருந்த கடையில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் சிறுத்தையை நாய்கள் துரத்திச் சென்ற காட்சிகள் இருந்தன. இதையடுத்து சிறுத்தை ஊருக்குள் வந்திருப்பதை உறுதி செய்தனர்.

சிறுத்தையைப் பிடிக்க வனத்துறை செய்தது என்ன?

வனத்துறையினர் ஏப்ரல் 3ஆம் தேதி தீயணைப்புத் துறை, காவல்துறையுடன் இணைந்து 5 கி.மீ. பகுதியைச் சுற்றி தேடுதல் வேட்டை நடத்தினர்.

சிறுத்தையைப் பிடிப்பதற்காக வலைகள், கயிறுகள் போன்றவற்றை எடுத்து வந்தனர். ஆனால், சிறுத்தை இடத்தை மாற்றிக் கொண்டே இருந்தது.

சிறுத்தை நடமாட்டத்தால் ஏப்ரல் மூன்றாம் தேதி ஒரு பள்ளிக்கும், ஏப்ரல் நான்காம் தேதியன்று 7 பள்ளிகளுக்கும், ஏப்ரல் ஒன்பதாம் தேதியன்று 9 பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு வழங்கினார்.

அதே நேரம் ஊரில் உள்ள மக்களுக்கும் வனத்துறை மூலமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சிறுத்தையைப் பார்த்தால் உடனடியாக வனத்துறைக்கு கூற வேண்டும் என 9994884357 என்ற தொலைபேசி எண்ணும் அளித்தனர்.

கடற்கரை மாவட்டமான மயிலாடுதுறைக்கு சிறுத்தை வந்தது எப்படி? சிறுத்தை எங்கே?

கூண்டில் சிக்காத சிறுத்தை

சிறுத்தை நடமாட்டத்தைக் கண்டறிவதற்காக ஆங்காங்கே வனத்துறை சார்பில் 6 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டன. அதில் மூன்றாம் தேதி இரவு சிறுத்தை நடந்து செல்வது போலத் தெளிவான புகைப்படம் கேமராவில் பதிவாகி இருந்தது.

இதைத் தொடர்ந்து சிறுத்தை இருப்பதை மீண்டும் உறுதி செய்த வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் கூறிய இடங்களில் கூடுதலாக 10 தானியங்கி கேமராக்கள் பொருத்தினர்.

சிறுத்தையைப் பிடிப்பதற்காக ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து ஐந்து சிறப்பு அதிகாரிகள் அழைத்து வரப்பட்டனர். அதேபோல் இரண்டு கூண்டுகள் எடுத்து வரப்பட்டன.

இரவில் சிறுத்தையைக் கண்காணிக்க தெர்மல் ட்ரோன் கொண்டு வரப்பட்டு தேடுதல் பணி நடைபெற்றது. ஆனால், சிறுத்தை சிக்காமல் சுற்றி வந்தது.

கடற்கரை மாவட்டமான மயிலாடுதுறைக்கு சிறுத்தை வந்தது எப்படி? சிறுத்தை எங்கே?

7 கூண்டுகள் வைத்தும் சிக்காத சிறுத்தை சென்றது எங்கே?

மயிலாடுதுறையின் செம்மங்குளம், ஆரோக்கியநாதபுரம், சித்தர்காடு மற்றும் ஊர்குடி ஆகிய பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டன.

மேலும் சிறுத்தையைப் பிடிப்பதற்காக ஏழு கூண்டுகளும் ஆடு மற்றும் ஆட்டு இறைச்சியுடன் வைக்கப்பட்டன. சிறுத்தை மயிலாடுதுறை பகுதியில் தென்பட்டதில் இருந்து மூன்று நாட்களுக்குள் இரண்டு ஆடுகள் மர்மமான முறையில் இறந்தன.

இது சிறுத்தை கடித்து இறந்ததாக அப்பகுதியினர் கூறினர். ஆனால் வனத்துறையினர் அதை மறுத்தனர். ஆடுகள் நாய்கள் கடித்து இறந்திருப்பதாகக் கூறினர். மேலும் அதைத் தெரிந்து கொள்வதற்காக உடற்கூறு ஆய்வையும் செய்தனர்.

22 கி.மீ தொலைவில் கிடைத்த சிறுத்தை கால் தடம்

கடற்கரை மாவட்டமான மயிலாடுதுறைக்கு சிறுத்தை வந்தது எப்படி? சிறுத்தை எங்கே?

சிறுத்தை தொடர்ந்து நகர்ந்துகொண்டே இருந்தது. அதைப் பின்தொடர்ந்து வனத்துறை மற்றும் சிறப்பு குழுவினர் தேடுதல் பணியை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் மயிலாடுதுறை குத்தாலம் தாலுகாவிற்கு உட்பட்ட காஞ்சிவயல் என்ற கிராமத்தில் உள்ள அக்ரஹாரா தெருவில் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதை அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கண்டறிந்து போலீஸிடம் தகவல் அளித்தனர்.

அங்கு சென்ற போலீசார் மற்றும் சிறப்பு வனத்துறை குழுவினர் சிறுத்தையின் கால் தடத்தை உறுதி செய்தனர். அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது சிறுத்தை நடமாட்டம் பதிவாகி இருந்தது தெரிய வந்தது.

மயிலாடுதுறையின் மையப் பகுதியில் இருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ள இந்த பகுதிக்கு சிறுத்தை இடம் பெயர்ந்து வந்திருப்பது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் மயிலாடுதுறையில் இல்லை என வனத்துறையினர் கூறுகின்றனர்.

கடற்கரை மாவட்டமான மயிலாடுதுறைக்கு சிறுத்தை வந்தது எப்படி? சிறுத்தை எங்கே?

சிறுத்தை அடர்ந்த காடுகளே இல்லாத இடத்திற்கு வந்தது எப்படி?

இது குறித்து பிபிசி தமிழிடம் நாகப்பட்டினம் மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தொமர் கூறும்போது, “மயிலாடுதுறை மாவட்டத்தின் கீழ் ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலான காப்புக் காடுகள் இருக்கின்றன. ஆனால், அங்கு பெரிய அளவிலான விலங்குகள் இல்லை."

"இந்த சிறுத்தை காவிரி ஆற்றின் கரையோர பகுதி வழியாக நகர்ந்து மயிலாடுதுறைக்குள் வந்து இருக்கலாம். அதன் நடமாட்டமும் நீர் நிலைகள், ஆற்றங்கரைகளை ஒட்டிய பகுதியிலேயே இருந்து வருகிறது."

"எனவே, அதைப் பிடிப்பதற்காக 50 வனத்துறை அதிகாரிகள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தெர்மல் ட்ரோன், ஆனைமலையில் இருந்து சிறப்பு படையினரும் அழைத்து வரப்பட்டு சிறுத்தையைப் பிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. "

"இறுதியாக சிறுத்தை மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூருக்கு மத்தியில் இருக்கக் கூடிய காஞ்சிவயல் என்ற கிராமத்தில் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி தென்பட்டது. அதன் பிறகு சிறுத்தையின் நடமாட்டம் மயிலாடுதுறைக்குள் இல்லை. "

"எனவே சிறுத்தை தஞ்சை அல்லது திருவாரூர் மாவட்டத்திற்குச் சென்றிருக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே அங்கு இருக்கக்கூடிய வனத்துறைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது,” என்றார்.

கடற்கரை மாவட்டமான மயிலாடுதுறைக்கு சிறுத்தை வந்தது எப்படி? சிறுத்தை எங்கே?

தமிழ்நாடு வனத்துறை கூறுவது என்ன?

தொடர்ந்து பேசிய அவர் கூறும் போது “சிறுத்தை மனிதர்களை தாக்குவது அரிதான விஷயம். சிறிய மிருகங்களை மட்டுமே சிறுத்தை தாக்கி உணவாக உட்கொள்ளும்.

எனவே மக்கள் சிறுத்தையைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை. அதைப் பிடிப்பதற்கான பணிகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். சிறுத்தை பிடிபடும் பட்சத்தில் அது மேகமலை அல்லது முதுமலை காட்டுப்பகுதிக்குள் கொண்டு சென்று விடப்படும்,” என்றார்.

சிறுத்தை இடம் பெயரக் காரணம் என்ன?

இது குறித்து பெயர் சொல்ல விரும்பாத தனியார் வனவிலங்கு ஆராய்ச்சியாளர் பிபிசி தமிழிடம் பேசியபோது, “தமிழ்நாட்டில் சிறுத்தைகள் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிள்ள மாவட்டங்களில் காணப்படுகின்றன.

இது புலிகள் அதிகமாக வசிக்கும் பகுதியில் வாழ்வது கிடையாது. அங்கிருந்து தொலைவில் வசிக்கும் விலங்கு. பொதுவாக சிறுத்தைகள் இடையே இடப் பிரச்சனை நடைபெறும்போது அதில் ஒரு சிறுத்தை இடம்பெயர நேரிடும்.

இயல்பாகவே சிறுத்தை ஒரு நாளைக்கு 5 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் தூரம் வரை நடக்கலாம். அப்படியாகவே இந்த சிறுத்தை கொள்ளிடம் ஆற்றின் கரை வழியாக காவிரி, சின்ன காவிரி என நீர்நிலைகள் வழியாகவே மயிலாடுதுறை வரை நடந்து வந்திருக்கலாம்,” என்றார்.

சிறுத்தை

பட மூலாதாரம், Getty Images

"ஒரு மாதம் நடந்திருக்கும்"

"மயிலாடுதுறைக்கு வந்திருக்கக் கூடிய சிறுத்தை ஒரே நாளில் இங்கே வந்திருக்க வாய்ப்பே இல்லை. சிறிது சிறிதாக நகர்ந்து இங்கே வந்து சேர்ந்து இருக்கும்.

சிறுத்தை பெரும்பாலும் எலி, மயில், பறவை, நாய் சிறிய ஆடு போன்ற விலங்குகளை அடித்து உணவாக எடுத்துக் கொள்ளும். பகல் நேரத்தில் சிறிய புதர், நீர் நிலையோரங்களில் பதுங்கிவிட்டு இரவு நேரங்களில்தான் இடம்பெயரும்,” என்றார்.

அரியலூரில் சிறுத்தை நடமாட்டம்

இந்த நிலையில், அரியலூர் மாவட்டம் செந்துறையில் அரசு மருத்துவமனை அருகே சிறுத்தை நடமாட்டம் இருந்ததை போலீசார் மற்றும் வனத்துறையினர் உறுதிப்படுத்தி உள்ளனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவில் காம்பவுண்ட் சுவரை சிறுத்தை ஏறி குதிப்பது போல் பதிவாகி உள்ளது.

மேலும் இரவு காவல் பணியில் இருந்த 4 போலீசார் சிறுத்தையை நேரில் பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து மயிலாடுதுறையில் இருக்கும் வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் இங்கு வந்த பிறகு டெலி கேமராவை வைத்து சிறுத்தையை இருக்கும் இடத்தை கண்காணித்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

பொதுமக்கள் தேவை இன்றி வெளியே நடமாட வேண்டாம் எனவும் பாதுகாப்பாக இருக்கவும் போலீசார் ஒலிபெருக்கி மூலம் தெரிவித்து வருகின்றனர்.

சிறுத்தை

பட மூலாதாரம், Getty Images

மேலும் போலீசார் வனத்துறை அலுவலர்கள் தொடர்ந்து சிறுத்தையை தேடும்பணியில் ஈடுபட்டு வருகிறனர்.

சிறுத்தையின் நடமாட்டம் குறித்து மாவட்ட வனத்துறை அலுவலர் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தபோது, “ அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில் வனத்துறையை சேர்ந்தவர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தோம். ஆனால் அங்கு கால் தடங்கள் தெளிவாக கிடைக்காத நிலையில், இரண்டு பிரிவாக பிரிந்து மாலை வரை அருகில் உள்ள காடுகளில் மக்களை எச்சரிக்கையாக இருக்கச் சொல்லி தேடுதல் பணியை மேற்கொண்டு வந்தோம் . இரவு நேரத்தில் தேடுதல் பணியை மேற்கொண்டு வந்த நிலையில் செந்துறை அரசு மருத்துவமனையில் 9 மணி அளவில் சிறுத்தை வேலியை தாண்டி போனதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில் வனத்துறையினர் மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள சிசிடிவி கேமரா ஆய்வு செய்தபோது அங்கு சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. மேலும் 11 மணி அளவில் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் வீட்டின் அருகில் பார்த்ததாக தெரிவித்துள்ளார்.” என்றார்.

“இதற்கு முன்கூட்டியே மயிலாடுதுறையில் சிறுத்தையை தேடுதல் பணியில் ஈடுபட்ட தெர்மோ டிரோன் எனப்படும் கருவியைக் கொண்டு சிறுத்தை உள்ள இடத்தை வெப்பத்தை கொண்டு கண்டுபிடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது மற்றொரு டீமின் மூலம் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் கொண்டு சிறுத்தையை பிடிப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும் மயிலாடுதுறையில் நடமாடிய சிறுத்தையும் இந்த சிறுத்தையும் ஒன்றானது என உறுதியாக சொல்ல முடியாத நிலையில் உள்ளோம்.

இரண்டு சிறுத்தைகளின் அடையங்களை ஒப்பிட்டு பார்த்தால் தான் உறுதியாக சொல்ல முடியும் இரண்டு டீம்கள் வந்தவுடன் காவல்துறை வருவாய்த்துறை உதவியுடன் சிறுத்தையை பிடிக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)