மதுரை சித்திரை திருவிழா: கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்க புதிய கட்டுப்பாடு - இனி யாரெல்லாம் செய்யலாம்?

- எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
- பதவி, பிபிசி தமிழ்
மதுரையில் வெகு விமரிசையாக நடைபெறும் சித்திரை திருவிழாவின் போது கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வில் தண்ணீரை பீய்ச்சியடிக்க புதிய கட்டுப்பாடுகளை நீதிமன்றம் விதித்துள்ளது. லட்சக்கணக்கில் மக்கள் பங்கேற்கும் இந்த விழாவில் பக்தர்கள் விரதமிருந்து அழகர் போல வேடம் தரித்து தண்ணீரை சுவாமியை நோக்கி பீய்ச்சி அடிக்க திடீர் கட்டுப்பாடு ஏன்? அந்த கட்டுப்பாடுகள் என்ன? திருவிழாவில் அழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்க இனி அனுமதி பெறுவது எப்படி?
சைவம் - வைணவம் இணைந்து கொண்டாடும் சித்திரை திருவிழா
மதுரை திருவிழாக்களில் மிக முக்கியமாக சைவமும் வைணவமும் இணைந்து கொண்டாடும் சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். மன்னர் திருமலை நாயக்கர் இரண்டு சமயத்தையும் இணைத்து ஒரே திருவிழாவாக மாற்றினார் என வரலாறுகள் கூறுகின்றன.
கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்தின் பொழுது லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடி சுவாமியை தரிசனம் செய்து ராமராயர் மண்டகப்படி தீர்த்தவாரி என்று அழைக்கப்படும் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வைபவம் நடைபெறும். இது கள்ளழகரை குளிர்விக்கும் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இந்த தண்ணீரை பீய்ச்சி அடிக்க முன்பு ஆட்டுத்தோல் பயன்படுத்தப்பட்டு சிறிய குழாய் மூலம் தண்ணீர் சுவாமியை நோக்கி பீய்ச்சி அடிப்பார்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஏர் பிரஷர் பம்பு மூலமாக தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு இதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. ஆனால், கடந்த ஆண்டும் பக்தர்கள் பலர் அந்தத் தடை செய்யப்பட்ட பம்பை பயன்படுத்தினர்.
இந்த ஆண்டுத் திருவிழா ஏப்ரல்-12ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முக்கிய நிகழ்வான வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வு ஏப்ரல் 22-ல் நடைபெறுகிறது.
நீதிமன்ற உத்தரவு என்ன?
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "சித்திரை திருவிழாவின் போது ஏர் பிரஷரை பயன்படுத்தி தண்ணீர் தெளிக்கப்படுவதால் சுவாமி சிலை பாதிக்கப்படுவதுடன் பெண்கள், குழந்தைகள் மீதும் அத்துமீறி தண்ணீர் தெளிக்கப்படுகிறது. ஆகவே, பாரம்பரிய முறைப்படி, ஆட்டுத்தோல் மூலமாகவே தண்ணீரை பீய்ச்சி அடிக்க உத்தரவிட வேண்டும்" என்று அவர் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி. ஆர். சாமிநாதன் விசாரணைக்கு வந்தது. கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்க புதிய கட்டுப்பாடுகளை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். “திருவிழாக்களில் பங்கேற்பவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது அரசின் கடமை. விழாக்கள் சமூகமாக நடைபெறுவதை மாவட்ட நிர்வாகம் காவல்துறையும் உறுதி செய்ய வேண்டும்.
நேர்த்திக்கடன் செலுத்த விரதம் இருந்து வருபவர்கள், கோவில் நிர்வாகத்திடன் அனுமதி பெற்ற நபர்களை மட்டுமே வைகை ஆற்றில் இறங்கி சுவாமி மீது பாரம்பரிய முறைப்படி ஆட்டுத்தோலைப் பயன்படுத்தி தண்ணீர் பீய்ச்சியடிக்க அனுமதி வழங்க வேண்டும்.
அழகர் மலையிலிருந்து வைகை ஆற்றங்கரை வரை வரும் வழியில் சுவாமி மீது தண்ணீர் தெளிக்காமல் இருப்பதை காவல்துறையினர் உறுதி செய்ய வேண்டும். பெண்கள் மீது தண்ணீர் தெளிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்”, என அவர் தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.

"பாரம்பரிய முறைப்படி தண்ணீர் பீய்ச்சியடிக்க வேண்டும்"
நான்கு தலைமுறைகளாக ஆட்டுத்தோல் கைப்பை விற்பனை செய்யும் காரியாபட்டியைச் சேர்ந்த சமுத்திர பாண்டி பிபிசி தமிழிடம் பேசியது.
“மதுரை கீழமாசி வீதி பகுதியில் சித்திரை திருவிழாவிற்கு 15 நாட்களுக்கு முன்பாக காரியாபட்டியில் இருந்து வந்து 200-க்கும் மேற்பட்ட ஆட்டுத் தோல் கடைகளை அமைத்து விற்பனை செய்வோம்,. ஆட்டுத்தோல் விலை 500 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படும். இதில் தண்ணீர் நிரப்பி முன்பு பித்தளை, தங்கம்,வெள்ளி போன்ற பல்வேறு உலோகங்களான சிறிய குழாய்களைப் பயன்படுத்திஅழகர் மீது தண்ணீர் பீய்ச்சப்பட்டு வந்தது.
ஆனால் தற்பொழுது 100 முதல் 150 மீட்டர் தூரம் இருக்கக்கூடிய சாமி மீது தண்ணீரை பீய்ச்சுவதற்காக ஏர் பிரஷர் பம்புகளை பயன்படுத்துகிறார்கள். இதனை தடை செய்ததை வரவேற்கிறோம். பாரம்பரிய முறைப்படியே தண்ணீர் பீய்ச்சியடிக்க வேண்டும்”, என்றார்.

தண்ணீர் பீய்ச்சியடிக்கும் திருவிழா தொடங்கியது எப்படி?
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய எழுத்தாளர் சித்தரவீதிகாரன் கூறியது
“திருமலை நாயக்கர் காலத்திலிருந்து சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. அப்போதே கள்ளழகர் திருவிழாவில் ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவத்தின் போது சுவாமியின் மீது விரதமிருந்து வந்த பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வழக்கம் துவங்கி இருக்கிறது.
இந்தத் திருவிழா கோடைகாலத்தில் நடைபெறுவதால் மக்களிடையே ஏற்படும் வெப்பத்தின் தாக்கத்தை தணிப்பதற்காகவே இது பின்பற்றப்பட்டு இருக்கலாம்.
தண்ணீரை பாத்திரத்தில் எடுத்து வர இயலாது. எனவே ஆட்டுத்தோல் பையை பயன்படுத்தி அதன் மூலம் மக்களை வெப்பம் தணிப்பதற்காக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு இருக்கலாம்.”, என்றார் அவர்.

"பக்தர்களை குழப்பமடையச் செய்யும் நடைமுறை"
20 ஆண்டுகளுக்கு மேலாக தண்ணீர் பீய்ச்சி அடித்து வரும் பக்தர் பிரசாந்த் பிபிசி தமிழிடம் பேசினார்.
"நாங்கள் மூன்று தலைமுறையாக அழகருக்காக விரதமிருந்து ஆண்டுதோறும் அழகர் போல உடை அணிந்து மதுரையை அழகர் அடைந்தவுடன் எதிர்சேவை செய்து கள்ளழகர் ஆற்றில் இறங்கும் அன்று தண்ணீர் பீய்ச்சி அடித்து எங்களது நேர்த்தி கடனை செலுத்தி வருகிறோம்.
ஆனால் திடீரென அதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என சொல்கிறார்கள். இது அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேர்வது மிகவும் கடினம்.
நீதிமன்றம் ஏர் பம்புகளை பயன்படுத்தத் தடை விதித்து இருக்கிறது. அதற்கு நாங்கள் முழு ஒத்துழைப்பை தருகிறோம். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாகவே ஏர் பம்பு பக்தர்கள் மத்தியில் பரவத் தொடங்கியது. அதனை தடை செய்தால் போதுமானது.
ஆனால் முன் பதிவு செய்து தான் தண்ணீர் பீய்ச்ச வேண்டும் என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது திருவிழாவின் போக்கை வருங்காலத்தில் மாற்றிவிடும் இந்த முடிவை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்", என்றார்.

முன்பதிவு செய்ய ஆதார் அட்டை அவசியம்
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அழகர் கோயிலின் செயல் அலுவலரும் இந்து சமய அறநிலையத்துறையின் துணை ஆணையர் லெ. கலைவாணன்,
"கள்ளழகர் ஆற்றில் இறங்கும் பொழுது பக்தர்கள் விரதமிருந்து அழகரின் மீது தண்ணீரை பீய்ச்சி அடிப்பது வழக்கம். இதில் ஏர் பிரஷர் பம்புகளை பயன்படுத்தி சிலை மற்றும் சுவாமி தரிசனம் செய்ய வரும் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீது அத்துமீறி தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் நிலை இருந்து வந்தது.
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த ஆண்டு அனுமதி பெற்று பாரம்பரிய முறைப்படி தண்ணீர் பீய்ச்ச அனுமதி கோயில் நிர்வாகத்தால் வழங்கப்பட இருக்கிறது.
அழகருக்கு விரதம் இருந்து தண்ணீர் பீய்ச்ச விரும்பும் பக்தர்கள் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் உள்ள அலுவலகத்தில் ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் ஆதார் அட்டை இரண்டு புகைப்படத்துடன் நேரில் வந்து பதிவு செய்து அடையாள அட்டையை பெற்றுச் செல்லலாம்.
தற்பொழுது மண்டகப் பணிகளுக்கான வேலைகள் நடைபெற்று வருவதால் அது முடிந்த பிறகே இந்த பணிகள் தொடங்கும்.
வரும் அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி அடையாள அட்டை வழங்கப்படும். சிலையின் மீது கெமிக்கல் கலந்து தண்ணீரை அடிக்கக் கூடாது, பிரஷர் பம்பு பயன்படுத்துவதை தவிர்க்கவே இது நடைமுறை செய்யப்பட்டுள்ளது", என்று கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












