வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்திய அரசே யுஏஇ, வங்கதேசத்திற்கு விற்பது ஏன்? பல கோடி ரூபாய் லாபம் யாருக்கு?

வெங்காய ஏற்றுமதி

பட மூலாதாரம், Getty Images

இந்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்குத் தடை விதித்து நீண்ட காலமான நிலையிலும், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற சில நாடுகளுக்கு அரசின் அனுமதியுடன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தற்போது, உலகளவில் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது. ஆனால், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் வெங்காயம் குறைந்த விலைக்கே விற்கப்படுவதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கோபமடைந்துள்ளனர்.

இந்திய விவசாயிகளுக்கு ஒரு கிலோ வெங்காயத்திற்கு ரூ.12 முதல் ரூ.15 வரை தரப்படுவத்தாகவும், அதே வெங்காயம் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சென்றடையும் போது, அதன் விலை கிலோவுக்கு ரூ.120 ஆக விற்கப்படுவதாகவும் ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர்.

வெங்காயம் ஏற்றுமதி செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாடுகளுக்கு மட்டும் அரசாங்கம் வெங்காயத்தை ஏன் ஏற்றுமதி செய்கிறது என்பது கேள்வி.

இந்திய அரசு இப்போது வெங்காயத்தை ராஜதந்திரத்திற்காகப் பயன்படுத்துகிறதா?

வெங்காய ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடை விதித்ததில் இருந்து, விவசாயிகள் அதை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தியா, வெங்காய விலை, வெங்காய ஏற்றுமதி, அரபு நாடுகள்

பட மூலாதாரம், Getty Images

வெங்காயம் தேர்தலில் ஆதிக்கம் செலுத்துமா?

மகாராஷ்டிராவில் விவசாயிகள் வெங்காய ஏற்றுமதி தடைக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர்.

இப்போராட்டங்கள் நாசிக்கின் லாசல்கான், நந்த்கான், பிம்பால்கான் மற்றும் உம்ரானே ஆகிய இடங்களில் நடந்தன. இந்த பகுதிகள் இந்தியாவில் வெங்காய உற்பத்தியின் மையமாக உள்ளன.

வெங்காயம் அரசியல் ரீதியாக முக்கியமான பயிராகப் பார்க்கப்படுகிறது. வெங்காய விலை அவ்வப்போது தேர்தல் பிரச்னையாகவும் மாறியிருக்கிறது.

தேர்தலில் வெங்காயத்தின் நேரடி தாக்கம் 1998-இல் காணப்பட்டது. அந்த ஆண்டு டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்ததற்குக் காரணம் வெங்காய விலை உயர்வுதான் என்று நம்பப்பட்டது.

நாட்டில் வெங்காயத்திற்குத் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில், கடந்த டிசம்பர் மாதம் வெங்காய ஏற்றுமதிக்கு அரசு தடை விதித்தது.

கடந்த மாதம், அரசு மறு உத்தரவு வரும் வரை இந்தத் தடையை நீட்டித்தது. ஆனால், இந்திய தூதரகங்களுக்கு வெங்காயம் வேண்டி வரும் கோரிக்கைகளை இந்திய அரசு ஏற்றுக்கொள்கிறது.

இந்தியா, வெங்காய விலை, வெங்காய ஏற்றுமதி, அரபு நாடுகள்

பட மூலாதாரம், Getty Images

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அனுப்பப்படும் வெங்காயம்

கடந்த மார்ச் 1-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 1.4 கோடி கிலோ (14,440 மெட்ரிக் டன்) வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியதாக ‘தி இந்து’ நாளிதழ் தெரிவித்துள்ளது. இந்த ஏற்றுமதி மூன்று மாதங்களில் 36 லட்சம் கிலோவுக்கு மேல் (3,600 மெட்ரிக் டன்னுக்கு மேல்) இருக்கக்கூடாது என்ற நிபந்தனையை அரசு விதித்திருந்தது. கடந்த மாதம் 30 லட்சம் கிலோ (3,000 டன் வெங்காயம்) ஏற்றுமதி செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இது தவிர, கடந்த வாரம் ஒரு கோடி கிலோ (10,000 மெட்ரிக் டன்) வெங்காயத்தை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அனுப்ப வர்த்தக அமைச்சகம் தனியாக அனுமதி அளித்துள்ளது.

ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், ஐக்கிய அரபு அமீரகத்தைத் தவிர மற்ற நாடுகளுக்கும் வெங்காயம் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வங்கதேசத்துக்கு 5 கோடி கிலோ (50,000 டன்), பூடானுக்கு 5.5 லட்சம் கிலோ (550 டன்), பஹ்ரைனுக்கு 30 லட்சம் கிலோ (3,000 டன்), மொரீஷியஸுக்கு 12 லட்சம் கிலோ (1,200 டன்) வெங்காயம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி அளித்துள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியா, வெங்காய விலை, வெங்காய ஏற்றுமதி, அரபு நாடுகள்

பட மூலாதாரம், Getty Images

பல கோடி ரூபாய் லாபம் யாருக்கு?

பொதுவாக, சர்வதேசச் சந்தையில் வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ரூ.30 முதல் ரூ.35 வரை இருக்கும். இருப்பினும், சமீபத்திய மாதங்களில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற முக்கிய சந்தைகளில் விலை கிலோ ரூ.150-ஐ எட்டியுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், எகிப்து ஆகிய நாடுகள் வெங்காய ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

தி இந்து நாளிதழின் படி, சமீபத்தில் வெங்காயம் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு டன்னுக்கு 500 முதல் 550 டாலர்கள் என்ற விகிதத்தில் அனுப்பப்பட்டுள்ளதாக ஏற்றுமதியாளர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்திய ரூபாயில் ஒரு கிலோ வெங்காயம் என்று சொன்னால் அது 45 முதல் 50 ரூபாய் வரை இருக்கும்.

இந்தியாவில் இருந்து வெங்காயத்தை வாங்கும் ஐக்கிய அரபு அமீரக இறக்குமதியாளர்கள் ரூ.300 கோடிக்கு மேல் லாபம் ஈட்டியுள்ளதாக அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 1 கோடி கிலோ வெங்காயம் செல்லும் போது, இறக்குமதியாளர்களுக்கு சுமார் ரூ.1,000 கோடி லாபம் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா, வெங்காய விலை, வெங்காய ஏற்றுமதி, அரபு நாடுகள்

பட மூலாதாரம், ANI

இந்த வெங்காயத்தை வாங்குவது யார்?

இந்த வெங்காய ஏற்றுமதி தேசிய கூட்டுறவு ஏற்றுமதி லிமிடெட் (National Co-operative Exports Limited - NCEL) மூலம் பிரத்தியேகமாக செய்யப்படுகிறது. இவ்வமைப்பு கூட்டுறவு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு அரசு அமைப்பாகும்.

எனவே, வெங்காயத்தை தனியார் நிறுவனங்கள் ஏற்றுமதி செய்வதில்லை. மாறாக ஒரு அரசு மற்றொரு அரசுக்கு ஏற்றுமதி செய்கிறது. இந்தச் செயல்பாட்டில், வெங்காயத்தை இறக்குமதி செய்யும் நாட்டின் அரசாங்கம், இறக்குமதியாளர்களுக்கான ஒதுக்கீட்டை நிர்ணயம் செய்கிறது.

அக்ரிபஜார் இணைய போர்ட்டலில் ‘இ-டெண்டர்’ மூலம் இத்தகைய ஏற்றுமதிக்கான கொள்முதல் செய்யப்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வெங்காயம் வாங்குவதில் தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாக நம்பப்படுகிறது. அதே நேரத்தில் அரசாங்க நிறுவனங்கள் அதிலிருந்து விலகி இருப்பதாகத் தெரிகிறது.

இந்தியாவில் வெங்காயத்தை ஏற்றுமதி செய்வது மற்றும் அதன் விலையை நிர்ணயம் செய்வது குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும் என தோட்டக்கலை உற்பத்தி ஏற்றுமதியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

NCEL நிறுவனத்திற்கு அவர்கள் அனுப்பியுள்ள மின்னஞ்சலில், சர்வதேச விலையை விட அதிக விலைக்கு வெங்காயம் வெளிநாடுகளில் விற்கப்படுவதாக கவலை தெரிவித்துள்ளனர்.

வெங்காய ஏற்றுமதி தொடர்பான செயல்முறை மற்றும் அதன் விலைகளின் மீது தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று NCEL அதிகாரிகள் வணிகர்களிடம் கூறியதாகவும் செய்திகள் வெளியாயின.

இந்தியா, வெங்காய விலை, வெங்காய ஏற்றுமதி, அரபு நாடுகள்

பட மூலாதாரம், Getty Images

வெங்காயம் எப்போது மனித உணவில் சேர்க்கப்பட்டது?

4,000 ஆண்டுகளுக்கு முன்பே வெங்காயம் பல்வேறு உணவுகளில் பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன.

1985-இல் ஒரு பிரெஞ்சு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் மெசபடோமிய காலத்தில் எழுதப்பட்ட ஒரு குறிப்பில் இதைக் கண்டறிந்தார். இன்று, வெங்காயம் உலகின் அனைத்து நாடுகளிலும் பயிரிடப்படுகிறது.

உலகின் மொத்த வெங்காய உற்பத்தி 7,000 கோடி கிலோ (70 மில்லியன் டன்). இதில் 45%-த்தை சீனாவும் இந்தியாவும் சேர்ந்து உற்பத்தி செய்கின்றன.

ஆனால் வெங்காயம் உண்பதில் இந்த இரண்டு நாடுகளும் உலகின் தலைசிறந்த நாடுகளில் இல்லை.

2011-ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வின்படி, லிபியாவில் ஒவ்வொரு நபரும் ஆண்டுக்கு சராசரியாக 33.6 கிலோ வெங்காயம் சாப்பிடுகிறார்.

உலகின் பெரும்பாலான நாடுகளின் உணவு வகைகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது. இதற்குக் காரணம் வெங்காயத்திலுள்ள சத்துக்களும், பல உணவுமுறைக்கும் பொருந்திப்போகும் அதன் தன்மையும்தான்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)