சாட்டை துரைமுருகனுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீனை நீட்டித்தது ஏன்? முழு பின்னணி

பட மூலாதாரம், Youtube/Saatai Duraimurugan
- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
அவதூறு வழக்கில் நாம் தமிழர் கட்சி நிர்வாகியும், பிரபல யூடியூபருமான சாட்டை முருகனுக்கு ஜாமீனை உச்சநீதிமன்றம் நீட்டித்துள்ளது. அப்போது உச்ச நீதிமன்றத்தில் என்ன நடந்தது? நீதிபதிகள் என்ன கூறினர்? வழக்கின் முழு பின்னணி என்ன?
உச்ச நீதிமன்றம் ஜாமீனை நீட்டித்தது ஏன்? வழக்கின் பின்னணி
நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதி மற்றும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பாஜகவை சேர்ந்த குஷ்பு குறித்து அவதூறாக பேசியதாக 2021ம் ஆண்டு தஞ்சாவூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இனி யார் குறித்தும் அவதூறாக பேசக் கூடாது என்ற நிபந்தனையுடன் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அவருக்கு ஜாமீன் வழங்கியிருந்தது.
ஜாமீனில் வெளியே வந்த அவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசினார் என்று மீண்டும் கைது செய்யப்பட்டார். ஜாமீனுக்கு கொடுக்கப்பட்ட நிபந்தனையை மீறி விட்டதாக அவரது ஜாமீனை 2022ம் ஆண்டு ஜூன் மாதம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது. இதை எதிர்த்து சாட்டை துரைமுருகன் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கை ஏப்ரல் 8ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ். ஓகா மற்றும் உஜ்ஜல் பூயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, அவரது ஜாமீனை நீட்டித்து உத்தரவிட்டது.
“தேர்தலுக்கு முன்பாக, யூ டியூபில் அவதூறாக பேசுபவர்களை சிறையில் அடைத்தால், எத்தனை பேரை சிறையில் அடைக்க வேண்டியிருக்கும்?” என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஜாமீனை ரத்து செய்வதற்கான எந்த முகாந்திரமும் இந்த வழக்கில் இல்லை என்று கூறிய உச்சநீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது.
இந்த வழக்கில் தமிழக அரசு சார்பாக மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜராகியிருந்தார். சாட்டை துரைமுருகன் மீது 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம், மற்றும் 2023ம் ஆண்டு மார்ச் மாதத்திலும் அவர் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளை குறிப்பிட்டார். பாபர் மசூதி இடிப்பை கண்டித்து போராட்டத்தில் பங்கேற்றதாகவும் சிறையில் இருக்கும் கைதிகளை சிலரை விடுவிக்கக் கோரியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
ஆனால் தனது கருத்துகளை வெளிப்படுத்துவதால், அவர் ஜாமீனுக்கான நிபந்தனையை மீறிவிட்டார் என்று கூற முடியாது என்று உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
கருத்தும் கைதும்
தமிழ்நாட்டில் சமூக ஊடகங்களில் கருத்துகளை வெளியிட்டதற்காக கைது செய்யப்படுவது இது முதல் முறை அல்ல.
- கடந்த சில நாட்களுக்கு முன்பாக, தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி குறித்து அவதூறு ஆடியோ வெளியிட்டதாக எட்வர்ட் ராஜதுரை, திமுக ஐடி பிரிவினர் கொடுத்த வழக்கின் பெயரில் சாத்தான்குளம் போலீஸார் அவரை கைது செய்தனர்.
- கடந்த மார்ச் மாதம் தமிழ்நாட்டில் போதைப் பொருள் புழக்கம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினை தொடர்புப்படுத்தி அவதூறு பரப்பியதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது பதிவு செய்யப்பட்டிருந்தது.
- அதே மாதத்தில் பாஜக மாநிலச் செயற்குழு உறுப்பினர் சவுதாமணி, சமூக வலைதளங்களில் சிறுமிகள் மது குடிக்கும் வீடியோவை வெளியிட்டு 'இது தான் திராவிட மாடல் ஆட்சி' என்று பதிவிட்டிருந்தார். அவரும் கைது செய்யப்பட்டார்.
- திமுக குறித்தும், தமிழக அமைச்சர்கள் குறித்தும் முகநூல் பக்கத்தில் அவதூறு பரப்பியதாக திருவாரூர் மாவட்ட பாஜக துணை தலைவர் சதீஷ்குமார் கைது பிப்ரவரி மாதம் செய்யப்பட்டார்.

பட மூலாதாரம், Getty Images
- 2023ம் ஆண்டு ஜூலை மாதத்தில், திமுக அரசை எதிர்த்து பாஜக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் கலிவரதன் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்தும், திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி குறித்தும் அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டார்.
- அதே ஆண்டு ஜூன் மாதத்தில், சமூக வலைதளங்களில் தந்தைப் பெரியார், கருணாநிதி, மு.க.ஸ்டாலின், செந்தில் பாலாஜி குறித்து அவதூறான கருத்துகளை கூறியதற்காக உமா கார்க்கி என்ற பெண் கோவை சைபர் க்ரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்படுவதற்கு முந்தைய நாள், அவர் பாஜக தலைவர் அண்ணாமலையிடமிருந்து சிறந்த செயற்பாட்டாளர் என்ற விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
இப்படி வழக்குகள் தொடர்வது திமுக ஆட்சியில் மட்டுமே நடைபெறும் ஒன்றல்ல. 2011-2016ம் ஆண்டு வரையிலான முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 200க்கும் மேற்பட்ட மானநஷ்ட வழக்குகள் எதிர்க்கட்சிகள் மீது பதிவு செய்யப்பட்டன. இவற்றில் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் ஊடகத்தினர் மீது போடப்பட்டன.
ஜெயலலிதா மானநஷ்ட வழக்குகளை தவறாக பயன்படுத்துவதாக 2016ம் ஆண்டு உச்சநீதிமன்றம் விமர்சித்தது. தன் மீதான விமர்சனங்களை தவிர்க்க இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்துகிறார் என நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் சி நாகப்பன் கூறியிருந்தனர். “ஜனநாயகம் நடைபெறும் முறை இதுவல்ல. பொது வாழ்வில் இருக்கும் நபர், விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டும்” என்று அவர்கள் தெரிவித்திருந்தனர்.
முதல்வரை விமர்சிக்கும் வகையிலான செய்தியை வாசித்ததற்காக, கேப்டன் தொலைக்காட்சியின் இளம் செய்தி வாசிப்பாளர் ஒருவர் மீது ஜெயலலிதா தானே வழக்கு தொடுத்திருந்தார்.
தமிழ்நாடு மீனவர் விவகாரம் குறித்து சுப்ரமணிய சுவாமி கூறிய கருத்தை வெளியிட்டதற்காக டைம்ஸ் ஆப் இந்தியா மீது அதிமுக ஆட்சி வழக்கு தொடுத்தது.
தினமலர் நாளிதழின் மூத்த செய்தியாளர் ஒருவர், பொய்யான கருத்துகளை வெளியிட்டார் என்று 2009ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் தனது அலுவலகத்திலிருந்து கைது செய்யப்பட்டார் .

பட மூலாதாரம், FACEBOOK/KATHIRANANTH
2021ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, 2011-2021ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சிக் காலத்தில் ஊடகங்கள் மீது போடப்பட்ட மானநாஷ்ட வழக்குகளை திரும்ப பெற உத்தரவிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
2023ம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, தம்மை அவதூறு செய்யும் வகையில் வீடியோ வெளியிட்டதாக, திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது கிரிமினல் மான நஷ்ட வழக்கு பதிவு செய்திருந்தார்.
அரசியல் சாசன சட்டம் பிரிவு 19(1) (a) பேச்சுரிமையை அனைத்து இந்திய குடிமக்களுக்கும் வழங்குகிறது. அதே போன்று வாழ்வதற்கான அடிப்படை உரிமையை வழங்கும் பிரிவு 21 கண்ணியத்துடன் வாழ்வதற்கான உறுதி அளிக்கிறது. எனவே இந்த பிரிவுகளுக்கு இடையிலான சமநிலையை பராமரிப்பதே சட்டத்தின் வேலை ஆகும்.
மான நஷ்ட வழக்குகள் பதிவு செய்யப்படும், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 499 அவதூறு என்றால் என்னவென்று விளக்குகிறது. அதன்படி, ஒரு நபர் மற்றொருவரை குறித்து சொல்லும் குற்றச்சாட்டு அந்த நபரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பது அவதூறு எனப்படும்.
சாட்டை முருகன் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 147, 148, 294 b, 154, 505, 506 (1), உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் கலவரத்தை தூண்டுதல், சட்டவிரோதமாக கூடுதல், ஆபாசமாக பேசுதல், வதந்திகளை பரப்புதல், பெருந்தொற்று நோய் பரப்புதல் ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக வழக்கு பதியப்பட்டுள்ளது.
'திமுக ஆட்சியில் கைது நடவடிக்கை'

பட மூலாதாரம், SAATTAIDURAI/X
இது குறித்து சாட்டை முருகன், பிபிசி தமிழிடம் பேசிய போது, தனக்கு கிடைத்த உச்சநீதிமன்ற தீர்ப்பு இது போன்ற பிற வழக்குகளில் முன் உதாரணமாக இருக்கும் என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், “அதிமுக ஆட்சியில் நான் 1,200 அரசியல் காணொளிகள் வெளியிட்டுள்ளேன். வேறு சில சேனல்களும் வெளியிட்டிருந்தனர். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அவற்றை அகற்ற வைத்தனர். நான் அகற்றவில்லை.
அதிமுக ஆட்சியின் போது, எடப்பாடி பழனிசாமி மோதி காலில் விழுவது குறித்து வீடியோ வெளியிட்ட போது கூட வழக்கு போடவில்லை. அதிமுக ஆட்சியில் கண்டிப்பாக குறைகள் உள்ளன. ஆனால் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிப்பதற்காக உடனடி கைது செய்வது திமுக தான். கடந்த மூன்று ஆண்டுகளில் என் மீது 11 வழக்குகள் போடப்பட்டுள்ளன. ஃபாக்ஸ்கான் போராட்டத்தைப் பற்றி வெளியிட்ட வீடியோவுக்காக என் மீது தேச துரோக வழக்கு போடப்பட்டது. பெண்கள் ரத்த சோகை காரணமாக மெலிந்து போய் இருக்கிறார்கள் என்று பேசியதை பெண்களை இழிவாக பேசிவிட்டேன் என்று வழக்கு போடப்பட்டது.
பேசுவது நாகரீகமாக இருக்க வேண்டும், ஒருமையில் பேசக் கூடாது என்று கூறலாம். ஆனால் பேசவே கூடாது என்று கூறுகிறார்களா? நான் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர். என் வேலையே பேசுவது தான். அண்ணாதுரை, நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர் என தலைவர்கள் பேசி பேசி உருவாக்கிய திமுகவிலிருந்து திமுகவுக்கு எதிராக பேசவே கூடாது என்று கூறுவது கருத்து சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கை” என்றார்.
"உச்ச நீதிமன்ற நிலைபாடு நிலையாக இல்லை"

ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு, கருத்து சுதந்திரத்தைப் பற்றி உச்ச நீதிமன்றத்தின் நிலைபாடு நிலையாக இருந்ததில்லை என்கிறார். “ உதயநிதி ஸ்டாலின் தன் மீதான எல்லா வழக்குகளையும் ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டும் என்று மட்டுமே கோரியிருந்தார். ஆனால் அந்த வழக்குக்கு சம்பந்தமற்ற எல்லா விதமான கருத்துகளையும் நீதிமன்றம் தெரிவித்தது.” என்று குறிப்பிடுகிறார் நீதிபதி சந்துரு.
மேலும், “மத்திய இணை கவுஷல் கிஷோர் சம்பந்தப்பட்ட வழக்கில் அரசியல்வாதிகளின் வெறுப்பு பேச்சுகளை கட்டுப்படுத்தும் வகையிலான வழிகாட்டுதல்களை வகுக்க உச்சநீதிமன்ற அமர்வு மறுத்துவிட்டது. ஆனால் அதே அளவுகோல் ராகுல் காந்தி மற்றும் பிற அரசியல்வாதிகளுக்கு பொருந்தவில்லை. ஸ்டான் பாதிரியார் வழக்கில், 16 பேரில் ஆறு பேருக்கு தான் ஜாமீன் கிடைத்தது. மற்றவர்கள் நான்கு வருடங்களாக அவதிப்பட்டு வருகின்றனர்.
எந்த வழக்காக இருந்தாலும் ஒருவருக்கு ஜாமீன் கிடைத்தால் அவர் அதிர்ஷ்டசாலி, கிடைக்காவிட்டால் இந்த நாட்டின் கிரிமினல் சட்டத்தை பழி சொல்ல வேண்டும். பொதுவாக சகிப்புத்தன்மை மங்கி வரும் நிலையில், சாமார்த்தியமானவர்கள் யூ டியூப் மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்தி தப்பித்து விடுகின்றனர். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும் மோசமான சூழல் நிலவுகிறது. காவல்துறையினரின் பணி வழக்குப் பதிவு செய்வதாக மட்டும் இருக்க வேண்டும். ஒவ்வொரு வழக்கின் போதும் விசாரணைக்கு முன்பே கைது செய்வதற்கு அனுமதி கேட்கக் கூடாது” என்று தெரிவித்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












