தமிழ் இலக்கியங்களில் பாடப்பட்ட 'பக்கோடா' உலகெங்கும் பரவியது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், உருஜ் ஜாஃப்ரி
- பதவி, பிபிசி இந்திக்காக இஸ்லாமாபாத்திலிருந்து
பக்கோடாவும் இஸ்லாமியர்களின் நோன்பு மாதமான ரமலானும் ஒன்றோடொன்று இணைந்தது.
இஃப்தார் (நோன்பு திறப்பு) மேசையில் பக்கோடா பரிமாறப்படாத எந்த முஸ்லிம் குடும்பமும் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இருக்க வாய்ப்பில்லை.
இஃப்தார் நேரமும் மாலை தேநீர் நேரமும் ஒன்றுதான்.
ஒவ்வொரு குடும்பத்திலும் மாலை நேரத்தில் தேநீருடன் பக்கோடாவும் தயாரிக்கப்படுகிறது. ஆனால், பக்கோடாவின் வரலாறு எவ்வளவு பழமையானது என்பது பற்றி பல்வேறு கூற்றுகள் உள்ளன.
பொதுவெளியில் கிடைக்கும் தகவல்களின்படி, பக்கோடா கி.பி. 1025 முதலே உள்ளது.
அவை முதலில் சமஸ்கிருதம் மற்றும் தமிழ் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.
பக்கோடா சாப்பிடும் பழக்கம்

பட மூலாதாரம், Getty Images
பருப்புகளை அரைத்து, அதனை காய்கறிகளுடன் கலந்து பக்கோடா தயாரிக்கப்பட்டது. அதை மக்கள் பொறித்து சாப்பிட்டனர். மக்கள் இதை பக்கவாடா (Pakavata) என்று அழைத்தனர். அதாவது, சமைத்த உருண்டை அல்லது கட்டி என்பது இதன் பொருள்.
இது பல இடங்களில் பாஜியா என்றும் அழைக்கப்படுகிறது.
1130 இல் வெளியான மானசொல்லாசம் (Manasollas) மற்றும் 1025 இல் வெளியிடப்பட்ட லோகோபகாரம் (Lokapakara) ஆகிய வரலாற்று உணவு நூல்களில், பாஜியா அல்லது பக்கோடா செய்ய, காய்கறிகளை கடலை மாவில் கலந்து, மீன் வடிவ அச்சில் பொறித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உருளைக்கிழங்கு, கீரை, வெங்காயம், பச்சை மிளகாயுடன் காய்ந்த மசாலாப் பொருட்களைக் கலந்து பக்கோடாக்கள் தயாரிக்கப்படுகின்றன. ரவை மற்றும் அரிசி மாவு இதில் பயன்படுத்தப்படுகின்றன.
பக்கோடா அல்லது பாஜியாவில் ஊருக்கு ஏற்ப சில வித்தியாசங்கள் இருப்பதாகவும் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து உலகம் முழுவதும் பக்கோடா பரவியது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
16ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்கள் கடல் மார்க்கமாக இந்தியக் கடற்கரைக்கு வந்த போது, நீண்ட காலம் கெடாமல் இருக்கும் பண்டங்களைத் தேடினர் என்றும் சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போர்த்துகீசியர்கள் பொதுவாக இந்திய சமையல்காரர்களை பயணத்தின் போது தங்களுடன் வைத்திருப்பார்கள். அந்த சமையல்காரர்கள், உருளைக்கிழங்கு, வெங்காயம், கத்தரிக்காய், பச்சை மிளகாய் ஆகியவற்றுடன் பச்சரிசி மாவு மற்றும் மசாலா சேர்ந்து வறுத்த காய்கறிகளை போர்ச்சுகீசியர்களுக்கு உணவாக வழங்குவர்.
வறுத்த பிறகு அவற்றின் ஈரப்பதம் நீக்கப்பட்டதால், அவை நீண்ட காலத்திற்கு கெட்டுப்போவதில்லை.
போர்ச்சுகீசியர்களால்தான் பக்கோடாக்கள் ஜப்பானை சென்றடைந்தன. ஜப்பானில் பருப்பு பயிரிடப்படாததால், அங்குள்ள மக்கள் காய்கறிகள் மற்றும் உலர்ந்த மசாலாப் பொருட்களுடன் பருப்பால் ஆன மாவுக்குப் பதிலாக மைதா மாவைப் பயன்படுத்தத் தொடங்கினர். ஜப்பானிய டெம்புரா பிறந்தது இப்படித்தான்.
இன்றும் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் பேருந்தில் பயணம் செய்தாலும், ரயிலில் பயணம் செய்தாலும், பக்கோடா, பாஜியா, போண்டா போன்றவற்றை சட்னியுடன் சேர்த்து எடுத்துச் செல்வதுதான் வழக்கம்.
இந்திய-பாகிஸ்தானிய பக்கோடாக்கள், ஜப்பானிய மற்றும் பிரிட்டிஷ் ஃபிரிட்டர்ஸ் வகை உணவு மற்றும் மத்திய தரைக்கடல் நாடுகளின் ஃபாலாஃபெல், அனைத்து உணவுகளும் ஒன்றுக்கொன்று உறவினர்கள் போல் தெரிகிறது.
பக்கோடாக்களுக்கான மாவு பருப்பு மாவிலிருந்து தயாரிக்கப்படுகிறது. ஃபிரிட்டர்ஸ் உணவுக்கு மைதா மாவு பயன்படுத்தப்படுகிறது. அதேசமயம், ஃபாலாஃபெலுக்கு வேகவைத்த பயிரை அரைத்து மாவு தயாரிக்கப்படுகிறது.
ரமலானுக்கும் பக்கோடாவுக்கும் என்ன தொடர்பு?

பட மூலாதாரம், Getty Images
உணவு மற்றும் பானங்கள் பற்றி நிறைய ஆராய்ச்சி செய்த புஷ்பேஷ் பந்த், பக்கோடாவின் வரலாறு பற்றி கூறுகையில், "பக்கோடாவின் வரலாறு உணவு வரலாற்றில் இல்லை, ஆனால் உணவுகள் வறுத்த உணவுகளின் வரலாற்றில் உள்ளது. ரமலான் மாதத்தில் இதன் பயன்பாடு பெரிது. இவ்வகை உணவுகள் எண்ணெயில் பொறித்தது என்பதால், சீக்கிரம் கெட்டுப்போகாது. கடலை மாவு என்பதால் சத்தானது. மேலும், இதை உங்களுக்குப் பிடித்த காய்கறிகள் மற்றும் சட்னிகளுடன் சாப்பிடலாம்” என்றார்.
நோன்பு திறப்பின்போது நமக்குப் பிடித்தமான காரமான மற்றும் இனிப்பு உணவுகளை உண்ண நம் இதயம் விரும்புகிறது.
பக்கோடா என்பது ஏழை, பணக்காரர் என அனைவருக்கும் எளிதில் கிடைக்கக் கூடிய ஓர் உணவு. அதன் தயாரிப்புக்கான அனைத்து பொருட்களும் சமையலறையில் எளிதாகக் கிடைக்கும்.
பக்கோடாக்கள் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் மிகவும் பிரபலம். இதற்கு ஒரு காரணம், அவை இரண்டு நாடுகளின் வானிலைக்கும் ஏற்றது. இதுவே காலப்போக்கில் பக்கோடா தயாரிப்பதில் பல வகைகள் தோன்றியதற்குக் காரணம்.
உருளைக்கிழங்கு, வெங்காயம் மட்டுமின்றி, தாமரை, வெள்ளரிக்காய், மீன் போன்றவற்றையும் கடலை மாவில் கலந்து பக்கோடாவாக செய்வார்கள்.
புஷ்பேஷ் பந்த் கூறுகையில், "முஸ்லிம்கள் இறைச்சியை மட்டுமே சாப்பிடுவார்கள் என்று நம்பப்படுகிறது. ஆனால் அவர்களின் இஃப்தார் உணவு அட்டவணை இது தவறு என்பதை நிரூபிக்கிறது. ஏனெனில், ரமலானின் போது, உணவு மேசையில் உருளைக்கிழங்கு சாட் மற்றும் சாட் பக்கோடாக்கள் கிடைக்கும். மேலும் உருளைக்கிழங்கு-வெங்காயம் பக்கோடாவும் கிடைக்கும். ஒருபுறம், அது காரமான சுவையை அளிக்கிறது. மறுபுறம், இது நோன்பு இருப்பவர்களின் உடலில் சோடியம் மற்றும் புரதத்தின் அளவையும் சமநிலையில் வைத்திருக்கிறது" என்றார்.
பாகிஸ்தான் பக்கோடாக்கள்

பட மூலாதாரம், UROOJ JAFRI
பாகிஸ்தானின் பிரபல சமையல் கலைஞரான ஜுபைதா அபா இப்போது உயிருடன் இல்லை. ஆனால், அவருடைய சமையல் கலை தந்திரங்கள் மற்றும் உணவு வகைகளை இன்னும் ஆயிரக்கணக்கானோர் தங்கள் சமையலறைகளில் பயன்படுத்துகின்றனர்.
அவரது மகள் ஷாஷா ஜாம்ஷெட் கூறுகையில், "அம்மா பக்கோடாவில் இனிப்பு சோடாவைப் பயன்படுத்துவார். அதனால் பக்கோடா மென்மையாகவும், லேசாகவும் இருந்தது. அது ரமலான் மாதமாக இருந்தாலும் சரி, மழைக்காலமாக இருந்தாலும் சரி, ஒருவர் தேநீர் மற்றும் பக்கோடாவுடன் அரட்டையடிக்கலாம், நோன்பு திறக்கலாம்” என்றார்.
பாகிஸ்தானில், ரமலான் மாதத்தில் ஒவ்வோர் இனிப்பு கடையிலும் பக்கோடா மற்றும் ஜிலேபி கிடைக்கும். உருளைக்கிழங்கு பக்கோடா பல தசாப்தங்களாக மக்களின் விருப்பத்தில் முதலிடத்தில் உள்ளது. இருப்பினும், ஒவ்வொரு நகரத்திற்கு ஏற்ப அதில் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.
பெஷாவரில், கீமா அல்லது சிக்கன் பக்கோடாக்களும் கிடைக்கின்றன. அதேபோல், கராச்சி, லாகூர் மற்றும் இஸ்லாமாபாத்தில் கோழி மற்றும் கடல் உணவுகளுடன் கூடிய பக்கோடாவும் கிடைக்கும்.

பட மூலாதாரம், UROOJ JAFRI
லாகூரைச் சேர்ந்த சமையல் கலைஞர் ஆயிஷா அலி பட் கூறுகையில், "பருப்பு மாவின் சுவை வித்தியாசமானது. ஆனால், மற்ற நாடுகளில் பக்கோடா மாவு மற்றும் அரிசி மாவு கலவையில் செய்யப்படுகிறது" என்றார்.
“பிரிவினை மூலம் இந்தியாவையும் பாகிஸ்தானையும் உருவாக்கியவர்களுக்கு அவமானம். அசாம் முதல் பஞ்சாப் சிந்து வரை, கேரளா முதல் காஷ்மீர் வரை எங்கு முஸ்லிம்கள் இருந்தார்களோ, அங்கெல்லாம் பக்கோடாக்களும் இருந்தன” என்கிறார் புஷ்பேஷ் பந்த்.
"ஒடிசாவிலும் வெங்காயத்தில் இருந்து தயாரிக்கப்படும் பியாஜி உள்ளது. அதேசமயம் வங்காளத்தில் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் கலந்து பைகுனி எனும் உணவு கிடைக்கும். தென்னிந்தியாவில் காய்கறிகளை பொடியாக நறுக்கி பாஜியா செய்யப்படுகிறது. பிகாரில் நிறுபருப்பை அரைத்துத் தயாரிக்கப்படுகிறது. காஷ்மீரில் வேகவைக்கப்பட்ட தாமரை, வெள்ளரி பக்கோடாக்கள் நாதிர் மோஞ்சி என்று அழைக்கப்படுகின்றன."
பிரிட்டனில் இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். எனவே பிரிட்டனிலும் பக்கோடாக்கள் மிகவும் பிரபலமாக உள்ளன.
லண்டனில் மழை பெய்யும் போதெல்லாம், பிபிசி உருது சேவையின் மூத்த சக ஊழியரான ராசா அலி அபிதி சாப், மத்திய லண்டனில் உள்ள டிரம்மண்ட் தெருவில் இருந்து கலவையான பக்கோடாக்களையும் ஜிலேபிகளையும் கொண்டு வருவார்.
பாகிஸ்தானியர்களும் இந்தியர்களும் உலகில் எங்கிருந்தாலும் பக்கோடா விருந்து இல்லாமல் ரமலான் அல்லது மழைக்காலத்தைக் கொண்டாடுவதில்லை.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












