விருதுநகர்: சிவகாசியை உள்ளடக்கிய 'கந்தக' பூமியில் மும்முனைப் போட்டி - முந்துவது யார்?

விருதுநகர் தொகுதி

பட மூலாதாரம், BBC/Radikaa Sarathkumar

    • எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
    • பதவி, பிபிசி தமிழ்

நாடாளுமன்ற தேர்தலில், தென் தமிழகத்தில் பலரும் உற்று நோக்கும் தொகுதியாக விருதுநகர் மாறியிருக்கிறது.

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளிலிருந்து காமராஜர், எம்.ஜி.ஆர் என இரண்டு முதலமைச்சர்களை தமிழ்நாடு பெற்றுள்ளது.

இம்முறை திரைப்பிரபலங்கள் ராதிகா சரத்குமார் மற்றும் தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் ஆகியோர் விருதுநகரில் போட்டியிடுவதால், சற்று எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

மேலும், காங்கிரஸ் சார்பில் இரண்டு முறை வெற்றிப் பெற்ற மாணிக்கம் தாகூர் போட்டியிடுகிறார்.

தமிழ்நாட்டின் குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் சிவகாசியை உள்ளடக்கிய நாடாளுமன்றத் தொகுதியான விருதுநகரில், விவசாயம் பேப்பர், தீப்பெட்டி சார்ந்த தொழிலாளர்களும் உள்ளனர்.

பட்டாசு தொழில் அல்லாது பிற துறை சார்ந்த உற்பத்தி நிறுவனங்கள் இல்லாத நிலையில், வேலை தேடி வெளியூருக்கு இளைஞர்கள் செல்லும் சூழல் நிலவுவதாக பிபிசியிடம் மக்கள் தெரிவித்தனர்.

கந்தக பூமியில் பரப்புரைகள் எப்படி நடக்கின்றன? மக்களின் மனதில் என்ன உள்ளது? விருந்துநகரில் மும்முனைப் போட்டியில் முந்துவது யார்?

விருதுநகர் தொகுதியின் தேர்தல் வரலாறு

விருதுநகர், நாடாளுமன்றத் தொகுதியாக 2009-ஆம் ஆண்டு மறுசீரமைப்புச் செய்யப்பட்டது. இதில் சிவகாசி, விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை என விருதுநகரின் 4 சட்டமன்றத் தொகுதியும், திருப்பரங்குன்றம், திருமங்கலம் என மதுரை மாவட்டத்தின் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளும் உள்ளன.

இதற்கு முன்பு இது சிவகாசி நாடாளுமன்றத் தொகுதியாக இருந்தபோது, 1961 முதல் 2004 வரையில் 11 மக்களவைத் தேர்தல்களை சந்தித்துள்ளது.

அதில் அதிமுக 4 முறையும், மதிமுக 3 முறையும், காங்கிரஸ், சுதந்திரா கட்சி, சிபிஐ ஆகிய கட்சிகள் தலா ஒரு முறை வெற்றி பெற்றிருக்கிறது.

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியாக மாற்றம் செய்யப்பட்ட பின்னர், 2009, 2014, 2019 என மூன்று முறை தேர்தல் நடைபெற்றுள்ளது. அதில் காங்கிரஸ் கட்சி 2009, 2019 ஆகிய இருமுறையும், அதிமுக ஒரு முறையும் வெற்றியை தன் வசப்படுத்தியுள்ளன.

விருதுநகர் தேர்தல்
படக்குறிப்பு, மாணிக்கம் தாகூர்

2019 தேர்தல் முடிவு என்ன?

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு விருதுநகர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் மாணிக்கம் தாகூர் போட்டியிட்டு 4 லட்சத்து 70 ஆயிரத்து 833 வாக்குகளைப் பெற்றார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக கூட்டணியின் தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி 3 லட்சத்து 16 ஆயிரத்து 329 வாக்குகளைப் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் 1 லட்சத்து 54 ஆயிரத்து 554 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தார்.

அமமுக வேட்பாளர் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று அதிமுகவின் தோல்வியில் முக்கிய பங்கு வகித்தார்.

பலமுறை இந்த தொகுதியை திமுக அதன் கூட்டணி கட்சிக்கே இந்த தொகுதியை ஒதுக்கியுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் நான்கு கட்சிகள் தனித்தனியாக களமிறங்கியது. அதில் திமுகவால் மூன்றாம் இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது.

விருதுநகர் தொகுதி
படக்குறிப்பு, படித்த இளைஞர்கள் மத்தியில் தனக்கு ஆதரவு இருப்பதாக கூறுகிறார் விஜய பிரபாகரன்

தொகுதியில் போட்டி எப்படி?

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி்யில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு மீண்டும் நான்காவது முறையாக மாணிக்கம் தாகூர் போட்டியிடுகிறார்.

அதிமுக கூட்டணியிலும் கடந்த முறையைப் போல் தேமுதிகவிற்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மறைந்த தேமுதிகவின் நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் மூத்தமகன் விஜயபிரபாகரன் போட்டியிடுகிறார். தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் சமீபத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைத்த சரத்குமாரின் மனைவியும் நடிகையுமான ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் கெளசிக் போட்டியிடுகிறார்.

ராதிகா சரத்குமார் 1989களில் இருந்து திராவிட கட்சிகளுக்கு நட்சத்திரப் பேச்சாளராக வாக்குகள் சேகரித்து இருக்கிறார். அதேபோல் விஜயகாந்த் உடல்நலன் குன்றிய போது அவரது மகன் விஜயபிரபாகரன், அரசியல் பரப்புரை செய்திருக்கிறார். ஆனால் இந்த இருவருமே வேட்பாளரக களமிறங்கும் முதல் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் முக்குலத்தோர், நாடார், தேவேந்திரகுல வேளாளர், சிறுபான்மையினர் என பல்வேறு சமூக மக்கள் வசிக்கின்றனர்.

விருதுநகர் மக்கள் வேட்பாளரை எந்த அடிப்படையில் தேர்வு செய்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள பிபிசி தமிழ் பல்வேறு தரப்பு மக்களிடம் பேசியது.

விருதுநகர் தேர்தல்
படக்குறிப்பு, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பவித்ரா

‘வாக்குறுதியை நிறைவேற்றவில்லை’

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பவித்ரா, “கடந்த சட்டமன்ற தேர்தலின் போது வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதாக சொன்ன ஆட்சியாளர்கள், இதுவரை எந்த வேலைவாய்ப்பையும் உருவாக்கவில்லை. நான் 12ஆம் வகுப்பு படித்திருக்கிறேன். எனக்கு சரியான வேலை கிடைக்காததால், சாலை ஓரத்தில் பூ வியாபாரம் செய்து வருகிறேன். தமிழ்நாடு அரசு கொடுத்த மகளிர் உரிமைத் தொகை எங்கள் பகுதியில் சிலருக்கு மட்டுமே கிடைத்தது, எனக்கு அது கிடைக்கவில்லை. இலவச பஸ் பயணம் என்று சொன்னாலும், போக்குவரத்து கழக ஊழியர்கள் கடுமையாக நடந்து கொள்கின்றனர். அதனால் இம்முறை புதிய நபர்களுக்கு வாக்களிக்க திட்டமிட்டுள்ளேன்,” என்றார் பவித்ரா.

தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள மாணிக்கம் தாகூர் தன்னுடைய தொகுதியில் வளர்ச்சிப் பணிகளை செய்யவில்லை என்பதால் இளைஞருக்கு வாக்களிக்க திட்டமிட்டுள்ளதாக திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் பிபிசியிடம் கூறினார்.

“காங்கிரஸ் சார்பாக 10 ஆண்டுகளாக மாணிக்கம் தாகூர் எம்பியாக இருந்தும் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கு என்ன பணிகளை செய்தார் எனத் தெரியவில்லை. அதனால் இம்முறை வேறு நபருக்கு வாக்களிக்க உள்ளேன்.”

“மாணிக்கம் தாகூர், பழைய எம்.பி. அவர் தன்னால் முடிந்த பணிகளை தொகுதியில் செய்து இருக்கிறார். விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரனுக்கு அவர் சார்ந்த சமூக வாக்குகளும், தந்தை இறந்ததால் கிடைக்கும் அனுதாப வாக்குகளும் பலமாக இருக்கிறது. ஆனால் ராதிகா சரத்குமாருக்கு அப்படி கிடையாது, அவர் வெளியூரைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு போட்டி கடுமையாக இருக்கும்,” என்கிறார் விருதுநகரை சேர்ந்த முருகேசன்.

விருதுநகர் தேர்தல்
படக்குறிப்பு, முருகேசன்

பட்டாசு தொழிலாளர்களின் எதிர்பார்ப்பு என்ன?

பட்டாசுத் தொழிற்சாலையில் நிலை கடந்த 10 ஆண்டுகளில் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது. குறிப்பாக பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் பேரியம் நைட்ரேட்டிற்கு தடை, சரவெடிக்குத் தடை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியிலிருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்காததால் இந்த துறை கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது என்கிறார் சிவகாசியைச் சேர்ந்த பட்டாசுத் தொழிலாளர் சுரேஷ்குமார்.

”எங்கள் தொகுதி எம்.பி. இது குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். ஆனால் மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் பட்டாசு தொழிலை நம்பியுள்ள இந்த பகுதி பின்தங்கியுள்ளது.”

சிவகாசியை சுற்றி 1087 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. விருதுநகரின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் உச்சநீதிமன்றத்தில் பட்டாசு ஆலை தொடர்பான வழக்கு விசாரணையில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால், கடந்த 10 ஆண்டுகளாக இந்த துறை கடும் நெருக்கடியை சந்தித்து வருவதாக பிபிசியிடம் கூறினார், பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த முருகன்.

"உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் அடிப்படையில் பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. மேலும் பேரியம் நைட்ரேட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் 80% பட்டாசுகளை எங்களால் உற்பத்தி செய்ய முடியவில்லை. இதுபோன்ற தடையால் பட்டாசு ஆலைகள் சிக்கலில் உள்ளன. இதனால் சில இடங்களில் சட்டவிரோதமாக பட்டாசு ஆலைகள் இயக்கப்பட்டு விபத்து நேரிடுகிறது."

பட்டாசு ஆலைகள் விதிமீறலில் ஈடுபட்டதாக இதுவரை 121 ஆலைகள் மூடப்பட்டதால், அதில் பணியாற்ற பலநூறு தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்கின்றனர். இதுவே பட்டாசு ஆலை தொழிலாளர்களின் முக்கிய பிரச்னை என்று தெரிவித்தார் முருகன்.

தொடர்ந்து பேசிய அவர், "விருதுநகரில் இருந்து தேர்வாகும் எம்.பி. சிவகாசிக்கு ஒரு பல்நோக்கு மருத்துவமனை கொண்டு வரவேண்டும். இப்போது பட்டாசு விபத்தில் தீக்காயம் ஏற்பட்டால், உயர் சிகிச்சைக்கு மதுரைக்கு அழைத்துச் செல்லவேண்டிய சூழல் உள்ளது," என்று கூறினார்.

விருதுநகர் தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

'பட்டாசு ஏற்றுமதி தடையை நீக்க வேண்டும்'

விருதுநகரில் பட்டாசு தொழிலில் நம்பி நேரடியாக மூன்று லட்சம் பேரும் மறைமுகமாக ஐந்து லட்சம் பேரும் உள்ளனர். இதில் 55 சதவீதம் பேர் பெண் தொழிலாளர்கள். இவர்களில் பெரும்பாலானோர் கல்வியில் பின்தங்கியவர்கள் என்பதால் பட்டாசு தொழிலை நம்பி வாழ்க்கை நடத்தி வருகின்றனர். பட்டாசு தொடர்பாக கடுமையாக விதிகள் அமலில் இருந்தாலும், பசுமை பட்டாசு உற்பத்தி செய்யலாம் என மத்திய அரசு கூறியதால் இந்த தொழில் பாதுகாக்கப்பட்டுள்ளது என்று பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் கணேசன் தெரிவித்தார்.

"பட்டாசு ஏற்றுமதி செய்வதில் கடும் பிரச்னை நிலவி வருகிறது. எங்களது நிறுவனத்தின் அயல்நாட்டு கடைகளுக்கு கூட பட்டாசுகளை ஏற்றி செல்ல இயலவில்லை. கப்பல்களின் 14ஜி அட்டவணையில் பட்டாசு வருவதால் அதனை ஏற்றிச்செல்ல அனுமதி மறுக்கின்றனர். மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்தும் பட்டாசை ஏற்றுமதி செய்ய இயலவில்லை. இதற்கு உறுதியான நடவடிக்கையை செய்யவேண்டும் என எங்கள் தொகுதி எம்பியிடம் எதிர்பார்க்கிறோம்," என்றார்.

விருதுநகர் தேர்தல்
படக்குறிப்பு, எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் தேர்தலில் எதிரொலிக்கும் என்கிறார் மாணிக்கம் தாகூர்.

தேர்தல் களம் எப்படி இருக்கிறது?

வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், விருதுநகர் தொகுதியில் பரப்புரையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தன.

பரப்புரைக்கு நடுவே கிடைத்த இடைவெளியின் போது பிபிசி தமிழிடம் பேசினார், விருதுநகர் எம்.பியும் காங்கிரஸ் வேட்பாளருமான மாணிக்கம் தாகூர்.

மதுரை விமான நிலைய விரிவாக்கம், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம், இரவு நேர விமான சேவைக்கு அனுமதி என விருதுநகர் தொகுதிக்கான திட்டங்களில் மத்திய அரசின் செயல்பாடுகளை முன்வைத்து தனது பிரச்சாரத்தை செய்து வருவதாக அவர் கூறினார்.

"மத்திய அரசு, விருதுநகர் தொகுதியை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் பார்ப்பதை மக்களிடம் எடுத்து செல்கிறேன். கட்டப்படாத எய்ம்ஸ் மருத்துவமனை, ஜிஎஸ்டி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள தீப்பெட்டித் தொழிற்சாலை, ஏற்றமதியில்லாததால் பாதிக்கபட்ட பட்டாசு தொழில், விருதுநகருக்கு 2000 கோடியில் அறிவிக்கப்பட்ட கைத்தறி பூங்காவிற்கு 50 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்திருப்பது போன்ற பிரச்னைகளை எடுத்துக்கூறி மத்திய அரசு அணுகுமுறையை மக்களிடம் கொண்டு சென்று வாக்கு சேகரிக்கிறேன்."

அதிமுக, தேமுதிக கூட்டணி வலிமையானதாக இருப்பதாக பார்க்கப்படுகிறது. பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரதமரே பரப்புரை செய்கிறார். ஆனாலும் அவர்களுக்கிடையே இரண்டாம் இடத்துக்கான போட்டி தான் நடைபெற்று வருகிறது, என்றார் மாணிக்கம் தாகூர்.

விஜயபிரபாகரன்
படக்குறிப்பு, விஜயபிரபாகரன்

விஜயபிரபாகரன் என்ன செய்கிறார்?

அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பாக முதல்முறையாக களம் காணும் விஜயபிரபாகரன், அந்த கட்சியின் சார்பாக தமிழ்நாடு முழுவதும் நிர்வாகிகளையும், மக்களையும் சந்திக்க பயணம் மேற்கொண்டு இருந்தாலும், தனக்காக வாக்கு சேகரிக்க தொகுதியை வலம் வருகிறார்.

அண்மையில் இவரின் தந்தையும், நடிகரும் முன்னாள் எதிர்கட்சி தலைவரான விஜயகாந்த் மறைவுக்கு பிறகு போட்டியிடும் விஜயபிரபாகரனிடன் பிபிசி தமிழ் பேசியது.

"மற்றவர்களுக்காக இதுவரை பரப்புரை செய்திருக்கிறேன். இப்போது வேட்பாளராக தினசரி 40 முதல் 50 கிராமங்களுக்குச் சென்று வாக்குகளை சேகரிக்கிறேன். கடினமாக இருந்தாலும், மக்கள் என்னை புன்னகையுடன் வரவேற்கிறார்கள்," என்றார்.

பட்டாசு தொழிற்சாலை பிரச்னை, சாலை, குடிநீர் வசதி போன்ற குறைகளை வாக்கு சேகரிக்கும் போது மக்கள் தன்னிடம் முன்வைப்பதாகவும், இவை அனைத்தும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரால் சரிசெய்யக் கூடிய பிரச்னை என்பதால் வெற்றி பெற்று இந்த குறைகளை களைவேன் என்று விஜயபிரபாகரன் தெரிவித்தார்.

“பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. தேர்தல் களம் என்பது யாரையும் தாழ்த்தி பேசக் கூடாது. ஒவ்வொருவரும் தங்கள் வியூகத்தை பின்பற்றி தேர்தலை சந்திக்கின்றனர். இங்கே நான்கு கட்சிகளும் ஒருவருக்கொருவர் போட்டியிட்டு வருகின்றனர். காங்கிரஸ் வேட்பாளர் இரண்டு முறை தேர்வு செய்தும் ஏதும் செய்யவில்லை என மக்கள் மத்தியில் கருத்து உள்ளது. எனக்கு படித்த இளைஞர்கள் மத்தியில் ஆதரவு அதிகமாக உள்ளது".

விருதுநகர் தொகுதி
படக்குறிப்பு, ராதிகாவை ஆதரித்துப் பிரசாரம் செய்யும் சரத்குமார்

ராதிகா சரத்குமாருக்கு என்ன சவால்?

பிரதமர் நரேந்திர மோதியின் ஆட்சியில் செய்த சாதனைகளை சொல்லி பாஜக வாக்குகளை சேகரித்து வருவதாக பாஜகவில் அண்மையில் இணைந்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் ராதிகா சரத்குமார் கூறினார்.

"இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்று கூட இதுவரை தெரியவில்லை. அதிமுக இதற்கு நடுவில் ஏன் போட்டியிடுகிறது என்றும் தெரியவில்லை. சிவகாசி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பல பிரச்னைகளை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தீர்த்து வைத்திருக்கின்றனர். ஒரு நடிகையாக மட்டுமில்லாமல், தொழில் முனைவோராகவும் நான் இருந்திருக்கிறேன். இந்த தொகுதி பெண்கள் என்னிடம் அரசு அளிக்கும் பணம் வேண்டாம், நிரந்தரமான வேலை வேண்டும்," என கேட்பதாக ராதிகா தெரிவித்தார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)