தேர்தல் நேரத்தில் வரிசை கட்டும் இந்துத்துவா படங்கள் - வாக்களிக்கும் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

இந்துத்துவா படங்கள், பாஜக, தமிழ் திரைப்படங்கள், திராவிட இயக்கம்

பட மூலாதாரம், ADAH SHARMA/TWITTER

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

கடந்த சில ஆண்டுகளில் இந்துத்துவக் கட்சிகளின் கருத்துகளை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், இப்போது அந்த எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருக்கிறது. இந்தத் திரைப்படங்களால் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா?

கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிய போது வெளிவந்த இரண்டு திரைப்படங்கள், பெரும் சலசலப்பை ஏற்படுத்தின. நாடாளுமன்றத் தேர்தலுக்கு மூன்று மாதங்கள் இருந்த நிலையில், விஜய் குட்டே இயக்கிய ‘The Accidental Prime Minister’ என்ற திரைப்படம் வெளியானது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து, அவரது ஊடக ஆலோசகராக இருந்த சஞ்சய் பாரு எழுதிய புத்தகத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது. மன்மோகன் சிங்கை, காங்கிரஸ் கட்சித் தலைமை ஆட்டிப்படைத்தது என்ற சித்திரத்தை இந்த படம் உருவாக்கியது.

அதே நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நெருங்கிய நிலையில், ‘The Tashkent Files – Who Killed Shastri?’ என்ற திரைப்படம் வெளியானது. விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய இந்தப் படம், இந்தியாவின் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் மரணம் குறித்து சந்தேகங்களை எழுப்பியது. ஆனால், இந்தப் படம் மிக மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டது.

இந்த இரண்டு படங்களும் மத்தியில் ஆட்சியில் இருந்த பா.ஜ.க-வின் எதிர் தரப்பான காங்கிரஸ் கட்சியை குறிவைத்தே உருவாக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்துத்துவா படங்கள், பாஜக, தமிழ் திரைப்படங்கள், திராவிட இயக்கம்

பட மூலாதாரம், SPICE PR

கடந்த ஆண்டில் மூன்று படங்கள்

தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், மீண்டும் இதே பாணியிலான படங்கள் கடந்த ஆண்டிலிருந்து வெளியாக ஆரம்பித்தன. கடந்த ஆண்டில் மட்டும் இதுபோன்ற மூன்று படங்கள் வெளியாகின.

‘தி கேரளா ஸ்டோரி’ (The Kerala Story): செவிலியராக விரும்பும் ஒரு கேரளப் பெண், இஸ்லாமியராக மதம் மாறி பிறகு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் சேர்ந்து ஆப்கன் சிறையில் அடைபடுவதாகக் காட்டியது. இந்தப் படத்திற்கு கேரளாவில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழங்கும் தொடரப்பட்ட நிலையில், இதில் தெரிவிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் சரியானவையல்ல என படக்குழு கூறியது. கடந்த ஆண்டு மே மாதம் வெளியான இந்தப் படத்தை இயக்கியவர் சுதிப்தோ சென். இந்தப் படத்தை பாரதிய ஜனதா கட்சியினர் வெகுவாக விளம்பரப்படுத்தினர்.

‘தி கஷ்மீர் ஃபைல்ஸ்’ (The Kashmir Files): 1990-இல் காஷ்மீரிலிருந்து இந்து பண்டிட்கள் வெளியேறியதை, ஒரு இன அழிப்பு நடவடிக்கையாகக் காட்டியது. இந்தப் படத்தை இயக்கியதும் விவேக் அக்னிஹோத்ரி தான். இந்தப் படத்தையும் பா.ஜ.க வெகுவாக ஆதரித்தது. இப்படம் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொணர்ந்ததாக அக்கட்சி கூறியது. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இந்தப் படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது. இந்தப் படம் 2022-ஆம் ஆண்டு மார்ச் 11-ஆம் தேதி வெளியானது. இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்துத்துவா படங்கள், பாஜக, தமிழ் திரைப்படங்கள், திராவிட இயக்கம்

பட மூலாதாரம், X/Pen Movies

‘தி வேக்சின் வார்’ (The Vaccine War): இதுவும் விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய படம்தான். இந்தியாவில் கோவிட் தொற்றுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பது குறித்த கதை. ஒரு திரைப்படம் என்ற வகையில் பார்க்கத்தக்கதாக இருந்தாலும், அரசின் பிரச்சாரப் படத்தைப் போல இந்தப் படம் அமைந்திருந்ததாக விமர்சகர்கள் கடுமையாக குற்றம்சாட்டினார்கள். இது கடந்த ஆண்டு செப்டம்பர் 23-ஆம் தேதியன்று வெளியானது.

இந்த மூன்று படங்களில் ‘தி கேரளா ஸ்டோரி’, மற்றும் ‘தி கஷ்மீர் ஃபைல்ஸ்’ ஆகிய படங்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தின. ‘தி கேரளா ஸ்டோரி’ படம் கேரள மாநிலத்தை மிக மோசமாக சித்தரிப்பதாகக் கூறி கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டது. இப்படத்திற்கு எதிராக வழக்குகளும் தொடரப்பட்டன.

நீளும் இந்துத்துவப் படங்களின் பட்டியல்

இதை தொடர்ந்து இந்த ஆண்டு ஜனவரியிலிருந்து, இந்துத்துவப் பார்வை கொண்ட பல படங்கள் மீண்டும் வெளியாக ஆரம்பித்திருக்கின்றன.

அப்படி வெளிவந்த சில படங்களின் பட்டியல் இது.

‘ஸ்வதந்த்ரா வீர் சாவர்க்கர்’ (Swatantra Veer Savarkar): சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் வகையில் உருவாக்கப்பட்ட திரைப்படம் இது. ரன்தீப் ஹூடா இயக்கிய இந்தப் படத்தில் அவரே சாவர்க்கராக நடித்திருந்தார். இந்தப் படம் மார்ச் 22-ஆம் தேதி வெளியானது. வரலாற்றுத் தகவல்கள் இந்துத்துவப் பார்வையில் திரித்துச் சொல்லப்பட்டதாக இந்தப் படம் மீது விமர்சனங்கள் எழுந்தன.

இந்துத்துவா படங்கள், பாஜக, தமிழ் திரைப்படங்கள், திராவிட இயக்கம்

பட மூலாதாரம், X/Randeep Hooda

‘ஜே.என்.யூ: ஜஹாங்கீர் நேஷனல் யூனிவர்சிட்டி’ (JNU: Jahangir National University): ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தை குறிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்தப் படத்தை வினய் சர்மா இயக்கியிருந்தார். ஊர்வசி ரௌட்டாலா, சித்தார்த் போட்கே, விஜய் ராஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

இடதுசாரிகள் ஆதிக்கம் செலுத்தும் ஒரு பல்கலைக்கழகத்தில், வலதுசாரி மாணவர் ஒருவர் அவர்களை எதிர்ப்பது போல உருவாக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தின் இந்தப் படத்தின் போஸ்டர் வெளியான போதே கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. இப்படம் முதலில் ஏப்ரல் ஐந்தாம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது வெளியீடு ஏப்ரல் 22-ஆம் தேதிக்கு தள்ளிப் போடப்பட்டிருக்கிறது.

இந்துத்துவா படங்கள், பாஜக, தமிழ் திரைப்படங்கள், திராவிட இயக்கம்

பட மூலாதாரம், X/taran adarsh

‘ஆர்ட்டிக்கிள் 370’ (Article 370): ஆதித்ய சுஹாஸ் ஜம்பாலே இந்தப் படத்தை இயக்கியிருந்தார். யாமி கௌதம், பிரியாமணி, அருண் கோவில் ஆகியோர் இதில் நடித்திருந்தார்கள்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவு நீக்கப்பட்டதைப் பற்றிய இந்தப் படம். காஷ்மீர் குறித்த பா.ஜ.கவின் நிலைப்பாட்டை ஒட்டி உருவாக்கப்பட்டிருந்தது. இப்படம் கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி வெளியானது.

இந்துத்துவா படங்கள், பாஜக, தமிழ் திரைப்படங்கள், திராவிட இயக்கம்

பட மூலாதாரம், X/Jio Studios

‘மேய்ன் அடல் ஹூன்’ (Main Atal Hoon): இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயியின் வாழ்க்கைக் கதையைச் சொல்வதாக உருவாக்கப்பட்ட இந்தப் படத்தை ரவி ஜாதவ் இயக்கியிருந்தார். வாஜ்பாயியாக பங்கஜ் த்ரிபாதி நடித்திருந்தார்.

ஜனவரி கடந்த 19-ஆம் தேதி இந்தப் படம் வெளியானது. சுமார் ரூ.20 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்தப் படம், திரையரங்குகளில் ரூ8.5 கோடி ரூபாயை மட்டுமே வசூல் செய்தது.

இந்துத்துவா படங்கள், பாஜக, தமிழ் திரைப்படங்கள், திராவிட இயக்கம்

பட மூலாதாரம், X/Komal Nahta

‘ரஜாக்கர்’ (Razakar): யதா சத்யநாராயணா இயக்கத்தில் பாபி சிம்ஹா, தேஜ் சப்ரூ, வேதிகா ஆகியோர் நடித்திருந்த இந்தப் படம், இந்தியா சுதந்திரம் அடைந்த தருணத்தில் நிஜாம் ஆட்சி செய்த ஹதராபாத் சமஸ்தானத்தில் நடந்த சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

மார்ச் 15-ஆம் தேதி வெளியான இந்தத் தெலுங்குப் படம், அந்த நிகழ்வுகளை இந்துத்துவப் பார்வையில் சொல்வதாக விமர்சிக்கப்பட்டது.

இந்துத்துவா படங்கள், பாஜக, தமிழ் திரைப்படங்கள், திராவிட இயக்கம்

பட மூலாதாரம், X/ Samarveer Creations

இந்துத்துவா படங்கள், பாஜக, தமிழ் திரைப்படங்கள், திராவிட இயக்கம்

பட மூலாதாரம், X/Ramesh Bala

‘ஆக்சிடன்ட் ஆர் கான்ஸ்பிரசி: கோத்ரா’ (Accident or Conspiracy: Godhra): குஜராத்தில் 2002-ஆம் ஆண்டு நடந்த கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் எம்.கே. சிவாக்ஷ். கோத்ரா குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நானாவதி கமிஷனின் அறிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக சொல்லப்படும் படம் இது.

கோத்ரா ரயில் எரிப்பு, இஸ்லாமியர்கள் ரயிலைத் தாக்கியதால் நடந்த சம்பவம் என்ற முடிவுக்கு நானாவதி கமிஷன் கூறியிருந்தது. கடந்த மார்ச் மாதம் இந்தப் படம் வெளியானது.

மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய ‘தி கேரளா ஸ்டோரி’

இதுபோன்ற படங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் நிலையில், கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி, சர்ச்சைக்குள்ளான ‘தி கேரளா ஸ்டோரி’ (The Kerala Story) திரைப்படம் இந்தியாவின் அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் வெளியிடப்பட்டது.

இதற்கான அறிவிப்பு வெளியானபோது, அதை கேரள முதல்வர் பினராயி விஜயன் கடுமையாக எதிர்ப்பைத் தெரிவித்திந்தார்.

இந்துத்துவா படங்கள், பாஜக, தமிழ் திரைப்படங்கள், திராவிட இயக்கம்

பட மூலாதாரம், X/Pinarayi Vijayan

எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருந்த எதிர்ப்பில் ‘தேர்தலுக்கு முன்பாக, வகுப்புவாத பதற்றத்தை ஏற்படுத்தும் இந்தப் படத்தைத் திரையிடுவதன் மூலம், தேசிய தொலைக்காட்சி பா.ஜ.க-வின் பிரசார ஊதுகுழலாகிவிடக்கூடாது’ எனக் கூறியிருந்தார் பினராயி விஜயன்.

இந்துத்துவா படங்கள், பாஜக, தமிழ் திரைப்படங்கள், திராவிட இயக்கம்

பட மூலாதாரம், Aleph Book Company

படக்குறிப்பு, தியோடர் பாஸ்கரன்

திரைப்படங்கள் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

உலகம் முழுவதுமே திரைப்படங்களைப் பிரசாரத்திற்காகப் பயன்படுத்துவது நடந்துவந்திருக்கிறது. இந்தியாவில், சினிமாவை வெற்றிகரமான பிரசார வாகனமாக, தங்கள் வளர்ச்சிக்கான வாகனமாக திராவிட இயக்கம் பயன்படுத்தியிருக்கிறது.

ஆனால், தேர்தலுக்கு நெருக்கமாக வெளிவந்திருக்கும், வெளிவரவிருக்கும் திரைப்படங்கள், தேர்தலில் எந்த அளவுக்குப் பலனளிக்கும் என்ற கேள்வியும் இருக்கிறது.

தமிழ்த் திரைப்படங்களை நீண்ட காலமாக ஆய்வுசெய்து வருபவரும், ‘தி ஐ ஆஃப் தி செர்பண்ட்’ (The Eye of the Serpent) என்ற தலைப்பில் தமிழ் திரைப்படங்களின் வரலாற்று நூலை எழுதியவருமான தியோடர் பாஸ்கரன், இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசினார்.

அவர், திரைப்படங்கள் தேர்தலில் உடனடியாகத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனவா என்பதை அளக்க எந்த வழிமுறையும் இல்லை, என்கிறார். “ஆகவே, திரைப்படங்களை வெளியிட்டு தேர்தலில் ஒரு அரசியல் கட்சியால் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா என்பது சந்தேகம்தான்," என்கிறார்.

இந்துத்துவா படங்கள், பாஜக, தமிழ் திரைப்படங்கள், திராவிட இயக்கம்
படக்குறிப்பு, 1952-இல் வெளிவந்த 'பராசக்தி' திரைப்படம்

தமிழில் வெளிவந்த திராவிட இயக்கப் படங்கள்

1940-களின் இறுதியிலும் 1950-களிலும் பெரும் எண்ணிக்கையில் திராவிட இயக்கக் கருத்துகளை முன்னிறுத்தும் திரைப்படங்கள் தமிழில் வெளிவந்தன. திராவிட இயக்க மூத்த தலைவரான சி.என். அண்ணாதுரை தான் திரைக்கதை வசனம் எழுதிய ‘நல்லதம்பி’, ‘ஓர் இரவு’ போன்ற படங்களில் சில சமூக சீர்திருத்தக் கருத்துகளை முன்வைத்தார்.

அதற்குப் பிறகு மிக வெற்றிகரமான திரைப்படக் கதாசிரியராக விளங்கிய மு.கருணாநிதியின் ஆரம்ப காலப் படங்களின் வசனங்களில் திராவிட இயக்கச் சாய்வு தென்பட்டது.

அதற்குப் பிறகு வெளிவந்த ‘மந்திரிகுமாரி’, ‘பொன்முடி’ ஆகியவற்றில் வெளிப்படையாகவே திராவிடக் கொள்கைகள் பேசப்பட்டன. இதன் உச்சக்கட்டமாக, 1952-இல் வெளிவந்த 'பராசக்தி' அமைந்தது.

இதற்குப் பிறகு, ‘மலைக்கள்ளன்’, ‘பணம்’, ‘மனோகரா’ ஆகிய படங்கள் வெளிவந்தன. இந்த நிலையில், 1957-இல் நடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட முடிவுசெய்த தி.மு.க, அந்தத் தேர்தலில் சட்டமன்றத்தில் 15 இடங்களைப் பிடித்ததோடு, நாடாளுமன்றத்தில் இரு இடங்களிலும் வெற்றிபெற்றது.

ஆனால், தி.மு.கவைப் பொறுத்தவரை சினிமாவைப் பயன்படுத்திக் கொண்டது என்பதைவிட, சினிமா நட்சத்திரங்களைப் பயன்படுத்திக் கொண்டது என்பதுதான் சரி என்கிறார் தியோடர் பாஸ்கரன். "திராவிட திரைப்படங்களில் பல பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்கும். அதே நேரம் புரட்சிகரமான வசனங்களும் இருக்கும். ஆகவே இவை பிரபலமடைந்தன. ஆனால், கட்சி வளர்ந்ததற்கு காரணம் நட்சத்திரங்கள்தான். ஒரு கட்டத்தில் நட்சத்திரங்கள் கிராம தெய்வங்களுக்கு இணையாக கருதப்பட்டனர்," என்கிறார் அவர்.

இந்துத்துவா படங்கள், பாஜக, தமிழ் திரைப்படங்கள், திராவிட இயக்கம்

பட மூலாதாரம், Faceboook/Subagunarajan V M S

படக்குறிப்பு, சுபகுணராஜன்

‘திராவிடப் படங்கள் பிராமணர்களை வில்லன்களாகச் சித்தரிக்கவில்லை’

ஆனால், இந்துத்துவத் திரைப்படங்களுக்கும் திராவிட இயக்க படங்களுக்கும் மிக முக்கியமான வித்தியாசம் இருக்கிறது என்கிறார் திரைப்பட ஆய்வாளரும் 'திராவிட சினிமா' நூலை எழுதியவருமான சுபகுணராஜன்.

"திராவிட இயக்கம் பிராமண எதிர்ப்பைத் தனது சித்தாந்தத்தின் ஒரு முக்கியப் பகுதியாக வைத்திருந்தது. ஆனால், திராவிட இயக்கத் திரைப்படங்களில் பிராமணர்களே கிடையாது. பிராமண நம்பிக்கைகள் கேள்விக்கு உட்படுத்தப்படுமே தவிர, நேரடியாக பிராமணர்கள் வரமாட்டார்கள். மூட நம்பிக்கை குறித்து கேள்வியெழுப்பப்படும். ஆனால், வில்லன்களாக பிராமணர்கள் காட்டப்பட மாட்டார்கள். ஒரு தலைமைக் குரு வில்லனாக இருப்பார். ஆனால், அவரிடம் பிராமண சின்னங்கள் இருக்காது. ஒரு ஆளையோ, ஒரு சமூகத்தையோ எதிரியாகக் காட்டி, அந்தச் சமூகத்திற்கு எதிராக மற்றவர்களைத் திரட்ட மாட்டார்கள்," என்கிறார் சுபகுணராஜன்.

ஆனால், இந்துத்துவ சினிமாவைப் பொறுத்தவரை சில மதத்தினரை, சில சமூகத்தினரை இந்தியாவுக்கு எதிரானவர்களாக குற்றம்சாட்டுகிறது என்கிறார் அவர்.

"திராவிட இயக்க சினிமாவில் ஒரு நேர்மறைத் தன்மை இருந்தது. அந்தப் படத்தைப் பார்ப்பவர்கள் யாரும் அதில் சொல்லவரும் விஷயத்தைப் பார்த்துப் பதறிப்போக மாட்டார்கள். ஆனால், இப்போது வரும் இந்தத் திரைப்படங்கள் மிகப் பிற்போக்கானதாக இருக்கின்றன. இந்தியாவிற்குள்ளேயே சிலரை விரோதியாக அடையாளம் காட்டுகிறார்கள். சமூகப் பிளவைக் கட்டமைக்க நினைக்கிறார்கள். ‘தி கேரளா ஸ்டோரி’ போன்ற படங்களைப் பார்த்து, பதறாமல் இருக்க முடியாது. அதுதான் மிக முக்கியமான விஷயம்," என்கிறார் அவர்.

‘தமிழ் படங்கள் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை’

ஆனால், தொடர்ந்து வெளிவந்த இந்துத்துவத் திரைப்படங்களில் தி காஷ்மீர் பைல்ஸ், கேரளா ஸ்டோரி ஆகிய படங்களைத் தவிர, பிற படங்களால் நாடு தழுவிய அளவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்த முடியவில்லை.

எப்படியாயினும், இந்தத் திரைப்படங்கள் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்கிறார் திரைப்பட விமர்சகரான ராம்கி.

"இந்தியில் மட்டுமல்ல, தெலுங்கிலும் நிறைய இந்துத்துவக் கருத்துகளைக் கொண்ட படங்கள் வெளிவந்தன. கடந்த 1990-களில் தமிழில் வெளிவந்த திரைப்படங்கள் பலவற்றில் இஸ்லாமியர்களைத்தான் தீவிரவாதிகளாகக் காட்டுவார்கள். ஆனால், அவையெல்லாம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. வட மாநிலங்களில் பாகிஸ்தான் குறித்த தீவிரமான கருத்துகள் இருப்பதால், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ போன்ற படங்கள் சலசலப்பை ஏற்படுத்தலாம். ஆனால், பெரிதாக எதுவும் நடக்காது," என்கிறார் ராம்கி.

இதே கருத்தை எதிரொலிக்கிறார் திரைப்பட ஆய்வாளரும் இயக்குநருமான அம்ஷன் குமார். "பராசக்தி வெளிவந்தபோது இந்தியா முழுவதுமே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் மத சார்பின்மை, மூட நம்பிக்கை ஒழிப்பு போன்ற கருத்துகளை வலியுறுத்தியதில் முக்கியப் பங்கிருக்கிறது. ஆனால், அப்படம் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தியதாகச் சொல்ல முடியாது," என்கிறார் அவர்.

இந்துத்துவா படங்கள், பாஜக, தமிழ் திரைப்படங்கள், திராவிட இயக்கம்

பட மூலாதாரம், FACEBOOK/மாலன்

படக்குறிப்பு, மாலன்

‘அரசியல் படம் எடுக்க சிறந்த இயக்குநர்கள் தேவை’

தியோடர் பாஸ்கரன், ஆவேசமான, ஆத்திரமான சித்தரிப்புகளால் ஒருவர் விரும்பும் கருத்தைப் பரப்பவே முடியாது என்கிறார்.

"திரைப்படத்தை அரசியலுக்குப் பயன்படுத்த, ஒருவர் மிகச் சிறந்த திரைப்பட இயக்குநராக இருக்க வேண்டும். ஆனால், அப்படியான இயக்குநர்கள் மிக அரிதானவர்கள். ஆத்திரமான, ஆவேசமான சித்தரிப்புகளால் ஒரு கருத்தைப் பரப்பவே முடியாது. ஒரு சிந்தனையை பரப்ப நினைத்தால், அந்த சிந்தனையை படம் தீவிரமாக முன்வைக்க வேண்டும்.

'அர்த் சத்யா' (1893-ஆம் அண்டு வெளிவந்த இந்திப்படம்) போன்ற படங்களில் அவை இருந்தன. தமிழில் வெளிவந்த 'தண்ணீர் தண்ணீர்', ‘ஒரே ஒரு கிராமத்திலே’ போன்ற படங்களை அரசியல் படங்களாகச் சொல்ல முடியும். இப்போது வரும் படங்களைப் பொறுத்தவரை, எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் எனச் சொல்வது கடினம்," என்கிறார் தியோடர் பாஸ்கரன்.

மூத்த பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான மாலன், ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்டுகிறார்.

"கடந்த 1996-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் வழங்கப்பட்டது. இதனால், அப்போது தூர்தர்ஷனில் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில்கூட, யாரும் சைக்கிளில் பாட்டுப்பாடி கொண்டு வருவது போன்ற காட்சிகளைக்கூட போட மாட்டார்கள். இப்போது அரசியல் தலைவர்களின் சிலைகளைக் கூட மூடிவைக்கிறார்கள். இந்தத் தருணத்தில் தூர்தர்ஷன், ‘தி கேரளா ஸ்டோரி’-யை ஒளிபரப்ப போவதாகச் சொல்வது ஆச்சரியமளிக்கிறது," என்கிறார் அவர்.

இந்துத்துவத் திரைப்படங்களில் ‘தி கஷ்மீர் ஃபைல்ஸ்’ (The Kashmir Files) திரைப்படம் வசூல் ரீதியாக பெரும் வெற்றிபெற்றது. ‘தி கேரளா ஸ்டோரி’ (The Kerala Story) பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால், மற்ற படங்களைப் பொறுத்தவரை, அந்தப் படங்கள் வெளியான போது சலசலப்புகள் ஏற்பட்டன. ஆனால், அவரை வர்த்தக ரீதியாக வரவேற்பைப் பெறவில்லை.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)