மயிலாடுதுறை, அரியலூரில் தென்பட்டது ஒரே சிறுத்தையா? இருவேறு சிறுத்தைகளா?

பட மூலாதாரம், HANDOUT
- எழுதியவர், மாயகிருஷ்ணன் க
- பதவி, பிபிசி தமிழுக்காக
மயிலாடுதுறையைத் தொடர்ந்து தற்போது அரியலூரிலும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், காடுகளோ, மலைகளோ இல்லாத விவசாய நிலப்பரப்பைக் கொண்ட பகுதி. அங்கு காட்டுயிர்களோ, மனிதர்களுக்கு அபாயத்தை விளைவிக்க வல்ல விலங்குகளோ இல்லை.
ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதி இரவில் மயிலாடுதுறை நகர்ப்புறத்தில் சிறுத்தை ஒன்று தென்பட்டது, சுதாரித்துக் கொண்ட மாவட்ட வனத்துறை மற்றும் காவல்துறை, சிறுத்தையைப் பிடிப்பதற்கு கடந்த 12 நாட்களாக பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அந்தச் சிறுத்தையை 11 நாட்களைக் கடந்தும் பிடிக்க முடியாமல் வனத்துறை திணறி வரும் நிலையில், அது அப்பகுதியை விட்டு திருவாரூர், தஞ்சை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, அங்கும் வனத்துறை தேடுதல் பணியை விரிவுபடுத்தியது. மேலும், கடந்த 7ஆம் தேதிக்குப் பின்னர் மயிலாடுதுறையில் தென்பட்ட சிறுத்தை குறித்து 5 நாட்களாக எந்தத் தகவலும் இதுவரை இல்லை.
தேடுதல் வேட்டையில் தீவிரம்

பட மூலாதாரம், HANDOUT
இந்நிலையில் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி பகுதியில் 1000 ஏக்கர் பரப்பளவு உள்ள அரசு முந்திரிக்காட்டில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொன்பரப்பி கிராம மக்கள் சிலர் வனத்துறைக்குத் தகவல் கொடுத்தனர்.
அதைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் தலைமையில் வனத்துறையினர் பொன்பரப்பி கிராமத்திற்குச் சென்று கிராம மக்கள் கூறிய சிறுத்தையின் கால் தடம் மற்றும் அடையாளங்கள் குறித்து விசாரணை நடத்தினர். அதன் பிறகு, பல்வேறு நிலையில் குழுக்கள் அமைத்து தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இப்படியாக, மயிலாடுதுறை முதல் அரியலூர் வரை பொது மக்களுக்கும் வனத்துறைக்கும் போக்கு காட்டி வரும் சிறுத்தை, அவை மட்டுமின்றி, யானை, காட்டுப்பன்றி, புலி போன்ற பல்வேறு காட்டுயிர்கள் ஏன் ஊருக்குள் வருகின்றன என்ற கேள்வியை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
சிறுத்தையைப் பார்த்த பெண்
அரியலூர் மாவட்டம் செந்துறை அரசு மருத்துவமனையின் பின்புறத்தில் நேற்றிரவு சிறுத்தை ஒன்று நடமாடியதைப் பார்த்ததாக அப்பகுதியைச் சேர்ந்த புண்ணியகோடி என்ற பெண் காவல் நிலையத்தில் தகவல் அளித்தார்.
அம்மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் தலைமையில் வனத்துறை, வருவாய்த்துறை, காவல்துறையினர் உடனடியாக அப்பகுதிக்குச் சென்று மருத்துவமனை சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்தனர்.
இதைத் தொடர்ந்து செந்துறை, பொன்பரப்பி, சிதலவாடி உள்ளிட்ட நான்கு இடங்களில் 24 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
மேலும், வனத்துறையினர், இரண்டு உதவி கால்நடை மருத்துவர்கள், பொள்ளாச்சியில் இருந்து சிறுத்தை நடத்தை ஆய்வாளர் உள்ளிட்ட 25 பேர் தற்போது செந்துறையில் முகாமிட்டுள்ளனர்.
பள்ளிகளுக்கு விடுமுறை

பட மூலாதாரம், HANDOUT
சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டதையடுத்து அரியலூர் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.
செந்துறை தாலுகாவில் காலையில் பள்ளிக்கு வந்த மாணவர்கள் பாதுகாப்புடன் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மற்ற பகுதிகளில் மாவட்டம் முழுவதும் மதிய உணவு முடித்தவுடன் மாணவர்களைப் பாதுகாப்புடன் வீடுகளுக்கு அனுப்பி வைக்க பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஒரே சிறுத்தையா? இருவேறு சிறுத்தைகளா?
சிறுத்தை நடமாட்டம் செந்துறை பகுதியில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்த மாவட்ட வன அலுவலர் இளங்கோவன், “அதைப் பிடிக்க 25 நபர்கள் கொண்ட குழுவினர் மூலம் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணித்து வருகிறோம். சிறுத்தை நடமாடிய செந்துறை நகரிலும் அருகிலுள்ள உஞ்சினி, பொன்பரப்பி, சிதலவாடி உள்ளிட்ட பகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 24 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும்” தெரிவித்தார்.
அவரது கூற்றுப்படி, சிறுத்தையைப் பிடிக்க கூண்டு, வலை, மீட்பு உபகரணங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும், சிறுத்தையின் காலடித்தடம் உறுதி செய்யப்பட்ட இடங்களில், கூண்டுகள் வைத்து அதற்குள் பன்றி, ஆடு உள்ளிட்ட உணவுப் பொருட்களை வைத்து, சிறுத்தையைப் பிடிக்கத் தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
“பொதுமக்கள் சிறுத்தை குறித்துத் தகவல் அளித்தால், உடனடியாக அப்பகுதிக்குச் செல்ல மீட்புக் குழுவினர் தயாராக உள்ளனர். மயிலாடுதுறையில் காணப்பட்ட சிறுத்தையும் தற்போது செந்துறையில் காணப்பட்ட சிறுத்தையும் ஒன்றுதானா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.”
அது, சிறுத்தையைப் பிடித்தவுடன் அதன் அளவுகள் மற்றும் புகைப்படத்தை அடிப்படையாக வைத்து உறுதி செய்யப்படும் எனவும் கூறினார் அவர்.
நடைப்பயிற்சியின் போது பார்த்த சிறுத்தை....

பட மூலாதாரம், HANDOUT
சிறுத்தையை நேற்று இரவு நேரில் பார்த்த செந்துறை நகரைச் சேர்ந்த புண்ணியகோடி என்ற பெண் கூறுகையில், "நேற்று இரவு நடைபயிற்சிக்குச் சென்றபோது நானும் எனது குழந்தைகளும் சிறுத்தை நடமாட்டத்தைப் பார்த்தோம். உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தோம்," என்றார்.
சம்பவ இடத்திற்கு காவல்துறையினரும், வனத்துறையினரும் வந்து சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்துள்ளனர். பொதுமக்களின் அச்சத்தைப் போக்க உடனடியாக சிறுத்தையைப் பிடிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மயிலாடுதுறையைத் தொடர்ந்து அரியலூர் மாவட்டமும் சிறுத்தையால் பரபரப்பான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
சிறுத்தைகள் காட்டைவிட்டு ஊருக்குள் வரும் சூழல்
காட்டுயிர்களான யானை, புலி, கரடி, சிறுத்தைகள், காட்டெடுருதுகள் உள்ளிட்ட பல்வகை உயிரினங்கள் அவ்வப்போது நகரத்திற்குள் நுழைந்து விடுகின்றன. இதற்கான காரணம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய காட்டுயிர் ஆய்வாளர் முனைவர் குமரகுரு, "காடுகளின் பரப்பு கடந்த 20 முதல் 40 ஆண்டுகளில் அதிகம் சுருங்கிவிட்டது” ஒரு காரணம் என்று கூறுகிறார்.
வேட்டையாடிகளான சிறுத்தைகள் சூழலியல் மண்டலத்தை சமநிலையை வைப்பதில் மிகப்பெரிய பங்கு வகிப்பதாகக் கூறுகிறார் முனைவர். குமரகுரு. குறிப்பாக, காடுகளில் மான்கள் பெருக்கம், முயல்கள் பெருக்கத்தைக் கட்டுக்குள் வைப்பதில் மிக முக்கியப் பங்கு சிறுத்தைக்கு உண்டு என்கிறார்.

பட மூலாதாரம், HANDOUT
“கடந்த காலங்களில் காடுகள் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் இருக்கும் விவசாய நிலங்களில் அவ்வப்போது காட்டுயிர்களின் நடமாட்டம் இருந்துள்ளது. ஆனால், தற்போது இத்தகைய காட்டுயிர் நடமாட்டம் இருக்கும் பகுதிகளின் பரப்பளவு பெருகிவிட்டது.”
இன்னமும் சில இடங்களை அரசு பாதுகாத்து வைத்திருந்தாலும், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் காடுகளை ஒட்டியுள்ள பெரும்பான்மை பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டன என்கிறார் அவர்.
“காடுகளின் பரப்பளவு கடந்த 20 முதல் 40 ஆண்டுகளில் அதிகம் சுருங்கிவிட்டது.” மேலும், சூழல் சுற்றுலா என்பதன் அடிப்படையில் பொருளாதார ரீதியாக காடுகளில் தங்களுக்குத் தேவையான வசதிகளுடன் கூடிய கட்டமைப்புகளை உருவாக்கியதும் அங்கிருக்கும் உயிரினங்கள் ஊருக்குள் வர ஒரு காரணம் என்கிறார் முனைவர். குமரகுரு.
“இத்தகைய செயல்பாடுகளை சூழல் மற்றும் காட்டுயிர்களைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் எனச் சொல்லிக்கொண்டாலும், அவை சுற்றுச்சூழலுக்கோ காட்டுயிர்களுக்கோ ஏற்புடையதல்ல.”
அரியலூரில் நடமாடும் சிறுத்தையின் நோக்கம் என்ன?

பட மூலாதாரம், HANDOUT
கேரளாவில் அட்டப்பாடி, பரம்பிக்குளம் போன்ற பகுதிகளில் குடில் போன்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். அங்குதான் சூழல் சுற்றுலாப் பயணிகள் தங்கிப் பார்வையிட முடியும்.
அதோடு கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகின்றன. அத்தகைய நடவடிக்கைகளைத் தமிழ்நாட்டிலும் எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் அவர், தற்போது இருப்பதைப் போல் மிக எளிதாக சூழல் சுற்றுலா என்ற பெயரில் காட்டிற்குள் செல்ல முடியும் என்ற நிலையை மாற்ற வேண்டும் என்கிறார்.
மேற்கொண்டு பேசியவர், “காடுகள் காட்டுயிர்களுக்கானவை. மனிதர்கள் அங்கு ஊடுருவும்போது, அங்கிருக்கும் உயிரினங்கள் ஊருக்குள் ஊடுருவுவது நடக்கும். பெரும்பாலும் காட்டுயிர்களின் உணவுச் சங்கிலியில் மனிதர்கள் இருப்பதில்லை.
ஆனால், அந்தந்தப் பகுதிகளில் வாழும் உயிரினங்களின் உணவுச் சங்கிலி குலையும்போது, அவை உணவுதேடி இடம்பெயர வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றன. அந்தச் சூழலில் அவை ஊருக்குள் உணவுதேடி வரும் நிலையும் ஏற்படுவதாக” கூறுகிறார்.
இவற்றோடு, காடெரிப்பு, காடழிப்பு போன்றவையும் சிறுத்தை ஊருக்குள் வர ஒரு காரணமாக இருக்கிறது. இந்த இடர்பாடுகளைத் தடுப்பதன் மூலமே இத்தகைய காட்டுயிர் – மனித எதிர்கொள்ளலைத் தடுக்க முடியும் என்கிறார் முனைவர். குமரகுரு.
அடிப்படையில் காட்டுயிர்களின் உணவுத் தேவை அவற்றின் வாழ்விடத்திலேயே பூர்த்தி செய்யப்படும் வகையில் காட்டின் சூழலியல் சமநிலை பேணப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்துகிறார்.

பட மூலாதாரம், HANDOUT
மயிலாடுதுறை, அரியலூர் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி வந்தாலும், சிறுத்தையைப் பொறுத்தவரை இது சாதாரண ஒரு இடப்பெயர்வு மட்டுமே. “இரைதேடி மட்டும்தான் சிறுத்தைகள் இடம்பெயர்ந்திருக்க வேண்டும். அதன் தேவை சிறிய அளவிலான உணவு மட்டுமே.”
சிறுத்தையின் நடத்தை குறித்துப் பேசிய அவர், “உண்மையில் இந்தச் சிறுத்தை பயத்துடனேதான் நகர்ப்புறங்களில் சுற்றி வருகிறது. உணவு எங்கு கிடைக்கும் என்ற அடிப்படையில் அதன் தேடலும் அமையும். முயல், உடும்பு, கீறி, காட்டுக்கோழி போன்ற சிறு உயிர்களைத்தான் அது வேட்டையாடும். அவை கிடைக்காத நிலையில் அது மீண்டும் இடம்பெயரும்,” எனவும் விளக்கினார்.
இதைத் தாண்டி ஒருவேளை அதன் உடல்நிலையில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டிருந்தால் அதனால் இடம் பெயர்ந்திருக்கலாம் எனக்கூறும் அவர் மற்றபடி வேறு எந்தக் காரணத்திற்காகவும் அது வந்திருக்க வாய்ப்பில் என்றார்.
“அந்தச் சிறுத்தை தனக்கான காட்டு வழிப்பாதையைத் தேடிச் சென்றுகொண்டிருக்கிறது. சிறுத்தைகள் மனிதர்களைத் தாக்குவதில்லை. சாதாரணமாக சிறுத்தைகள் 300 முதல் 400 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டவை,” என்று விவரித்தார் காட்டுயிர் ஆய்வாளர் முனைவர். குமரகுரு.
தமிழ்நாட்டில் சிறுத்தைகள் எங்கெல்லாம் வாழ்கின்றன?

பட மூலாதாரம், HANDOUT
தமிழ்நாட்டில் ஆனைமலை, தேனி, நெல்லை, விருதுநகர், ஈரோடு, நீலகிரி, கரூர், கோவை போன்ற பகுதிகளில் சிறுத்தைகள் வாழ்கின்றன. இந்திய காட்டுயிர் நிறுவனத்தின் 2022 கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 13,874 சிறுத்தைகளும் தமிழ்நாட்டில் 1,070 சிறுத்தைகளும் உள்ளன.
இவை புலிகள் வாழும் பகுதியில் வசிக்காது. புலிகளின் வாழ்விடத்தில் இருந்து சற்று தொலைவிலேயே வாழும். அதற்கேற்றாற்போல் தனது வாழ்விடத்தையும் விரிவுபடுத்திக்கொள்ளும்.
அரியலூர் பகுதியில் நடமாடும் சிறுத்தையைப் பொறுத்தவரை, உணவு அல்லது வாழ்விடத்தைத் தேடி பயத்துடன் சென்றுகொண்டிருக்கும் என்கிறார் முனைவர் குமரகுரு. காட்டிற்குள் வாழும் சிறுத்தைக்கு ஊர்ப்புறத்தில் உணவு எங்கு கிடைக்கும் என்ற தேடலின் நோக்கத்திலேயே அதன் பயணம் இருக்கும் எனவும் தெரிவித்தார் அவர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












