இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு ஆசிரியர் - மாணவர்களே உருவாக்கிய ஐரிஸ் டீச்சர்

காணொளிக் குறிப்பு, கேரளாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இயங்கும் ரோபோ ஆசிரியை.
இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு ஆசிரியர் - மாணவர்களே உருவாக்கிய ஐரிஸ் டீச்சர்

கேரள மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம் மூலம் இயங்கும் ஆசிரியர் மாணவர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

திருவனந்தபுரம் மாவட்டம் ஆற்றிங்கல் பகுதியில் உள்ளது ‘கடுவாயில் தங்கல் தொண்டு அறக்கட்டளை உயர்நிலைப் பள்ளி’ (Kaduvayil Thangal Charitable Trust- KTCT Higher Secondary School). இங்குதான் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இயங்கும் ஆசிரியர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இயங்கும் இந்த ஆசிரியைக்கு ஐரிஸ் (IRIS) எனப் பெயரிட்டுள்ளனர் இதை உருவாக்கிய ஆதித்யன், முகமது முபாரக், முகமது தியாஸ், அபிஜித் மற்றும் ஆலியா ஆகியோர் அடங்கிய மாணவர் குழுவினர். இவர்கள் அனைவரும் 8 மற்றும் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள்.

ஐரிஸ் ஆசிரியையின் கழுத்துப் பகுதியில் உள்ள மைக் மூலம் மாணவர்கள் கேட்கும் கேள்விகள் ஆசிரியையால் உள்வாங்கப்படுகிறது. குரல் வடிவில் உள்வாங்கப்படும் கேள்வி ஜெனரேடிவ் ஏஐ (Generative AI) என்ற தொழில்நுட்பம் மூலம் எழுத்து வடிவத்திற்கு மாற்றப்பட்டு அதற்கான விடைகள் கண்டுபிடிக்கப்படுகின்றன.

இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு ஆசிரியர் - மாணவர்களே உருவாக்கிய ஐரிஸ் டீச்சர்

பின்னர் மீண்டும் எழுத்து வடிவ பதில், குரல் வடிவத்திற்கு மாற்றப்பட்டு ஐரிஸ் ஆசிரியையால் கற்றுத் தரப்படுகிறது.

மின்சார உதவியுடன் சார்ஜ் செய்யப்படும் யு.பி.எஸ் மூலம் ஐரிஸ் என்ற இந்த செயற்கை நுண்ணறிவு ஆசிரியை இயங்குகிறது. ஐரிஸ் ஆசிரியை நடந்து வருவது அதன் கைகள், கழுத்து ஆகியவற்றின் அசைவு ஆகியவை புளூடூத் தொழில்நுட்பம் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன.

தற்போது உருவாக்கப்பட்டுள்ள ஐரிஸ் ஆசிரியை ஒரு முன்மாதிரி வடிவம்தான் (Prototype) எனக் கூறும் மாணவர்கள் வரும் காலங்களில் அதில் பல்வேறு கூடுதல் மாற்றங்களைச் செய்ய வேண்டியுள்ளதாகத் தெரிவித்தனர்.

ஒரு கேள்விக்கு 40 வார்த்தைகள் என்ற அளவு வரை ஐரிஸ் ஆசிரியையால் தற்போது பதிலளிக்க முடியும். அந்த வகையில்தான் மாணவர்களின் இந்த செயற்கை நுண்ணறிவு ஆசிரியை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஐரிஸ் ஆசிரியையால் பதில் வழங்க முடிகிறது.

செய்தியாளர்: சு.மகேஷ், பிபிசி தமிழுக்காக

படத்தொகுப்பு: டேனியல்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)