இலங்கையில் அந்தரங்க உறுப்பின் ஒரு விதையை இழந்த இளைஞர் - காவல்துறை தாக்குதல் காரணமா?

காவல் நிலைய தாக்குதல்
படக்குறிப்பு, பாதிக்கப்பட்ட இளைஞர்
    • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இலங்கையில் போலீஸ் அதிகாரிகளின் தாக்குதலில் இளைஞர் ஒருவரின் ஆண் உறுப்பு விதையொன்று அகற்றப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் இலங்கையின் வடமத்திய மாகாணத்தின் அநுராதபுரம் - மதவாச்சி பகுதியில் கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி இடம்பெற்றுள்ளது.

அநுராதபுரம் - மதவாச்சி பகுதியில் கடந்த 7-ஆம் தேதி வாகனமொன்றில் இரண்டு இளைஞர்கள் பயணித்துள்ளனர். போலீஸார் அந்த வாகனத்தை நிறுத்திய நிலையில், போலீஸாரின் கட்டளை சமிக்ஞையை மீறி வாகனத்தை அந்த ஓட்டுநர் செலுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

இதையடுத்து, வாகனத்தைப் பின்தொடர்ந்த போலீஸ் அதிகாரிகள், வாகனத்தை இடைமறித்து, அதில் பயணித்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்தச் சம்பவத்தில் மதவாச்சி பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த இளைஞர் மதவாச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதையடுத்து, அநுராதபுரம் போதனா மருத்துவமனையில் நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையில் தனது ஆணுறுப்பு விதையொன்று அகற்றப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட இளைஞர் கூறுகின்றார்.

தனக்கும் தனது நண்பனுக்கும் தாக்குதல் நடத்தியமைக்கான காரணத்தை போலீஸார் கூறவில்லை என பாதிக்கப்பட்ட இளைஞர் தெரிவித்துள்ளார்.

''ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதி நானும் எனது நண்பனும் நகரத்திற்கு சென்று வரும் போது, போக்குவரத்து போலீஸார் இருப்பதை அவதானித்தோம். நிறைய வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அந்த வாகனங்களை கடந்து நாங்கள் எமது வாகனத்தை செலுத்தினோம். சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை பயணித்திருப்போம்,” என்றார்.

காவல் நிலைய தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காவல்துறை தாக்கியதில் இளைஞரின் ஆணுறுப்பு விதைப்பையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

‘ஏன் என்று சொல்லாமல் தாக்கினர்’

மேலும் பேசிய அவர், "அப்போது எம்மைப் பின்தொடர்ந்து வந்த போக்குவரத்து போலீஸார் வாகனத்திற்கு முன்பாக சென்று எம்மை இடைமறித்தனர். இவ்வாறு வந்த போலீஸ் அதிகாரிகள் என்னையும், எனது நண்பனையும் வாகனத்திலிருந்து வெளியில் இழுத்து தாக்கினார்கள். எனது கைகளை கட்டி தாக்கினார்கள்,” என்றார்.

"பின்னர் வாகனத்திற்குள் தள்ளி விட்டு கதவை மூடினார்கள். எம்மை கைது செய்தார்கள். அதன்பின்னர் முச்சக்கரவண்டியில் குழுவொன்று வந்தது. அவர்கள் என் நண்பன் மீது தாக்குதல் நடத்தினார்கள். கைது செய்த பின்னர் எனது உடல் நிலை சரியில்லை. என்னை மருத்துவரிடம் காண்பித்தனர். எனது நிலைமை மோசம் என மருத்துவர் கூறினார். அநுராதபுரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறினார்," என பாதிக்கப்பட்ட இளைஞர் கூறுகின்றார்.

அதனை தொடர்ந்து, அந்த இளைஞர் அநுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன்போது, அறுவை சிகிச்சை நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

''அநுராதபுரம் மருத்துவமனைக்கு அழைத்து சென்று ஸ்கேன் செய்தார்கள். எனது கீழ் பகுதி சேதமாகி, இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறினார்கள். சத்திர சிகிச்சையொன்று நடத்த வேண்டும் என கூறினார்கள். இப்போது அறுவை சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது," எனவும் அவர் கூறினார்.

''மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவரும், முச்சக்கரவண்டியில் வருகைத் தந்த இருவரும் எம்மீது தாக்குதல் நடத்தினார்கள். காரணம் கூறவில்லை. வாகனங்களை முந்தி வந்தமைக்காக தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என நினைக்கின்றேன். எனது கழுத்து மற்றும் இடுப்பு பகுதிகளில் கடுமையாக வலி இருக்கின்றது. சத்திர சிகிச்சையும் நடத்தப்பட்டுள்ளது," என அவர் தெரிவிக்கின்றார்.

காவல் நிலைய தாக்குதல்
படக்குறிப்பு, பாதிக்கப்பட்ட இளைஞரின் தாய்

‘என் மகன் வாழ்க்கையை இழந்துவிட்டார்’

தனது மகனின் ஆண் உறுப்பின் விதையொன்று அகற்றப்பட்டுள்ளதால், தனது மகன் வாழ்க்கையை இழந்துவிட்டதாக பாதிக்கப்பட்ட இளைஞரின் தாய் கே.பீ.சந்திரிகா பிரியதர்ஷினி தெரிவிக்கின்றார்.

''டிமோ பட்டா (Dimo Batta) வாகனத்தில் தனது நண்பனுடன் வேலை இருப்பதாக கூறிவிட்டு என் மகன் வெளியே சென்றார். திரும்பி வரும் போது போலீஸார் வாகனத்தை நிறுத்தியதாகக் கூறப்படுகின்றது. எனினும், அவர்கள் அதனை காணவில்லை. அதன்பின்னர் மதவாச்சி போலீஸ் நிலைய போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் பின்தொடர்ந்து வாகனத்தை இடைமறித்துள்ளனர்,” என்றார்.

"வாகனத்திலிருந்து என் மகனை இறக்கி, இரண்டு கைகளையும் பின்புறமாக கட்டி, கீழே தள்ளி, அடி வயிற்றில் மிதித்துள்ளனர். மகனின் நிலைமை கவலைக்கிடமானவுடன், மதவாச்சி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கிருந்து அநுராதபுரத்திற்கு மாற்றி, அறுவை சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது. இப்போது அவரது விதையொன்று அகற்றப்பட்டுள்ளது. இதை நான் யாரிடம் சென்று கூறுவது." என சந்திரிகா குறிப்பிடுகின்றார்.

தனது மகன் கொரியாவிற்கு வேலைக்குச் செல்ல தயாராகி வருவதாகவும் அவர் கூறுகின்றார்.

''இப்போது அவரது எதிர்காலம் என்னவாகும். எதிர்காலமே இல்லாமல் போய்விட்டது," அவர் கூறுகிறார்.

இச்சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் பிரதி போலீஸ் மாஅதிபர் அலுவலகத்தில் முறைபாடொன்று செய்யப்பட்டுள்ளதாக தாய் குறிப்பிடுகின்றார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் என போலீஸார் உறுதி வழங்கியதாகவும் அவர் கூறுகின்றார்.

காவல் நிலைய தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மன்னார் - மதவாச்சி பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து காவலர்கள் அத்துமீறி வாகனம் ஓட்டிய இளைஞரை தாக்கியதாக கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் இருவர் கைது

இளைஞர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் இரண்டு போலீஸ் அதிகாரிகளும் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.

மதவாச்சி போலீஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு அதிகாரிகளும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 16-ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

போலீஸார் வெளியிட்ட ஊடக அறிக்கை

மன்னார் - மதவாச்சி பிரதான வீதியில் கடந்த 7-ஆம் தேதி மாலை இரண்டு போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் கடமைகளில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, டிமோ பட்டா ரக லாரியொன்றை நிறுத்துமாறு சமிக்ஞை பிறப்பிக்கப்பட்ட போதும், வாகனத்தை நிறுத்தாது செலுத்தியுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது.

லாரியின் ஓட்டுநர் குறுக்கு வீதிகளில் செலுத்தியுள்ளதை அவதானித்த போலீஸார், லாரியை பின்தொடர்ந்ததுடன், இந்த பகுதியில் முச்சக்கரவண்டியில் கடமையில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரிகளும் வாகனத்தை பின்தொடர்ந்துள்ளனர்.

ஒரு சந்தர்ப்பத்தில் லாரி நிறுத்தப்பட்டதுடன், அதை சோதனை செய்ய போலீஸ் அதிகாரியொருவர் முயற்சித்த சந்தர்ப்பத்தில், மீண்டும் லாரியை ஓட்டுநர் முன்னோக்கி செலுத்தியுள்ளதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.

இதன்போது போலீஸ் அதிகாரி லாரியின் இடது புற கதவில் தொங்கியுள்ளதுடன், போலீஸ் அதிகாரியை தள்ளி விட்டு மீண்டும் லாரியை செலுத்தியுள்ளதாகவும் போலீஸார் கூறுகின்றனர்.

இதையடுத்து, மீண்டும் லாரியைப் பின்தொடர்ந்த போலீஸார், துலாவெளிய பகுதியில் லாரியை மறித்து, சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்களைக் கைது செய்யும் சந்தர்ப்பத்தில், லாரியிலிருந்த உதவியாளர் சட்டவிரோத மதுபானம் அடங்கிய 5 லீட்டர் பிளாஸ்டிக் போத்தலொன்றை வீசியுள்ளதாகவும், அந்த பிளாஸ்டிக் போத்தலுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவிக்கின்றனர்.

காவல் நிலைய தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இளைஞர் மீது தாக்குதல் நடத்திய காவலர்கள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

லாரியின் ஓட்டுநர், போலீஸாரின் கட்டளையை மீறி பயணித்தமை, மதுபோதையில் வாகனத்தை செலுத்தியமை, வாகன ஓட்டுநர் அனுமதிப் பத்திரமின்றி வாகனத்தை செலுத்தியமை, பாதுகாப்பற்ற முறையில் வாகனத்தை செலுத்தியமை போன்ற காரணங்களை முன்னிலைப்படுத்தி, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில், ஆண் உறுப்பில் வலி ஏற்பட்டுள்ளதை தெரிவித்துள்ளதுடன், இதன்போது மதவாச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது.

மதவாச்சி போலீஸ் நிலைய அதிகாரிகள் தன் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக பாதிக்கப்பட்ட இளைஞர் அநுராதபுரம் மருத்துவமனை போலீஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இதையடுத்து, மதவாச்சி போலீஸ் நிலைய அதிகாரிகளை கெபத்திகொல்லாவ போலீஸ் நிலைய அதிகாரிகள் கைதுசெய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்படுகின்றது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)