பிரிஸில்லா ஹென்றி: அடிமையாக இருந்து பாலியல் தொழில் உலகில் பேரரசியாக உருவெடுத்த பெண்

பட மூலாதாரம், COURTESY CASSANDRA FAY
- எழுதியவர், ஜுவான் ஃபிரான்சிஸ்கோ அலோன்சோ
- பதவி, பிபிசி முண்டோ
பிரிஸில்லா ஹென்றி, உலகின் பெரும்பாலான பகுதிகளுக்குத் தெரியாத பெயர்.
19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அமெரிக்க-ஆப்பிரிக்க பெண்ணின் கதை இது.
பிரிஸில்லா தனது வாழ்நாளின் பெரும்பகுதியை அடிமையாகவே வாழ்ந்தார். அடிமைத்தனத்திலிருந்து விடுபட்ட பிறகு, கிடைத்த வாய்ப்பைத் தனக்குச் சாதகமாக மாற்றி, தான் பிறந்த எஸ்டேட்டையே விலைக்கு வாங்கினார். அதுவரை வெள்ளையர்களின் ஆதிக்கத்தில் இருந்த சர்ச்சைக்குரிய தொழிலை அவர் நடத்தினார். அதுதான் பாலியல் தொழில்.
ஹென்றியின் வாழ்க்கையைப் பற்றி அறிய பிபிசி முண்டோ பல நிபுணர்களிடம் பேசியது, ஆவணங்களைக் கலந்தாலோசித்தது. அவர் இன ஒற்றுமைக்கு பங்களித்த ஒரு நபராக மட்டுமல்லாமல், வணிகத்தில் ஒரு முன்னோடியாகவும், பாலியல் சுதந்திரத்தின் பாதுகாவலராகவும் கருதப்படுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
பிரிஸில்லாவின் நெடிய பயணம்
பிரிஸில்லா ஹென்றி, அமெரிக்காவின் அலபாமாவில் உள்ள புளோரன்ஸ் நகரில் உள்ள எஸ்டேட்டில் பிறந்தார் என, அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஆஷ்லே பி. கன்டிஃப், அமெரிக்காவில் உள்ள பாலியல் தொழில் விடுதிகளின் கலாசாரம் குறித்த தனது முனைவர் பட்ட ஆய்வறிக்கையில் எழுதினார்.
ஹென்றி, தன் பெற்றோருடைய ஆறு குழந்தைகளில் மூத்தவர். தென் அமெரிக்க நில உரிமையாளர் ஜூனியர் ஜேம்ஸ் ஜாக்சன் எஸ்டேட்டுகளில் 1865 வரை பணிபுரிந்தார். ஏனெனில், ஜேம்ஸ் ஜாக்சன் ஹென்றியையும் மற்றவர்களையும் தனது கட்டுப்பாட்டில் இருந்த அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க ஒப்புக்கொள்ளவில்லை. ஆபிரகாம் லிங்கனின் நிர்வாகம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே விடுதலைப் பிரகடனத்தின் மூலம் அடிமைத்தனத்தை அதிகாரப்பூர்வமாக ஒழித்திருந்தாலும் இந்த நிலை தொடர்ந்தது.
அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்ட உடனேயே, அவர் மவுண்ட் சிட்டிக்கு சென்றார். அந்த நேரத்தில் அந்நகரம் செயின்ட் லூயிஸ் (மிசூரி) என்று அழைக்கப்பட்டது. இந்த நகரம் அவர் பிறந்த புளோரன்ஸ் நகருக்கு வடக்கே 615 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அங்கு பணிப்பெண்ணாக வாழ்க்கையைத் தொடங்கினார்.
"பிரிஸில்லா செயின்ட் லூயிஸுக்குச் சென்றார். ஏனெனில், நாட்டின் மற்ற பகுதிகளை விட துணி சலவை தொழிலாளர்கள் அங்கு அதிக வருமானம் ஈட்ட வாய்ப்பு உள்ளது" என்று அமெரிக்க பத்திரிகையாளர் ஜூலியஸ் ஹண்டர் தெற்கு நகரத்தின் பொது வானொலி நெட்வொர்க் STLPR-க்கு அளித்த பேட்டியில் கூறினார்.
இவர், ‘பிரிஸில்லா அண்ட் பேப்: ஃப்ரம் த ஷக்கிள்ஸ் ஆஃப் ஸ்லேவரி டு மில்லியனர் மேடம்ஸ் இன் விக்டோரியன் செயின்ட் லூயிஸ்' (Priscilla and Babe: From the Shackles of Slavery to Millionaire Madams in Victorian St. Louis) என்ற புத்தகத்தின் ஆசிரியரும் ஆவார்.
பிரிஸில்லா மற்றும் சாரா 'பேப்' கானரைப் பற்றி அறிந்து கொள்வதற்காக அவர் ஆறு வருடங்கள் பல நூலகங்கள், பொது பதிவுகள், தேவாலய பதிவுகள் மற்றும் உள்ளூர் செய்தித்தாள்களில் வெளியிடப்பட்ட கட்டுரைகளை ஆய்வு செய்தார்.

பட மூலாதாரம், Getty Images
பாலியல் தொழிலில் பிரிஸில்லா ஹென்றி
அடிமைத்தனத்திலிருந்து விடுபட்ட அவர், சலவை மற்றும் ஹோட்டல் அறைகளை சுத்தம் செய்வதில் சிறிது காலம் செலவிட்டார். பின்னர் அவர் அதிக லாபம் தரும் தொழிலை மேற்கொண்டார். அதுதான் பாலியல் தொழில்.
மிசிசிப்பி மற்றும் மிசோரி நதிகளை ஒட்டிய மற்ற நகரங்களைப் போலவே, செயின்ட் லூயிஸும் அந்த நேரத்தில் ஒரு செழிப்பான வணிக நகரமாக இருந்தது.
“19ஆம் நூற்றாண்டில் செயின்ட் லூயிஸில் பாலியல் தொழில் செய்யும் 5,000 பேர் இருந்தனர். அப்போது நகரத்தின் மக்கள் தொகை 3,50,000 மட்டுமே” என்று ஹண்டர் விளக்கினார்.
உள்நாட்டுப் போருக்குப் பிறகு, நகரம் நம்பிக்கையற்றவர்கள், அடிமைத்தனத்திலிருந்து தப்பியவர்கள், சாகசக்காரர்கள் மற்றும் வேட்டையாடுபவர்களின் புகலிடமாக இருந்தது. அதனுடன், பாலியல் வர்த்தகமும் அதிகரித்தது. இந்த தொழில் லாபகரமாக மாறியது. 1870 ஆம் ஆண்டில் உள்ளூர் அதிகாரிகள் பாலியல் தொழிலை தற்காலிகமாக சட்டப்பூர்வமாக்கினர். பாலியல் தொழில் நடக்கும் இடங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட பாலியல் தொழிலாளர்களுக்கு வரி விதிக்கப்பட்டது.
ஹென்றி இந்தத் துறையில் நுழைந்தது வேண்டுமென்றே அல்ல. ஆனால், ஒரு சோகம் அவரை அதில் ஈடுபட வைத்தது. அவர் பணிபுரிந்த ஹோட்டல் தீ வைத்துத் தாக்கப்பட்டது. அதனால் அவர் ஒரு பாலியல் விடுதியில் தங்கினார்.
அவருக்குக் குறிப்பிடத்தக்க உடல் அம்சங்கள் எதுவும் இல்லை என்றாலும், அவர் ஒரு வலிமையான நபர் என கூறப்படுகிறது. ராணுவச் சிப்பாயான அவரது காதலர் தாமஸ் ஹோவர்டின் அறிமுகம் அவரை பாலியல் தொழில் உலகிற்கு கதவைத் திறந்தது.
இருப்பினும், இந்த காதல் மற்றும் வணிக உறவு மோசமாக முடிந்தது. பிரிஸில்லா ஹென்றியின் எஸ்டேட்டை நிர்வகிக்க வந்த ஹோவர்ட் அவரை ஏமாற்றினார். பிரிஸில்லா கொல்லப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. பேராசிரியர் கன்டிஃப் தனது ஆராய்ச்சியில், முன்னாள் ராணுவ சிப்பாய் சமையல்காரர் புளோரன்ஸ் வில்லியம்ஸுடன் ஹோவர்ட், ஹென்றிக்கு விஷம் கொடுத்ததாக அவரது உறவுப்பெண் ஒருவர் கூறியதாக எழுதியுள்ளார்.
உள்ளூர் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பதிவுகளின்படி, ஹென்றி 19 முதல் 30 வயதுக்குட்பட்ட ஐந்து கறுப்பினப் பெண்களுடன் ஒரு பாலியல் தொழில் விடுதியை நடத்தினார்.
இது "வெள்ளை, கறுப்பின மாலுமிகள் மற்றும் சாகசக்காரர்கள் சந்திக்கும் இடமாக மாறியது" என்று செயின்ட் லூயிஸ் போஸ்ட்-டிஸ்பாட்ச் செய்தித்தாள் ஹென்றி 1895-ல் மரணமடைந்தபோது எழுதியது.
"அப்போது நகரத்தில் பாலியல் தொழிலை நிர்வகிக்கும் எலிசா ஹேக்ராஃப்ட் என்ற பெண் ஒருவர் இருந்தார. அவர் பாலியல் தொழில் விடுதிகளின் ராணியாக இருந்து 1871 இல் இறந்தார். பிரிஸில்லா ஹென்றியும் அவரது ஆதரவாளர்களும் கறுப்பினப் பெண்களுக்கு இந்தத் தொழிலில் நுழைவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகக் கருதினர். ஹேக்ராஃப்ட் இறந்த சமயத்தில் அவர் தன்னிடம் 30 மில்லியன் டாலர் மதிப்புள்ள பணம் மற்றும் சொத்துக்களை வைத்திருந்தார்" என்று ஹண்டர் விளக்கினார்.

பட மூலாதாரம், Getty Images
வணிக சாம்ராஜ்யம்
செயின்ட் லூயிஸ் அதிகாரிகள் பாரம்பரியமாக பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுடன் செல்லும்போது தாரளமாக இருந்தாலும், இன ரீதியாக நிலைமை வேறாக இருந்தது. உள்நாட்டுப் போருக்குப் பிறகு, பிற இனத்தவர்களை (தோலின் நிறத்தின் அடிப்படையில்) திருமணம் செய்ய விரும்புவோர் மற்றும் பிற இனத்தவர்களுடன் உடலுறவு கொள்வோருக்கு சிறைத் தண்டனையை கடுமையாக்கும் சட்டங்கள் இயற்றப்பட்டன.
அதிகாரிகளிடம் சிக்கலைத் தவிர்க்க ஹென்றி பல்வேறு பாலியல் விடுதிகளை நடத்தினார். சில வெள்ளையர்களுக்காகவும் மற்றவை கறுப்பினத்தவருக்காகவும் இருந்தன. இருப்பினும், வெள்ளையர்கள் இரண்டு வகையான பாலியல் விடுதிகளுக்கும் செல்லலாம். ஆனால், கறுப்பின ஆண்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை.
"அவர் தனது வியாபாரத்தை விரிவுபடுத்துவதன் மூலம் வெள்ளையர்களை உபசரித்தார். ஆனால் அவர் கறுப்பின எதிர்ப்பு சட்டங்களை மதித்தார்," என்று கன்டிஃப் கூறினார்.
"இந்தச் சட்டங்கள் கறுப்பின ஆண்கள் வெள்ளையின பெண்களுடன் பேசுவதைத் தடுக்க முயற்சிப்பதாக அவர் உணர்ந்தார். ஆனால் வெள்ளையின ஆணுக்கு அத்தகைய தடை எதுவும் இல்லை,” என்று அவர் மேலும் கூறினார்.
"இன அடிப்படையிலான பாலியல் விடுதிகளை நிர்வகிக்க ஹென்றி காவல்துறையுடன் நீண்டகால உறவைப் பேணி வந்தார். அதனால் அவரது வணிகம் சீராக இயங்கிக்கொண்டிருந்தது,'' என ஆராய்ச்சியாளர் கன்டிஃப் தனது ஆய்வில் தெரிவித்தார்.
இது அவரது வணிகத்தை மேலும் வளர்க்க உதவியது. காலப்போக்கில் அவர் நகரத்தில் பல வீடுகளை வாங்கினார். அவர் அவற்றை பாலியல் விடுதிகளாக மாற்றினார். இல்லையெனில் பாலியல் விடுதிகளை நடத்தும் தனது கூட்டாளிகளுக்கு வாடகைக்கு விடுவார்.
கல்வியறிவு இல்லாதது, பெண்களிடம் செல்வம் சேர்வதை தடுக்கவில்லை. 1895 இல் அவர் இறக்கும் போது, அவரது சொத்து மதிப்பு 100,000 அமெரிக்க டாலர்களாக இருந்தது. அதாவது, இப்போது சுமார் 3,700,000 அமெரிக்க டாலர்கள். அதாவது, சுமார் 30 கோடி ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
“அனைவருடனும் நல்ல உறவைப் பேணுவதன் மூலம் அவருடைய வணிகம் செழித்தது. அவரது பெரும்பாலான வணிக வாழ்க்கையில் உடலுறவு சமூகத்திலிருந்து விலக்கப்பட்ட ஒன்றாகவே இருந்தது. எனவே, அவர்கள் இதைப் பற்றி எங்கும் எழுத வேண்டாம் என்று முயற்சி செய்கிறார்கள்,” என்று அமெரிக்க வாஷிங்டனில் உள்ள ஆப்பிரிக்க அமெரிக்க ஆய்வுகள் மையத்தின் பேராசிரியரான மாலி காலின்ஸ் பிபிசி முண்டோவிடம் கூறினார்.
பிரிஸில்லா ஹென்றிக்கு சந்தை தேவையும் தெரியும். மிசிசிப்பி ஆற்றின் கீழ் பகுதியில் செயின்ட் லூயிஸ் நகரம் இருந்தது. வணிகர்களும் மாலுமிகளும் இந்த நகரத்திற்கு வணிகத்திற்காக வருவார்கள். இதன் மூலம், அவர் வளர்ந்து வரும் "சிவப்பு விளக்கு மாவட்டத்தில்" பாலியல் வணிகத்தை ஏகபோகமாக்கினார். "அவர் பல பாலியல் விடுதிகளை வைத்திருந்தாள்," என்று காலின்ஸ் கூறினார்.

பட மூலாதாரம், COURTESY ST. LOUIS POST DISPATCH
இறுதி கட்டத்தில், ஹென்றி தனது சொந்த ஊரான அலபாமாவுக்குத் திரும்பினார். ஆனால் ஒரு பணிப்பெண்ணாக அல்ல, ஒரு எஜமானியாக. அவரும் அவரது உடன்பிறப்புகளும் பிறந்த, வாழ்நாளின் பெரும்பகுதியை அடிமையாகக் கழித்த எஸ்டேட்டை விலைக்கு வாங்கினார்.
"கறுப்பின ஆண்கள் மற்றும் பெண்களின் முன்னேற்றத்தில் இது ஒரு திருப்புமுனை என்று தேசிய மற்றும் உள்ளூர் ஊடகங்கள் கூறின" என்று காலின்ஸ் தெரிவித்தார்.
இருப்பினும், அக்கால ஊடகங்கள் அவரையும் அவருடைய வணிகத் திறமையையும் மையமாகக் கொண்டிருக்கவில்லை.
"தீய மற்றும் மோசமான பழைய பிரிஸில்லா ஹென்றி இறந்தார்" என்று உள்ளூர் செய்தித்தாள் தலைப்புச் செய்தி வெளியிட்டது. அவருடைய எண்ணங்கள் தீயவை என விவரிக்கப்பட்டுள்ளன.
காலப்போக்கில், ஹென்றியின் நினைவுகள் மறைந்தன. ஆனால், அவர் இறக்கும் போது அது சாதாரணமானதல்ல. அவரது மரணம் குறித்த செய்தி, நியூயார்க் நாளிதழில் வெளியிடப்பட்டது. செயின்ட் லூயிஸ் ஹிஸ்டாரிகல் பிரஸ் அசோசியேஷன் எழுதிய "முன்னோடிகள், விதி மீறுபவர்கள் மற்றும் கிளர்ச்சியாளர்கள்: 50 அன்ஸ்டாப்பபிள் வுமன் ஆஃப் செயின்ட் லூயிஸ்" என்ற புத்தகத்தின்படி, அவர் இறந்தபின்னர், அவரது உடலுக்கு பிரியாவிடை அளிக்க நூற்றுக்கணக்கானோர் செயின்ட் லூயிஸின் தெருக்களில் வரிசையாக நின்றனர்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












