'ஜகாத்' பற்றி இஸ்லாம் கூறுவது என்ன? யார், எவ்வளவு, எப்படி செலுத்த வேண்டும்? 8 கேள்விகளும் பதில்களும்

பட மூலாதாரம், Getty Images
ஜகாத் என்பது இஸ்லாம் மதத்தின் ஐந்து தூண்களில் ஒன்றாகும். முகமது நபி, கி.பி 622 இல் மதீனாவுக்குச் சென்று இஸ்லாமிய தேச அமைப்பைத் தொடங்கியபோது, அந்த நாட்டில் ஜகாத் முறை தொடங்கப்பட்டது என்று இஸ்லாத்தை பின்பற்றுபவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் ஜகாத் அதாவது தானம், எப்படி, எவ்வளவு கொடுக்கப்பட வேண்டும் என்பதில் பல்வேறு கேள்விகள் உள்ளன.
முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆனில் ஜகாத் தொடர்பான வழிகாட்டுதல்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக இஸ்லாமிய சிந்தனையாளர்கள் கூறுகின்றனர்.
ஜகாத் தொடர்பான கேள்விகளுக்கு பதில்களைப் பெற, பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று வங்கதேச இஸ்லாமிய அறக்கட்டளையின் முஃப்தி முகமது அப்துல்லா கூறினார்.
இருந்தும் பலரது மனதில் கயாமத் (இறுதி) நாளின் தீர்ப்பு மற்றும் ஜகாத் குறித்தும், ஜகாத்திற்கு (தானம்) எவ்வளவு கொடுக்க வேண்டும், எப்படி செலுத்த வேண்டும் என்பது போன்ற பல்வேறு கேள்விகள் எழுகின்றன. இதை முடிவுசெய்வதும் மிகவும் முக்கியமானது.
ஒருவரிடம் ஒரு வருட காலத்திற்கும் மேலாக ஐம்பத்தி இரண்டரை தோலா வெள்ளி அல்லது ஏழரை தோலா தங்கம் (1 தோலா - 11.66 கிராம்) அல்லது அதற்கு சமமான ரொக்கம் அல்லது பங்குச் சான்றிதழ்கள், பரிசுப் பத்திரங்கள் போன்றவை இருந்தால், தனது கடையில் பொருட்களை வைத்திருந்தால், இஸ்லாமிய சட்டப்படி அந்த நபர் ஜகாத் செலுத்துவது கட்டாயமாகும். ஜகாத் என்பது மொத்தத் தொகையில் இரண்டரை சதவிகிதம் ஆகும்.
ஆனால் எந்த சந்தர்ப்பங்களில் ஜகாத் கொடுக்க வேண்டும், எந்த சந்தர்ப்பங்களில் கொடுக்க வேண்டாம்? உங்களிடமிருந்து யார் ஜகாத் வசூலிக்க முடியும்? அரசு நிர்வாகம் பற்றி என்ன சொல்லப்படுகிறது? ஜகாத் தொடர்பான எட்டு கேள்விகளையும் அவற்றின் பதில்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.

பட மூலாதாரம், Getty Images
1. ஒருவர் வங்கியில் கடன் வாங்கினால், அவர் ஜகாத் கொடுக்க வேண்டுமா?
”நீங்கள் வங்கியில் இருந்து தனிநபர் கடன் வாங்கினால், அடுத்த ஒரு வருட வட்டிக்கு சமமான தொகையை விட்டுவிடவேண்டும். மீதமுள்ள தொகைக்கு ஜகாத் பொருந்தும்,” என்று முஃப்தி முகமது அப்துல்லா குறிப்பிட்டார்.
வியாபாரத்தில் பணத்தை முதலீடு செய்யாமல் அதை அப்படியே வைத்திருந்தாலும் அதன் மீது ஜகாத் கொடுக்க வேண்டும்.
ஆனால் ஒருவரின் கடன் அதிகமாக இருந்தால், அதைச் செலுத்திய பிறகு, அவருடைய சொத்துக்களுக்கு ஏற்ற ஜகாத் தொகை அவரிடம் இல்லை என்றால் அவர் ஜகாத் செலுத்துவது கட்டாயமல்ல.

பட மூலாதாரம், EPA/ARSHAD ARBAB
2. எந்த வகையான சொத்துக்களுக்கு ஜகாத் பொருந்தும்?
வணிக நோக்கங்களுக்காக வைத்திருக்கும் நிலம், குடியிருப்புகள் அல்லது பண்ணைகளுக்கும் ஜகாத் செலுத்த வேண்டும் என்று முகமது அப்துல்லா கூறினார். ஆனால் வீடு கட்டுவதற்காக வைத்திருக்கும் நிலத்திற்கு ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை.
யாரேனும் ஒருவர் தனது குழந்தைக்கு அல்லது அத்தகைய பயன்பாட்டிற்காக ஒரு குடியிருப்பை வைத்திருந்தால் அதற்கும் ஜகாத் பொருந்தாது. யாரேனும் ஒருவர் கடை வைத்திருந்தால் அங்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு ஜகாத் கொடுக்க வேண்டும், ஆனால் கடையின் கட்டிடம் அல்லது நிலத்திற்கு ஜகாத் பொருந்தாது.
தங்களிடமும், தங்கள் குடும்பத்திடமும் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், விலையுயர்ந்த ரத்தின கற்கள் அல்லது அது போன்ற பொருட்கள் இருந்தால் மட்டுமே ஜகாத் கொடுக்க வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள். இஸ்லாமிய அறக்கட்டளையின் ஜகாத் நிதியத்தின் இயக்குனர் முகமது ருனூர் ரஷீத், அது அவ்வாறு இல்லை என்று கூறுகிறார்.
"கையில் உள்ள ரொக்கப்பணம், பங்குச் சான்றிதழ்கள், பரிசுப் பத்திரங்கள் மற்றும் சான்றிதழ்கள், தங்கம் மற்றும் வெள்ளி, விலைமதிப்பற்ற உலோகங்கள் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், வணிக சொத்துக்கள் மற்றும் தொழில்துறை வணிகத்தின் லாபம், உற்பத்தி செய்யப்பட்ட பயிர்கள், கால்நடை செல்வம், 40 க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் அல்லது ஆடுகள், மேலும் 30க்கும் மேற்பட்ட பசுக்கள், எருமைகள் மற்றும் பிற கால்நடைகள், தாதுக்கள், வருங்கால வைப்பு நிதி - இவை அனைத்திற்கும் ஜகாத் கொடுக்க வேண்டும். ஆனால் இவை அனைத்தும் சொத்தின் அளவைப் பொறுத்து இருக்கும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
3. தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நன்கொடைகள் ஜகாத் ஆக கருதப்படுமா?
ஜகாத்தை புனிதமாக ஆக்குவதற்கு, ஜகாத் வாங்குபவரை அந்தப் பணத்தின் உரிமையாளராக ஆக்குவது அவசியம். இதைச் செய்வதன் மூலம், அவர் தனது விருப்பப்படி அல்லது அவரது தேவைக்கேற்ப அதை சுதந்திரமாகப் பயன்படுத்தலாம் என்று முஃப்தி முகமது அப்துல்லா கூறினார்.
"நீங்கள் ஒரு நிறுவனத்திற்கு பணம் கொடுத்தால், அதை செலவழிக்க எந்த ஏழைக்கும் அல்லது தேவை நிலையில் இருப்போருக்கும் உரிமை இருக்காது. அந்த பணத்தின் உரிமையாளர், ஏழை அல்லது தேவையுள்ளவராக இருக்க மாட்டார். எனவே ஜகாத்தை நேரடியாகக் கொடுப்பது நல்லது" என்றார் அவர்.

பட மூலாதாரம், EPA/REHAN KHAN
4. மனைவியின் தங்க நகைகளுக்கு யார் ஜகாத் கொடுப்பார்கள்?
மனைவி மற்றும் மகளின் ஜகாத் கொடுக்கும் பொறுப்பு கணவன் அல்லது தந்தையிடம் உள்ளது என்றும் அப்துல்லா கூறினார்.
தங்க நகை என்றால் தங்கம், வெள்ளி என்று அர்த்தம் என்று அவர் தெரிவித்தார். ஆனால் வைரம், ரத்தினம் அல்லது வேறு நகைகள் விஷயத்தில் என்ன நடக்கும் என்பது தெரியாது. ஆனால் இவை வியாபாரத்திற்காக கொண்டு வரப்பட்ட பொருட்களாக இருந்தால் அதற்கு ஜகாத் கொடுக்க வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
5. ஜகாத்தை ஆடைகள் வடிவில் கொடுக்கலாமா?
"இது சரிதான். ஆனாலும் நல்லதல்ல" என்றார் முஃப்தி அப்துல்லா. இதற்கான காரணத்தை விளக்கிய அவர் ஒருவருக்குத் தேவையானதை அளித்து ஜகாத் கொடுப்பது நல்லது என்று அவர் குறிப்பிட்டார்.
"ஒருவருக்கு ஆடை தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் உணவு தேவைப்படலாம். வேறு யாருக்காவது ரொக்கப்பணம் தேவைப்படலாம். இதையெல்லாம் கருத்தில் கொண்டு ஒரு நபருக்கு என்ன தேவையோ அதைக்கொடுத்து உதவ வேண்டும்" என்று அவர் கூறினார். ”அப்படி முடியவில்லையென்றால் ரொக்கத்தொகையை கொடுப்பது நல்லது," என்றார் அவர்.

6. நிஸாப் என்றால் என்ன?
நிஸாப் என்பது ஒரு இஸ்லாமிய வார்த்தை. அதாவது அன்றாடத் தேவைகளைப் பூர்த்திசெய்த பிறகு, அன்றாடத்தேவை பொருட்களை தவிர்த்துவிட்டு, ஒருவர் 52.2 தோலா வெள்ளி அல்லது 7.5 தோலா தங்கம் அல்லது அதற்குச் சமமான ஏதேனும் வணிகப் பொருள் வைத்திருந்தால், அது ஜகாத்தின் நிஸாப் எனப்படும்.
சமய விதிகளின்படி ஒருவர் ஒரு வருடத்திற்கு மேல் நிஸாப் தொகைக்கு இணையான சொத்து வைத்திருந்தால் அவர் ஜகாத் கொடுக்க வேண்டும்.
ஒருவரிடம் 7.5 தோலாவுக்கும் சற்று அதிகமாக தங்கம் உள்ளது என்று வைத்துக்கொள்வோம். அந்த தங்கத்தை சந்தையில் 4 லட்சம் ரூபாய்க்கு விற்கலாம் என்று வைத்துக் கொண்டால் அதுதான் நிஸாப் தொகை. இப்போது இந்த நிஸாப்பிற்கு அவர் ஜகாத் தொகையாக 2.5 சதவிகிதம் அதாவது 10 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
7. ஜகாத்தை யார் பெறலாம்?
ஜகாத்தை இஸ்லாமியர்களுக்கு மட்டுமே வழங்க முடியும். அதை பெறக்கூடிய முஸ்லிம்கள்:
- ஏழை ஆதரவற்ற முஸ்லிம்கள்
- கடன் சுமையில் இருக்கும் நபர்
- ஜிஹாதி மற்றும் பயணி
- ஏழை மத வழிபாட்டாளர்கள்
- ஏழை ஆதரவற்ற உறவினர்கள்
- இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டவர்கள்
8. அரசாங்கத்தின் ஜகாத் நிதி என்ன ஆகிறது?
வங்கதேச அரசிடம் 1982ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஜகாத் நிதி உள்ளது. இதன் மூலம் நாட்டின் 64 மாவட்டங்களில் உள்ள மக்களிடம் இருந்து ஜகாத் நிதி வசூல் செய்யப்பட்டு, அரசு விதிகளின்படி வசூலான பணத்தில் 70 சதவீதம் அந்தந்த மாவட்டங்களில் செலவிடப்படுகிறது. .
இஸ்லாமிய அறக்கட்டளையின் ஜகாத் நிதி மூலம், 1982 முதல் 2019-20 நிதியாண்டு வரை சுமார் ஒன்பதரை லட்சம் பேருக்கு ரூ.35 கோடி மதிப்பிலான ஜகாத் வழங்கப்பட்டுள்ளது.
தனிநபர்களுக்கு ஜகாத் வழங்குவதைத் தவிர, நிறுவனங்களுக்கும் ஜகாத் கொடுக்கலாம்.
இந்நிலையில், வங்கதேசத்தில் அரசு வசூலிக்கும் ஜகாத், ஜகாத் வாரியம், குழந்தைகள் மருத்துவமனைகள், தையல் பயிற்சி போன்ற பல்வேறு துறைகளுக்கு செலவிடப்படுகிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












