தெலங்கானா: அரசியல் தலைவர்கள் போன்களை உளவுத்துறை ஒட்டுக்கேட்டதா? உயரதிகாரிகள் கைது - என்ன நடந்தது?

 தெலங்கானா போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் - கைதான காவல்துறை உயரதிகாரிகள்; கேசிஆர் மகனுக்கு தொடர்பு உள்ளதா?

பட மூலாதாரம், GETTY IMAGES

    • எழுதியவர், பல்லா சதீஷ்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

தெலங்கானா மாநில போலீசார் விசாரித்து வரும் போன் ஒட்டுக்கேட்பு வழக்கில் ஒவ்வொன்றாக வெளியாகும் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

பொதுவாக தீவிரவாத செயல்களைக் கண்டறியவே போன் ஒட்டுக் கேட்கப்படும். ஆனால், அரசியல் காரணங்கள், சொந்த லாபம், தொழிலதிபர்களை மிரட்டிப் பணம் பறிப்பது, குடும்ப உறுப்பினர்களின் போன்-ஐ ஒட்டுக்கேட்பது போன்ற குற்றச்சாட்டுகள் தற்போது தெலங்கானா முழுவதும் பேசப்பட்டு வருகிறது.

முன்பு நாட்டில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய பெகாசஸைவிட இப்போது தெலங்கானாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

போனை ஒட்டுக் கேட்டது யார்?

 தெலங்கானா போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் - கைதான காவல்துறை உயரதிகாரிகள்; கேசிஆர் மகனுக்கு தொடர்பு உள்ளதா?

பட மூலாதாரம், Getty Images

தெலங்கானா அரசின் புலனாய்வுத் துறையில் பணியாற்றும் அதிகாரிகள் தொலைபேசி ஒட்டுக்கேட்பில் ஈடுபட்டதாக, தெலங்கானா காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

உளவுத்துறை தலைவராகப் பணியாற்றிய பிரபாகர ராவ் தலைமையில் நடந்த இந்த முறைகேட்டில், பிரனீத் ராவ் முக்கியப் பங்கு வகித்ததாக போலீசார் கூறுகின்றனர்.

போன் ஒட்டுக்கேட்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் விவரங்கள்

  • ஏ1: பிரபாகர ராவ், ஓய்வுபெற்ற ஐபிஎஸ், (சிறப்புப் பணி அதிகாரி (ஓஎஸ்டி) (தற்போது அமெரிக்காவில் உள்ளார்)
  • ஏ1:பிரனீத் ராவ், டிஎஸ்பி (கைது செய்யப்பட்டுள்ளார்.)
  • ஏ3: ராதாகிஷன் ராவ், ஓய்வு பெற்ற கூடுதல் எஸ்பி (சிறப்புப் பணி அதிகாரி) (கைது செய்யப்பட்டார்)
  • ஏ4: புஜங்கா ராவ், கூடுதல் எஸ்பி (சிறப்புப் பணி அதிகாரி) (கைது செய்யப்பட்டார்)
  • ஏ5: திருப்படண்ணா, கூடுதல் எஸ்பி, (சிறப்புப் பணி அதிகாரி) (கைது செய்யப்பட்டார்)

ஓய்வுபெற்ற கூடுதல் காவல்துறை துணை ஆணையர் ராதாகிஷன் ராவ், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திருப்படண்ணா, புஜங்கா ராவ், துணை காவல் ஆணையர் பிரனீத் ராவ், ஓய்வுபெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வேணுகோபால ராவ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். காட்டுமல்லு பூபதி என்ற சர்க்கிள் இன்ஸ்பெக்டரும் கைது செய்யப்பட்டார்.

பிரபாகர ராவ் 2016இல் உளவுத்துறை டிஐஜி ஆனார். குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் இணைந்து செயல்படுவதற்காக சிறப்பு புலனாய்வுப் பிரிவின் கீழ் ஒரு சிறப்பு அதிரடிக் குழுவை உருவாக்கி, பிரனீத் ராவை தேர்ந்தெடுத்து அவருக்கு பிரபாகர ராவ் அப்பொறுப்பை வழங்கியதாக போலீசார் தெரிவித்தனர்.

“இவர்கள் அனைவரும் சேர்ந்து எதிர்க்கட்சித் தலைவர்கள், ஆளுங்கட்சித் தலைவர்கள், தற்போதைய முதலமைச்சர் (அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர்) ரேவந்த் ரெட்டி, திரையுலகப் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் ஆகியோரின் போன்களை ஒட்டுக் கேட்டனர். இதில், பிரபாகர ராவ் முதன்மையாக இருந்துள்ளார். பிரனீத் ராவ் இதற்கு முக்கியக் கருவியாக இருந்துள்ளார்.

அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், ராதாகிஷன் ராவ் கள அளவில் பணியாற்றினார். இது தொடர்பாக டிஎஸ்பி பிரனீத் ராவுக்கு உயர் அதிகாரி பிரபாகர ராவ் உச்சகட்ட சுதந்திரம் அளித்தார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் வாக்குமூலத்தில் இந்த விஷயங்களை ஒப்புக் கொண்டனர்,'' என்று பெயர் வெளியிட விரும்பாத இரண்டு அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் வெளியே வந்தது எப்படி?

 தெலங்கானா போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் - கைதான காவல்துறை உயரதிகாரிகள்; கேசிஆர் மகனுக்கு தொடர்பு உள்ளதா?

பட மூலாதாரம், UGC

படக்குறிப்பு, பிரனீத் ரா

வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி இந்த போலீஸ் அதிகாரிகள் சட்டவிரோதமாக போன் ஒட்டுக்கேட்பில் ஈடுபட்டனர். தொலைபேசி ஒட்டுக்கேட்கும் செயலைப் பொறுத்தவரை, சட்டப்படி அரசு அனுமதியுடன்தான் மற்றவர்களின் போன் ஒட்டுக் கேட்கப்படும். இது பெரும்பாலும் தீவிரவாத நடவடிக்கைகளை கண்காணிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

இதற்கு நீண்ட நடைமுறை உள்ளது. ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் சொந்த நோக்கங்களுக்காக சட்டத்திற்கு எதிராக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்தியதாக காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது.

இவர்கள் அனைவரும் சந்திரசேகர் ராவின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியை ஆட்சியில் வைத்திருக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. 2023 சட்டமன்றத் தேர்தலில் பிஆர்எஸ் கட்சி அம்பலப்படுத்தப்படுவதைத் தடுக்க தொலைபேசி ஒட்டுக்கேட்பு ஆதாரங்களை அழிக்க முயன்றதாக பிரனீத் ராவ் சிக்கினார்.

தேர்தல் முடிவுகள் வந்த உடனேயே டிசம்பர் 4ஆம் தேதி உளவுத்துறை அலுவலகத்தில் இந்த ஒட்டுக்கேட்புக்குப் பயன்படுத்தப்பட்ட இயந்திரத்தை அழிக்க பிரனீத் முயன்றார். அங்கிருந்து ‘ஹார்டு டிஸ்க்’குகளை எடுத்தபோது விஷயம் வெளியே தெரிந்தது. வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.

அப்போது அவர் சிரிசில்லா டிஎஸ்பியாக இருந்தார். சிறப்பு புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை அவரே அணைத்துவிட்டு, அங்குள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்த சுமார் 50 ‘ஹார்டு டிஸ்க்கு’களை அழித்தார். இது தொடர்பாக பஞ்சாகுட்டா காவல் நிலையத்தில் மார்ச் 10ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பிரனீத் ராவ் மார்ச் 12 அன்று கைது செய்யப்பட்டார். அதன்பின், ஒவ்வொரு அதிகாரியாக கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில் என்ன தெரிய வந்தது?

 தெலங்கானா போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் - கைதான காவல்துறை உயரதிகாரிகள்; கேசிஆர் மகனுக்கு தொடர்பு உள்ளதா?

பட மூலாதாரம், Getty Images

இந்த வழக்கின் விசாரணையில் காவல்துறை அதிகாரிகள் கூறிய விஷயங்கள் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

விசாரணையின்போது, ​​கிட்டத்தட்ட அனைவரும் தங்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக காவல்துறை அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர். ஆனால், இவை அனைத்தும் உயரதிகாரியின் உத்தரவின் பேரில் நடந்ததாகத் தெரிவித்தனர். அந்த உயரதிகாரி, ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியான பிரபாகர ராவ்.

தற்போது அவர் அமெரிக்காவில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில் அவர் ஹைதராபாத் வருவார் என்றும், வருவாரா இல்லையா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

எதிரணியினரின் நிதி ஆதாரங்களைக் கண்டறிந்து, அவர்களை முடக்கும் உத்தியாக போன் ஒட்டுக்கேட்பு நடைபெற்றுள்ளது. சுமார் 200 மீட்டர் தொலைவில் இருந்து அழைப்புகளை ஒட்டுக்கேட்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கருவிகளை இஸ்ரேலிடம் இருந்து வாங்க சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் தொழில்நுட்ப ஆலோசகராக உள்ள ரவிபால் என்ற நபர் உதவியதாகத் தெரிகிறது. இவை 'மென்பொருள்' நிறுவனம் என்ற பெயரில் இறக்குமதி செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

தெலங்கானா மாநிலத்தின் தற்போதைய முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி செய்யும் ஒவ்வொரு அழைப்பும் ஒட்டுக் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பரபரப்பை ஏற்படுத்திய மூன்று விஷயங்கள்

 தெலங்கானா போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் - கைதான காவல்துறை உயரதிகாரிகள்; கேசிஆர் மகனுக்கு தொடர்பு உள்ளதா?

பட மூலாதாரம், Getty Images

1. தேர்தல்களின்போது பணப் பட்டுவாடாவை கண்காணித்தல் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களின் பணத்தைப் பறிமுதல் செய்தல்.

அ) 2018 தேர்தலில் தெலுங்கு தேசம் வேட்பாளரிடம் இருந்ததாகக் கூறப்படும் 70 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.

பி) 2020 டுபாக்கா தொகுதி இடைத் தேர்தலின்போது ரகுநந்தன ராவ்-க்கு பரிச்சயமானவர்கள் மீதான கண்காணிப்பின் மூலம் சித்திப்பேட்டை சிட் ஃபண்ட் நிறுவன உரிமையாளரிடம் இருந்து கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது.

இ) முந்தைய 2022 இடைத்தேர்தலின்போது, ​​கோமதி ரெட்டி வெங்கட ரெட்டிக்கு அறிமுகமானவர்கள் உளவு பார்க்கப்பட்டு சுமார் மூன்றரை கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

2. தேர்தலின்போது போலீஸ் அதிரடிப்படை வாகனங்களில் பிஆர்எஸ் கட்சிக்குத் தேவையான பணத்தைக் கொண்டு செல்வது.

3. தொழிலதிபர்கள் மற்றும் தலைவர்களின் போன்களை உளவு பார்த்து அதன்மூலம் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அவர்களிடம் பணம் வசூலிப்பது.

4. திரையுலகப் பிரபலங்கள், பல தலைவர்களின் குடும்ப உறுப்பினர்கள், சொந்தக் கட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

5. கடந்த 2023ஆம் ஆண்டு இறுதியில் நடந்த சட்டமன்ற தேர்தலின்போது பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்ற பிரபலங்களின் போன்களை ஒட்டுக் கேட்டனர்.

சாதி அம்சம்

 தெலங்கானா போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் - கைதான காவல்துறை உயரதிகாரிகள்; கேசிஆர் மகனுக்கு தொடர்பு உள்ளதா?

பட மூலாதாரம், Getty Images

கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகளில் பெரும்பாலானோர் முன்னாள் முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவின் சாதியான வேலமா சாதியைச் சேர்ந்தவர்கள். இவர்களுள், ராதாகிஷன் ராவ், பிரபாகர ராவ், புஜங்கரா ராவ், பிரனீத் ராவ் ஆகியோர் முக்கியமானவர்கள்.

தெலுங்கு பேசும் மாநிலங்களில் ஆளும் முதலமைச்சர்கள் தங்களது சொந்த சாதியைச் சேர்ந்தவர்களை முக்கிய உளவுத்துறை அதிகாரிகளாக நியமிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அது இங்கும் தொடர்ந்தது.

சந்திரபாபு ஆட்சியில் கம்மா சாதியைச் சேர்ந்தவர்களும், ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் ரெட்டி சாதியைச் சேர்ந்தவர்களும் உளவுத்துறை தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த அதிகாரிகளில் பலர் ஓய்வு பெற்ற பிறகும் சிறப்புப் பணி அதிகாரிகளாகத் தொடர்ந்து பணியாற்றினர்.

சட்டம் என்ன சொல்கிறது? ஆதாரம் உள்ளதா?

 தெலங்கானா போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் - கைதான காவல்துறை உயரதிகாரிகள்; கேசிஆர் மகனுக்கு தொடர்பு உள்ளதா?

பட மூலாதாரம், Getty Images

தொலைபேசி ஒட்டுக் கேட்பது தந்தி சட்டத்தின் கீழ் குற்றம். ஆனால், இந்தியாவில் இதுவரை தந்தி சட்டத்தின் கீழ் தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. நாட்டிலேயே முதல்முறையாக, தந்தி சட்டத்தை இந்த வழக்கில் சேர்க்கக் கோரி, ஹைதராபாத் போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66, இந்திய தந்திச் சட்டம் 2007இன் பிரிவு 419A மற்றும் அரசியலமைப்பின் அடிப்படை உரிமையான தனியுரிமைக்கான உரிமை ஆகியவற்றின் கீழ் தொலைபேசி ஒட்டுக்கேட்பது குற்றம். 1988இல் கர்நாடக முதலமைச்சர் ராமகிருஷ்ண ஹெக்டே அரசு, போன் ஒட்டுக்கேட்புக்கு போலீசாருக்கு அனுமதியளித்ததற்காக அவர் ராஜினாமா செய்தார்.

பொதுவாக, தெலுங்கு மாநிலங்களில் மாவோயிஸ்ட் மற்றும் இஸ்லாமிய தீவிரவாதிகளின் விஷயத்தில் தொலைபேசி ஒட்டுக்கேட்பு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பின்னர் தனி தெலங்கானா இயக்கத்தின் போதும் பெருமளவில் பயன்படுத்தப்பட்டது.

பெகாசஸ் மென்பொருள் இஸ்ரேலில் இருந்து வந்ததாக அறியப்படுகிறது. இலக்கு வைக்கப்பட்ட நபரின் வீட்டின் அருகே இந்த இயந்திரங்களைக் கொண்ட வண்டி ஒன்று நிறுத்தப்பட்டு அழைப்புகளை ஒட்டுக்கேட்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதுபோன்ற சுமார் 20 வாகனங்கள் தெலங்கானா காவல்துறையிடம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த வழக்கு சட்டப்பூர்வமாக நிலைக்க ஆதாரங்கள் முக்கியம். ஆனால், இந்த வழக்கின் ஆதாரங்களை பிரனீத் ராவ் ஏற்கெனவே அழித்துவிட்டார். ‘ஹார்டு டிஸ்க்’குகளை அறுத்து முசி ஆற்றில் வீசியதை போலீசார் முன் ஒப்புக்கொண்டார். கணினிகளும் அழிக்கப்பட்டன. ஆதாரங்களைச் சேகரிப்பது கடினமாக இருந்தாலும் தெலங்கானா போலீசார் தங்களால் இயன்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அழித்த ஹார்டு டிஸ்க்குகளை பிரனீத் ராவ் முசி ஆற்றில் வீசினார். பதிவு அறையில் இருந்த சான்றுகள் அழிக்கப்பட்டன. அங்கு கணினி ஹார்டு டிஸ்க்குகள் சேதமடைந்ததால், அங்கு விழுந்த மிச்சங்கள் கைப்பற்றப்பட்டன.

ஹார்டு டிஸ்க்குகள் நாகோலுவில் வீசப்பட்ட இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் பல மீட்கப்பட்டன. பிரனீத் ராவ் அவற்றை டிசம்பர் 4ஆம் தேதி தூக்கி எறிந்தார். அலுவலகத்தில் கோப்புகள் எரிந்ததற்கான ஆதாரங்களையும் போலீசார் சேகரித்தனர். மார்ச் 22ஆம் தேதி பிரனீத் ராவை சிறப்புப் புலனாய்வுப் பிரிவு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், அவர் முன்னிலையில் சில கணினிகள், உபகரணங்கள், ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களைக் கைப்பற்றினர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒருவருக்கொருவர் பேச வேண்டியிருக்கும் போது வாட்ஸ்அப், சிக்னல் மற்றும் ஸ்னாப் சாட் போன்ற செயலிகளை மட்டுமே பயன்படுத்தினர். தற்போது தடயவியல் நிபுணர்கள் மூலம் தகவல்களை மீட்டெடுக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

புகார் அளிக்கும் பிரமுகர்கள்

 தெலங்கானா போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் - கைதான காவல்துறை உயரதிகாரிகள்; கேசிஆர் மகனுக்கு தொடர்பு உள்ளதா?

பட மூலாதாரம், Getty Images

இந்த அதிகாரிகளின் பெயர்கள் வெளிவந்தவுடன், கடந்த காலங்களில் அந்த அதிகாரிகளால் தொந்தரவு செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் தொலைபேசியும் ஒட்டுக் கேட்கப்பட்டதாக சந்தேகிப்பவர்கள் ஹைதராபாத் நகரின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்து வருகின்றனர்.

ராதாகிஷன் ராவ் மீது பாஜக பிரமுகரான சிகோடி பிரவீன் புகார் அளித்தார். தன் மீது பொய் வழக்குகள் போடுவதாக ராதாகிஷன் ராவ் மிரட்டியதாகவும், தன்னை ஆதரவாளர்களிடம் ஆயுதம் ஏதும் இல்லை என்றும் சிகோடி பிரவீன் தனது புகாரில் எழுதியுள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் இந்த போன் ஒட்டுக்கேட்பு தொடர்கிறதா என்ற சந்தேகம் தங்களுக்கு இருப்பதாக பிஆர்எஸ் ஆட்சியில் முன்பு அமைச்சராகப் பணியாற்றி தற்போது பாஜகவில் உள்ள ஈடல ராஜேந்திரன் கூறினார். துணை முதலமைச்சராக இருந்த தட்டிகொண்ட ராஜய்யாவை பதவியில் இருந்து நீக்கியபோது, ​​இதே விஷயத்தை கே.சி.ஆரிடம் கூறியதாகவும், அதற்கான அனைத்து ஆதாரங்களும் தன்னிடம் இருப்பதாக கே.சி.ஆர் கூறியதாகவும் அவர் விளக்கமளித்தார்.

ஹைதராபாத்தில் மட்டுமின்றி, கே.சி.ஆர் மகன் கே.டி.ஆரின் சொந்த தொகுதியான சிரிசில்லாவிலும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாக சிரிசில்லாவின் உள்ளூர் காங்கிரஸ் தலைவர் கே.கே.மகேந்தர் ரெட்டி, ஹைதராபாத் ஆணையரிடம் புகார் அளித்தார்.

ரியல் எஸ்டேட் வியாபாரியான சந்தியா ஸ்ரீதர் ராவ், ராதாகிஷன் ராவ் தனது போனை ஒட்டுக்கேட்டு மிரட்டிப் பணம் பறித்ததாக பஞ்சாகுட்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பாஜகவின் முன்னாள் எம்எல்ஏ ரகுநந்தன ராவ் தனது தொலைபேசி மற்றும் உறவினர்களின் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டதாக டிஜிபியிடம் புகார் அளித்தார். கணவன்-மனைவியின் வார்த்தைகளுக்கு செவி சாய்ப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் ஷபீர் அலி குற்றம் சாட்டியுள்ளார்.

ராதாகிஷன் ராவ் தன்னைத் தடுத்து நிறுத்தி தனது குடியிருப்பை வலுக்கட்டாயமாக வாடகைக்கு விட்டதாக குக்கட்பள்ளி போலீசில் சுதர்சன் குமார் என்ற நபர் புகார் அளித்தார்.

அரசியல்ரீதியாக என்ன நடக்கிறது?

 தெலங்கானா போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் - கைதான காவல்துறை உயரதிகாரிகள்; கேசிஆர் மகனுக்கு தொடர்பு உள்ளதா?

பட மூலாதாரம், Getty Images

இந்த வழக்கை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. உண்மையில், தற்போதைய முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, ​​இந்த தொலைபேசி ஒட்டுக்கேட்பு குறித்து அப்போதைய அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த வழக்கில் ஏ1 ஆக உள்ள பிரபாகர ராவ் பெயரை பொதுக் கூட்டங்களில் குறிப்பிட்டுப் பல எச்சரிக்கைகளை விடுத்த ரேவந்த், தான் ஆட்சிக்கு வந்தால் பிரபாகர ராவ் மீது நடவடிக்கை எடுப்பதாக அப்போது அறிவித்தார்.

கணவனும் மனைவியும் பேசிக் கொண்டிருப்பதுகூட ஒட்டுக் கேட்கப்பட்டதாக அவர் கூறினார். இதற்கு யார் காரணமானாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி சமீபத்தில் எச்சரித்தார். அதுமட்டுமின்றி, கே.சி.ஆரின் மகன் கே.டி.ஆர்-ஐ இந்த விவகாரத்தில் மையப்படுத்தி காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் காவல்துறை அதிகாரிகளின் அரசியல் முதலாளிகள் மீது விரைவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அப்படி நடந்தால், நாட்டில் அரசியல்வாதிகள் தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் கைது செய்யப்படும் அபூர்வ சம்பவங்களில் ஒன்றாக இது அமையும்.

ஆனால், இந்த விவகாரத்தில் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று கே.டி.ஆர். கூறியுள்ளார். “நான் எந்த கதாநாயகியையும் மிரட்டவில்லை. மன்னிப்பு கேட்காவிட்டால் என் மீது பொய் வழக்கு போட்டவர்கள் மீது அவதூறு வழக்கு தொடருவேன். எனக்கும் போன் ஒட்டுக் கேட்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் அவ்வளவு தாழ்ந்தவன் அல்ல.

என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களை வழங்குங்கள். 2004இல் இருந்து தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரங்களை விசாரிக்க வேண்டும். அப்போது இருந்த அதே அதிகாரிகள் இப்போதும் இருக்கிறார்கள், அனைவரையும் விசாரிக்க வேண்டும்,” என்றார் கே.டி.ஆர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)