பதஞ்சலி: பாபா ராம்தேவ் சிறை செல்ல வாய்ப்பா? உச்சநீதிமன்றத்தில் என்ன நடந்தது?

பதஞ்சலி மீதான தவறான விளம்பரங்கள் வழக்கு

பட மூலாதாரம், ANI

    • எழுதியவர், பைசல் முகமது அலி
    • பதவி, பிபிசி செய்தியாளர்

பதஞ்சலி நிறுவனத்தின் தவறான மருந்து விளம்பரங்களால் சர்ச்சை ஏற்பட்டு, இது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தை எட்டியிருக்கும் வேளையில், இதுபோன்ற விளம்பரங்களைத் தடுக்கக்கூடிய சட்டத்தையே மத்திய அரசு ரத்து செய்யப் போகிறது.

மேலும், மத்திய அரசு நேரடியாக அறிவுறுத்தியும்கூட, பதஞ்சலி மீதான தவறான விளம்பரங்கள் வழக்கில் அந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுப்பதற்கான விதிகளை உத்தராகண்ட் அரசு பின்பற்றவில்லை. மாநில அரசு, பதஞ்சலி நிறுவனத்திற்கு நோட்டீஸ் மட்டுமே அனுப்பியது.

மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டத்தின் பிரிவு 170 மற்றும் அது தொடர்பான விதிகளை நீக்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று சம்பந்தப்பட்ட மாநிலத் துறைகளுக்கு, மத்திய ஆயுஷ் அமைச்சகம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கடிதம் அனுப்பியுள்ளது.

பதஞ்சலி வழக்கு தொடர்பாக புகார்தாரருக்கும் மத்திய அரசுக்கும் இடையே நடந்த கடிதப் போக்குவரத்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட பதில்கள் மற்றும் பிற ஆவணங்கள் மூலம் இந்த விஷயங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

'தொழில்துறை அழுத்தத்தின் விளைவு'

பதஞ்சலி மீதான தவறான விளம்பரங்கள் வழக்கு

பட மூலாதாரம், ANI

கடிதத்தில், ஆயுஷ் அமைச்சகம் இந்த சட்ட நீக்கம் குறித்த அறிவிப்புக்கு கால அவகாசம் தேவைப்படும் என்று கூறியுள்ளது. அதுவரை இந்த சட்டத்தின் கீழ் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும் மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டத்தின் பிரிவு 170 எந்த மருந்தின் நன்மைகளையும் மிகைப்படுத்தி விளம்பரப்படுத்துவதைத் தடை செய்கிறது.

கடந்த 2018ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தில் பிரிவு 170 சேர்க்கப்பட்டது. ஆனால் தற்போது தவறான பிரசாரங்களைத் தடை செய்யும் பிரிவை ரத்து செய்யும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது.

சுகாதாரப் பணியாளர் மற்றும் கண் நிபுணர், மருத்துவர் பாபு கே.வி-யின் கருத்துப்படி, இது 'தொழில்துறை அழுத்தத்தின் விளைவு'. பிரிவு 170க்கு எதிராக ஆயுர்வேத நிறுவனங்களின் குழு உயர்நீதிமன்றம் சென்றுள்ளது.

குன்னூரில் வசிக்கும் மருத்துவர் பாபு, கடந்த ஐந்து ஆண்டுகளாக பதஞ்சலி மற்றும் பிற நிறுவனங்களின் செயல்பாடு, விளம்பரங்கள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். கடிதப் போக்குவரத்து, ஆர்டிஐ வழியே பெறப்பட்ட ஆவணங்கள் மூலம் அவர் சேகரித்த தகவல்கள் பதஞ்சலிக்கு எதிரான இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐஎம்ஏ) வழக்கில் உதவியுள்ளன. இந்த வழக்கில் அவர் முக்கியப் பங்கு வகிக்கிறார்.

உரிமம் வழங்கும் அதிகாரம்

பதஞ்சலி மீதான தவறான விளம்பரங்கள் வழக்கு

பட மூலாதாரம், ANI

இந்திய மருத்துவ சங்கம் (IMA) என்பது நவீன மருந்துகள் (அலோபதி) தொடர்பான மருத்துவர்களின் குழு. இது நாடு முழுவதும் கிளைகளைக் கொண்டுள்ளது.

பதஞ்சலி விவகாரத்தில், மருந்து மற்றும் மந்திர நிவாரணிகள் (1954) சட்டத்தின் (Drugs and Magic Remedies (1954) Act) கீழ் இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கக் கோரி ஐஎம்ஏ வழக்குப் பதிவு செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

அதே நேரத்தில், உத்தராகண்ட் அரசும் பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பால்கிருஷ்ணாவின் பதஞ்சலி நிறுவனத்திற்கு எதிராகப் பிரிவு 170இன் கீழ் மற்றொரு சட்டத்தின் அடிப்படையில் (மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டம்) தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் அறிவுறுத்தல்கள் இருந்தபோதிலும், கடுமையான நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ள இந்த விஷயத்தில் மாநில அரசின் உரிம ஆணையம் நேரடியாக சட்டங்களை நாடவில்லை.

பதஞ்சலிக்கு எதிரான இந்தப் புகார்கள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த நிலையில், பிப்ரவரி 2023இல் இந்த விஷயத்தில் தனது நிலைப்பாட்டை மத்திய அரசு தெளிவுபடுத்தியது.

உத்தராகண்ட் அரசுக்கு அனுப்பிய பதிலில், பிரிவு 170 தொடர்பான எந்த வகையான தண்டனை அல்லது நடவடிக்கைக்கும் மும்பை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக திவ்யா பார்மசி (பதஞ்சலி) கூறியது.

மாநில அரசின் நோட்டீசுக்கு பிறகு திவ்யா பார்மசியும் விளம்பரங்களை நிறுத்துவதாகக் கூறியிருந்தது. ஆனால் சில நாட்கள் இடைநிறுத்தத்திற்குப் பிறகு, அந்நிறுவனம் மீண்டும் அத்தகைய விளம்பரங்களை வெளியிடத் தொடங்கியது.

தவறான விளம்பரங்கள் தொடர்பான வழக்கு விசாரணை

பதஞ்சலி மீதான தவறான விளம்பரங்கள் வழக்கு
படக்குறிப்பு, டாக்டர் பாபு கே.வி, கடந்த ஐந்து ஆண்டுகளாக பதஞ்சலி மற்றும் பிற நிறுவனங்களின் மருந்துகள் மற்றும் விளம்பரங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.

திவ்யா பார்மசி என்பது பதஞ்சலிக்கு சொந்தமான திவ்ய யோகா மந்திர் அறக்கட்டளையின் ஒரு பிரிவு. பதஞ்சலி நிறுவனத்தின் தவறான விளம்பரங்கள் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அந்நிறுவனத்தின் மீது எடுக்கப்பட்ட மிதமான நடவடிக்கை குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பால்கிருஷ்ணா ஆகியோர் கடும் நடவடிக்கைக்குத் தயாராக இருக்க வேண்டும் என்றும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பதிலளிக்க ஒரு வாரத்திற்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும், அவர்கள் மீது ஏன் அவமதிப்பு வழக்குத் தொடரக் கூடாது என்பதை விளக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இருவரும் ஏப்ரல் 10ஆம் தேதி அடுத்தகட்ட விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற விசாரணையின்போது, ​​தவறான விளம்பரத்தை நிறுத்துமாறு பதஞ்சலி நிறுவனத்தை உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டது, அதற்கு அந்நிறுவனமும் ஒப்புக்கொண்டது.

ஆனால் அதன் பிறகு, ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பாபா ராம்தேவ் உரையாற்றினார். அது மட்டுமல்லாது, ஒரு புதிய விளம்பரத்தை வெளியிட்டது நிறுவனம்.

பதஞ்சலி மீதான தவறான விளம்பரங்கள் வழக்கு

பட மூலாதாரம், ANI

உச்ச நீதிமன்றத்தின் கேள்விகள்

செய்தி நிறுவனமான பிடிஐ வெளியிட்ட செய்தியின்படி, உச்சநீதிமன்றம் அரசாங்கத்தின் மீது கேள்விகளை எழுப்பியுள்ளது, "அலோபதியில் கோவிட் நோய்க்கு மருந்து இல்லை என்ற செய்தியை பதஞ்சலி எல்லா இடங்களிலும் பரப்பியபோது, ​​​​இந்த விஷயத்தில் மத்திய அரசு கண்களை மூடிக் கொண்டிருந்தது ஏன்?"

உத்தராகண்ட் அரசின் அணுகுமுறையைக் கடுமையாகக் கண்டித்த நீதிமன்றம், இரண்டு நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டும், நோட்டீஸ் மட்டும் வழங்கி "கை கழுவிவிட்டதால், மாநில அரசு கடமையைச் செய்யத் தவறிவிட்டது" என்று கூறியது.

இந்த வழக்கில் அடுத்த விசாரணை நாளில் ஆஜராக உத்தராகண்ட் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பதஞ்சலி நிறுவனத்துடன் தொடர்புடைய திவ்யா பார்மசிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விளம்பரங்கள் ரத்த அழுத்தம், தைராய்டு, கல்லீரல் மற்றும் தோல் தொடர்புடைய நோய்களை முழுமையாகக் குணப்படுத்துவதாகக் கூறியது, மேலும் நவீன மருத்துவ அறிவியலையும் அவை விமர்சித்தன.

ராம்தேவ் நிறுவனத்தின் வாக்குறுதிகள்

பதஞ்சலி மீதான தவறான விளம்பரங்கள் வழக்கு

பட மூலாதாரம், SONU MEHTA/HINDUSTAN TIMES VIA GETTY IMAGES

படக்குறிப்பு, கொரோனாவை குணப்படுத்தும் எனக் கூறப்பட்ட மருந்தான ‘கொரோனில்’ வெளியீட்டு விழாவில் ராம்தேவுடன் ஹர்ஷ்வர்தன் மற்றும் நிதின் கட்கரி ஆகியோர் மேடையில் இருந்தனர்.

பாபா ராம்தேவின் நிறுவனம், கொரோனாவை குணப்படுத்தும் என கூறப்பட்ட மருந்தான ‘கொரோனில்’ குறித்து பல உரிமைகோரல்களை முன்வைத்தது. மேலும் உலக சுகாதார நிறுவனத்திடம் இருந்து இந்த மருந்திற்கு அங்கீகாரம் கிடைத்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், உலக சுகாதார நிறுவனம் அத்தகைய அங்கீகாரத்தை வழங்க மறுத்துவிட்டது.

கொரோனில் வெளியீட்டின்போது, ​​நரேந்திர மோதி அரசாங்கத்தின் இரண்டு அமைச்சர்கள், முன்னாள் சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மற்றும் நிதின் கட்கரி ஆகியோர் ராம்தேவுடன் மேடையில் இருந்தனர்.

இந்த வழக்கில் முன்னாள் சுகாதார அமைச்சர் முன்னிலையில் இருப்பது குறித்தும் ஐஎம்ஏ கேள்வி எழுப்பியிருந்தது. யோகா குரு ராம்தேவ் 2010-11இல் ஊழலுக்கு எதிரான பிரசாரத்தின் போது தீவிரமாக இருந்தார், அப்போதைய காங்கிரஸ் மன்மோகன் சிங் அரசாங்கம் அவரைத் தொடர்ந்து குறிவைத்தது.

ஐஎம்ஏ-வின் முன்னாள் பொதுச் செயலாளர் டாக்டர் ஜெயேஷ் லேலே, மும்பையில் இருந்து தொலைபேசியில் பிபிசியிடம் பேசினார். “இதுபோன்ற தவறான விளம்பரங்களின் போக்கு நீண்ட காலமாகத் தொடர்கிறது. அதனால்தான் நாங்கள் முதலில் வெவ்வேறு இடங்களில் காவல்துறையிடம் புகார் செய்தோம், அவை முதல் தகவல் அறிக்கையாக (எஃப்.ஐ.ஆர்) மாற்றப்பட்டன. ஆகஸ்ட் 2022இல் உச்ச நீதிமன்றத்தின் கதவைத் தட்டினோம்,” என்று கூறினார்.

சிறைத் தண்டனை மற்றும் அபராதம்

பதஞ்சலி மீதான தவறான விளம்பரங்கள் வழக்கு

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ஐஎம்ஏ-வின் முன்னாள் பொதுச் செயலாளர் டாக்டர் ஜெயேஷ் லேலே.

நீதிமன்றத்தின் நடவடிக்கை குறித்து டாக்டர் ஜெயேஷ் லேலே மகிழ்ச்சி தெரிவித்தார்.

தற்போது காஷ்மீரில் இருக்கும் மருத்துவர் கே.வி.பாபு பிபிசியிடம் தொலைபேசியில் பேசுகையில், “ஒழுங்குமுறை அதிகாரிகளின் உத்தரவுகளை பதஞ்சலி பலமுறை புறக்கணித்து வருவதாக பதிவுகள் காட்டுகின்றன. உரிமம் வழங்கும் அதிகாரிகளும் சில காரணங்களால் அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதில்லை மற்றும் நோட்டீஸ் வழங்கி மட்டும் விஷயத்தை மூடி மறைக்கிறார்கள்," என்றார்.

கடந்த 2018ஆம் ஆண்டில், எக்ஸ் பக்கத்தில் (முன்னர் ட்விட்டர்) பகிரப்பட்ட கண் சொட்டு மருந்துக்கான ஒரு விளம்பரம் கேரளாவை சேர்ந்த கண் மருத்துவரான டாக்டர் கே.வி.பாபுவின் கவனத்தை ஈர்த்தது, அதைத் தொடர்ந்து ஐந்து வருட நீண்ட சட்டப் போராட்டம் தொடங்கியது.

இந்த நிலையில், அரசியல் செல்வாக்கு கொண்ட 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான பதஞ்சலி நிறுவனத்தை நிறுவிய பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பால்கிருஷ்ணா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தை அவமதித்ததற்காக நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க நேர்ந்தது. அவர்கள் சிறைத் தண்டனையையும் சந்திக்க நேரிடலாம்.

தவறாக வழிநடத்தும் விளம்பரங்களில், முதல் முறை குற்றத்திற்கு ஆறு மாத சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம். இதேபோன்ற வழக்கு மீண்டும் வந்தால், தண்டனையை இரட்டிப்பாக்க, அதாவது ஓராண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் பதஞ்சலி வழக்கில் நீதிமன்ற அவமதிப்பு குறித்தும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், இந்த வழக்கிலும் அவர்கள் தண்டிக்கப்படலாம்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)