டார்ச் லைட்டையே 'பல்பு' என்று நம்பும் மக்கள் - பிகார் கிராமங்களின் நிலை என்ன? பிபிசி கள ஆய்வு

பீகார்

பட மூலாதாரம், SEETU TIWARI

படக்குறிப்பு, டார்ச் லைட்டோடு அமர்ந்திருக்கும் சோனி தேவி
    • எழுதியவர், சீத்து திவாரி
    • பதவி, பிபிசி இந்திக்காக

சரிதாவுடைய மண்வீட்டின் முற்பகுதியில் சோலார் தகட்டை தாங்கி கொண்டிருந்த இரண்டு தூண்களை பார்க்க முடிந்தது. அதில் ஒரு சில மின்கம்பிகளும் கூட தொங்கி கொண்டிருந்தன. இதன் மூலம் அந்த வீட்டில் ஒரு காலத்தில் மின்சாரம் இருந்தது என்பதை புரிந்துக் கொள்ள முடிந்தது.

தனது வாழ்நாளில் பள்ளிக்கே சென்றிடாத சரிதா அந்த சோலார் தகட்டின் கதையை நம்மோடு பகிர்ந்துக் கொண்டார். “அது 2018ஆம் ஆண்டு அரசால் நிறுவப்பட்ட சோலார் தகடு. இதோடு சேர்த்து இரண்டு மின்விளக்குகள் மற்றும் ஒரு மின்விசிறியும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அது சில நாட்கள் மட்டுமே வேலை செய்தது. பின்னர் மொத்தமாக செயல்படாமல் போனதாக” கூறினார் அவர்.

சரிதாவுக்கு தந்தை இல்லை. குடும்பத்தில் உள்ள ஐந்து பிள்ளைகளில் ஒருவரான அவரிடம், நீங்கள் வெளிச்சமே இல்லாமல் இரவில் என்ன செய்வீர்கள் என்று கேட்டேன்? முதலில் அமைதியாக இருந்து பின் பொறுமையாக பேசத் தொடங்கிய அவர்,

“நாங்கள் விலங்குகளை போல இருளில் தான் வாழ்கிறோம். இங்கு கொஞ்சம் பணம் உள்ளவர்கள் அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துக் கொள்கின்றனர். ஆனால், எங்கள் வீட்டில் எனது அம்மா மாடு மேய்த்துதான் குடும்பத்தை பார்த்துக் கொள்கிறார். சகோதரரும் எந்த பணிக்கும் செல்லவில்லை” என்று கூறினார்.

சரிதாவின் வீட்டிற்கு அருகில்தான், தனது மூன்று குழந்தைகளுடனும், டார்ச் லைட் வெளிச்சத்திலும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார் சோனி தேவி. மீண்டும் மீண்டும் 'டார்ச்' என்பதை அவர் மின்விளக்கு என்றே சொல்லிக்கொண்டிருந்தார். எங்கே உங்களது ​​மின்விளக்கை காட்டுங்கள் என்று கேட்டபோது அவர் டார்ச் லைட்டையே எடுத்துக் காட்டினார்.

சோனி வீட்டின் ஓட்டில் கூட ஒரு சோலார் தகடு செயலற்று கிடந்தது. கொஞ்சம் கோபமான குரலில் பேசிய சோனி, "அரசு கொடுத்த சோலார் தகடு வேலை செய்யவில்லை. இதற்கு பதிலாக அரசு எல்லாருக்கும் நிலம் தந்து அங்கேயே வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ரோஹ்தாஸ் மாவட்டத்தில் எல்லா இடங்களிலும் பல்புகள் உள்ளன" என்று கூறினார்.

பீகார்

பட மூலாதாரம், SEETU TIWARI

படக்குறிப்பு, மின்சாரம், சாலை, தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்த இந்தப் பகுதிக்கு சுதந்திரம் கிடைத்து 70 ஆண்டுகளுக்குப் பிறகே சூரிய சக்தி மூலம் மின்சாரம் கிடைத்தது.

சுதந்திரத்திற்கு பின்னும் மறையாத இருள்

சரிதா மற்றும் சோனி ஆகிய இருவரும் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள லுகாபஹாரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.

லுகாபஹாரு கைமூர் மலைப்பகுதியில் உள்ள ஒரு கிராமம். பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் யாருமே செல்ல முடியாத இந்த பகுதியில் அமைந்துள்ள லுகாபஹாரு போன்ற நூற்றுக்கணக்கான கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இருளில் வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

மின்சாரம், சாலை, தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்த இந்தப் பகுதிக்கு சுதந்திரம் கிடைத்து 70 ஆண்டுகளுக்குப் பிறகே சூரிய சக்தி மூலம் மின்சாரம் கிடைத்தது. ஆனால், அதுவும் நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை.

கைமூர் மலைகள் சுமார் 483 கிமீ நீளமுள்ள விந்திய மலைகளின் கிழக்குப் பகுதியாகும். இது மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள கடங்கியிலிருந்து பீகாரில் உள்ள சசரம் வரை பரவியுள்ளது.

ரோஹ்தாஸ் மற்றும் கைமூர் மாவட்டங்களின் கிராமங்கள் இந்த மலைகளில் தான் அமைந்துள்ளன. ரோஹ்தாஸ் மற்றும் கைமூர் மாவட்டத்தின் ரோஹ்தாஸ் மற்றும் நௌஹட்டா தொகுதிகளில், அதௌரா மற்றும் செயின்பூர் தொகுதிகளின் கிராமங்கள் உள்ளன.

ரோஹ்தாஸ் பிளாக்கின் ரோஹ்தாஸ்கர் பஞ்சாயத்து தலைவர் நாகேந்திர யாதவ் பேசுகையில், "எனது பஞ்சாயத்தில் 27 கிராமங்கள் உள்ளன. அதில் 20 கிராமங்கள் மலைப்பகுதியில் அமைந்துள்ளன. இந்த 20 கிராமங்களில் 23 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இங்கு 2017ஆம் ஆண்டு எல்&டி நிறுவனத்தின் சோலார் பேனல்களை அரசு நிறுவியது. இதை மூலம் ஒன்றரை ஆண்டுகளுக்கு இந்த மக்களுக்கு மின்சாரம் கிடைத்தது. ஆனால் அதற்கு பிறகு இவற்றின் பேட்டரி பழுதடைந்தது. நாங்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தோம், ஆனால் எந்த தீர்வும் கிடைக்கவில்லை, பஞ்சாயத்தில் உள்ள மக்கள் அனைவரும் எங்களை குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறினார்.

அரசு இந்த கிராமங்களில் இரண்டு வழிகளில் சோலார் பேனல்களை நிறுவியுள்ளது. அதில் கிராமத்திற்கான ஒன்றிணைந்த சோலார் பேனல்கள் மற்றும் கிராமத்தின் வெளிப்பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளுக்கு தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ள சோலார் பேனல்கள் அடங்கும்.

பீகார்

பட மூலாதாரம், SEETU TIWARI

படக்குறிப்பு, ரோஹ்தாஸ்கர் பஞ்சாயத்து

தீன் தயாள் கிராம் ஜோதி யோஜனா திட்டம்

கைமூர் மலைப்பகுதி, யாரும் செல்ல முடியாத மற்றும் உயரமான இடத்தில் அமைந்திருப்பதைத் தாண்டி, இது வனத் துறையின் பகுதியாகும்.

ஒரு காலத்தில் இந்த பகுதியும் நக்சல்களால் பாதிக்கப்பட்டிருந்தது. அதற்கான தடயங்கள் இன்னும் ரோஹ்தாஸ் கோட்டையின் இடிபாடுகளில் காணப்படுகின்றன.

மத்திய அரசு டிசம்பர் 2014 இல் தீன் தயாள் கிராம் ஜோதி யோஜனா (DDUGJY) திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

ராஜ்யசபாவில் பிப்ரவரி 6, 2024 அன்று அளிக்கப்பட்ட பதிலின்படி, இந்தத் திட்டத்தின் கீழ் 18,374 கிராமங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. அவற்றில் 2,763 கிராமங்கள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (சூரிய ஆற்றல் போன்றவை) மூலம் மின்மயமாக்கப்பட்டுள்ளன.

2020-23 ஆம் ஆண்டிற்கான DDUGJY மற்றும் சௌபாக்யா திட்டங்களின் கீழ் பீகாருக்கு 2,152 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.

DDUGJY திட்டத்தின் கீழ், பீகாரில் உள்ள கைமூர் மலைப் பகுதியில் 2016ஆம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதன்பிறகு, 2017-ம் ஆண்டு முதல் இங்கு சோலார் பேனல்கள் பொருத்தும் பணி தொடங்கப்பட்டது. 2018-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் நிதிஷ்குமார் இந்தப் பகுதிக்கு வந்தபோது, ​​பெரும்பாலான கிராமங்கள் சூரிய ஒளியின் உதவியோடு மின்மயமாக்கப்பட்டிருந்தன.

பீகார்

பட மூலாதாரம், SEETU TIWARI

படக்குறிப்பு, ஷியாம்நாராயண் ஓரான் ரோஹ்தாஸ்கர் பஞ்சாயத்தில் உள்ள ரனதிஹ் கிராமத்தின் வார்டு எண் 4 இன் கவுன்சிலராக உள்ளார்.

‘சூரியன் மறைந்தவுடன் நாங்கள் தூங்கிவிடுவோம்’

ஆனால், ஓராண்டுக்கு பிறகு இக்கிராமங்களில் அமைக்கப்பட்ட சோலார் பேனல்கள் பழுதடையத் தொடங்கின.

பிபார்டி பஞ்சாயத்தின் ஹஸ்தி கிராமத்தைச் சேர்ந்த ராம்நரேஷ் கூறுகையில், "2018 முதல், மின்சாரம் சில சமயங்களில் கிடைக்கிறது, சில சமயங்களில் கிடைப்பதில்லை. மலை முழுவதும் நிறுவப்பட்டுள்ள சோலார் தகடுகள் சேதமடைந்து கிடக்கிறது. சீனாவை சேர்ந்த பொருட்களை கொண்டு வந்தால் வேறு என்ன நடக்கும்?. சூரியன் மறைந்துவிட்டால் தூங்க வேண்டும் என்பது போல் எங்கள் நிலை இருக்கிறது”

ஷியாம்நாராயண் ஓரான் ரோஹ்தாஸ்கர் பஞ்சாயத்தில் உள்ள ரனதிஹ் கிராமத்தின் வார்டு எண் 4 இன் கவுன்சிலராக உள்ளார்.

“எங்கள் கிராமத்தில் ஒரு ஆண்டு முழுவதும் மின்சாரம் இருந்தது, அதற்கு பின் மின்சாரம் கிடைக்கவில்லை. அரசால் பொறுத்தப்பட்ட சோலார் பேனல்கள் ஒன்றன் பின் ஒன்றாக பழுதடைய தொடங்கி விட்டது. அதனால், கிராமம் முழுவதும் இருந்த மின்சாரம் இல்லாமல் போய்விட்டது.”

பீகார்

பட மூலாதாரம், SEETU TIWARI

படக்குறிப்பு, ராஜேந்திர ஓரான்

மின்சாரத்திற்காக இந்த கிராம மக்கள் சிலர் தங்களது வீடுகளில் சோலார் தகடுகளை சொந்தமாக அமைத்துள்ளனர்.

ராஜேந்திர ஓரான் மற்றும் ராஜந்தி தேவியின் வீட்டிற்குள் பொருத்தப்பட்ட சோலார் பேனல்கள் செயலிழந்து கிடக்கின்றன.

இதுகுறித்து ராஜேந்திர ஓரான் கூறுகையில், "எங்கள் சோலார் தகடு 1,800 ரூபாய்க்கும், பேட்டரி 1,200 ரூபாய்க்கும் மற்றும் 3 பல்புகள் தலா 25 ரூபாய்க்கும் வாங்கி பொறுத்தப்பட்டுள்ளன. இந்த பல்புகளை சில நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும். இவை மூன்றையும் இரவில் மட்டுமே சமைக்கும் போதும், சாப்பிடும் போதும் பயன்படுத்துகிறோம்.”

பீகார்

பட மூலாதாரம், SEETU TIWARI

படக்குறிப்பு, விஜேந்திரா

டார்ச்லைட் வாழ்க்கை

உண்மையில், சோலார் தகடுகள் அமைக்கப்பட்ட பிறகு முதலில், பொது விநியோக திட்டம் மூலம் வழங்கப்பட்டு வந்த மண்ணெண்ணெய் கிடைப்பது நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக விளக்குகள் மற்றும் குத்துவிளக்குகள் ஏற்றுவதை மக்கள் நிறுத்திவிட்டனர்.

ரோஹ்தாஸ்கர் பஞ்சாயத்தைச் சேர்ந்த சுனிதா ஓரானை நான் சந்தித்தபோது, ​​அவர் எனக்கு இரண்டு தீப்பந்தங்களைக் காட்டினார்.

"நாங்கள் இதை எரிப்பதன் மூலமே உணவு சமைக்கிறோம், இப்போது மண்ணெண்ணெய்யும் கிடைக்காததால், விறகுகள் எப்படி எரியும்? ரோஹ்தாஸுக்கு யாராவது சென்றால் மட்டுமே, பேட்டரியை கொண்டு வருகின்றனர்” என்று கூறுகிறார் சுனிதா.

சுனிதாவைப் போலவே பிபார்டி பஞ்சாயத்தில் உள்ள நயாதி கிராமத்தைச் சேர்ந்த விஜேந்திரா கூறுகையில், "மின்சாரம் வந்ததும் எண்ணெய் கிடைப்பது நின்றுவிட்டது. முன்பு அரை லிட்டர் மண்ணெண்ணெய் கிடைத்தது. இப்போது அதுவும் இல்லாததால் சூரியன் மறைந்த பிறகு இருட்டில் கிடக்கிறோம். நாங்கள் ஒன்றும் மெக்கானிக் இல்லை, இருப்பினும் பேட்டரிகளை நாங்களே சரி செய்கிறோம்” என்கிறார்.

பீகார்

பட மூலாதாரம், SEETU TIWARI

படக்குறிப்பு, கார்பன் உமிழ்வு இல்லாத கிராமம்

ரெஹால்: பீகாரின் முதல் கார்பன் நெகட்டிவ் கிராமம்

முதல்வர் நிதிஷ்குமார் ஏப்ரல் 6, 2018 அன்று கைமூர் மலைப்பகுதியில் அமைந்துள்ள பிபார்டி பஞ்சாயத்தின் ரெஹால் கிராமத்திற்கு வந்திருந்தார்.

அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து மதிப்பீடுகள் செய்வதற்காக அவர் அங்கு வந்திருந்தார்.

ரோஹ்தாஸ் மாவட்ட இணையதளத்தின்படி, இது ஒரு கார்பன் நெகட்டிவ் கிராமம்(Carbon Negative Village), அதாவது இந்த கிராமம் சூரிய சக்தியில் இருந்து மட்டுமே மின்சாரத்தை பெறுகிறது.

இந்த கிராமத்தின் பகுதிகள் குறித்த படங்களும் அந்த இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளது.

இக்கிராமத்தில் நான்கு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சோலார் பேனல்கள் மூலமாகவே மொத்த கிராமத்திற்கும் மின்சாரம் கிடைக்கிறது.

பீகார்

பட மூலாதாரம், SEETU TIWARI

படக்குறிப்பு, "இங்கு குடிப்பதற்கு தண்ணீரும் இல்லை, குடியிருக்க மின்சாரமும் இல்லை" என்கிறார் இந்த கிராமத்தைச் சேர்ந்த தனஞ்சய் யாதவ்.

"ஒரு பேனல் மூலம் ஒரு சில வீடுகளுக்கு மட்டுமே மின்சாரம் கிடைக்கிறது. மீதமுள்ள பேனல்கள் வெறும் அழகு சாதனப் பொருட்கள் தான். இங்கு குடிப்பதற்கு தண்ணீரும் இல்லை, குடியிருக்க மின்சாரமும் இல்லை" என்கிறார் அந்த கிராமத்தைச் சேர்ந்த தனஞ்சய் யாதவ்.

ரெஹால் கிராமத்தில் சலூன் கடை நடத்தி வரும் மும்தாஜ் கூறுகையில், "எங்கள் முன்னோர்கள் விறகுகளை எரித்து வாழ்க்கையை நடத்தினார்கள். அப்போது அவ்வளவு மரமும் கிடைத்தது. ஆனால் தற்போது வனத்துறையினர் விறகு எடுக்க கூட அனுமதிப்பதில்லை. ஆட்சியரிடம் புகார் கொடுத்தாலும் , யாரும் எதுவும் செய்வதில்லை. இதனால் உறவினர்கள் வந்தால் கூட, அவர்கள் விரைவாகவே ஓடிவிடுகிறார்கள்" என்கிறார்.

"இக்கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த சூரிய ஒளி அடுப்பு முற்றிலும் பழுதடைந்துள்ளது. இந்த அடுப்பில்தான் குழந்தைகளுக்கு மதிய உணவு தயாரிக்கப்படுகிறது. இதை ஒருமுறை பார்த்த "சூரிய சக்தியில் இயங்கும் அடுப்பை முதன்முறையாகப் பார்த்த ரேஹால் கிராமத்தை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம்" என்று கூறியிருந்தார்.

ஆசிரியர் சுரேந்திர சிங் 2003ம் ஆண்டு முதல் இப்பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். அவர் கூறுகையில், ‘‘முதல்வர் இங்கு வந்தபோது இந்த அடுப்பு அமைக்கப்பட்டது. சில நாட்கள் செயல்பட்ட பிறகு அது பழுதடைந்துவிட்டது. இதுகுறித்து தொகுதி கல்வி அலுவலரிடம் (பிடிஓ) பலமுறை புகார் தெரிவித்துள்ளோம்.”

பீகார்

பட மூலாதாரம், SEETU TIWARI

படக்குறிப்பு, அரசுப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சோலார் அடுப்பு

மின்சாரம், குடிநீர், சாலை, கல்வி வசதி இல்லாத கிராமங்கள்

புகழ் பெற்ற ரோஹ்தாஸ்கர் கோட்டை, கடல் மட்டத்திலிருந்து 1,500 அடி உயரத்தில் கைமூர் மலையில் அமைந்துள்ளது. ரோஹ்தாஸ் மற்றும் கைமூர் கிராமங்களும் தோராயமாக இந்த உயரத்தில் தான் அமைந்துள்ளன.

இந்த கிராமங்கள் அனைத்தும் மின்சாரம், குடிநீர், சாலைகள் மற்றும் கல்வி ஆகிய நான்குமே இல்லாமல் உள்ளன. மலை ஏறுவதற்கு இங்கு சரியான பிரதான சாலை இல்லை.

அரசு நல்-ஜல் யோஜனா திட்டத்தின் கீழ், இந்தப் பகுதியில் உள்ள பல வீடுகளில் குழாய்களை அமைத்துள்ளது.

ஆனாலும் கூட இங்கு பல இடங்களில் பெண்கள் அலுமினிய குடங்களை தங்கள் தலையில் சுமந்து செல்வதை பார்க்க முடியும்.

பீகார்

பட மூலாதாரம், SEETU TIWARI

படக்குறிப்பு, மன்வதிதேவி

அப்படி தலையில் குடத்தை சுமந்துக் கொண்டு வந்த மன்வதி தேவியை நான் சந்தித்தேன். "குழாய் அமைக்கப்பட்டிருந்தாலும் எங்களுக்கு வலி மட்டுமே மிச்சம். அவற்றில் தண்ணீர் வருவதில்லை. தினசரி தண்ணீருக்காக போராட வேண்டியுள்ளது" என்று கூறினார் அவர்..

தண்ணீர் மட்டுமல்ல, இங்கு கல்வியும் கூட பெரிய பிரச்சினை. ரனாதிஹ் கிராமத்தைச் சேர்ந்த நிதீஷ் குமார் ஆறாம் வகுப்பிற்குப் பிறகு படிப்பை நிறுத்த வேண்டியதாயிற்று.

அதுகுறித்து அவர் கூறுகையில், "அம்மா எங்களை விடுதியில் தங்கி படிக்க வைத்தார். ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு எங்களால் பணம் திரட்ட முடியவில்லை. அதனால் நாங்கள் படிப்பை விட்டு வெளியேற வேண்டியிருந்தது" என்றார்.

ரனாதிஹ் கிராமத்தைச் சேர்ந்த ராஜந்தி தேவி தனது ஒன்பது வயது மகளை விடுதியில் தங்க வைத்து படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

“இந்த பகுதி முழுவதும் காடு. இந்த கிராமத்தில் பள்ளிக்கூடம் கூடஇல்லை, என் குழந்தை படிக்க மின்சாரமும் இல்லை. மழை பெய்தால் வெள்ளம் வரும், பிறகு எங்கு எங்களது மகளை படிக்க அனுப்புவது?" என்று கேட்கிறார் அவர்.

பீகார்

பட மூலாதாரம், SEETU TIWARI

படக்குறிப்பு, கைமூர் மலைகளில் சோலார் பேனல் அமைக்கும் பணிகள் பிகார் அரசாங்கத்துடன் ஒப்பந்தத்தின் கீழ் லார்சன் மற்றும் டர்போ நிறுவனத்தால் செய்யப்பட்டது.

‘அரசு மின்சாரம் தர நினைக்கிறது, ஆனால் மக்கள் ஆதரவு கொடுக்கவில்லை’

ரோஹ்தாஸ் மாவட்டத்தின் இந்தக் கிராமங்களைப் போலவே, கைமூர் மாவட்டத்தின் மலைப்பகுதியில் அமைந்துள்ள கிராமங்களும் இருளில் மூழ்கியுள்ளன.

கைமூரில் உள்ள டைனிக் பிரபாத் கபாரின் தலைவர் விகாஸ் குமார் கூறுகையில், ​​"அதௌராவில் உள்ள 108 கிராமங்களிலும், செயின்பூரில் உள்ள 18 கிராமங்களிலும் மின்சாரம் இல்லை. இங்கு சோலார் பேனல்கள் இருப்பதால் மின் வசதி அவ்வப்போது வந்து செல்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில் இங்குள்ள மக்களுக்கு அரசின் எந்தத் திட்டத்தின் பலனும் கிடைக்கவில்லை. அவர்கள் மருந்துகள் எடுத்துக்கொள்ளவோ அல்லது படிவத்தை நிரப்பவோ கூட நகரத்திற்கு வர வேண்டும்” என்கிறார்.

கைமூர் மலைகளில் சோலார் பேனல் அமைக்கும் பணிகள் பிகார் அரசாங்கத்துடன் ஒப்பந்தத்தின் கீழ் லார்சன் மற்றும் டூப்ரோ நிறுவனத்தால் செய்யப்பட்டது.

பீகாரின் 12 மாவட்டங்களில் இந்த நிறுவனத்தின் பணிகளை கவனித்து வரும் ரோஹித் ஷர்மா பிபிசியிடம் கூறுகையில், "சோலார் தகடுகளை நிறுவுதல் மற்றும் பராமரிப்பது எங்கள் பொறுப்பு. ஆனால் பிரச்னை என்னவென்றால் எங்களுக்கு மக்களின் ஆதரவு கிடைக்கவில்லை. பேட்டரி திருட்டு, இன்வெர்ட்டர் உடைதல் - வெடிப்பு சம்பவங்கள் ஆகியவை மலைப்பாங்கான பகுதிகளில் தொடர்ந்து நடக்கின்றன.

ரெஹாலில் மட்டும் 6 பேட்டரிகள் திருடப்பட்டுள்ளன. இந்த மின்சாரத்திற்கு மக்கள் ஒரு நாளைக்கு 1 ரூபாய் செலுத்த வேண்டும். ஆனால் அதையும் அவர்கள் செலுத்துவதில்லை.

மேலும், "இந்தப் பகுதி முழுவதும் ஆறு முதல் எட்டு மணி நேரம் மின்சாரம் வழங்க வேண்டும். ஆனால் ஆலையில் பொருத்தப்பட்டிருக்கும் நேர கண்காணிப்பு சாதனத்தையும் மக்கள் சேதப்படுத்துகிறார்கள். இதனால் பேட்டரியின் சுமை அதிகரித்து அது எரிந்து விடுகிறது."

இந்த விவகாரம் குறித்து ரோஹ்தாஸ் மாவட்ட ஆட்சியர் நவீன் குமார் பிபிசியிடம் பேசுகையில், "மின்சார பிரச்னை இருப்பது எங்களுக்குத் தெரியும். அங்குள்ள பேட்டரி பழுதடைந்துள்ளது. இது தொடர்பாக எரிசக்தி துறைக்கு கடிதம் எழுதியுள்ளோம், விரைவில் சரி செய்யப்படும்" என்று கூறியுள்ளார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)