நாடு முழுவதும் ஏழை பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் தருவது சாத்தியமா?

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்

மக்களவை தேர்தலுக்கு இன்னும் இரு வாரங்களே உள்ளன. பாஜக இன்னும் தேர்தல் அறிக்கையை வெளியிடாத நிலையில், இளைஞர்கள் குறிப்பாக பெண்களைக் கவரும் வகையிலான பல திட்டங்களுடன் தேர்தல் அறிக்கையை வெள்ளிக்கிழமை (ஏப். 4) வெளியிட்டது காங்கிரஸ்.

'வர்க், வெல்த், வெல்ஃபேர்' (work, wealth, welfare) என்பதுதான் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் முழக்கம்.

'நியாய பத்ரா' (நீதிக்கான ஆவணம்) என்ற பெயரில் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்

  • தாழ்த்தப்பட்டோர்/பழங்குடியினர்/பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுக்கான 50% உச்ச வரம்பு, அரசியலமைப்பு சட்டத்திருத்தம் மூலம் நீக்கப்படும்.
  • சமூக, பொருளாதார, சாதி ரீயிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்.
  • முறைசாரா தொழிலாளர்களுக்கான ஆயுள் காப்பீடு மற்றும் விபத்து காப்பீடு
  • நகர்ப்புற பகுதிகளில் வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்
  • விவசாயக் கடன் தள்ளுபடி செய்வதற்காக குழு அமைப்பு
  • எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைப்படி விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதாரத்தொகை

இதுபோக, 9-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மொபைல் போன் வழங்கப்படும் உள்பட இன்னும் ஏராளமான வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

காங்கிரசின் வாக்குறுதிகள் 'பொய்களின் மூட்டை' என்று பாஜக விமர்சித்துள்ளது. பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சுதன்சு திரிவேதி இதுகுறித்துக் கூறுகையில், சுதந்திரத்திற்குப் பின் பல ஆண்டுகள் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றியதில்லை என விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் என்ன, வெறும் அறிவிப்புகளாக அல்லாமல் அதைச் செயல்படுத்த முடியுமா, தேர்தலில் கைகொடுக்குமா என்பதைப் பார்க்கலாம்.

ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம்

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

பட மூலாதாரம், INC/X

ஒவ்வொரு ஏழை இந்திய குடும்பத்திற்கும் ஆண்டுதோறும் ரூ. 1 லட்சம் வழங்கும் வகையிலான ‘மகாலட்சுமி' என்னும் திட்டம் செயல்படுத்தப்படும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. வருமான அடுக்கில் அடிமட்டத்தில் உள்ள குடும்பங்களில் இருந்து தகுதியான நபர்கள் அடையாளம் காணப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியுதவி, குடும்பத்திலுள்ள வயது முதிர்ந்த பெண்ணின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் என்றும் பெண்கள் இல்லாதபட்சத்தில் அக்குடும்பத்தின் மூத்த உறுப்பினரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே, காங்கிரஸ் ஆட்சியில் உள்ள கர்நாடகாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களின் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 2,000 நிதியுதவி வழங்கும் ‘கிரகலட்சுமி' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

பட மூலாதாரம், Getty Images

இத்திட்டம் குறித்து பிபிசியிடம் பேசிய சமூக ஆராய்ச்சியாளர் ஆனந்தி, “இது நிச்சயம் வரலாற்று ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த வாக்குறுதிதான். ஆனால், எப்படி சாத்தியப்படுத்துவார்கள் என்பது தெரியவில்லை. மக்களிடையே அரசுகள் மீது நம்பிக்கையின்மை ஏற்பட்டிருக்கிறது. அப்படியிருக்கும்போது இதை நம்புவதில் மக்களுக்குத் தயக்கம் ஏற்படும். எனவே, இந்த வாக்குறுதியைத் தெளிவாக மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும்,” என்றார்.

மேலும், மத்திய அரசு வேலைகளில் 50% இடஒதுக்கீடு, ஆண்-பெண்களுக்கு இடையே ஊதிய முரண்பாட்டைக் குறைப்பதற்காக ‘சம வேலை, சம ஊதியம்' கொள்கை, திருமணம், சொத்து, வாரிசுரிமை போன்றவற்றில் பாலின வேறுபாடுகளைக் களைதல் போன்ற கொள்கைகளை வலியுறுத்தியிருக்கிறது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை.

“சம ஊதியம் என்பதைத் தனியார் துறைகளில் எப்படிச் செயல்படுத்த உள்ளனர் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். எப்படி இவற்றையெல்லாம் எப்படி செயல்படுத்துவோம் என்பதற்கான குறைந்தபட்ச வழிமுறையைக் குறிப்பிட்டிருக்க வேண்டும்,” என்கிறார் ஆனந்தி.

நீட் தேர்வு - ‘மாநிலங்கள் முடிவெடுக்கலாம்'

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

பட மூலாதாரம், Getty Images

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு, மத்திய பல்கலைக்கழகங்களுக்கான CUET எனும் பொது நுழைவுத்தேர்வு போன்ற நாடு தழுவிய நுழைவுத்தேர்வுகள் குறித்து அந்தந்த மாநிலங்கள் முடிவெடுக்கலாம் என காங்கிரஸ் கூறியிருக்கிறது.

மாநில அரசு நிதியளிக்கும், மாநில அரசு ஒப்புதல் பெற்ற கல்வி நிறுவனங்களில் இத்தேர்வுகள் வேண்டுமா அல்லது புதிதாக நுழைவுத் தேர்வுகள் வேண்டுமா என்பது குறித்து மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் எனக் கூறியிருக்கிறது. இது மாநில உரிமைகளை காங்கிரஸ் மதிப்பதைக் காட்டுவதாகக் கூறுகிறார், திமுக செய்தித்தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்.

“திமுக தேர்தல் அறிக்கையின் பரந்துபட்ட பார்வையாக காங்கிரசின் தேர்தல் அறிக்கை இருக்கிறது. மாநிலங்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளனர். மருத்துவக் கல்வி நிறுவனங்களில் தேசிய அளவிலான ஒதுக்கீட்டுக்கு நுழைவுத்தேர்வு தேவை. அதனாலேயே ‘நீட் தேர்வு ரத்து' எனப் பொதுவாகச் சொல்லாமல், மாநிலங்கள் முடிவெடுக்கலாம் எனக் கூறியிருக்கின்றனர்” என்கிறார் அவர்.

இதே கருத்தை முன்வைக்கிறார், தமிழ்நாடு காங்கிரசின் செய்தித் தொடர்பாளர் இனியன் ராபர்ட்.

“கூட்டாட்சித் தத்துவத்தை காங்கிரஸ் மதிப்பதாலேயே நுழைவுத் தேர்வை தீர்மானிப்பதை மாநிலங்களிடம் விட்டிருக்கிறோம். உத்தர பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்கள் நீட் தேர்வு வேண்டும் என்கிறது. அதனால், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் இதில் முடிவெடுக்க உரிமை இருக்கிறது என்பதாலேயே இவ்வாறு கூறியிருக்கிறோம்," என்கிறார் இனியன்.

திமுகவுடன் முரண்படுகிறதா காங்கிரஸ்?

மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம், Facebook/Kathirananth

பொருளாதார ரீதியில் பின்தங்கிய சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீட்டை எவ்வித பாகுபாடும் இல்லாமல் அனைத்து சாதியினருக்கும் செயல்படுத்தப்படும் என காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது, திமுகவின் நிலைப்பாட்டுக்கு எதிரானதாகப் பார்க்கப்படுகிறது.

கல்வி மற்றும் சமூகரீதியாகவே இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும் பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீடு வழங்கப்படக் கூடாது என்பதே கடந்த காலங்களில் திமுகவின் நிலைப்பாடாக உள்ளது. இப்போது காங்கிரசின் இந்த நிலைப்பாடு, திமுகவுக்கு எதிரானதா?

கூட்டணியில் உள்ள கட்சிகள் எல்லாவற்றிலும் உடன்பட முடியாது என்றும் மாநில பார்வையில் திமுகவுக்கென ஒரு பார்வையும் தேசிய கட்சியாக காங்கிரஸுக்கு ஒரு பார்வையும் இருக்கிறது என்கிறார் கான்ஸ்டன்டைன்.

“பத்து சதவீத ஒதுக்கீட்டுக்குள் உள் இட ஒதுக்கீடாகத்தான் இதைச் செயல்படுத்துவார்கள் அப்படியென்றால், இதற்கு முன்பு இட ஒதுக்கீடு உள்ள சமூகங்களுக்கு எந்தப் பாதிப்பும் நேராது. 10 சதவிகிதத்தில் முன்பு குறிப்பிட்ட சாதிக்கென இருந்த ஒதுக்கீடு, இதைச் செயல்படுத்தினால் மற்ற சாதிகளுக்கும் இட ஒதுக்கீட்டின் பலன் சென்றடையும். தேசிய கட்சியாகப் பார்த்தால் இது புத்திசாலித்தனமான முடிவு,” என்கிறார் கான்ஸ்டன்டைன்.

உத்தர பிரதேசம் போன்ற முன்னேறிய வகுப்பினர் பெரும்பான்மையாக உள்ள மாநிலங்களில் பலனைப் பெறுவதற்காக இதை அறிவித்திருக்கலாம் என்கிறார் அவர்.

“பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீடு கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். இப்போது இருக்கும் 10% இடஒதுக்கீடு ஓபிசி, எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு இணையாக இருக்கிறது.

ஆனால், நாங்கள் 10% இடஒதுக்கீட்டுக்குள் உள் ஒதுக்கீடாகவே இதைச் செயல்படுத்துவோம் என்கிறோம். அதனால் சமூக நீதியை இது பாதிக்காது,” என விளக்குகிறார், காங்கிரசின் இனியன் ராபர்ட்.

பொருளாதார மாற்றங்கள்

நரேந்திர மோதி

பட மூலாதாரம், ANI

இதுதவிர, பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டி, ஏழைகளை பாதிக்காத வண்ணம் மாற்றியமைக்கப்படும் என்றும் ஜிஎஸ்டி கவுன்சில் மாற்றி வடிவமைக்கப்படும் என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி சம்மந்தப்பட்ட கொள்கை மற்றும் அனைத்து விவகாரங்களுக்கும் இறுதி அதிகாரம் கொண்ட அமைப்பாக இந்த கவுன்சில் இருக்கும் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி சட்டங்கள் குறித்த நிர்வாகம், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே சமமாகப் பிரிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், இணையவழி வணிகத்தால் மிகுந்த போட்டிகளுக்கு உள்ளாகும் சில்லறை விற்பனையாளர்கள், சிறு வணிகர்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் ஜிஎஸ்டி குறைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்டி-யில் இத்தகைய அறிவிப்புகள், திமுகவின் நீண்டகால கோரிக்கைகளாகவே உள்ளன. இந்தத் தேர்தலில் முக்கியப் பிரச்னையாக மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலான உறவு பேசப்பட்டு வருகிறது.

குறிப்பாக, மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு வரிப் பகிர்வில் பாரபட்சம் காட்டுவதாக, தென் மாநிலங்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா டெல்லி ஜந்தர் மந்தரில் இதுதொடர்பாக போராட்டம் நடத்தும் அளவுக்கு இவ்விவகாரம் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், “வரி வருவாயில் மாநிலங்களுக்கு உரிய பங்கை மறுப்பதற்காக பாஜக அரசாங்கத்தின் போலியான 'செஸ்' வரி ராஜ்ஜியத்தை காங்கிரஸ் முடிவுக்குக் கொண்டு வரும். செஸ் மற்றும் கூடுதல் வரிகளை மொத்த வரி வருவாயில் 5 சதவிகிதமாக கட்டுப்படுத்தும் சட்டத்தைக் கொண்டு வருவோம்," என்கிறது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை.

நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளா?

பெண்களுக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி என்பதைச் செயல்படுத்த முடியுமா என்பது குறித்த கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன. இதற்கு பதிலளித்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இனியன் ராபர்ட், “பாஜக போன்று நடைமுறைக்கு ஒவ்வாத வாக்குறுதிகளை நாங்கள் வழங்குவதில்லை. 2019இல் நியாய் எனும் திட்டம் மூலமாக குடும்பத்திற்கு 6,000 ரூபாய் வழங்குவோம் எனத் தெரிவித்தோம்.

அதற்கான நிதி ஆதாரத்தை எப்படி அரசின் நிதி நிறுவனங்கள் மூலம் பெறுவோம் என்பதை அப்போதே மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறியிருந்தார். இதன் மறுவடிவம் தான் ஆண்டுக்கு ஒரு லட்சம் எனும் திட்டம். மத்திய அரசால் நிச்சயம் இதை நிறைவேற்ற முடியும்," என்றார்.

திராவிட கொள்கைகளைப் பேசியுள்ளதா?

தீவிர திராவிடம் குறித்துப் பேசும் திமுக இன்று இந்திய ஒன்றியத்தின் நல்வாழ்வு குறித்துப் பேசுவது போன்று, தீவிர தேசியவாதம் பேசிய காங்கிரஸ் இப்போது மாநில நலன் குறித்துப் பேசுவதாகக் கூறும் இனியன் ராபர்ட் இரு கட்சிகளும் பரிணாம வளர்ச்சி அடைந்திருப்பதை தேர்தல் அறிக்கை உணர்த்துவதாகத் தெரிவித்தார்.

இந்தக் கருத்தை ஒப்புக்கொள்ளும் பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானம், திராவிட கொள்கைகளைத்தான் காங்கிரஸ் இந்த தேர்தல் அறிக்கையில் பிரதிபலித்திருப்பதாகக் கூறுகிறார்.

“கடந்த சில ஆண்டுகளாகவே காங்கிரஸ் திராவிட கொள்கைகளை பிரதிபலித்து வருகிறது” என்கிறார் அவர். மத்திய-மாநில உறவுகளில் காங்கிரசின் அணுகுமுறையில் மாற்றம், தலித் சமூகத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கேவை தலைவராக நியமித்தல், காங்கிரஸ் செயற்குழுவில் ஓபிசிக்கு இடஒதுக்கீடு உள்ளிட்டவற்றைக் கொண்டு வந்தவற்றை அவர் குறிப்பிடுகிறார்.

“இவையெல்லாம் பெரியார் காங்கிரசில் இருக்கும்போது முன்வைத்த கோரிக்கைகள். அவற்றைச் செயல்படுத்தவில்லை என்றுதான் காங்கிரசில் இருந்து பெரியார் வெளியேறினார். இப்போது, அவற்றைத்தான் காங்கிரஸ் செயல்படுத்துவோம் எனக் கூறுகிறது” எனச் சுட்டிக்காட்டுகிறார் ஜோதி சிவஞானம். ஆங்கிலம் படிக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தி வருவதும் தமிழகத்தின் நிலைப்பாட்டை வலியுறுத்துவதுதான் என்கிறார் அவர்.

மேலும், 9 முதல் 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு செல்போன் வழங்கப்படும் எனக் கூறியிருப்பதும் திராவிட கட்சிகளின் சமூக நீதி திட்டங்கள் வெற்றியடைந்திருப்பதை காங்கிரஸ் அங்கீகரிப்பது போன்றே இருப்பதாகக் கூறுகிறார் அவர்.

"டெல்லியில் கோபுரத்தில் அமர்ந்துகொண்டு பார்க்காமல் அடிமட்ட அளவில் காங்கிரஸ் யோசிக்க ஆரம்பித்துவிட்டது. இது தேர்தலின்போது மக்கள் மத்தியில் நிச்சயம் தாக்கம் ஏற்படுத்தும்," என்கிறார் அவர்.

பத்திரிகையாளர் ப்ரியன்
படக்குறிப்பு, பத்திரிகையாளர் ப்ரியன்

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து பிபிசியிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், "ஏற்கெனவே முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் பல்லாயிரக் கணக்கான கோடி மதிப்பிலான விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதனால், ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்குவது உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்த முடியும்," என்றார்.

எனினும் 'இந்தியா' கூட்டணியில் உள்ள திமுக உள்ளிட்ட கட்சிகள் முதன்மையாக வலியுறுத்தும் பல விஷயங்களை காங்கிரஸ் தவறவிட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.

கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்றுவது, புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்யாமல் அதை மறு ஆய்வுக்கு உட்படுத்துவோம் என்று மட்டுமே கூறியிருப்பது உள்ளிட்ட விஷயங்களை குறிப்பிடுகிறார்.

'மக்கள் விரோத சட்டங்களான உஃபா உள்ளிட்ட சட்டங்களை ரத்து செய்வோம் என காங்கிரஸ் தெரிவிக்காதது ஏன்?" என அவர் கேள்வி எழுப்புகிறார்.

மேலும், 'இந்தியா' கூட்டணி கட்சிகள் தனித்தனியாக தேர்தல் அறிக்கை வெளியிடும் நிலையில் அக்கட்சியினர் இணைந்து குறைந்தபட்ச செயல் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்துகிறார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)