சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன் விளக்கம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
- பதவி, பிபிசி தமிழ்
வானியல் நிகழ்வுகள் குறித்த ஆர்வம் விஞ்ஞானிகளுக்கு மட்டுமல்ல, சாதாரண பொதுமக்களுக்கும் அதிகம். அதிலும் சூரிய கிரகணம் குறித்த ஆச்சர்யம் எல்லோருக்கும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. அதிலும் மிக அரிதான, நீண்ட நேரம் நீடித்த முழு சூரிய கிரகணத்தை திங்கட்கிழமை இரவு அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் கண்டு களித்தனர். மூன்று நாடுகளின் வாயிலாக இந்த கிரகணம் வட அமெரிக்காவை கடந்து சென்றது.
இந்த சூரிய கிரகணத்தின் போது, நான்கு நிமிடங்கள் மற்றும் ஒன்பது வினாடிகளுக்கு முழு இருள் நீடித்தது. இந்த முழு சூரிய கிரகணம் இந்திய நேரப்படி இரவு 9.12 மணிக்குத் தொடங்கி செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.22 மணிக்கு நிறைவடைந்தது. எனினும், முழு சூரிய கிரகணம், இந்திய நேரப்படி இரவு சுமார் 10.10 மணிக்குத் தொடங்கியது. இரவு நேரம் என்பதால் இந்தியாவில் இந்த கிரகணத்தைப் பார்க்க முடியவில்லை.
இந்த சூரிய கிரகணம் குறித்து உலகம் முழுவதிலும் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் என்ன, இந்தியாவில் எத்தகைய ஆராய்ச்சி செய்யப்பட்டது, சூரிய கிரகணம் குறித்த தவறான கற்பிதங்கள் உள்ளிட்டவை குறித்து, விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன் பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார்.

இந்த முழு சூரிய கிரகணத்திற்கு உலகம் முழுவதிலும் ஆர்வம் ஏற்பட்டது எதனால்?
பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலவு செல்லும்போது சூரியனை நிலவு மறைப்பதுதான் சூரிய கிரகணம். சூரிய கிரகணம் ஓராண்டில் இருமுறை தான் நிகழும். ஆனால், இருமுறையும் முழு சூரிய கிரகணமாக இருக்குமா என்பதை சொல்ல முடியாது. எனவே, முழு சூரிய கிரகணம் அரிது.
மேலும், நிலப்பகுதியில் சூரிய கிரகணம் தெரிவதென்பது மேலும் அரிதான ஒன்று. கடல் பகுதியில் கூட சூரிய கிரகணம் தென்படலாம். குறிப்பிட்ட இந்த முழு சூரிய கிரகணம் தென்பட்ட மிகப் பெரும்பான்மையான பகுதி நிலப்பகுதியாக இருந்தது. இது, அமெரிக்கா கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் தென்பட்டது. இந்த நாடுகளைப் பொறுத்தவரை பல ஆண்டுகளுக்குப் பிறகு முழு சூரிய கிரகணத்தைப் மக்கள் பார்ப்பதற்கான வாய்ப்பு அம்மக்களுக்குக் கிடைத்தது.
இந்த முழு சூரிய கிரகணம் நீண்ட நேரத்திற்கு நீடித்ததற்கான காரணம் என்ன?
நிலா பூமியை சுற்றி வரும்போது, கோழி முட்டை போன்று நீள்வட்டப் பாதையில் சுற்றும். எனவே, ஒரு சமயத்தில் நிலா பூமிக்கு அருகிலும் மற்றொரு சமயத்தில் பூமியிலிருந்து தொலைவிலும் இருக்கும். ஒரு பொருள் அருகிலிருக்கும் போது பெரிதாகவும் தொலைவிலிருந்தால் சிறியதாகவும் தெரியும் என்பது நமக்குத் தெரியும். அதனால், நிலா பூமியை சுற்றிவரும்போது குறிப்பிட்ட சமயத்தில் நிலா அளவில் பெரிதாகத் தெரியும்.
மற்றொரு சமயத்தில் சிறியதாகத் தோன்றும். சிறியதாக தோன்றும் சமயத்தில் சூரிய கிரகணம் நிகழ்ந்தால் சிறிது நேரத்திற்குத்தான் கிரகணம் நீடிக்கும். ஏனென்றால் அளவில் சிறியதாக தோன்றும் நிலாவால் சூரியனை சிறிது நேரத்திற்குத்தான் மறைக்க முடியும். ஆனால், அதுவே நிலா பெரிதாக இருக்கும்போது சூரிய கிரகணம் ஏற்பட்டால் அது நீண்ட நேரம் நீடிக்கும். இந்த முழு சூரிய கிரகணம், நிலா பெரிதாக இருப்பதற்கு சற்றேறக்குறைய அருகாமையில் இருந்ததால் இவ்வளவு நேரம் நீடித்தது.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் இந்த முழு சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியாததற்கு என்ன காரணம்?
கோள வடிவிலான பூமி தன்னைத்தானே சுற்றுகிறது. அதனால், அமெரிக்காவில் சூரியன் தெரிந்தால் இந்தியாவில் தெரியாது. இந்த முழு சூரிய கிரகணம், அமெரிக்காவுக்கு நேராக நிலவு, அதற்கு நேர்கோட்டில் சூரியன் இருக்கும்போது ஏற்பட்டுள்ளது. அதனால், இந்தியாவில் தெரியவில்லை. சூரிய கிரகணம் அமெரிக்காவில் நிகழ்ந்தபோது ஏற்கனவே இந்தியாவில் இரவுதான். அதனால், அதனை நம்மால் பார்க்க முடியவில்லை.
இந்த சூரிய கிரகணத்தின்போது நாசா ராக்கெட்டுகள், விமானங்கள் மூலம் பல ஆய்வுகள் செய்துள்ளன. இந்தியா சார்பில் ஏதேனும் ஆய்வு செய்யப்பட்டதா?
பள்ளியில் எல்லோரும் இந்த சோதனையை செய்திருப்போம். ஒரு காந்தத்தை காகிதத்தின் அடியில் வைத்துவிட்டு, காகிதத்தின் மேலே இரும்புத் துகள்களை வைத்து காந்தப்புலக் கோடுககளை கண்டறிந்திருப்போம். அம்மாதிரி சூரியனுக்கும் காந்தப்புலம் இருக்கிறது. சூரியனை சுற்றியும் அதேபோன்று காந்தப்புலக் கோடுகள் தோன்றும். ஆனால், சூரியனின் காந்தப்புலக் கோடுகள் ‘இடியாப்பம்' போன்று இருக்கும். ஆனால், பூமியை சுற்றியிருக்கும் காந்தப்புலத்தைப் பார்த்தால், அழகாக வாரிய கூந்தல் போன்றிருக்கும். சூரியனின் காந்தப்புலத்தின் வடிவம் எப்படியிருக்கிறது என்பதைப் பொறுத்து சூரியனிலிருந்து சூரியப்புயல் உண்டாகும்.
எனவே, சூரியனின் காந்தப்புலம் எப்படி இருக்கிறது என்று தெரிந்தால், சூரியப்புயலை நாம் முன்கூட்டியே கணிக்கலாம். சூரியனின் காந்தப்புலங்களை முழு சூரிய கிரகணத்தின் போது மட்டுமே பார்க்க முடியும். ஏற்கனவே நம்மிடம் உள்ள தகவல்களை வைத்து காந்தப்புலம் இப்படி இருக்கும் என, கணினிவழி உருவாக்கி வைத்துள்ளோம். இது சரியா, இல்லையா என்பதை முழு சூரிய கிரகணத்தின்போது தான் பார்க்க முடியும்.
அந்த ஆராய்ச்சியைத்தான் இந்தியா நேற்று செய்தது. நம்முடைய கணிப்பில் ஏதேனும் பிழை இருந்தாலும் அடுத்த சூரிய கிரகணத்தில் தான் அதை சரிசெய்ய முடியும். கொல்கத்தாவில் உள்ள ஐசர் (IISER) நிறுவனத்தின் சூரிய கிரகணம் குறித்த ஆராய்ச்சிக் குழு இந்த ஆய்வில் ஈடுபட்டது. முனைவர் நந்தி என்பவர் இந்த ஆய்வை வழிநடத்தினார். உலகளவில் இந்த சூரிய கிரகணத்தின்போது மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் முதன்மை இலக்கு, சூரியனின் காந்தப்புலங்களை ஆராய்வதுதான்.

பட மூலாதாரம், Getty Images
சூரியப்புயல் என்பது என்ன? அதனை நாம் ஏன் முன்கூட்டியே அறிய வேண்டும்?
சூரியப்புயல் பூமியை தாக்கினால், பூமியை சுற்றிவரக்கூடிய செயற்கைக்கோள்களுக்கு பாதிப்பு ஏற்படும். கடலில் ஏற்படும் புயலை முன்கூட்டியே அறிவது எப்படி முக்கியமோ, அதேபோன்று செயற்கைக்கோள்களை காப்பாற்ற சூரியப்புயல்களை கவனிப்பதும் முக்கியம். இந்தியாவுக்கு மட்டும் சுமார் ரூ. 50,000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் விண்வெளியில் இருக்கிறது. அதற்கு சேதம் ஏற்படாமல் இருக்க சூரியப் புயல்களை கண்காணிக்க வேண்டும்.
சூரிய கிரகணத்தின் போது விலங்குகளின் நடத்தையை ஆராய்வதற்கான தேவை என்ன?
விலங்குகளை பொறுத்தவரைக்கும் ஒரு நாளில் திரும்பி எப்போது தன் கூடடைய வேண்டும் என்று தோன்றும்? உயரப் போகும் ஒளி மங்கும்போதுதான் தோன்றும். அதாவது சூரியன் மறையும்போது தோன்றும். அதற்கு எந்த சைரன் ஒலியும் கிடையாதே. இயற்கை ஒளிதான் அதற்கான சமிக்ஞை. சூரிய கிரகணத்தின் போது ஒளி மங்குவதால், இரவாகிவிட்டது என விலங்குகளெல்லாம் தன் கூடடைகிறது. ஒளியை வைத்துக்கொண்டு விலங்குகள் எப்படி காலத்தைக் கணிக்கின்றன என்பதற்காகத்தான் இத்தகைய ஆராய்ச்சிகள் விலங்குகளின் மீது நடத்தப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
நாசா ஏன் விமானங்களில் சூரிய கிரகணத்தைத் துரத்திச் சென்றது? நிலப்பரப்பிலிருந்து அந்த ஆராய்ச்சியை மேற்கொள்ள முடியாது?
சாதாரணமாக நிலப்பரப்பில் இரண்டு அல்லது இரண்டரை நிமிடங்கள் சூரிய கிரகணம் முழுமையாக தெரியும். ஆனால், சூரிய கிரகணத்தின் பாதை தொடங்கும் இடத்தில் நான் விமானத்தில் இருக்கிறேன் என நினைத்துக்கொள்வோம். சூரியன் செல்லும் அதே வேகத்தில், பாதையில் நான் விமானத்தை ஓட்டிச்சென்றால் சுமார் அரை மணிநேரத்திற்கு மேல், சூரியனை முழு கிரகணமாக பார்க்க முடியும். அரை மணிநேரத்தில் காந்தப்புலக் கோடுகள் எப்படி மாறுகின்றன என்பதையும் பார்க்க முடியும். அதற்காகத்தான் விமானத்தில் சென்று ஆய்வு செய்தனர்.
இந்தியாவிலும் 1996-ம் ஆண்டில் ஏற்கனவே விமானத்தில் சென்று முயற்சி செய்தோம். ஆனால், அந்த சமயத்தில் அம்முயற்சியில் வெற்றியடைய முடியவில்லை. அதன்பின், 2004-ம் ஆண்டிலும் முயற்சி செய்தோம். அப்போதும் வெற்றியடையவில்லை. விமானம் சீராக செலுத்தப்பட வேண்டும். அதனால், வானிலை நிகழ்வுகளும் அதன் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் காரணிகளாகும்.
கடந்த காலத்தில் சூரிய கிரகணத்தின் போது மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் குறித்தும் த.வி. வெங்கடேஸ்வரன் விளக்கினார்.

பட மூலாதாரம், Getty Images
ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு
“ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு என்ன சொல்கிறதென்றால், ஒளி நேர்க்கோட்டில் பாய்ந்து வந்துகொண்டிருக்கிறது என எடுத்துக்கொள்வோம். இடையில் அதிக நிறையுள்ள ஒரு பொருள் இருந்தால், அந்த ஒளியின் பாதையை லேசாக மாற்றிவிடும். அந்த பாதை மாற்றத்தால், பூமிக்கு ஒளி வந்து சேரும்போது, அந்த ஒளி ஏற்பட்ட இடம் வேறு இடம் என நினைத்துக்கொள்வோம். அதனால், சூரியனுக்குப் பின்னால் இருக்கக்கூடிய விண்மீனிலிருந்து ஓர் ஒளிக்கதிர் வருகிறதென்றால், எவ்வளவு வளைந்து வரும்? அந்த பார்வைத் தோற்றம் குறிப்பிட்ட விண்மீன் எங்கு இருப்பதாகக் காட்டும் என கணக்கிட்டனர்? சூரியனுக்குப் பின்னால் இருக்கக்கூடிய விண்மீனை நம்மால் பார்க்க முடியாது. ஏனெனில், சூரியனின் வெளிச்சம் அதை மறைத்துவிடும். ஆனால், முழு சூரிய கிரகணத்தின்போது வானம் இருட்டாகிவிடும் என்பதால், அந்த விண்மீன்கள் தெரியும். அதனைப் புகைப்படம் எடுக்க முடியும். அப்படித்தான் ஒளி வளைந்திருக்கிறது என்பதை கண்டுபிடித்து ஐன்ஸ்டீன் சார்பியல் கோட்பாட்டை உறுதிப்படுத்தினார்" என்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன்.
ஹீலியம் கண்டுபிடிப்பு
சூரிய கிரகணத்தின்போது நிகழ்ந்த மற்றொரு முக்கிய கண்டுபிடிப்பு ஹீலியம். சூரியனுக்கு கிரேக்க மொழியில் ஹீலியோஸ் என்று பெயர். “சூரிய ஒளியை கிரகணத்தின்போது ஆராய்ந்த போதுதான் அதுவரை நாம் பார்க்காத தனிமம் இருக்கிறது என்பதை கண்டுபிடித்தனர். அந்த தனிமத்தை சூரியனில் மட்டும் பார்த்ததால் ஹீலியம் என்று பெயர் வைத்தனர். அதன்பிறகுதான் ஹீலியம் பூமியில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கண்டுபிடிப்பு 1868 ஆம் ஆண்டு இந்தியாவில் தெரிந்த சூரிய கிரகணத்தின்போதுதான் ஹீலியம் கண்டுபிடிக்கப்பட்டது” என்றார் வெங்கடேஸ்வரன்.
சூரிய கிரகணம் சார்ந்து மதம், கலாசாரம் ரீதியாக கூறப்படும் வழக்கங்கள் குறித்த உண்மையை விளக்கினார் த.வி. வெங்கடேஸ்வரன்.

பட மூலாதாரம், Getty Images
சூரிய கிரகணம் குறித்து மதம், கலாசாரம் சார்ந்து சொல்லப்படுபவை குறித்து…
சூரிய கிரகணத்தின்போது உணவு கெட்டுப்போகும் என்றெல்லாம் கூட சொல்வார்கள். தர்ப்பை புல்லை உணவில் போட்டால் உணவு நன்றாக இருக்கும், இல்லையென்றால் உணவு கெட்டுப்போய்விடும் என இன்றும் சொல்வார்கள். இதுகுறித்தெல்லாம் 1981-ல் இந்தியா ஆராய்ச்சி செய்துள்ளது. கிரகணத்தின்போது உணவில் நுண்ணுயிரிகள் ஏதேனும் வளருகிறதா என்று ஆராய்ச்சி செய்துள்ளனர். ஆனால், அப்படி எதுவும் வளரவில்லை. இவையெல்லாம் கட்டுக்கதை.
கர்ப்பிணிகள் வெளியே வரக்கூடாதா?
அது இந்தியாவில் இருக்கக்கூடிய நம்பிக்கை. அமெரிக்காவில் கர்ப்பிணிகள் நாற்காலியில் அமர்ந்துகொண்டு, கண்ணாடி அணிந்து சூரிய கிரகணத்தைப் பார்க்கின்றனர். அங்கெல்லாம் ஒன்றும் ஆகவில்லை. இந்தியாவில் தோன்றிய ஓர் சூரிய கிரகணத்தின்போது என் மனைவி கர்ப்பமாக இருக்கும்போது பார்த்தோம். என் மனைவிக்கும் ஒன்றும் ஆகவில்லை. என் குழந்தையும் நன்றாகத்தான் இருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
நியூஜெர்சியில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை சூரிய கிரகணத்துடன் ஒப்பிடுகிறார்களே, சூரிய கிரகணத்தின்போது திடீர் வெள்ளம் ஏற்படும் என்ற தகவல்களும் இதையொட்டி டிரெண்டானதே?
இது தேவையற்ற அச்சம் காரணமாக பரப்பப்படும் போலிச் செய்தி. தினமும் உலகளவில் சிறிதும் பெரிதுமாக சுமார் 10 ஆயிரம் நிலநடுக்கங்கள் ஏற்படும். ஆனால், சூரிய கிரகணத்திற்கும் நிலநடுக்கத்திற்கோ, வெள்ளத்திற்கோ எந்த தொடர்பும் இல்லை. ‘இயற்கை நிகழ்வுகளெல்லாம் கடவுளின் சாபம்’ என குழப்புகின்றனர். நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில்கூட கஜகஸ்தான், ஆப்கானிஸ்தான், நாகசாகி, மஸ்கட், திமூர், ஜம்மு-காஷ்மீர் (அனைத்தும் ரிக்டர் அளவில் 4-க்கும் மேல்) உள்ளிட்ட இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டன.
இந்தியாவில் பண்டைய காலத்திலும் சூரிய கிரகணம் குறித்து இத்தகைய நம்பிக்கைகள் இருந்தனவா?
கிரகணம் குறித்த இத்தகைய நம்பிக்கைகள் பண்டைய இந்தியாவில் இல்லை. இந்தியாவில் 8, 9-ம் நூற்றாண்டுகளில் குறிப்பிட்ட மதம் சார்ந்த அடிப்படைவாதத்தின்போதுதான் அறிவியல் கருத்துக்களுக்கு சவால் ஏற்பட்டது. அதேமாதிரி, ஐரோப்பாவில் 10, 11-ம் நூற்றாண்டுகளிலும் இத்தகைய கண்ணோட்டம் உருவானது.
அரேபிய பகுதிகளிலும் 13, 14-ம் நூற்றாண்டுகளில் இத்தகைய கருத்துக்கள் தோன்றின. எல்லா பகுதிகளிலும் மத அடிப்படைவாதம் எழுந்தபோதுதான் இத்தகைய மூடநம்பிக்கைகளும் அறிவியலுக்கு எதிரான கருத்துக்களும் தோன்றின. அமெரிக்காவிலும் இத்தகைய மூட நம்பிக்கைகளை வளர்க்கும் குழுக்கள் உள்ளன.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












