முழு சூரிய கிரகணம் இன்று எப்படி நிகழும்? எங்கே, எப்போது பார்க்க முடியும்?

பட மூலாதாரம், NASA
கிரகணங்கள் கண்கவர் வானியல் நிகழ்வுகளாக கருதப்படுகின்றன. அவற்றைப் பார்க்க விரும்புவோரின் ஆவலை பூர்த்தி செய்ய ஒரு புது சுற்றுலாப் பிரிவே முளைத்திருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது.
இன்று (ஏப்ரல் 8 திங்கட்கிழமை) ஒரு முழு சூரிய கிரகணம் நிகழ இருக்கிறது. அனைவரும் காண விரும்பும் ஒரு கிரகணம் இது. மெக்சிகோ, அமெரிக்கா மற்றும் கனடா என இந்த கிரகணம் வட அமெரிக்காவைக் கடந்துசெல்லும்.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே செல்லும் சந்திரன், சூரியனை முழுமையாக மூடும் பொழுது முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது. விடியற்காலை அல்லது சாயங்கால வேளை போல் வானம் இருண்டுவிடும்.
2024ஆம் ஆண்டின் முழு சூரிய கிரகணம் பசிபிக் பெருங்கடலில் தொடங்கும். குக் தீவுகளின் ஒரு பகுதியான பென்ரைன் அடோலில் வசிப்பவர்கள், விடியற்காலையில் இருண்ட சூரியனைக் காண்பார்கள். இந்திய நேரப்பபடி இரவு 10.10 மணிக்கு அங்கே இது நிகழும்.
சந்திரனின் ஆழமான நிழல் அல்லது அம்ப்ரா, பூமியின் மேற்பரப்பில் மணிக்கு 2,500 கிமீ (1,500 மைல்) வேகத்தில் பாய்ந்து, மெக்சிகன் கடற்கரையை இரவு 11:37 மணிக்கு கடந்துச் செல்லும். பின்னர் மெக்ஸிகோவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே உள்ள ரியோ கிராண்டே எல்லையை இந்திய நேரப்படி இரவு 11:57 மணிக்கு கடந்துச் செல்லும்.
சூரிய கிரகணம் எப்படி நிகழும்?

இன்றைய சூரிய கிரகணம் எப்படி நிகழலாம் என்பதற்கான சாத்தியமான நிலைகளை மேலே உள்ள வரைபடம் குறிக்கிறது. பகுதி கிரகணம் (மேல் இடது), வைர மோதிரம் (மேல் வலது), பெய்லியின் மணிகள் (கீழ் இடது), முழுமை (கீழ் வலது) மற்றும் கொரோனாவின் பார்வை (நடுத்தர) என்ற வகையில் அவை தோன்றக் கூடும்.
பகுதி கிரகணம்: சந்திரன் படிப்படியாக சூரியனை மறைக்கிறது. எல்லாமே கருமையாகிறது.
வைர மோதிரம்: வலுவான சூரிய ஒளியின் கடைசிப் பகுதி, ஒரு பெரிய வைரத்தைப் போல ஒரு அற்புதமான ஒளி புள்ளியாகக் குறைகிறது.
பெய்லியின் மணிகள்: வைரப் பகுதியில் விழும் ஒளி சிதறும்போது, மீதமுள்ள எந்த ஒளியும் சந்திரனின் விளிம்பில் உள்ள ஆழமான பள்ளத்தாக்குகள் வழியாக பிரகாசிக்கிறது.
முழுமை: பகல் இரவாக மாறுகிறது, ஆனால் வெப்பநிலை, காற்று, மேகங்கள் மற்றும் பறவைகளின் கூச்சல் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் எச்சரிக்கையாக இருங்கள்.
கரோனா: சூரியனுக்குள் மறைந்திருக்கும் ரகசியத்தைப் பார்க்கும் வாய்ப்பு - நமது நட்சத்திரத்தின் வெளிப்புற வளிமண்டலத்தில் உள்ள ஒளியின் நுட்பமான போக்குகள், அதன் கொரோனா தெரியவரும்.
பின்னர் எல்லாம் தலைகீழாக நடக்கும். மொத்தமும் பெய்லியின் மணிககள் தோற்றத்திற்கு மாறும். வைரம் போன்ற காட்சி மீண்டும் தோன்றி ஒளியை அதன் இயல்பான தீவிரத்திற்கு விரிவுபடுத்துகிறது, கரோனா மீண்டும் ஒருமுறை மறைக்கப்படுகிறது.

சூரிய கிரகணத்தைக் காண நயாகராவில் குவியும் மக்கள்
சூரிய கிரகணத்தைக் காண நயாகரா நீர்வீழ்ச்சியில் ஏராளமான மக்கள் குவிந்து வருகிறார்கள்.
இதுகுறித்து செய்தி சேகரிக்க அங்கு சென்றிருக்கிறார் பிபிசி செய்தியாளரான நாடா தௌஃபிக்.
நயாகரா நீர்வீழ்ச்சியை நிர்வகிக்கும் பூங்கா அதிகாரிகள், இதுவரை பார்த்திராத மிகப்பெரிய மக்கள் கூட்டம் அங்கு கூடும் என்று எதிர்பார்ப்பதாக அவர் தெரிவிக்கிறார். நயாகரா நீர்வீழ்ச்சியின் அமெரிக்கப் பக்கத்திலும், கனடாவின் பக்கத்திலும் மக்கள் அதிகளவில் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தாம் காண வேண்டும் என்று வைத்திருந்த கனவுப் பட்டியலில் இருந்து ஒரே நேரத்தில் இரண்டு விஷயங்களை - ஒன்று நயாகரா நீர்வீழ்ச்சி, மற்றொன்று சூரிய கிரகணம் – காண சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குவியத் துவங்கியுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
நேற்று, இரண்டு மாத ஆண் குழந்தையுடன் நயாகரா நீர்வீழ்ச்சிக்கு வந்திருந்த ஒரு தம்பதியைச் சந்தித்ததாகக் கூறுகிறார் நாடா. வானிலை மேகமூட்டமாக இருக்கும் என்ற முன்னறிவிப்பு வந்ததும் அவர்கள் இடம்பெயர்ந்து மூன்று மணிநேரம் பயணம் செய்து மேலும் கிழக்கே செல்ல முடிவு செய்ததாகக் கூறுகிறார்.
தற்போதும், அப்பகுதிகள் மேகமூட்டமாகவே உள்ளதாக நாடா கூறுகிறார். “எல்லோரும் பதட்டத்துடன் காத்திருக்கின்றனர்,” என்கிறார் அவர்.
கிரகணத்தின்போது சூரியனின் ஒளிவட்டத்தை முழுவதுமாகப் பார்க்கும் வாய்ப்புக்கும் மேல், கிரகணத்தின் போது நீர்வீழ்ச்சிக்கு மேலே உள்ள நீர்த்திரையினால் உருவாகும் வானவில் இளஞ்சிவப்பு நிறமாக மாறுவதையும் காண முடியும் என்று மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
முழு சூரிய கிரகணம் என்பது பல வகை கிரகணங்களில் ஒன்றாகும். "பொதுவாக இரண்டு வகையான கிரகணங்கள் உள்ளன, சந்திரன் மற்றும் சூரியனின் கிரகணங்கள்" என்று சிலியின் தன்னாட்சி பல்கலைக்கழக அறிவியல் தொடர்பு மையத்தின் வானியற்பியல் வல்லுனரான ஜுவான் கார்லோஸ் பீமின் தனது சமீபத்திய புத்தகமான இல்லஸ்ட்ரேட்டட் அஸ்ட்ரோனமியில் (Illustrated Astronomy) கூறுகிறார்.
அதில் பின்வருமாறு அவர் குறிப்பிடுகிறார், "ஆனால் தொழில்நுட்ப ரீதியாக இரண்டு நட்சத்திரங்களை உள்ளடக்கிய மூன்றாவது வகை கிரகணமும் உள்ளது."
இந்த மூன்று கிரகண வகைகள் மற்றும் அவற்றின் வெவ்வேறு மாறுபாடுகள் குறித்த விளக்கத்தையும் காணலாம்.
சூரிய கிரகணங்கள்
சில நேரங்களில் சந்திரன் பூமியைச் சுற்றி வரும்போது, அது சூரியனுக்கும் நமது கிரகத்திற்கும் இடையில் பயணித்து, நட்சத்திரத்திலிருந்து வரும் ஒளியைத் தடுத்து சூரிய கிரகணத்தை ஏற்படுத்துகிறது.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சந்திரன் பூமியின் மேற்பரப்பில் அதன் நிழலைப் படர விடுகிறது.
மூன்று வகையான சூரிய கிரகணங்கள் உள்ளன. சந்திரன் சூரியனை எவ்வாறு மறைக்கிறது மற்றும் சூரியனின் எவ்வளவு பரப்பளவை மறைக்கிறது என்பதைப் பொறுத்து இவை வேறுபடுகின்றன.

முழு சூரிய கிரகணம்
சூரிய ஒளி பூமியின் மேல் விழுவதை முற்றிலுமாகத் தடுக்கும் வகையில் சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஒரே நேர்கோட்டில் வரும்போது முழு சூரிய கிரகணம் நிகழ்கிறது.
சில வினாடிகள் அல்லது சில சமயங்களில் ஓரிரு நிமிடங்கள், வானம் மிகவும் இருட்டாகி, இரவு போலத் தோன்றும்.
"வானியல் தற்செயல் நிகழ்வுகளால் மட்டுமே பூமியில் முழு சூரிய கிரகணங்கள் சாத்தியம். சூரியன் சந்திரனை விட 400 மடங்கு அகலமானது, ஆனால் அது 400 மடங்கு தொலைவில் உள்ளது” என்று நாசா கூறுகிறது.
"அந்த அர்த்தம், ஒரே நேர்கோட்டில் வரும்போது சந்திரன் சூரியனின் முழு மேற்பரப்பையும் மூடி, முழு சூரிய கிரகணத்தை உருவாக்குகிறது" என்று நாசா கூறுகிறது.
பூமியின் மேற்பரப்பில் சந்திரனின் நிழலைக் கண்டுபிடிக்கும் கோடு ‘முழுமையின் பாதை’ (Path of totality) என்று அழைக்கப்படுகிறது. அந்த சிறிய பகுதியில் தான் இந்த முழுமையான இருளின் காட்சியைக் காண முடியும்.
இந்தப் பாதையின் இருபுறமும், ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களுக்கு, கிரகணத்தை ஓரளவு காணலாம்.
நீங்கள் ‘முழுமையின் பாதை’ பகுதியிலிருந்து எவ்வளவு தொலைவில் இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு சூரியனின் சிறிய பகுதி சந்திரனால் மூடப்படும்.
இது எவ்வளவு நேரத்திற்கு நீடிக்கும் என்றால், "சூரியனுடனான பூமியின் நிலை, பூமியுடன் ஒப்பிடும்போது சந்திரனின் நிலை மற்றும் பூமியின் எந்தப் பகுதி இருளில் உள்ளது, ஆகிய மூன்று விஷயங்களைப் பொறுத்து கிரகணத்தின் நேரம் மாறுபடும்” என பீமின் கூறுகிறார்.
"கோட்பாட்டளவில், அதிகபட்சமாக சூரிய கிரகணம் 7 நிமிடங்கள் மற்றும் 32 வினாடிகள் வரை நீடிக்கும்" என்று சிலி வானியற்பியல் நிபுணர் கூறுகிறார்.
நீங்கள் நினைப்பது போல் அவை அரிதானவை அல்ல, ஒவ்வொரு 18 மாதங்களுக்கும் ஒன்று என உள்ளது.
உண்மையில் அரிதானது என்னவென்றால், ஒரு முழு சூரிய கிரகணத்தையும் ஒரே இடத்தில் இருந்து இருமுறை பார்ப்பது. அத்தகைய அதிசய நிகழ்வு 375 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும்.
கங்கண கிரகணம்

பட மூலாதாரம், Getty Images
சந்திரன் பூமியிலிருந்து வெகு தொலைவில் இருக்கும்போது, அது ‘சிறிதாக’ தோன்றும். அப்போது அது சூரியனின் மேற்பரப்பை முழுமையாக மறைக்காது.
எனவே சூரியனின் வளைய வடிவ பகுதி மட்டும் சந்திரனைச் சுற்றித் தெரியும், இந்த நிகழ்வு தான் கங்கண சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.
ஒரு முழு சூரிய கிரகணத்தின் போது நடப்பதைப் போலவே, கங்கண சூரிய கிரகண நிகழ்வின் போதும் ஒரு ‘வளைய வடிவ பாதை’ இருக்கும், அதில் கிரகணம் வளையமாக காணப்படும்.
இந்த பாதையின் ஒவ்வொரு பக்கத்திலும், ஒரு பாரபட்ச மண்டலம் (Zone of partiality) உள்ளது.
நாசாவின் கூற்றுப்படி, இந்த கிரகணங்கள் அதிக நேரம் நீடிக்கக் கூடியவை. ஏனெனில் வளைய வடிவ கிரகணத்தை பத்து நிமிடங்களுக்கு மேல் காணலாம். ஆனால் வழக்கமாக அவை ஐந்து அல்லது ஆறு நிமிடங்களுக்கு மேல் நீடிப்பதில்லை.
அடுத்த கங்கண சூரிய கிரகணம் 2 அக்டோபர், 2024 அன்று தென்படும். இது தென் அமெரிக்காவில் தெரியும். கிரகணத்தின் ஒரு பகுதி தென் அமெரிக்கா, அண்டார்டிகா, பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், வட அமெரிக்காவில் தெரியும்.

ஹைபிரிட் கிரகணம்

பட மூலாதாரம், Getty Images
"இந்த வகை கிரகணத்தில், சந்திரன் சூரியனை முழுவதுமாக மறைக்கக் கூடிய தூரத்தில் தான் இருக்கும். ஆனால் அது தொடர்ந்து நகரும் போது, பூமியிலிருந்து சற்று விலகி சூரியனை முழுமையாக மறைப்பதை நிறுத்துகிறது. அப்போது அது கங்கண கிரகணமாக மாறி விடும்" என்று பீமின் விளக்குகிறார்.
"இது சில சமயங்களில் ஒரு கங்கண கிரகணமாகவும் தொடங்கி, பின்னர் முழு கிரகணமாக மாறும் கட்டத்தை நெருங்கலாம்" என்று பீமின் கூறுகிறார்.
ஹைபிரிட் கிரகணங்கள் மிகவும் அரிதானவை (மொத்த சூரிய கிரகணங்களில் 4% மட்டுமே) என ஸ்பெயினின் வானியல் ஆய்வுக்கூடம் கூறுகிறது.
கடைசி ஹைபிரிட் கிரகணம் 20 ஏப்ரல் 2023இல் நடந்தது. இது இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் பப்புவா நியூ கினியாவில் இருந்து இதைப் பார்க்க முடிந்தது.
அடுத்தது நவம்பர் 2031இல் ஹைபிரிட் கிரகணம் நடக்கும் என நாசா தரவுகள் தெரிவிக்கின்றன.
சந்திர கிரகணங்கள்

பட மூலாதாரம், AFP
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வந்து ஒளியைத் தடுக்கும் போது சந்திர கிரகணம் நிகழ்கிறது.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சந்திர கிரகணத்தின் போது, சந்திரனின் மேற்பரப்பில் பூமியின் நிழலை நாம் காண்கிறோம்.
ஐஏசி (IAC)கற்பித்தல் வழிகாட்டி விளக்குவது போல், "சூரியக் கிரகணங்களின் தோற்றம் என்பது ஒரு பார்வையாளரின் புவியியல் இருப்பிடத்தைப் பொறுத்து மாறுபடும். ஆனால் சந்திர கிரகணங்களில் இதற்கு நேர்மாறானது நடக்கும். கிரகண நேரத்தின் போது, சந்திரன் அடிவானத்திற்கு மேலே இருக்கும்பட்சத்தில் பூமியின் எந்த இடத்திலிருந்தும் சந்திர கிரகணத்தை நாம் காணலாம்”
"சூரிய கிரகணங்களில், கிரகண கட்டங்களின் காலநேரம் பார்வையாளரின் புவியியல் நிலையைப் பொறுத்து மாறுபடும். ஆனால் சந்திர கிரகணங்களில் இவை எந்த இடத்திலிருந்து பார்த்தாலும் ஒரே மாதிரியாக இருக்கும்" என ஐஏசி (IAC)கற்பித்தல் வழிகாட்டி கூறுகிறது.
சந்திர கிரகணங்களிலும் மூன்று வகைகள் உள்ளன.
முழு சந்திர கிரகணம்

முழு சந்திர கிரகணத்தின் போது, சந்திரனும் சூரியனும் பூமிக்கு நேர் எதிரெதிர் பக்கங்களில் இருப்பதாக நாசா விளக்குகிறது.
மேலும், "சந்திரன் பூமியின் நிழலில் இருந்தாலும், சூரிய ஒளியின் குறிப்பிட்ட பகுதி சந்திரனை அடைகிறது” என நாசா கூறுகிறது.
இந்த சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தின் வழியாக செல்லும்போது இது நீல நிற ஒளியின் பெரும்பகுதியை கழித்துவிடும். அதனால் தான், இந்த நிகழ்வின் போது சந்திரன் சிவப்பு நிறமாகத் தெரிகிறது. சில நேரங்களில் ‘பிளட் மூன்’ (Blood moon) என்றும் அழைக்கப்படுகிறது.
ஐஏசியின் கூற்றுப்படி, "நமது கிரகத்தின் விட்டம் சந்திர விட்டத்தை விட நான்கு மடங்கு பெரிதாக இருப்பதால், அதன் நிழலும் மிகவும் அகலமாக உள்ளது, இதனால் சந்திர கிரகணத்தின் மொத்த நேரம் 104 நிமிடங்கள் வரை நீடிக்கும்."
அடுத்த முழு சந்திர கிரகணம் மார்ச் 2025இல் இருக்கும். இதை பசிபிக், அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா மற்றும் மேற்கு ஆப்ரிக்காவில் இருந்து காணலாம்.
பகுதி சந்திர கிரகணம்

பெயருக்கு ஏற்றாற் போல, சந்திரனின் ஒரு பகுதி மட்டுமே பூமியின் நிழலில் நுழையும். அப்போது பகுதி சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
கிரகணத்தின் அளவைப் பொறுத்து அடர் சிவப்பாக, சில நேரங்களில் துருவின் நிறத்தில் அல்லது கரி சாம்பல் நிறத்தில், சந்திரனின் மேற்பரப்பின் இருண்ட பகுதியில் ஒரு நிழல் தோன்றும்.
நிழலால் பாதிக்கப்படாத சந்திரனின் பிரகாசமான மேற்பரப்புக்கும், நிழல் படர்ந்த பகுதிக்கும் இடையிலான வேறுபாடு தான் இதற்குக் காரணம்.
நாசாவின் கூற்றுப்படி, முழு சந்திர கிரகணங்கள் அரிதான நிகழ்வுகள் என்றாலும், பகுதி கிரகணங்கள் வருடத்திற்கு இரண்டு முறையாவது நிகழும்.
அடுத்த பகுதி சந்திர கிரகணம் 18 செப்டம்பர் 2024 அன்று நிகழுமென எதிர்பார்க்கப்படுகிறது. இது அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவில் தெரியும்.
பெனும்பிரல் சந்திர கிரகணம்

பூமியின் பெனும்பிரல் நிழலின் வழியாக சந்திரன் செல்லும்போது இது நிகழ்கிறது, அதாவது மிகவும் மங்கலான நிழல்.
எனவே, இந்த கிரகணங்கள் மிகவும் நுட்பமானவை, பெனும்பிரல் பகுதிக்குள் நுழையும் சந்திரனின் பகுதியைப் பொறுத்து அவை மனிதக் கண்ணுக்குத் தெரியும். சந்திரனின் சிறிய பகுதி மட்டுமே நுழைந்தால், இந்த கிரகணத்தை கவனிப்பது மிகவும் கடினம்.
இந்த காரணத்திற்காக, இந்த கிரகணங்கள் பெரும்பாலும் காலெண்டர்களில் குறிப்பிடப்படுவதில்லை. விஞ்ஞானிகள் மட்டுமே ஆய்வுகளுக்காக இந்த கிரகணங்களைப் பின்தொடர்வார்கள்.
நட்சத்திர கிரகணங்கள்
எல்லா கிரகணங்களும் சூரியன் மற்றும் சந்திரனை உள்ளடக்குவதில்லை, தொலைதூர நட்சத்திரங்களுக்கும் கிரகணங்கள் நிகழும்.
"இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நட்சத்திரங்களின் அமைப்புகளில் 50% நட்சத்திரங்கள் அடங்கியுள்ளன" என்று பீமின் தனது புத்தகத்தில் விளக்குகிறார்.
"நமது விண்மீன் மண்டலத்தில் பல நட்சத்திரங்கள் இருப்பதால், அவற்றில் சில பைனரி நட்சத்திரங்கள் (இரண்டு நட்சத்திரங்கள் அவற்றின் பொதுவான வெகுஜன மையத்தை வட்டமிடும் நட்சத்திர அமைப்பு தான் பைனரி நட்சத்திரம்) பூமியுடன் அதிகம் ஒத்திருக்கும் ஒரு வட்டப்பாதையில் சுற்றுகின்றன.
எனவே அதன் சுற்றுப்பாதையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில், ஒரு நட்சத்திரம் மற்றொன்றுக்கு முன்னால் செல்லும்போது, அதை மறைத்துவிடும். எனவே இந்த இரட்டை நட்சத்திரங்கள் கிரகண பைனரி நட்சத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன" என்று பீமின் கூறுகிறார்.












