தருமபுரி: திமுக-பாமக-அதிமுக போட்டியிடும் தொகுதியில் மக்களின் எதிர்பார்ப்பு என்ன? – கள நிலவரம்

- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டின் மிகவும் பின்தங்கிய நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றான தருமபுரி தொகுதி, கடும் தேர்தல் போட்டியின் காரணமாக மீண்டும் கவனிக்கப்படும் தொகுதிகளில் ஒன்றாக மாறியிருக்கிறது. தேர்தல் பிரசாரம் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கும் அங்கு களநிலவரம் எப்படியிருக்கிறது என்பதை அறிந்துகொள்ள பிபிசி தமிழ் நேரடியாகச் சென்றது.
தமிழ்நாட்டின் வடமேற்கு மாவட்டங்களில் ஒன்றான தருமபுரி, மாநிலத்தின் மிகவும் பின்தங்கிய தொகுதிகளில் ஒன்று. வாழப்பாடி ராமமூர்த்தி, தம்பிதுரை, கே.வி. தங்கபாலு, அன்புமணி ராமதாஸ் போன்ற முக்கியத் தலைவர்கள் போட்டியிட்டு வெற்றிபெற்ற தொகுதி என்பதால், எப்போதுமே கவனிக்கப்படும் தொகுதியாகவும் இருந்துவந்திருக்கிறது.
இந்தத் தொகுதியில் 1998 முதல் 2019 வரை நடந்த 6 தேர்தல்களில் நான்கு தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சியே வெற்றிபெற்றிருக்கிறது. இரண்டு முறை தி.மு.க. வெற்றிபெற்றிருக்கிறது. 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் செ.செந்தில்குமார், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ம.கவின் அன்புமணி ராமதாஸைவிட சுமார் 63,000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.
இந்தத் தொகுதியில் தி.மு.க. நேரடியாகப் போட்டியிட்டாலும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரான செ.செந்தில்குமாருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கவில்லை. மாறாக தி.மு.க-வின் மாவட்டத் துணைச் செயலாளரான ஆ. மணிக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.
அவரை எதிர்த்து பா.ஜ.க - பா.ம.க கூட்டணியின் சார்பில் சௌமியா அன்புமணி போட்டியிடுகிறார். அ.தி.மு.க-வின் சார்பில் அக்கட்சியின் தருமபுரி நகரச் செயலாளர் ரவியின் மகன் அசோக் போட்டியிடுகிறார்.

சௌமியாவுக்கு பெண்களிடம் வரவேற்பு
புதர்க்காடுகளே அதிகமாக உள்ள தருமபுரியில் வெயில் மிகக் கடுமையாக இருக்கிறது. ஆனால், தேர்தல் பிரசாரத்தில் அதைவிட அனல் பரக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் சௌமியா அன்புமணி, மாவட்டம் முழுவதும் நிலவும் தண்ணீர் பிரச்சனை, வேலை வாய்ப்பின்மை பிரச்சனை ஆகியவற்றை முன்வைத்து வாக்கு சேகரித்து வருகிறார்.
பிபிசியிடம் பேசிய அவர், "காவிரியின் உபரி நீரை இந்தப் பகுதிக்குத் திருப்ப வேண்டும் என்ற கோரிக்கையை பா.ம.க நீண்ட காலமாக முன்வைத்து வருகிறது. அந்தத் திட்டத்தை செயல்படுத்தினால் இந்தப் பகுதி மேம்படும். இங்கே பெரிய தொழில் நிறுவனங்களோ, தொழிற்சாலைகளோ கிடையாது. விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளைக் கொண்டுவந்தால் நன்றாக இருக்கும். சிப்காட்டிற்கான ஆரம்பகட்ட பணிகள் மட்டுமே முடிந்திருக்கின்றன. அதனை உடனடியாக செயல்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும்.
"இந்தப் பகுதியைச் சேர்ந்த 3 லட்சம் இளைஞர்கள் வேறு மாவட்டங்களில் வேலை பார்க்கிறார்கள். அவர்களுக்கு நிலம் இருக்கிறது. ஆனால், தண்ணீர் இல்லாததாலும் வேறு வேலைவாய்ப்புகள் இல்லாததாலும் மாவட்டத்தை விட்டு வெளியேறியிருக்கிறார்கள். பார்ப்பவர்கள் எல்லாம் வேலைவாய்ப்பு குறித்துத்தான் கேட்கிறார்கள். ஆகவே அதில் நான் கவனம் செலுத்துவேன்," என்கிறார்.
சௌமியா அன்புமணி பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில், பெண்களிடம் அவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. மாவட்டத்தின் உள்ளடங்கிய கிராமங்களுக்கும் சென்று, அங்கிருப்பவர்களிடம் வேலைவாய்ப்பு, தண்ணீர், டாஸ்மாக்கை மூடுவது போன்றவற்றை வாக்குறுதியாக அளித்து வாக்கு சேகரிக்கிறார் சௌமியா அன்புமணி. இவருக்காக, கட்சித் தலைவர் அன்புமணி ராமதாசும் வாக்குசேகரித்து வருவதால் பா.ம.க தரப்பு மிகுந்த உற்சாகமாக இருக்கிறது.
மத்திய அரசு மீது திமுக குற்றச்சாட்டு

தி.மு.க-வின் சார்பில் போட்டியிடும் ஆ.மணி, ஒரு வழக்கறிஞர். 2019-இல் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் தி.மு.க-வின் சார்பில் போட்டியிட்டுத் தோற்றவர். இவரது பிரச்சாரத்தில், எரிவாயு விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்றவற்றை வைத்து மத்திய அரசைக் குற்றம்சாட்டுகிறார். மகளிர் உரிமைத் தொகை, பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயணம் போன்றவற்றையும் சுட்டிக்காட்டுகிறார்.
"தென்பெண்ணை ஆற்றின் உபரி நீரை இங்கு கொண்டுவரும்படி கேட்கிறார்கள். தக்காளி அதிகம் விளைவதால் தக்காளிக் கூழ் தொழிற்சாலை தேவைப்படுகிறது. இதையெல்லாம் செய்து தருவதாகச் சொல்கிறோம். தவிர, தி.மு.க அரசின் மூன்றாண்டு கால ஆட்சியின் சாதனைகளையும் சொல்கிறோம்," என்கிறார் மணி. சௌமியா அன்புணியை தனக்குப் பெரிய போட்டியாகக் கருதவில்லை என்கிறார் அவர்.
அ.தி.மு.க-வின் வேட்பாளர் மருத்துவர் அசோக்கிற்கு இதுதான் முதல் தேர்தல். எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராக இருந்தபோது செய்த சாதனைகளைச் சொல்லி வாக்கு சேகரித்து வருகிறார் அசோக். மகளிர் உரிமைத் தொகை சிலருக்கு விடுபட்டிருப்பது, நகைக் கடன் தள்ளுபடி சிலருக்கு விடுபட்டிருப்பது ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி, ஆளும்கட்சி மீதான அதிருப்தியை தனக்கான வாக்குகளாக மாற்ற முயல்கிறார் அசோக்.
இவர்கள் மூன்று பேர் தவிர, நாம் தமிழர் கட்சியின் டாக்டர் அபிநயா பொன்னிவளவனும் களத்தில் இருக்கிறார்.
வானம் பார்த்த பூமி

1977-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை மேட்டூர் மக்களவைத் தொகுதியில் தருமபுரி இருந்தது. மறுசீரமைப்புக்கு பின்னர் தருமபுரி தொகுதியாக மாற்றப்பட்டது. இந்த மக்களவைத் தொகுதியில் தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, அரூர் (தனி), பாப்பிரெட்டிப்பட்டி, சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் ஆகிய ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகள் இருக்கின்றன.
மிகவும் பின்தங்கிய பகுதியாக இருந்ததால், நக்சல்கள் ஆதிக்கம் வலுவாக இருந்த பகுதி இது. கடந்த 1980-களில் நடந்த காவல்துறை என்கவுன்ட்டர்களுக்குப் பிறகு, நக்சல்களின் செல்வாக்கு குறைந்தது என்றாலும், பெரிய அளவில் எவ்விதமான முன்னேற்றத்தையும் சந்திக்காத பகுதியாகவே இது இன்னும் இருந்து வருகிறது.
புதர்க்காடுகள், வானம் பார்த்த பூமி என வறண்டு காட்சியளிக்கும் இந்த மாவட்டம், தமிழ்நாட்டில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒன்று. மாவட்டத்திற்குள் வேலை வாய்ப்புக் குறைவு என்பதால், வேறு மாவட்டங்களுக்கு வேலை தேடிச் செல்வது இங்கு அதிகம். 2015-இல் ஆந்திர மாநிலம் சேஷாச்சலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டியதாகக் கூறப்பட்டு 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களில் 7 பேர் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள்.
ஆகவே பிரச்சனைகளுக்கு பஞ்சமில்லாத பூமி இது.
தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி பரப்பளவில் மிக விரிவான பகுதியைக் கொண்டிருக்கிறது. மேட்டூர், ஒகேனக்கல், அரூர், பாலக்கோடு என ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொருவிதமான பிரச்சனைகள் இருக்கின்றன.
மக்களின் மனநிலை

"கல்வி கற்க கல்லூரிகள் இருந்தாலும் வேலைவாய்ப்பு என்பது சுத்தமாக இல்லை. பொறியியல் படித்தவர்கள்கூட கொரியர் வேலைக்குச் செல்லும் நிலைமை இருக்கிறது. பெரிய அளவில் வேலைவாய்ப்புகளைத் தரும் புதிய தொழிற்சாலைகளை இங்கே கொண்டுவரவேண்டும்" என்கிறார் அரூர் பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன்.
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் நிலத்தடி நீரில் ப்ளூரைட் இருக்கும் பிரச்னைக்கு பெருமளவு தீர்வுகாணப்பட்டிருந்தாலும், அடுத்தகட்டத்தையும் செயல்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையும் இருக்கிறது.
"பயன்படாத நிலப்பகுதி இந்த மாவட்டத்தில் அதிகம். அந்தப் பகுதிகளில் தொழிற்சாலைகளைத் துவங்க வேண்டும். ஓசூரில் இதுபோலத்தான் தொழில் வளர்ச்சி ஆரம்பித்தது. சிப்காட் நில எடுப்போடு நிற்கிறது. அங்கு தொழிற்சாலைகள் வருவதற்கு ஊக்குவிக்கவேண்டும். அதேபோல, காவிரியின் உபரி நீர், தென்பெண்ணையாற்றின் உபரி நீரை இந்த மாவட்டத்திற்குத் திருப்பிவிட வேண்டும்" என்கிறார் இந்தப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான மருத்துவர் ரவிச்சந்திரன்.
பொதுமக்களைப் பொறுத்தவரை தேர்தல் தொடர்பாக பெரிய எதிர்பார்ப்பு இல்லை. தண்ணீர், வேலைவாய்ப்பு பிரச்சனை தீர்ந்தால்போதும் என்ற மனநிலையில் இருக்கிறார்கள். சிலர் மகளிர் உரிமைத் தொகை குறித்து பேசுகிறார்கள்.
கடந்த தேர்தலில் சுமார் 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வெற்றிபெற்ற தொகுதி இது. ஆனால், மீண்டும் ஒரு 2014-ஆம் ஆண்டின் வெற்றியை நிகழ்த்திக்காட்டும் முனைப்பில் இருக்கிறது பா.ம.க. ஆகவே, பல முனைப் போட்டி, இரு முனைப் போட்டியாக குறுகிக்கொண்டு வருகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












