"எந்தக் கட்சியும் நல்லது செய்யவில்லை" - 30 ஆண்டுகளாக வீடு கோரி காத்திருக்கும் மத்திய சென்னை மக்கள்

கண்ணப்பர் திடல்
படக்குறிப்பு, உஷா, கண்ணப்பர் திடல்
    • எழுதியவர், சாரதா வி
    • பதவி, பிபிசி தமிழ்

“எங்கள் ஊருக்கு 30 வருடங்களாக யாரும் எதுவும் செய்யவில்லை, எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்த போதும் எங்களுக்கு ஒரு நல்லதும் நடக்கவில்லை” – நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்று கேட்டால், இது தான் சென்னை கண்ணப்பர் திடல் மக்கள் பெரும்பாலானவர்களின் பதிலாக இருக்கிறது.

கழிப்பறைகளும் குளியலறைகளும் இல்லாததே இப்பகுதி மக்களின் அன்றாட வாழ்வை நரகமாக்கிவிடுகிறது. தெருவோரத்தில் இருந்த மக்கள் அரசால் அகற்றப்பட்டு, கண்ணப்பர் திடலில் தற்காலிகமாக குடியமர்த்தப்பட்டனர். அவர்களுக்கு விரைவில் வீடுகள் கட்டித்தரப்படும் என்று கூறினர் ஆட்சியாளர்கள். ஆனால் 30 ஆண்டுகள் ஆகியும் வீடு கிடைக்கவில்லை. தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு கட்சியும் மாறி மாறி வழங்கும் வாக்குறுதிகளை நம்பி பலனில்லை என்கின்றனர் அப்பகுதியினர்.

கண்ணப்பர் திடல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையதுக்கு அருகில் இருக்கும் குடிசைப் பகுதியாகும். ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்துக்கு பின்னால், மூர் மார்க்கெட் சந்துகளுக்கு இடையே ஒளிந்திருக்கிறது இந்தப் பகுதி. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள பகுதிகளிலிருந்து வெவ்வேறு காலக்கட்டத்தில் அரசால் கண்ணப்பர் திடலில் குடியமர்த்தப்பட்டவர்கள் இந்த மக்கள். சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக ரிப்பன் மாளிகைக்கு பின்னால் இருந்த நாட்டின் பழமையான மிருகக் காட்சிசாலை 1980களில் வண்டலூருக்கு மாற்றப்பட்டது. அப்போது வந்த சில குடும்பங்கள் உள்ளன.

கண்ணப்பர் திடல்

2022ம் ஆண்டு ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்க கட்டுமானப் பணிகளின் போது, தெருவோரத்தில் இருந்த குடும்பங்கள் அகற்றப்பட்டு இந்தப் பகுதியில் ஒரு கட்டிடத்தில் குடியமர்த்தப்பட்டனர். மூன்று மாதங்களில் வீடு கட்டி தரப்படும் என்று அளிக்கப்பட்ட வாக்குறுதி 20 ஆண்டுகள் மேலாகியும் நிறைவேற்றப்படவில்லை.

கண்ணப்பர் திடல் மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கும், எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்கும் உட்பட்டது. தற்போது திமுகவின் தயாநிதி மாறன் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

இந்த முறை மீண்டும் அவரே திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பாக போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி களமிறங்குகிறார். பாஜக சார்பாக வினோஜ் பி செல்வம் களத்தில் உள்ளார்.

23 லட்சம் வாக்காளர்கள் கொண்ட மத்திய சென்னை துறைமுகம், எழும்பூர், திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணாநகர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை கொண்டது. கடந்த முறை பாமகவை எதிர்த்து போட்டியிட்ட தயாநிதி மாறன் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் இந்த தொகுதியில் வெற்றி பெற்றார்.

இந்த முறையும் அவர் வெற்றியை எதிர்பார்த்திருக்கும் நிலையில், தொகுதியின் உள்ளே இருக்கும் சில நூறு வாக்காளர்கள் மிகவும் மோசமான சூழலில் மூன்று தசாப்தங்களாக வசித்து வருகின்றனர்.

சென்னை மாநகராட்சியும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு ஆணையமும் இணைந்து 250 சதுர அடியில் 594 வீடுகளும், 350 சதுர அடியில் 572 வீடுகளும் கட்டித்தரப்படும் என்று கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார் அமைச்சர் தா மோ அன்பரசன்.

ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கும் அப்பகுதியில் மிக அடிப்படை தேவையான கழிவறைகள், குளியலறைகள் இல்லை. இதனால், பெரும்பாலான பெண்கள், தங்கள் வீடுகளுக்கு உள்ளேயே குளித்துக் கொள்கின்றனர். அவர்கள் வீடுகள் 200 சதுர அடிக்கும் குறைவான இடம் கொண்ட ஒரு அறை மட்டுமே. “பொருள்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, கதவ மூடிக் கொண்டு குளிப்போம். குளித்த பிறகு, துடைப்பத்தை கொண்டு முறத்தில் வாரி எடுத்து தண்ணீரை வெளியே கொட்டி விடுவோம்.” என்கிறார் கவிதா.

கண்ணப்பர் திடல்

இந்தப் பகுதியில் ஏப்ரல் 7ம் தேதி இரண்டு குளியலறைகள், ஆறு கழிப்பறைகள் கட்டி திறக்கப்பட்டுள்ளன. கடந்த ஆறு மாதங்களாக பழுதடைந்திருந்தவை தேர்தலுக்கு முன்பாக சரி செய்யப்பட்டுள்ளன.

“என் பொண்ணுக்கு 12 வயசு. ராத்திரில அவ சரியா சாப்பிடுறதே இல்ல. பாத்ரூம் வந்தா என்ன பண்றதும்மான்னு சொல்றா. இத நினைச்சா கொடுமையா இருக்கு. இங்க இருக்கா எல்லா பிள்ளைகளும் இப்படி தான். நாலு இட்லி சாப்பிடுற குழந்தை இரண்டு இட்லி தான் சாப்பிடுது. வயிறு நிறைய சோறு சாப்பிடுற குழந்தை ஒரு கடிக்கு மேல சாப்பிட பயப்படுது. காலைல எழுந்தாலும் இதே பிரச்னை தான். ஒரு நாள் நேரு ஸ்டேடியம் வரைக்கும் போய் கழிவறை தேடினோம். அங்க இல்லன்னு , பக்கத்துல வேற இடத்துக்கு போனோம். அங்க தண்ணி இல்ல. வேற எங்கயும் கழிவறை இல்லாததால வீட்டுக்கே வந்து, பிள்ளைங்க ஸ்கூலுக்கு போன பிறகு தான் கழிவறை பயன்படுத்த முடிஞ்சுது” என்கிறார் அந்தப் பகுதியில் வசிக்கும் உஷா. அவர் அன்று தனது நான்கு வயது குழந்தைக்கு சிறுநீர் கழிக்கும் போது தொடர் பிரச்னை இருப்பதால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்து சென்று வந்திருந்தார்.

கண்ணப்பர் திடல்

வெவ்வேறு சமூகங்களை சேர்ந்தவர்கள் வசிக்கும் கண்ணப்பர் திடலில், பல பெண்கள் மூங்கில் கூடை பின்னுவதை தொழிலாக கொண்டிருந்தனர். தற்போது வெவ்வேறு சிறு தொழில்கள் செய்து வருகின்றனர்.

“எல்லோருக்கும் ஒட்டு போட்டு சலிச்சு போயிருச்சு. யார் வந்து என்ன ஆக போகுது? 30 வருஷமா வீடு தரல. ஏழு எட்டு வயசுல இங்க வந்தேன். நான் பேரன் பேத்தி எடுத்தாச்சு. ஆனா இன்னும் வீடு கிடைக்கல. அதனால் இந்த தடவ கடைசி பட்டனுக்கு தான் ஓட்டு. என் பையன் வருஷா வருஷம் அதுக்கு தான் போடுறான்” என்கிறார் பழ வியாபாரி பவுன்.

அப்பகுதியில் வசிக்கும் பவானி விஜய்யின் அரசியல் பிரவேசத்துக்காக காத்திருப்பதாக கூறுகிறார். “மாற்றி மாற்றி ஓட்டு போட்டு என்ன நடந்து விட்டது? இந்த முறை ஓட்டு போட வேணாம்னு நினைக்குறேன். 2026-ல் விஜய் வரும் போது ஓட்டு போடலாம். அவருக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்து பார்ப்போமே” என்கிறார்.

கண்ணப்பர் திடல்
படக்குறிப்பு, பவுன், கவிதா, கண்ணப்பர் திடல்

சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது யாரும் தங்களை வந்து பார்க்கவில்லை என்பது இப்பகுதியினரின் ஆதங்கமாக உள்ளது. “இந்த ஒரு வீடு தான் நான்கு படிக்கு மேல இருக்கு. அதனால் இங்க மட்டும் தண்ணீர் வரல. இந்த ஒரே அறையில் நான்கு குடும்பங்கள் இருந்தோம்”என்று தாங்கள் இருந்த சிறிய அறையை காட்டுகிறார் பவானி.

தங்கள் பகுதிக்குள்ளே வராமல், பிரதான சாலையிலே இருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சில நிவாரண உதவிகளை வழங்கினார் என்று குறிப்பிடும் பகுதிவாசிகள், தங்களை பாதிப்பிலிருந்து மீட்டெடுக்க யாரும் உதவில்லை என்கின்றனர்.

கண்ணப்பர் திடல்
படக்குறிப்பு, ராஜன் , கண்ணப்பர் திடல்

அப்பகுதியில் வசிக்கும் கணேஷ், “தேர்தலுக்கு பிறகு வீடுகள் கட்டித்தரப்படும் என்று உறுதி அளித்துள்ளனர். மூன்று ஆண்டுகளுக்கு முன், மாற்று வீடுகள் தருவதற்காக கணக்கெடுக்கப்பு நடத்தப்பட்டுள்ளது.” என்கிறார்.

என்ன ஆனாலும் தேர்தலில் வாக்களித்து தானே ஆக வேண்டும் என்கின்றனர் சிலர். வாகன உதிரி பாகங்கள் விற்பனை கடையில் பணிபுரியும் கண்ணப்பர் திடலை சேர்ந்த ராஜன், “யாருமே வரலைன்னு சொல்ல முடியாது, யாராவது வந்து அப்பப்போ உதவி பண்றாங்க, சீரியல் நடிகர்கள் கூட வருகிறார்கள். ஆனால் வீடு கிடைக்கல. எனினும் வாக்களிக்க வேண்டியது ஜனநாயக உரிமை, அத செய்துதான் ஆகணும்” என்கிறார்.

எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், “அங்கு வசிப்பவர்களின் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து அரசு செயலாளர்கள் அளவில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. எனவே அதே இடத்தில் வீடுகள் கட்டி தருவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் கட்டப்படும்” என்று கூறினார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)