2024 தேர்தல்: தமிழ்நாட்டில் ரூ.300 கோடி பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் - விமர்சனம் ஏன்?

தேர்தல் பண பறிமுதல்
    • எழுதியவர், சாரதா வி
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது முதல் ஏப்ரல் 10ஆம் தேதி வரை ரூ.303.63 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகை தேர்தல் ஆணையம் மற்றும் வருமானவரித்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதில் ரூ.143.05 கோடி பணமாகவும், ரூ.5.01 கோடி மதிப்பிலான மதுபானம், ரூ.93 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள்கள், ரூ.121.65 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி போன்றவை, ரூ.32. 97 கோடி மதிப்பிலான இலவசங்கள் இது வரை பிடிபட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ரூ.50 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பிடிப்பட்டுள்ளன.

கடந்த வாரம் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படும் மூன்று பேரிடம் இருந்து ரூ.4 கோடியை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். சென்னை எழும்பூரிலிருந்து ரயில் மூலம் திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த அவர்களை தாம்பரத்தில் பறக்கும் படையினர் பிடித்தனர். சரியான ஆவணங்கள் இல்லாததால் அவர்களிடமிருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

அதே போன்று, இரண்டு நாட்களுக்கு முன் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே உள்ள காங்குப்பத்தில் உள்ள ஒரு விவசாய குடும்பத்திடமிருந்து கணக்கில் வராத ரூ.7 லட்சம் பணத்தை தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை பறிமுதல் செய்துள்ளது. திமுக மூத்த அமைச்சர் துரைமுருகனின் சொந்த ஊரான காங்குப்பத்தில் உள்ள விவசாயி ஒருவரின் வீட்டு மொட்டை மாடியில் சிதறிக்கிடந்த 500 ரூபாய் நோட்டுகளையும், வீட்டினுள் இருந்த ரூ.5 லட்சத்துக்கும் மேலான தொகையும் பிடிப்பட்டது.

வேலூரில் வல்லம் சுங்கச்சாவடி அருகே நடத்தப்பட்ட வாகன சோதனையின் போது உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.75 லட்சம் பிடிப்பட்டது. சென்னை நீலாங்கரையில், மினி வேனில் சென்றுக் கொண்டிருந்த நான்கு பேரிடமிருந்து ரூ.1.63 கோடி பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். டாஸ்மாக் கடைகளிலிருந்து வசூல் செய்த பணம் என்று அவர்கள் கூறினாலும் அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

தேர்தல் பண பறிமுதல்

பறக்கும் படை எப்படி செயல்படுகிறது?

வாக்குகளுக்கு பணம் விநியோகிப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்த பிரச்னையை கையாள மாநில அரசு அதிகாரிகளையும் தேர்தல் ஆணையம் சார்ந்திருக்க வேண்டும். ரூ.50,000 ரூபாய்க்கு மேல் ரொக்கம் அல்லது தங்கம் அல்லது பிற மதிப்புமிக்க பொருட்களை மொத்தமாக கொண்டு செல்பவர்கள் பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்களின் (எஸ்.எஸ்.டி) ஆய்வை எதிர்கொள்ள வேண்டும். அந்த பொருட்களுக்கான ஆதார ஆவணங்கள் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, அவர்கள் ஆய்வு செய்யப்படுவர்.

புகார் பெறப்பட்டவுடன் பறக்கும் படைகள் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்லும். அதே நேரம் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் பதற்றம் என்று கண்டறியப்பட்ட குறிப்பிட்ட இடங்களில் நிறுத்தப்படும்

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் குறைந்தது இரண்டு அல்லது மூன்று பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் இருக்கும். ஒவ்வொரு குழுவிலும் ஒரு நகராட்சியின் வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியர் அல்லது உதவி பொறியாளர் அல்லது இளநிலை பொறியாளர், ஒரு சப்-இன்ஸ்பெக்டர் அல்லது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், இரண்டு கான்ஸ்டபிள்கள், ஒரு வீடியோகிராபர் மற்றும் ஒரு கார் ஓட்டுநர் ஆகியோர் அடங்குவர். அவர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பார்கள். இந்த குழுக்கள் அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல் தொடர்பான புகார்களை கவனித்து, சமூக விரோத சக்திகளின் நடமாட்டம், மதுபானம், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மற்றும் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக ஒதுக்கப்பட்ட பெரும் தொகையை கண்காணிக்கும்.

பணப்பறிமுதல் எப்படி செய்யப்படுகிறது?

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. புகார் பதிவு செய்யப்பட்டவுடன், கட்டுப்பாட்டு அறை அந்தத் தகவலை பறக்கும் படை சம்பவ இடத்திற்கு அனுப்புகிறது.

பறக்கும் படை சம்பவ இடத்திற்கு வந்து, 50 நிமிடங்களுக்குள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அறிக்கை அளிக்கிறது.

பறக்கும் படையினர், பறக்கும் படையினர், 'பறிமுதல்' மேலாண்மை அமைப்பு எனப்படும் மொபைல் அப்ளிகேஷனில் பறிமுதல் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

தேர்தல் பண பறிமுதல்

சோதனைகளுக்கு பின்னால் அரசியல் நோக்கங்கள் இருக்கின்றனவா?

இருப்பினும், இந்தக் குழுக்களின் நடவடிக்கைகள் அடிக்கடி விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுகிறன. தங்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் மட்டுமே குறிவைக்கப்படுவதாகவும், ஆளுங்கட்சியினர் விடுவிக்கப்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

தேர்தல் ஆணையத்தின் சோதனைகள் ஒருபுறமிருக்க வருமானவரித்துறையினரும் ரெய்டுகள் நடத்தி வருகின்றனர். திருச்சியில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் தொடர்புடைய 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். அதே போன்று தேர்தல் அறிவித்து ஐந்து நாட்களில் மார்ச் மூன்றாவது வாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.

வருமானவரித்துறை, அமலாக்கத்துறை சோதனைகளை மத்திய அரசு எதிர்க்கட்சிகள் மீது ஏவுவதாக திமுக குற்றம்சாட்டுகிறது. அதே நேரம் தேர்தல் ஆணைய அதிகாரிகளை திமுக திசை திருப்புகிறது என பாஜக குற்றம் சாட்டுகிறது.

வாக்குக்குப் பணம் கொடுக்கும் வழக்கம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. திருப்பூரை சேர்ந்த பொதுமக்களில் ஒருவரான 57 வயதாகும் செம்மலர், “கடந்த 1990-களுக்கு பிறகு தான் வாக்குக்கு பணம் கொடுப்பது அதிகம் ஆனது. கட்சிகள் எப்போது தொழிலாக மாறினவோ, அப்போது இதுவும் தீவிரமாகியது. முதலில், அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாக தான் இருந்தது. பணம், புடவை கொடுப்பார்கள், மற்றவர்கள் கண்ணை உறுத்தும் மாதிரியாக இருக்காது. ஆனால், 2000-க்கு பிறகு வெளிப்படையாகவே தெரிகிறது. வழங்கப்படும் தொகை அதிகரித்தது, அரசியல் கட்சிகளுக்கு இடையே யார் எவ்வளவு கொடுப்பது என்ற போட்டியும் உண்டானது. கடந்த 20 ஆண்டுகளில் கட்சிகளிடம் மக்கள் கேட்டு வாங்குற நிலைமையும் வந்துவிட்டது,” என்கிறார்.

தேர்தல் பண பறிமுதல்

பட மூலாதாரம், X/TNelectionsCEO

பிடிப்பட்ட பணத்தை எப்படி திரும்ப பெறுவது?

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், ரொக்கப் பணத்தை கொண்டு செல்வதில் கட்டுப்பாடுகள் உள்ளன. ஒருவர் ரூ.50,000-க்கு கீழ் கொண்டு செல்பவர்களிடம் எந்த விசாரணையும் செய்யப்படாது.

ரூ.10 லட்சத்துக்கும் கீழ் பிடிப்பட்டால் தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும்.

ரூ.10 லட்சத்துக்கு மேல் பிடிபட்டால் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்படும். பணத்தின் உரிமையாளர் அதற்கான உரிய ஆவணங்களை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்கள் சரி பார்த்த பின்,பிடிப்பட்ட பணம் திருப்பி தரப்படும்.

பாதிக்கப்படும் தொழில்கள்

பணம் எடுத்துச் செல்வதற்கு கட்டுபாடுகள் இருப்பதால், பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நகைக்கடைகள் வியாபாரிகள் சங்கத்தின் நிர்வாகி ஜெயந்திலால் சலானி கூறுகையில், “வியாபாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, செய்கூலி, சேதாரம் எல்லாம் சேர்த்து ஒரு சவரன் தங்க நகையின் விலை தொரோயமாக ரூ.62,000 ஆகும். எனவே தற்போது யாரும் நகைகள் வாங்க விரும்புவதில்லை. குறிப்பாக ஆரம், செயின், நெக்லஸ், வளையல் போன்றவைகள் கடந்த சில நாட்களாக விற்பனையாகவே இல்லை,” என்றார்.

நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களிலேயே பண பரிவர்த்தனை அதிகமாக நடைபெறுவதால் தேர்தல் பறக்கும் படையினர் கிடுக்குப்பிடி அதிகமாக இருக்கிறது. “தமிழ்நாடு முழுவதும் சிறியது பெரியது என 35 ஆயிரம் நகைக்கடைகள் உள்ளன. இவர்களில் சிறிய நகரங்களில் இருக்கும் கடைகளில் வியாபாரம் மிக கடுமையாக பாதித்துள்ளது. அங்குள்ள மக்கள் ஆன்லைன் மூலம் பணம் செலுத்துபவர்கள் கிடையாது,” என்றார் அவர்.

அதே போன்று, பெட்ரோல் பங்க் உரிமையாளர்களும் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். அவர்கள் அன்றாடம் சில லட்சங்கள் பணத்தைக் கொடுத்து தான் பொருள் வாங்குகிறார்கள். ஒவ்வொரு முறையும் தேர்தல் அதிகாரிகளிடம் பிடிபட்டு பின் மீட்டெடுப்பது சிரமமாக இருப்பதாகவும் சில நேரங்களில் உரிய ஆவணங்கள் இருந்தாலும் பணத்தை பிடித்து விடுகின்றனர் என்றும் புலம்புகின்றனர்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் துணைத் தலைவர் தாமஸ் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில் ஆவணங்கள் சில கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா, “தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததிலிருந்து 50% வியாபாரம் குறைந்துவிட்டது. தேர்தலுக்கு பின்பும் இதே போன்ற கட்டுப்பாடுகள் இருந்தால் வியாபாரம் மேலும் பாதிக்கப்படும். பறக்கும் படைகள் அரசியல் கட்சிகளை கண்காணிப்பதில்லை. அவர்களின் பணப்பட்டுவாடா ஒரு புறம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் அதிகாரிகள் மாடு வாங்க செல்லும் விவசாயிகள், தொழிலுக்கு செல்லும் சாதாரண வியாபாரிகளை தான் பிடிப்பார்கள்,” என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)