ரமலான் பிறை: ஈத் பண்டிகை நாளை முடிவு செய்வதில் குழப்பம் ஏன்?

ரமலான் பிறை

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், அஹ்மென் கவாஜா
    • பதவி, பிபிசி செய்தியாளர்

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தின் முடிவு ‘ஈத் அல்-பித்ர்’ (ஈகைத் திருநாள்) என்று அழைக்கப்படுக்கிறது. இஸ்லாத்தின் முக்கியமான மத விடுமுறையான இந்நாளை, இஸ்லாமிய குடும்பங்கள் விருந்து நடத்திக் கொண்டாடுகின்றன.

ஆனால், உலகளவில் முக்கியமான இது போன்ற ஒரு நிகழ்வு எப்போது நிகழும் என்பது முடிவுசெய்யப்படுவது மிகவும் சிக்கலான விஷயமாக உள்ளது.

இது ஏன் என்று, பிபிசி செய்தியாளர்களான அஹ்மென் கவாஜா மற்றும் அமீர் ரவாஷ் இந்தக் கட்டுரையில் விளக்குகின்றனர்.

இஸ்லாத்தில் சந்திரனின் முக்கியத்துவம்

ரமலான் மாதம் முடிவடையும் நேரத்தில், உலகிலுள்ள 190 கோடி இஸ்லாமியர்களில் பலர் வானம் மேகமூட்டமின்றி இருக்கவேண்டும் என்று வேண்டியபடி இருப்பார்கள். காரணம், ரமலான் விருந்து துவங்குவதற்கான சமிக்ஞையைக் காணவேண்டி.

ரமலான் துவங்குவதைப் போலவே, இதுவும் பிறையைக் காண்பதிலிருந்து துவங்குகிறது.

இஸ்லாம், நிலவின் கட்டங்களின் அடிப்படையில் அமைந்த சந்திர நாட்காட்டியைப் பின்பற்றுகிறது. ரமலான் அதன் ஒன்பதாவது மாதத்தில் துவங்குகிறது.

ஒவ்வொரு ஆண்டும், சந்திர நாட்காட்டியின் ஒவ்வொரு மாதமும் முந்தைய சூரிய ஆண்டில் நடந்ததற்கு 11 நாட்களுக்கு முன்பு நடைபெறும்.

சந்திர நாட்காட்டியைப் பின்பற்றுவது இஸ்லாமியர்களுக்கு மிகவும் முக்கியமானது. இதுதான் அவர்கள் ரமலானை எப்போது கொண்டாடுகிறார்கள் என்பதை முடிவு செய்கிறது.

இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கிறார்கள், விடியற்காலையில் இருந்து சூரியன் மறையும் வரை உணவு மற்றும் பானங்களைத் தவிர்க்கிறார்கள்.

ரமலான் நோன்பு, ஈத் பண்டிகை, இஸ்லாம், முஸ்லிம்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இஸ்லாத்தின் முக்கியமன மத விடுமுறையான இந்நாளை, இஸ்லாமிய குடும்பங்கள் விருந்து நடத்திக் கொண்டாடுகின்றன

இஸ்லாமிய மாதங்கள் சூரிய நாட்காட்டியின் அடிப்படையில் அமைந்திருந்தால், பருவங்கள் அனைவருக்கும் பொதுவாக நிர்ணயிக்கப்பட்டிருக்கும். அதனால், உலகின் சில பகுதிகளில் வாழும் மக்கள் கோடையில் ரமலானைக் கொண்டாடுவார்கள், அங்கு பகல் நேரம் நீண்டதாக இருக்கும். மற்ற பகுதிகளில் குளிர்காலமாக இருக்கும், எனவே பகல் குறுகியவையாக இருக்கும்.

ஆனால், சந்திர நாட்காட்டியைப் பின்பற்றுவதன் மூலம், ஒவ்வொரு இஸ்லாமியரும் தங்கள் வாழ்வில் வெவ்வேறு பருவங்களில் ரமலானை கடைபிடிக்கிறார்கள். அதனால் அவர்களது வாழ்வின் 33 வருடங்களில் நீண்ட நோன்பு நாட்கள், குறுகிய நோன்பு நாட்கள் ஆகிய அனைத்தையும் அனுபவிக்கிறார்கள்.

ரமலான் நோன்பு, ஈத் பண்டிகை, இஸ்லாம், முஸ்லிம்கள்

பட மூலாதாரம், Getty Images

ஈத் பண்டிகை நாளில் குழப்பம் ஏன்?

ஈத் அல்-பித்ர் பண்டிகை பத்தாவது மாதமான ஷவ்வால் மாதத்தின் முதல் நாளில் வருகிறது.

ஆனால் இஸ்லாத்தில், இந்நாள் உண்மையில் எப்போது வருகிறது என்ற விவாதம் உள்ளது.

பிறையின் தோற்றத்தை அறிவிக்க, சிலர் பாரம்பரியமன சந்திர நாட்காட்டியைப் பின்பற்றுகிறார்கள், மற்றவர்கள் வானியல் அவதானிப்புகளைப் பயன்படுத்துகிறார்கள். பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் உண்மையில் பிறை நிலவு வானில் காணப்பட்ட பின்னரே புதிய மாதத்தைக் குறிக்கின்றனர்.

இது பொதுவாக இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களால் செய்யப்படுகிறது, தனிநபர்களால் அல்ல.

பிறை

பட மூலாதாரம், Getty Images

இந்த ஆண்டு ஈத் பண்டிகை எப்போது?

சந்திரனைப் பார்த்து ஈத் பண்டிகையை நிர்ணயம் செய்பவர்கள், அவர்கள் உலகில் இருக்கும் இடத்தைப் பொறுத்து, ஏப்ரல் 9 (செவ்வாய்), ஏப்ரல் 10 (புதன்கிழமை), ஏப்ரல் 11 (வியாழக்கிழமை) ஈத் பண்டிகை அமையும்.

சந்திரனின் முதல் பிறை உண்மையில் இரவு வானத்தில் எப்போது தெரியும் என்பதைப் பொறுத்து, சந்திர மாதங்கள் 29 அல்லது 30 நாட்கள் நீடிக்கும் என்பதால், இதைச் சரிபார்க்க ஈத் முன் இரவு வரை இஸ்லாமியர்கள் காத்திருக்க வேண்டும்.

வானில் பிறையைப் பார்ப்பவர்கள் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வானத்தை நோட்டமிடத் துவங்குவார்கள். அவர்கள் உலகில் எங்கிருந்தாலும் மாதத்தின் 29-வது நாளில் இந்த பிறையைத் தேடுவார்கள்.

அவர்கள் பிறையைக் கண்டால், மறுநாள் ஈத் கொண்டாட்டங்கள் நடக்கும்.

இல்லையென்றால், 30 நாள் மாதத்தை நிறைவு செய்ய இன்னும் ஒரு நாள் நோன்பு இருக்கவேண்டும்.

பிரிட்டனின் ‘HM Nautical Almanac’ அலுவலகத்தின்படி, ஈத் பண்டிகை, ஏப்ரல் 10 புதன்கிழமை அன்று அமைகிறது.

ரமலான் நோன்பு, ஈத் பண்டிகை, இஸ்லாம், முஸ்லிம்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிறையின் தோற்றத்தை அறிவிக்க, சிலர் பாரம்பரியமன சந்திர நாட்காட்டியைப் பின்பற்றுகிறார்கள், மற்றவர்கள் வானியல் அவதானிப்புகளைப் பயன்படுத்துகிறார்கள்

இஸ்லாமிய நாடுகள் ஈத் பண்டிகையை எப்படி முடிவு செய்கின்றன?

ஈத் பண்டிகையின் தேதி உலகம் முழுவதும் ஒரே மாதிரியாக இருக்காது. பொதுவாக அவை ஒன்று அல்லது இரண்டு நாட்கள் வித்தியாசத்தில் அமையும்.

உதாரணமாக, சௌதி அரேபியாவில் உள்ள அதிகாரிகள் - இஸ்லாத்தின் பிறப்பிடமாக இருந்த சுன்னி ஆதிக்கம் செலுத்தும் நாடு - பார்வையால் சந்திரனைக் கவனிக்கும் பொதுமக்களின் சாட்சியங்களைப் பொறுத்து ரமலான் தொடக்கத்தையும் முடிவையும் அறிவிக்கிறது.

பல நாடுகளில் உள்ள இஸ்லாமியர்கள் இதைப் பின்பற்றுகிறார்கள்.

ஆனால், ஷியா இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாகக் கொண்ட இரான், சந்திரனைக் கண் பார்வையால் அவதானிப்பதைச் சார்ந்து இருக்கும் அரசாங்க அறிவிப்பைப் பின்பற்றுகிறது.

பெரும்பான்மையான ஷியா முஸ்லிம்கள் மற்றும் சுன்னி சிறுபான்மையினரைக் கொண்ட இராக், இந்த இரண்டு முறைகளின் கலவையைப் பின்பற்றுகிறது. அங்கு ஷியா மக்கள் செல்வாக்குமிக்க மதகுரு கிராண்ட் அயதுல்லா அலி அல்-சிஸ்தானியின் அறிவிப்பைப் பின்பற்றுகிறார்கள். சுன்னி சிறுபான்மையினர் அவர்களின் சொந்த மதகுருக்களைப் பின்பற்றுகிறார்கள்.

அதிகாரப்பூர்வமாக மதச்சார்பற்ற நாடான துருக்கி, ரமலான் தொடக்கத்தையும் முடிவையும் தீர்மானிக்க வானியல் கணக்கீடுகளைப் பயன்படுத்துகிறது.

ஐரோப்பாவில், பெரும்பாலான இஸ்லாமியர்கள் தங்கள் சொந்த சமூகங்களின் தலைவர்களின் அறிவிப்புகளுக்காக காத்திருக்கிறார்கள்.

ரமலான் நோன்பு, ஈத் பண்டிகை, இஸ்லாம், முஸ்லிம்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஈத் பண்டிகையின் தேதி உலகம் முழுவதும் ஒரே மாதிரியாக இருக்காது. பொதுவாக அவை ஒன்று அல்லது இரண்டு நாட்கள் வித்தியாசத்தில் அமையும்

தமிழ்நாட்டில் என்ன குழப்பம்?

தமிழ்நாட்டில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட சில அமைப்புகள் நேற்று (செவ்வாய், ஏப்ரல் 9) பிறை தென்படதாக அறிவித்து, இன்று (ஏப்ரல் 10, புதன்கிழமை) ஈத் பெருநாளை அறிவித்துக் கொண்டாடிவருகின்றன. இது தமிழ்நாடு அரசு தலைமை காஜியின் அறிவிப்புக்கு எதிராக இருப்பதாகப் பேசப்பட்டுவரும் நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் ஆர் அப்துல் கரீம் இதற்கான காரணத்தை பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்.

அவர், பொதுவாக இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பதும், பெருநாள் கொண்டாடுவதும் பிறையைப் பொறுத்தே அமையும் என்று சொல்லப்பட்டிருக்கிறது, என்றார். “அதுவும், பிறை வானில் இருந்தால்மட்டும் போதாது, அது கண்ணுக்குத் தெரியவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது,” என்றார்.

“இதன் அடிப்படையில் தமிழ்நாடு தௌஹீத் ஜமாத், தமிழ்நாட்டை 50-க்கும் மேற்பட்ட மாவட்டங்களாகப் பிரித்திருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 20-25 கிளைகள் உள்ளன. இவற்றில் பிறை வானில் தெரிவதைக் கண்காணிக்கக் குழுக்கள் உள்ளன. மாநில நிர்வாகிகள் இடையேயும் பிறை கண்காணிப்புக் குழு உள்ளது. இது ரமலான் மாதம் மட்டுமல்ல. அனைத்து மாதங்களும் நடைபெறுகிறது,” என்றார்.

மேலும் பேசிய அவர், “தமிழ்நாட்டில் தலைமை காஜி, கடந்த காலங்களில் அவர்கள் இந்தியாவின் பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் பிறையைப் பார்த்ததாகச் சொல்லப்படுவதை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் பிறை தெரிந்ததாகச் சொல்லப்பட்டால் அதை ஏற்க மறுக்கின்றனர். அவர்கள் நபிகள் சொன்ன வழிமுறைப்படி அவர்கள் இல்லை. அதனால் பிறை விஷயத்தில் அவர்களை நம்புவதில்லை,” என்றார்.

“அதனால் தான் நாங்கள் தனியாகக் குழுக்கள் அமைத்து பிறையைக் கண்காணிக்கிறோம். அதனடிப்படையில் கோவையிலும் கன்னியாகுமரியிலும் பிறை பார்த்ததாகச் சொல்லப்பட்டது. எங்கள் நிர்வாகிகள் சென்று அதனை உறுதிப்படுத்தி அறிவித்து இன்று (ஏப்ரல் 10, புதன்கிழமை) பெருநாள் கொண்டாடினோம்,” என்றார்.

முன்னதாக தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதின் முகமது அயூப் வெளியிட்ட அறிக்கையில், செவ்வாய்க்கிழமை இரவில் பிறை தெரியாததால், வியாழக்கிழமையன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவித்திருந்தார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)