காஸாவில் 'துயரமான' ரமலான்: போரில் தாயையும் தந்தையையும் இழந்த குழந்தைகள் பெருநாளைக் கொண்டாட முடியாமல் தவிப்பு

காஸா, ஈத் பண்டிகை, ரமலான், குழந்தைகள்
    • எழுதியவர், ஆலா ரகெய்
    • பதவி, பிபிசி அரபி சேவை

ரமலான் மாதத்தின் இறுதி நாளான ஈத்-அல்-பித்ர் பண்டிகையை உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் கொண்டாடும் நிலையில், காஸாவின் குழந்தைகள் தங்களிடமிருந்து ஈத் பண்டிகையின் மகிழ்ச்சி பறிக்கப்பட்டுவிட்டதாகக் கூறுகின்றனர்.

ஐ.நா-வின் குழந்தைகள் அமைப்பான யுனிசெஃப்-இன் புள்ளிவிவரங்களின் படி, காஸா பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் தொகையில் 1% பேர் அனாதைகளாக அல்லது கவனித்துக்கொள்ளக் குடும்பப் பெரியவர்கள் இல்லாத குழந்தைகள் ஆவர். அத்தனை முகாம்களிலும் தங்கள் ஒன்று அல்லது இரண்டு பெற்றோரையுமே இழந்த குழந்தைகள் உள்ளனர்.

"இந்த ஈத் பெருநாள் முந்தைய ஈத் பெருநாட்களைப் போன்றதல்ல. போரின் காரணமாக நாங்கள் எங்கள் குடும்பத்தை இழந்திருக்கிறோம்," என்று காஸாவின் ரஃபாவில் வசிக்கும் 11 வயதான லயன் கூறுகிறார்.

லயனும், 18 மாதமே ஆன வயதுடைய அவரது சகோதரி சிவாரும் மட்டுமே அவரது குடும்பத்தில் உயிர் பிழைத்தவர்கள். அவர்களது குடும்பத்திலுள்ள மற்றவர்கள், கடந்த அக்டோபர் மாதம் காஸா நகரத்தில் உள்ள அல்-அஹ்லி மருத்துவமனையில் தஞ்சமடைந்திருந்தனர். அப்போது அமருத்துவமனை தாக்கப்படதில் அவர்கள் அனைவரும் கொல்லப்படனர்.

அன்றிரவு லயன் தனது குடும்பத்தில் உள்ள 35 உறுப்பினர்களை இழந்தார், அதில் அவரது பெற்றோர் மற்றும் அவரது ஐந்து உடன்பிறப்புகளும் அடங்குவர்.

"எங்கள் குடும்பம் அந்த மருத்துவமனையில் தஞ்சமடைந்து அரை மணி நேரமே ஆகியிருந்தது. அப்போது இரண்டு ஏவுகணைகள் எங்கள் மீது விழுந்தன. நான் கண்விழித்துப் பார்த்தபோது என் குடும்பத்தினர் அனைவரும் இறந்துவிட்டனர்," என்றார் லயன்.

காஸா நகரில் உள்ள மிகவும் பரபரப்பான அல்-அஹ்லி மருத்துவமனைமீது நடந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு பாலத்தீன இஸ்லாமிய ஜிஹாத் மற்றும் இஸ்ரேல் ராணூவம் ஆகிய இருவரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக் கொண்டனர்.

இப்போது லயன் அவரது சகோதரியும், தங்களது அத்தை மற்றும் அத்தை மகனான அலியுடன் தெற்கு காஸாவிலுள்ள ரஃபாவில் ஒரு கூடாரத்தில் தங்கியுள்ளனர்.

காஸா, ஈத் பண்டிகை, ரமலான், குழந்தைகள்
படக்குறிப்பு, "இந்த ஈத் பண்டிகைக்கு யாரும் எங்களைப் பார்க்க வரமாட்டார்கள்," என்று லயன் கூறுகிறார்

‘யாரும் எங்களைப் பார்க்க வரமாட்டார்கள்’

போரில் எல்லாவற்றையும் இழப்பதற்கு முன், லயன், தனது பெற்றோருடன் ஈத் பண்டிகைக்கு அணிய புதிய ஆடைகளை வாங்குவது வழக்கம். அவர்கள் ஈத் பண்டிகைப் பலகாரமான ‘மாமோல்’ என்று அழைக்கப்படும் பிஸ்கட்டுகளைச் செய்வார்கள். பண்டிகையை குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகக் களிப்பார்கள்.

ஆனால் இந்த ஆண்டு அது எதுவுமே நடக்காது. "இந்த ஈத் பண்டிகைக்கு யாரும் எங்களைப் பார்க்க வரமாட்டார்கள்," என்று அவர் கூறுகிறார்.

போரினால் பல லட்சம் மக்கள் வேலையிழந்திருக்கின்றனர். மக்களிடம் செலவு செய்ய பணம் இல்லை. இருந்தபோதிலும், 24-வயதான அவர்களது அத்தை மகன் அலி, தற்போது லயனையும் அவரது சகோதரியையும் கவனித்து வருகிறார். அவர்களுக்கும் அவர்களது மற்ற உறவினர்களுக்கும் தன்னால் முடிந்த ஆடைகள் மற்றும் பொம்மைகளை வாங்க அலி முடிவு செய்தார்.

லயன், அவரது 43 குடும்ப உறுப்பினர்களுடன் காஸா நகரின் ஜீதுன் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் வசித்து வந்தார். இப்போது அவர்களில் உயிர் பிழைத்தவர்கள் தெற்கு காஸாவில் ஒரு கூடாரத்தில் தங்கியுள்ளனர்.

காஸா, ஈத் பண்டிகை, ரமலான், குழந்தைகள்
படக்குறிப்பு, போருக்கு முன்பு, மஹ்மூத் ஒரு பாடிபில்டிங் சாம்பியனாக கனவு கண்டார்

‘பெற்றோரை இழந்த 43,000 குழந்தைகள்’

லயனைப் போலவே, 14 வயதான அவரது உறவினர் மஹ்மூத் என்பவரும் போரால் அனாதை ஆனவர்.

அல்-அஹ்லி மருத்துவமனையில் நடந்த அதே சம்பவத்தில் அவர் தனது பெற்றோர் மற்றும் பெரும்பாலான உடன்பிறப்புகளை இழந்தார். அவர் தனது குடும்பத்திற்கு தண்ணீர் எடுக்கச் சென்றதால் அந்த தாகுதல் நடந்தபோது மருத்துவமனைக்கு வெளியே இருந்தார்.

"நான் திரும்பி வந்தபோது, எல்லோரும் இறந்துவிட்டிருந்தனர். அதைக்கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன்," என்கிறார் மஹ்மூத்.

போருக்கு முன்பு, மஹ்மூத் ஒரு பாடிபில்டிங் சாம்பியனாக கனவு கண்டார். எகிப்தில் நடக்கும் ஒரு சர்வதேச பாடிபில்டிங் போட்டியில் பங்கேற்கத் தயாராகி வந்தார்.

ஆனால் இப்போது அவரது கனவு, காஸாவின் வடக்கில் உள்ள அவர்களது வீட்டிற்கு திரும்பிச் சென்று தனது பெற்றோரின் நினைவுக்கு அஞ்சலி செலுத்துவது மட்டுமே.

“இந்த ஈத் பெருநாளில் எங்களுக்கு மகிழ்ச்சி இல்லை. முன்பு பண்டிகையன்று தெருக்களை விளக்குகளால் அலங்கரித்தோம். ஆனால் இன்று எங்கள் கூடாரத்தில் அலங்காரத்திற்காக ஒரு கயிற்றை மட்டுமே தொங்கவிடுகிறோம்,” என்கிறார் மஹ்மூத்.

காஸாவில் 43,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஒன்று அல்லது இரு பெற்றோர் இல்லாமல் வாழ்கின்றனர் என்று பாலத்தீன மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த விஷயத்தில் துல்லியமான புள்ளிவிவரங்களைப் பெறுவது கடினம். ஆனால் காஸா பகுதியில் குறைந்தது 17,000 குழந்தைகள் ஆதரவின்றி உள்ளனர் அல்லது நடந்துவரும் போரில் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ளனர் என்று யுனிசெஃப் மதிப்பிட்டுள்ளது.

காஸா, ஈத் பண்டிகை, ரமலான், குழந்தைகள்
படக்குறிப்பு, ஈத் பிஸ்கட் தயாரிக்கும் மஜ்த் நாசர்

ஈத் பண்டிகையின் சுவையை மீட்டெடுக்கும் முயற்சி

ஈத் பண்டிகையின்போது பாரம்பரியமாக உறவினர்கள் ஒன்று கூடுவர், சிறப்பு உணவு பரிமாறப்படும். ஆனால் நடந்து கொண்டிருக்கும் போரால் இது சத்தியப்படாது. அதனால் காஸாவின் குழந்தைகளிடம் அவர்கள் நினைவுகள் மட்டுமே எஞ்சியுள்ளன.

காஸாவில் பரிமாறப்படும் ஈத் பண்டிகை உணவுகள் சுமக்கியா (இறைச்சியால் செய்யப்படும் ஒரு வகை கஞ்சி) மற்றும் ஃபாசிக் (உப்பில் ஊறவைத்த மீன்) ஆகியவை. ஆனால் ‘மாமூல்’ எனப்படும் ஈத் பிஸ்கட்டுகள் தான் இந்தப் பண்டிகையின் முக்கிய இனிப்பு.

தெற்கு காஸாவில் இருக்கும் ரஃபாவிற்கு இடம்பெயர்ந்த மஜ்த் நாசர் என்ற பாலத்தீன நபர் வசிக்கும் கூடாரத்தில், சுமார் 10 பெண்கள் கூடி மாமூல் தயாரித்து வருகின்றனர்.

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த 20 வயதான மஜ்த், ‘முகாமில் இருக்கும் குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஈத் பண்டிகையின் சுவையை மீட்டெடுக்க’ ஒரு முன்னெடுப்பை துவங்கியுள்ளார். அருகிலுள்ள கூடாரங்களில் உள்ள தனது அண்டை வீட்டாரை அழைத்து மாமூல் தயாரிக்கவைத்தார்.

"மாமூல் தயாரிக்கத் தேவையான பொருட்களின் விலை மூன்று முதல் நான்கு மடங்கு அதிகரித்துள்ளன," என்று அவர் கூறுகிறார்.

மஜ்த் இந்த பிஸ்கட்டுகளை முகாமில் உள்ள சுமார் 60 குடும்பங்களுக்கு விநியோகிக்கிறார்.

சுமார் 17 லட்சம் இடம்பெயர்ந்த மக்கள், இந்தப் பகுதி முழுவதும் கடுமையான சூழ்நிலையில் வாழ்கின்றனர். உணவு மற்றும் தண்ணீருக்காக அவர்கள் மனிதநேய உதவியையே நம்பியிருக்கின்றனர்.

காஸா, ஈத் பண்டிகை, ரமலான், குழந்தைகள்
படக்குறிப்பு, இப்போது இக்குழு முகாம்கள் மற்றும் இடிபாடுகளுக்கு நடுவே நிகழ்ச்சிகளை நடத்துக்கிறது

காஸா குழந்தைகளுக்கான சர்க்கஸ்

இந்தக் கொடுமையான சூழ்நிலைகளின் மத்தியிலும், அக்மது முஷ்தாஹா மற்றும் அவரது குழுவினர், ஈத் காலத்தில் வடக்கு காஸாவில் உள்ள இடம்பெயர்ந்த மக்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள் ஆகியோரின் முகங்களில் சிரிப்பைக் கொண்டுவர முயல்கின்றனர். அவர்கள் புலம்பெயர்ந்தோர் முகாம்களுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் ஒரு சர்க்கஸ் குழுவைத் துவங்கியிருக்கின்றனர்.

இப்பகுதியில் சுமார் 3 லட்சம் பேர் பஞ்சத்தை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளது.

"குழந்தைகளின் முகத்தில் மகிழ்ச்சியை வரவழைக்க நாங்கள் விரும்புகிறோம். அதனால் அவர்கள் ஈத் கொண்டாடக் கூடும்," என்று சர்க்கஸின் நிறுவனர் முஷ்தாஹா கூறுகிறார்.

இந்த சர்க்கஸ் குழு 2011-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்தக் குழு காஸா நகரில் இயங்கி வந்த கட்டிடம் குண்டுவீசித் தகர்க்கப்பட்டது. போருக்கு முன் இக்குழு குழந்தைகளுக்கு சர்க்கஸ் கலைகளை கற்பித்து வந்தது, மேலும் 10 கலைஞர்கள் கொண்ட இக்குழு பூங்காக்களில் குழந்தைகள் மற்றும் அனாதைகளுக்கான நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர்.

இப்போது இக்குழு முகாம்கள் மற்றும் இடிபாடுகளுக்கு நடுவே நிகழ்ச்சிகளை நடத்துக்கிறது. அக்ரோபாட்டிக்ஸ் மற்றும் கோமாளிகளின் வேடிக்கைகள் குழந்தைகளை சிரிக்க வைக்கின்றன.

"நாங்கள் ஒவ்வொரு முறை பயணம் செயும்போதும் பெரும் ஆபத்தை எதிர்கொள்கிறோம். நாங்கள் பலமுறை அதிசயமாக உயிர் பிழைத்தோம், காயமடைந்தோம். ஆனால் குழந்தைகளை போரின் துயரங்களை மறந்து சிரிக்க வைக்க முயல்கிறோம்," என்று முஷ்தாஹா கூறுகிறார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)