இந்தியா-சீனா எல்லை பிரச்னையை தீர்ப்பது குறித்து பிரதமர் மோதி கூறியது என்ன?

பட மூலாதாரம், MIKHAIL SVETLOV/GETTY IMAGES
இந்தியாவில் விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தியா-சீனா இடையே நிலவி வரும் எல்லைப் பிரச்னை குறித்துப் பிரதமர் நரேந்திர மோதி பேசியுள்ளார். சமீபத்தில் அமெரிக்க பத்திரிகையான 'நியூஸ் வீக்'கிற்கு (Newsweek) அளித்த பேட்டியில் பிரதமர் மோதி, எல்லைப் பிரச்னையை சீனாவுடன் பேசி உடனடியாக தீர்க்க வேண்டும் என தெரிவித்தார்.
“தங்கள் விநியோகச் சங்கிலியை விரிவுபடுத்த விரும்பும் நாடுகளுக்கு இந்தியா இயற்கையான தேர்வாகும்,” என, சீனாவுடனான உறவுகள் குறித்து பிரதமர் மோதி கூறினார்.
இதுதவிர, ஜம்மு காஷ்மீர், பெண்கள், தேர்தல் மற்றும் பொருளாதார வளர்ச்சி போன்ற பிரச்னைகள் குறித்தும் பேட்டியில் மோதி பேசினார்.
பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது, முன்பை விட பெரிய இலக்கை நிர்ணயித்துள்ளது. பாஜக தலைவர்கள் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் தென் மாநிலங்களிலும் பரவலாக பிரசாரம் செய்து வருகின்றனர்.
2014-இல் மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கு முன், நரேந்திர மோதி ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்கவில்லை என விமர்சிக்கப்பட்டது.
கடந்த காலங்களில் அவர் பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தவில்லை என்றும் விமர்சிக்கப்படுகிறது. பிரதமர் மோதி பிரதமரான பிறகு கடந்த 10 ஆண்டுகளில் ஒருமுறை கூட செய்தியாளர் சந்திப்பு நடத்தவில்லை.
கடந்த காலங்களில், தமிழகத்தில் தந்தி டிவி மற்றும் வடகிழக்கின் தி அஸ்ஸாம் ட்ரிப்யூன் உள்ளிட்ட ஊடக நிறுவனங்களுக்கு மோதி பேட்டி அளித்துள்ளார்.
இந்தியா-சீனா எல்லை பிரச்னை
'நியூஸ் வீக்'கிற்கு அளித்தப் பேட்டியில், பிரதமர் மோதி, சீனாவும் இந்தியாவும் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு பிரச்னையை விரைவில் தீர்க்க வேண்டும் என்று கூறினார்.
சீனாவுடனான உறவுகள் இந்தியாவுக்கு முக்கியம் என்றும், இந்த நீண்ட காலச் சூழலை இரு நாடுகளும் விரைவில் தீர்க்க வேண்டும் என்றும் பிரதமர் மோதி கூறினார்.
“இருநாடுகளுக்கு இடையேயான இருதரப்புப் பேச்சுவார்த்தையில் உள்ள கடினமான சூழ்நிலையை தவிர்க்க எல்லையில் நீண்டகாலமாக நிலவும் சூழ்நிலையை உடனடியாக தீர்க்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்” என அவர் தெரிவித்தார்.
ராஜதந்திர வழிகள் மற்றும் ராணுவ மட்டங்களில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளை அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இரு நாடுகளுக்கும் இடையே நீடித்த மற்றும் அமைதியான உறவுகள் இரு நாடுகளுக்கும் மட்டுமின்றி, முழு பிராந்தியத்துக்கும் முக்கியம். நேர்மறையான இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம், எல்லையில் அமைதியை மீட்டெடுக்க முடியும் என்று நம்புகிறேன்” என பிரதமர் மோதி கூறினார்.
இந்திய நிலத்தை சீன ராணுவம் ஆக்கிரமிப்பதாக எதிர்க்கட்சிகள் பலமுறை குற்றம்சாட்டி வருகின்றன.
2020-இல் கால்வன் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன ராணுவத்தினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் உயிரிழந்தனர்.
அப்போது, “எங்கள் பகுதிக்குள் யாரும் நுழையவும் இல்லை, அப்பகுதியை கைப்பற்றவும் இல்லை,” என பிரதமர் மோதி தெரிவித்திருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
இந்தியா-சீனா உறவுகள் குறித்து மோதி கூறியது என்ன?
உலகப் பொருளாதார வளர்ச்சியில் ஜனநாயக அரசியல் மற்றும் விநியோகச் சங்கிலிகளில் பன்முகத்தன்மையைக் காண விரும்புவோருக்கு இந்தியா இயற்கையான தேர்வாகும் என்று பிரதமர் மோதி கூறினார்.
பொருளாதாரம் தொடர்பான தனது அரசின் முடிவுகள், மாற்றத்தைக் கொண்டுவரும் சீர்திருத்தங்கள் என்று மோதி கூறினார்.
ஜி.எஸ்.டி (சரக்கு மற்றும் சேவை வரி), பெரு நிறுவனங்களுக்கான வரி குறைப்பு, அந்நிய நேரடி முதலீட்டு விதிகளில் தளர்வு மற்றும் தொழிலாளர் சட்டங்களில் சீர்திருத்தங்கள் ஆகியவற்றை அரசாங்கம் கொண்டு வந்துள்ளது என்று அவர் கூறினார்.
"உலக மக்கள்தொகையில் ஆறில் ஒரு பங்கைக் கொண்ட ஒரு நாடு இந்தப் பகுதிகளில் உலகளாவிய நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கும்போது, அது முழு உலகிலும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்," என்றார்.
மேலும், "எங்கள் வலிமையைக் கருத்தில் கொண்டு, குறைந்த விலையில் உலகத்தரம் வாய்ந்த பொருட்களை இந்தியா தயாரிக்க முடியும் என்று இப்போது உலகளவில் நம்பப்படுகிறது. நாங்கள் உலகத்திற்காக உற்பத்தி செய்வது மட்டுமல்லாமல், எங்களுடைய சொந்த பெரிய மற்றும் கவர்ச்சிகரமான உள்நாட்டு சந்தையையும் கொண்டுள்ளோம். நம்பகமான மற்றும் நெகிழ்வான விநியோகச் சங்கிலிகளை உருவாக்க விரும்புவோருக்கு இந்தியா ஏற்ற இடம்," என அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் தொடர்பான கேள்விக்கு, "பாகிஸ்தானின் உள் விவகாரங்கள் குறித்து நான் கருத்து தெரிவிக்க மாட்டேன்," என்று பிரதமர் மோதி கூறினார்.

பட மூலாதாரம், POOL/GETTY IMAGES
சீனா மற்றும் குவாட் கூட்டமைப்பு குறித்து மோதி கூறியது என்ன?
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அடங்கிய குவாட் கூட்டமைப்பு குறித்தும் மோதியிடம் இந்த நேர்காணலில் கேட்கப்பட்டது.
இந்தியப் பெருங்கடலில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கைத் தடுக்கும் நோக்கில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
குவாட் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த மோதி, அதன் நோக்கம் எந்த நாட்டிற்கும் எதிரானது அல்ல என்றும், எஸ்சிஓ மற்றும் பிரிக்ஸ் போன்ற பிற குழுக்களைப் போலவே, இது ஒரு பொதுவான நேர்மறையான, ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளின் குழு என்றும் கூறினார்.
இந்தப் பிராந்தியத்தின் பாதுகாப்பு, பிராந்தியத்திற்கு மட்டுமல்ல, உலகத்திற்கே முக்கியமானது என்றும் அவர் கூறினார்.
குவாட் சுதந்திரமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் பகுதியை ஆதரிக்கிறது என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.
மேலும் வரவிருக்கும் தேர்தல்கள் குறித்து பேசிய மோதி, மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க தனது கட்சி போட்டியிடுகிறது என்றும் கூறினார். இருப்பினும், "இரண்டாம் ஆட்சியின் முடிவில் மிகவும் பிரபலமான அரசாங்கங்கள் கூட ஆதரவை இழக்கத் தொடங்குகின்றன," என்று அவர் கூறினார்.
கடந்த சில ஆண்டுகளில் உலக அளவில் அரசாங்கங்கள் மீதான மக்களின் அதிருப்தியும் அதிகரித்துள்ளதாக கூறிய அவர், ஆனால் "இந்தியா விதிவிலக்காக உள்ளது. இந்தியாவில் பாஜக அரசுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது," என்றும் கூறினார்.

பட மூலாதாரம், ANI
ஊடக சுதந்திரம் பற்றி மோதி சொன்னது என்ன?
ஜனநாயகம் மற்றும் ஊடக சுதந்திரம் குறித்து, பிரதமர் மோதி, “இந்தியா ஜனநாயக நாடு என்பது அரசியலமைப்பில் மட்டும் அல்ல, அதன் மரபணுக்களில் உள்ளது,” என்றார்.
தொடர்ந்து அதிகரித்து வரும் வாக்காளர் பங்கேற்பே இந்திய ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது என்பதற்கு சான்றாகும் என்றார்.
"இந்த விஷயத்தில் நமது ஊடகங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. இந்தியாவில் சுமார் 1.5 லட்சம் ஊடக வெளியீடுகளும், நூறு செய்தி சேனல்களும் உள்ளன," என்றார்.

பட மூலாதாரம், YAWAR NAZIR/GETTY IMAGES
ஜம்மு காஷ்மீர் விவகாரம்
ஆகஸ்ட் 5, 2019 அன்று, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பின் 370-வது பிரிவை மத்திய அரசு நீக்கியது. மேலும், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் இரண்டு தனி யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டன.
சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, பிரதமர் மோதி சமீபத்தில் முதல் முறையாக காஷ்மீர் சென்றார்.
அந்த பேட்டியில் மோதி கூறுகையில், “ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை நேரடியாக பார்க்க அனைவரும் அங்கு வருமாறு கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
"மற்றவர்கள் சொல்வதை நம்பாதீர்கள். கடந்த மாதம் ஜம்மு காஷ்மீர் சென்றேன். எனது வாழ்க்கையில் முதல்முறையாக மக்கள் புதிய நம்பிக்கையை கண்டுள்ளனர். வளர்ச்சி, சிறந்த நிர்வாகத்தை உங்கள் கண்களால் பார்க்கவும்," என்றார்.
தீவிரவாத சம்பவங்கள் குறைவது குறித்தும் மோதி பேசினார்.
மக்கள் வாழ்க்கையை சீர்குலைத்த வேலைநிறுத்தம், கல் வீச்சு போன்ற சம்பவங்கள் இப்போது கடந்த காலமாகிவிட்டன என்று பிரதமர் மோதி கூறினார்.
பெண்களின் நிலை குறித்து மோதியின் கருத்து
நாட்டின் வளர்ச்சியில் பெண்கள் முன்னணியில் இருப்பதாக மோடி கூறினார்.
"பெண்கள் மேம்பாடு என்ற சொல்லை பெண்கள் தலைமையிலான வளர்ச்சி என்று மாற்றியுள்ளோம்," என்று அவர் கூறினார்.
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் இயற்றுவது குறித்துப் பேசினார். மேலும், எதிர்வரும் பொதுத் தேர்தலில் 15% பெண்கள் புதிய வாக்காளர்களாகப் பதிவு செய்துள்ளனர் என்றார்.
தனது ஆட்சிக் காலத்தில், பெண்களின் ஆரோக்கியத்தில் சாதகமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மோதி தெரிவித்தார்.
2014-இல் 130 ஆக இருந்த தாய்மார்களின் இறப்பு விகிதம் [ஒரு லட்சம் பிறப்புகளில்] 2020-இல் 97 ஆகக் குறைந்துள்ளது. இது தவிர, மகப்பேறு சலுகையில் 26 வார ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.
ராணுவம் மட்டுமின்றி மற்ற துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது என்றார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘இந்தியாவில் உள்ள விமானிகளில் 15% பேர் பெண்கள், இதுவே உலகிலேயே அதிகம்," என்றார்.
மேலும், “கழிப்பறைகள், சானிட்டரி நாப்கின்கள் போன்ற பிரச்னைகள் குறித்துப் பேசிய முதல் பிரதமர் நான்தான்,” என அவர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












