இந்திய உளவுத்துறை பாகிஸ்தானுக்குள் ரகசியமாக புகுந்து 20 பேரை கொன்றதா? புதிய சர்ச்சை

பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தானில் குறைந்தது 20 சட்டத்துக்கு புறம்பான கொலைகளை இந்திய அரசு நடத்தியதாக வெளியான ஊடக செய்தியைத் தொடர்ந்து இரு நாடுகளும் வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருகின்றன.
தி கார்டியன் நாளிதழில் கடந்த வாரம் வெளியான இந்த குற்றச்சாட்டுகள் குறித்து இந்தியா அதிகாரப்பூர்வமாக இதுவரை பதிலளிக்கவில்லை. அதேநேரம், ‘நாட்டில் அமைதியைக் குலைத்து பாகிஸ்தானுக்குத் தப்பிச் செல்லும் எவரையும் கொன்றுவிடுவோம்’ என்று இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த வெள்ளிக்கிழமை தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
இதனை ஆத்திரமூட்டும் கருத்து என்று கூறிய பாகிஸ்தான் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் உறவில் தொடரும் நெருக்கடி
இந்தியா- பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளுமே பதற்றமான உறவைக் கொண்டுள்ளன. இருநாடுகளும் இதுவரை மூன்று போர்களில் ஈடுபட்டுள்ளன.
2019 ஆம் ஆண்டில், புல்வாமா மாவட்டத்தில் இந்திய ராணுவ வீரர்களை குறிவைத்து தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட இந்த தற்கொலைத் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா வான்வழித் தாக்குதல்களை நடத்தியபோது, இருநாடுகளுக்கு இடையேயான உறவு மிகவும் மோசமடைந்தது.
அப்போதிருந்து, இரு நாடுகளின் உறவுகளில் மந்தநிலை நிலவியது.
இந்திய உளவுத்துறை பாகிஸ்தானுக்குள் ரகசியமாக புகுந்து 20 பேரை கொன்றதா?
இந்நிலையில், "வெளிநாட்டு மண்ணில் வாழும் பயங்கரவாதிகளை குறி வைக்கும்" ஒரு பரந்த கொள்கையின் ஒரு பகுதியாக 2020 முதல் பாகிஸ்தானில் குறைந்தது 20 பேர் கொலையில் இந்தியா ஈடுபட்டுள்ளது என்று தி கார்டியன் நாளிதழ் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து தற்போதைய புதிய பதற்றம் எழுந்துள்ளது.
தமது நாட்டில் தமது குடிமகன் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக நம்பகமான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கனேடிய அரசு குற்றம்சாட்டியது. இதனை இந்திய அரசு மறுத்தது குறிப்பிடதக்கது.
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள நிலையில் இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை பாகிஸ்தான் என்பது ஒரு உணர்வுப்பூர்வமான பிரச்னையாக உள்ளது. அரசியல் தலைவர்கள், குறிப்பாக ஆளும் பாஜகவைச் சேர்ந்தவர்கள், வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதற்காக பாகிஸ்தான் விவகாரத்தை தேசியவாத வாக்குகளை அறுவடை செய்யும் விஷயமாக பயன்படுத்துகின்றனர் என்று அரசியல் பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவின் உளவு அமைப்பான - (RAW) நேரடியாக படுகொலைகளில் ஈடுபட்டதாக இரண்டு தனி பாகிஸ்தான் உளவு அமைப்புகளின் மூத்த அதிகாரிகள் கூறியதாக தி கார்டியன் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டிலிருந்து பாகிஸ்தான் மற்றும் மேற்கு நாடுகளில், இந்தியா குறிவைத்து மேற்கொள்ளும் படுகொலைகள் "கணிசமான அளவு அதிகரித்துள்ளன" என்றும், அயல்நாட்டு மண்ணில் சட்டத்திற்குப் புறம்பான கொலைகளை மேற்கொள்வதில் தொடர்புடைய பிற அயல்நாட்டு உளவு நிறுவனங்களிலிருந்து இந்தியா உத்வேகம் பெற்றதாக அந்த அதிகாரிகள் கூறியதாகவும். அவர்களின் பெயர் வெளியிடாமல் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு வெளிநாடுகளில் உள்ள எதிர்ப்பாளர்களை குறிவைக்க இந்தியா முடிவு செய்ததாக இரண்டு இந்திய அதிகாரிகள் கூறியதாக, அவர்களின் பெயர் வெளியிடாமல் தனது செய்தியில் தி கார்டின் கூறியுள்ளது.
"புல்வாமாவிற்குப் பிறகு, நாட்டிற்கு வெளியே உள்ள பயங்கரவாத சக்திகள் இந்தியாவில் தாக்குதலைத் தொடங்குவதற்கு அல்லது எந்த இடையூறுகளையும் உருவாக்குவதற்கு முன், அவர்களை தாக்கும் விதமாக எங்களின் அணுகுமுறை மாறியது" என்று இந்திய உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாகவும் அந்த செய்தியில் காட்டப்பட்டுள்ளது.
"தாக்குதல் நடத்துபவர்களின் பாதுகாப்பான புகலிடங்கள் பாகிஸ்தானில் இருந்ததால் எங்களால் தாக்குதல்களை நிறுத்த முடியவில்லை. எனவே, மூலத்தை தேட வேண்டியிருந்தது என்றும், அத்தகைய நடவடிக்கைகளுக்கு அரசாங்கத்தின் உயர் மட்டத்தின் ஒப்புதல் தேவைப்பட்டதாகவும் அந்த இந்திய அதிகாரி கூறியிருந்ததாக தி கார்டியன் கூறுகிறது.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் பதில் என்ன?
நாளிதழின் குற்றச்சாட்டுகளுக்கு இந்தியா உடனடியாக பதிலளிக்கவில்லை. எனினும் மற்ற நாடுகளில் இலக்கு வைத்து கொலை செய்வது "இந்திய அரசின் கொள்கை அல்ல" என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் ஏற்கனவே கூறியதை வெளியுறவு அமைச்சகம் மேற்கோள் காட்டியதாக அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.
ஆனால், "இந்தியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்த முயற்சிக்கும் எந்த பயங்கரவாதிகளும் தப்ப முடியாது" என இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த வெள்ளியன்று கூறினார்.
சிஎன்என்-நியூஸ்18 தொலைக்காட்சி சேனலுக்கு ராஜ்நாத் சிங் அளித்த பேட்டியில் தி கார்டியனின் அறிக்கை தொடர்பான கேள்விக்கு , "அவர்கள் பாகிஸ்தானுக்கு ஓடிவிட்டால், அவர்களைக் கொல்ல நாங்கள் பாகிஸ்தானுக்குள் நுழைவோம்" என்று கூறியிருந்தார்.
இந்தியா கருத்து - பாகிஸ்தான் எதிர்வினை
இதற்கு சில மணி நேரங்கள் கழித்து பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம், ராஜ்நாத் சிங்கின் கருத்து ஆத்திரமூட்டும் வகையில் இருப்பதாக ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், "இத்தகைய குறுகிய பார்வை மற்றும் பொறுப்பற்ற நடத்தை பிராந்திய அமைதிக்கு கேடு விளைவிப்பது மட்டுமல்லாமல், நீண்ட கால நோக்கில் ஆக்கப்பூர்வமான செயல்பாட்டில் ஈடுபடும் வாய்ப்புகளையும் தடுக்கிறது" என்று கூறியிருந்தது.
இந்தியா தனது நாட்டில் சட்டத்துக்கு புறம்பான கொலைகளை மேற்கொள்வதை தொடர்புபடுத்தும் மறுக்க முடியாத ஆதாரங்களை பாகிஸ்தான் வழங்கியுள்ளது. இந்தியா செய்யும் சட்டத்துக்கு புறமான செயல்களுக்கு அந்த நாட்டை பொறுப்பேற்க வைக்க சர்வதேச சமூக முன்வர வேண்டும் என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது.
பாகிஸ்தானின் சமீபத்திய குற்றச்சாட்டுகளுக்கு இந்தியா இதுவரை பதிலளிக்கவில்லை.

பட மூலாதாரம், Getty Images
இந்தியா மீது அமெரிக்கா, கனடா புகார்
செப்டம்பரில், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசை தொடர்புபடுத்தும் "நம்பகமான குற்றச்சாட்டுகள்" இருப்பதாகக் கூறியிருந்தார்.
எனினும் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த இந்தியா, இதற்கான "உறுதியான ஆதாரங்களை" கனடா பகிர்ந்து கொள்ளவில்லை என்று கூறியது.
நவம்பரில், தனது குடிமகனும் சீக்கிய பிரிவினைவாதத் தலைவருமான குர்பத்வந்த் சிங் பன்னுவைக் கொல்ல இந்தியாவைச் சேர்ந்த நிகில் குப்தா திட்டமிட்டதாக கூறப்படும் சதியை முறியடித்ததாக அமெரிக்காவும் கூறியது.
இந்த கொலை முயற்சியில் தமக்கு எந்தவித தொடர்பும் இல்லை என இந்தியா மறுத்தது. எனினும், இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிகாரிகளுடன் "ஒத்துழைப்பதாக" இந்தியா கூறியது குறிப்பிடத்தக்கது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












