இந்திய சுற்றுலாப் பயணிகளைக் கவர மாலத்தீவு எடுத்துள்ள முயற்சி பலனளிக்குமா?

மாலத்தீவு

பட மூலாதாரம், MATATOMV

இந்தியச் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், மாலத்தீவின் முக்கியச் சுற்றுலா அமைப்பு ஒன்று இந்திய நகரங்களில் பேரணிகளை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.

மாலத்தீவிற்கு இந்திய மக்களை வரவேற்கும் வகையில் இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் பேரணி மற்றும் நிகழ்ச்சிகளை நடத்த உள்ளது இந்த அமைப்பு.

இதற்கு முன்பும் கூட இதே அமைப்பு இதுபோன்ற பேரணிகளை நடத்தியுள்ளது.

சமீப காலமாக, மாலத்தீவுக்கு செல்லும் இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு மாலத்தீவின் பயண முகவர்கள் மற்றும் சுற்றுலா ஆபரேட்டர்கள் சங்கம், இந்திய உயர் ஆணையரான முனு மஹாவருடன் இரு நாடுகளுக்கும் இடையிலான பயணம் மற்றும் சுற்றுலாவை அதிகரிக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

ஜனவரி 6-ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோதி லட்சத்தீவு சுற்றுப்பயணத்தின் போது எடுத்துக்கொண்ட சில படங்கள் மற்றும் வீடியோக்களை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து மாலத்தீவின் மூன்று முக்கிய அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பிரதமர் மோதி குறித்து சமூக வலைதளங்கில் மோசமான கருத்துக்களை பகிர்ந்திருந்தனர். அதனால், இந்தியாவிலும் மாலத்தீவை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவத் தொடங்கியது.

சில இந்தியப் பிரபலங்களும் கூட மாலத்தீவுக்குப் பதிலாக லட்சத்தீவுக்குச் செல்லுமாறு தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டனர்.

இந்தியாவின் சில தனியார் சுற்றுலா நிறுவனங்களும் மாலத்தீவுக்கான முன்பதிவுகளை நிறுத்துவது குறித்து கருத்துக்களை வெளியிட்டன.

மாலத்தீவு சுற்றுலாத் துறையின் புள்ளிவிவரங்களின்படி, 2024 ஜனவரியில் அந்நாட்டுக்கு அதிகமாக சுற்றுலா வரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 5-ஆம் இடத்திற்கு சென்றுள்ளது.

தரவுகளின்படி, ஜனவரி 2023-இல் இந்தியாவிலிருந்து மாலத்தீவுக்கு 17,029 சுற்றுலாப் பயணிகளின் சென்றுள்ளனர். ஆனால் அதுவே ஜனவரி 2024-இல் 12,792 ஆகக் குறைந்துள்ளது.

மாலத்தீவு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவின் முக்கிய நகரங்களில் பேரணிகள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்த உள்ளதாக மாலத்தீவு சுற்றலா ஆபரேட்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது

மாலத்தீவின் சுற்றுலா முகவர்கள் திட்டம்

பிடிஐ செய்தி முகமையின்படி, மாலத்தீவு தலைநகர் மாலேவில் உள்ள இந்திய உயர் ஆணையத்தில் நடைபெற்ற கூட்டத்தில், மாலத்தீவின் சுற்றுலா முகவர்கள் மற்றும் ஆபரேட்டர்கள் சங்கம் (MATATO) மாலத்தீவில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக இந்திய உயர் ஆணையரகத்துடன் இணைந்து பணியாற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் முக்கிய நகரங்களில் பேரணிகள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்த உள்ளதாகவும், சமூக ஊடகப் பிரபலங்களை மாலத்தீவுக்கு வரவழைத்து சுற்றுலா குறித்த விளம்பரம் செய்ய உள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.

மாலத்தீவை பொறுத்தவரை இந்தியா ஒரு முக்கியமான சுற்றுலா சந்தை எனவும், சுற்றுலா தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களோடு இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாகவும் MATATO அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்திய உயர் ஆணைய நிர்வாகிகளுடனான சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தும் வகையில் அமையும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

மாலத்தீவு

பட மூலாதாரம், HCIMALDIVES

படக்குறிப்பு, முகமது முய்சு மற்றும் பிரதமர் மோதி

முய்சுவுக்கு பிரதமர் மோதி கடிதம்

மாலத்தீவு மற்றும் இந்தியா இடையில் கடந்த பல மாதங்களாக நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், ஏப்ரல் 10-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதி அதிபர் முகமது முய்சுவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் முய்சு மற்றும் மாலத்தீவு மக்களுக்கும் தனது ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார் பிரதமர் மோதி.

மேலும் அந்த கடிதத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால கலாச்சார உறவுகள் குறித்தும் குறிப்பிட்டுள்ளார் மோதி.

பிரதமர் மோதி அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில், "நம் பாரம்பரிய முறையில் உற்சாகமாக ரமலான் பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், உலக மக்கள் அனைவரும் இரக்கம், சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமையை போற்றுகிறார்கள். இவை அனைத்துமே நாம் விரும்பும் அமைதியான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய உலகை கட்டமைக்க இன்றியமையாத தேவைகளாகும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

மாலத்தீவு அதிபர் முகமது முய்சு சீனாவின் ஆதரவாளராகக் கருதப்படுகிறார்.

கடந்த ஆண்டு நவம்பர் அந்நாட்டின் அதிபராக அவர் பதவியேற்றவுடன் முதலில் எழுப்பிய கோசமே, இந்திய ராணுவ வீரர்கள் மாலத்தீவை விட்டு வெளியேற வேண்டும் என்பதுதான்.

இவரது ஆட்சி தொடங்கியதில் இருந்தே இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் முரண்பாடுகள் அதிகரித்துள்ளது.

மாலத்தீவு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மாலத்தீவுக்கு குறிப்பிட்ட வரம்பை நிர்ணயித்து அடிப்படை பொருட்களை ஏற்றுமதி செய்கிறது இந்தியா.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் வெங்காயம் மற்றும் முட்டை

சமீபத்தில், இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் 2024-25 ஆம் நிதியாண்டில் அத்தியாவசியப் பொருட்களின் ஏற்றுமதி மீதான தடையை இந்தியா திரும்பப்பெற்றுள்ளது.

இதில் முட்டை, வெங்காயம், உருளைக்கிழங்கு, அரிசி, கோதுமை மாவு, மைதா, சர்க்கரை மற்றும் பருப்பு வகைகள் அடங்கும். இருப்பினும், இவற்றை ஏற்றுமதி செய்வதற்கு இந்தியா சில வரம்புகளையும் நிர்ணயித்துள்ளது.

அதன்படி, மாலத்தீவுக்கு 2024-25 நிதியாண்டில் சில பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு இந்தியா நிர்ணயித்துள்ள வரம்பு விவரங்கள்.

முட்டை - 42 கோடி

உருளைக்கிழங்கு - 21.5 ஆயிரம் மெட்ரிக் டன்

வெங்காயம்- 35.7 ஆயிரம் மெட்ரிக் டன்

அரிசி - 1.24 லட்சம் மெட்ரிக் டன்

கோதுமை மாவு - 1.09 லட்சம் மெட்ரிக் டன்

சர்க்கரை- 64.4 ஆயிரம் மெட்ரிக் டன்

பருப்பு - 224 மெட்ரிக் டன்

இது தவிர மாலத்தீவுக்கு 10 லட்சம் டன் கல் மற்றும் அதற்க்கு சம அளவு மணலையும் ஏற்றுமதி செய்யவும் இந்தியா அனுமதி அளித்துள்ளது.

கடினமான காலங்களில் மாலத்தீவுக்கு இந்தியா உதவுவது இது ஒன்றும் முதல் முறையல்ல.

மாலத்தீவு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு

இந்தியப் படைகளை வெளியேற சொன்ன முய்சு

முகமது முய்சு அதிபராக பதவியேற்ற பிறகு, மார்ச் 15-ஆம் தேதிக்குள் இந்திய ராணுவ வீரர்கள் மாலத்தீவை விட்டு வெளியேற வேண்டுமென்று காலக்கெடு விதித்தார்.

ஆனால் அந்த வீரர்கள் மாலத்தீவிற்காக உதவிக்கு அனுப்பப்பட்ட ஹெலிகாப்டர்கள் மற்றும் சிறிய ரக விமானங்களை கவனித்துக் கொள்ளவே அங்கு இருப்பதாக இந்தியா தெரிவித்தது.

அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 2024-இல் இந்தியாவிற்கும் மாலத்தீவுக்கும் இடையில் டெல்லியில் உயர்மட்டக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதன் பிறகு மே 10-ஆம் தேதிக்குள் மாலத்தீவில் உள்ள மூன்று விமான தளங்களை நிர்வகிக்கும் தனது இராணுவ வீரர்களை இந்தியா திரும்பப் பெற்றுக்கொள்ளும் என்றும், இதற்கான முதற்கட்ட செயல்முறை மார்ச் 10-ஆம் தேதிக்குள் முடிவுறும் என்றும் கூறியது மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம்,

ஆனாலும், இந்த காலக்கெடு முடிவுறுவதற்கு முன்பே இந்தியா தனது படைகளை திரும்பப் பெறத் தொடங்கியது.

இதற்கிடையில், இந்த விமானதளங்களை நிர்வகிப்பதற்காக தொழிலநுட்பக்குழு ஒன்றை மாலத்தீவு அனுப்பியது இந்தியா. ஆனால், அதற்கும் தனது ஆட்சேபனையை வெளிப்படுத்தினார் முய்சு.

மே 10ஆம் தேதிக்கு மேல் சீருடை அணிந்தோ அல்லது சீருடை இல்லாமலோ ஒரு இந்திய ராணுவ வீரர் கூட மாலத்தீவில் இருக்க கூடாது என்று வலியுறுத்தினார் அவர்.

மாலத்தீவு

பட மூலாதாரம், MEA

படக்குறிப்பு, பல்வேறு சிக்கலான சூழல்களில் இந்தியா மாலத்தீவிற்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது.

மாலத்தீவுக்கு இந்தியா உதவிய நிகழ்வுகள்

'ஆபரேஷன் கேக்டஸ்': 1988-ஆம் ஆண்டு மாலத்தீவு அதிபர் மௌமூன் அப்துல் கயூமுக்கு எதிராக ஒரு கிளர்ச்சி ஏற்பட்டது. இந்த கிளர்ச்சிக்கு மாலத்தீவு தொழிலதிபர் அப்துல்லா லுத்தூபி மற்றும் அவரது கூட்டாளியான சிக்கா அகமது இஸ்மாயில் மாணிக் ஆகியோர் தலைமை தாங்கினர். இலங்கையின் தீவிரவாத அமைப்பான ‘PLOT’ (தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்) அமைப்பின் உறுப்பினர்களை சுற்றுலாப் பயணிகள் என்ற போர்வையில் விரைவுப் படகுகள் மூலம் மாலத்தீவுக்கு அழைத்து வந்து நாட்டில் கிளர்ச்சியை தொடங்கினர்.

அந்த நிலையில் இந்திய ராணுவம் தான் மாலத்தீவு அரசாங்கம் கவிழாமல் அதை காப்பாற்றியது.

'ஆபரேஷன் சீ வேவ்ஸ்': 2024 டிசம்பரில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு உருவான சுனாமி மாலத்தீவிலும் பேரழிவை ஏற்படுத்தியது. இந்திய அரசாங்கம் அளித்துள்ள தகவலின்படி , இந்த சம்பவம் நடந்து 24 மணி நேரத்திற்குள் இந்திய விமானப்படை உதவிக்காக மாலத்தீவை அடைந்தது.

'ஆபரேஷன் நீர்' - டிசம்பர் 2014 ஆம் ஆண்டு, மாலத்தீவின் தலைநகரான மாலேயில் உள்ள மிகப்பெரிய நீர் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், மாலேவில் சுமார் ஒரு லட்சம் மக்கள் குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொண்டனர்.

இந்த நேரத்தில் இந்தியா ஆபரேஷன் நீர் என்ற திட்டத்தை தொடங்கி, தனது விமானப்படை மூலம் மாலத்தீவுக்கு அதிகளவில் நீர் கிடைக்க உதவியது.

கொரோனா உதவி: 2021 ஜனவரி 20 அன்று இந்தியா முதன்முதலில் மாலத்தீவுக்குதான் ஒரு லட்சம் கோவிட் தடுப்பூசி டோஸ்களை அனுப்பியது. இதற்குப் பிறகு, 2021 பிப்ரவரி 20 அன்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மாலத்தீவுக்குச் சென்றபோது, ​​இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 1 லட்சம் கோவிட் தடுப்பூசிகளின் இரண்டாவது தொகுதி வழங்கப்பட்டது. கோவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை வழங்குவதற்கு மாலத்தீவுக்கு ஆதரவாக இந்தியா நின்றது.

மார்ச் 6, பண்ணிரண்டாயிரம் கோவிட் தடுப்பூசிகள் மற்றும் மார்ச் 29, 2021, 1 லட்சம் தடுப்பூசிகளையும் மாலத்தீவுக்கு அனுப்பியது இந்தியா. இதுவரை இந்தியா மாலத்தீவுக்கு மொத்தம் மூன்று லட்சத்து பண்ணிரண்டாயிரம் தடுப்பூசி டோஸ்களை அனுப்பியுள்ளதாகவும், அதில் 2 லட்சம் தடுப்பூசிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)