சென்னையின் முக்கிய ஏரிகளில் குறைந்துவரும் நீர் – ஒரு கோடி மக்களுக்குக் குடிநீர் கிடைக்குமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
தென் இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு தீவிரமாகி வருகிறது, ஹைதராபாத்-இல் அடுத்த சில வாரங்களில் பற்றாக்குறை ஏற்படுமா என்ற கேள்வி உள்ளது.
இந்நிலையில் சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பை பார்க்கும் போது, சென்னையிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக அச்சம் எழுந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பெங்களூரூவுக்கு குடிநீர் வழங்கும் காவிரி ஆற்று நீரை பெற்று வரும் நீர் நிலைகளில் 39% மட்டுமே நீர் இருப்பு உள்ளது. பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் குடிநீர் வழங்கல் குறைக்கப்பட்டதற்காக சாலைகளில் இறங்கி போராடும் நிலைக்கு வந்துள்ளனர்.
நகரமயமாக்கல் அதிகரித்து வரும் தெலங்கானாவின் தலைநகரான ஹைதராபாத்தும் பெங்களூரூ போன்ற நிலையை நோக்கிச் செல்லலாம் என்று எச்சரிக்கப்படுகிறது. ஹைதராபாத்தில் உள்ள 185 நீர் நிலைகளில் 150-க்கும் மேற்பட்டவை ஆக்கிரமிக்கப்பட்டு அல்லது மாசுபட்டு உள்ளன என்று தெலங்கானா மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.
பெங்களூரூவில் 1973-ஆம் ஆண்டு 8% நிலத்தில் மட்டுமே கட்டிடங்கள் இருந்தன, ஆனால் 2023-ஆம் ஆண்டு 93.3% ஆக உயர்ந்துள்ளது என இந்திய அறிவியல் இன்ஸ்டிடியூட் தரவுகள் கூறுகின்றன, இது போன்ற நகரமயமாக்கலுக்கு சென்னை விதிவிலக்கு அல்ல.
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகம் மற்றும் சென்னை ஐஐடி இணைந்து நடத்திய ஆய்வில், சென்னையில் கட்டிடங்கள் இருக்கும் நிலபரப்பு 1,488 சதுர கி.மீ-லிருந்து நூறு ஆண்டுகளில் மூன்று மடங்காக அதிகரிக்கும் என்று கணிக்கிறது. இந்நிலையில், இந்த ஆண்டின் ஏரி நீர் இருப்பு தரவுகள் இந்த கவலையை அதிகரிக்கின்றன.

பட மூலாதாரம், Getty Images
சென்னை ஏரிகளில் எவ்வளவு நீர் உள்ளது?
சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும் ஏரிகளில், அவற்றின் முழு கொள்ளளவில் தற்போது 57% மட்டுமே நீர் உள்ளது. பூண்டி, சோழவரம், புழல், தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13.2 டி.எம்.சி-யாக உள்ளது. (டி.எம்.சி – ஆயிரம் மில்லியன் கன அடி)
அவற்றில் ஏப்ரல் 10-ஆம் தேதி நிலவரப்படி 7.53 டி.எம்.சி நீர் உள்ளது. கடந்த ஆண்டு இதே தேதியில் இந்த ஏரிகளில் 8.99 டி.எம்.சி நீர் இருந்தது.
இந்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி இந்த ஏரிகளில் மொத்தம் 11.03 டி.எம்.சி நீர் இருந்தது. நான்கு மாதங்களில் 3.5 டி.எம்.சி நீர் குறைந்துள்ளது. கோடைக்காலம் உச்சத்தை தொடாத நிலையில், வெப்ப அலைகளும் தீவிரமாக இருக்கலாம் என்று எச்சரிக்கப்படும் வேளையில், வரும் வாரங்களில் நிலைமை மோசமாகுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் சுமார் ஏழில் ஒரு பங்கு சென்னையில் உள்ளது. சமீபத்திய தரவுகள் படி, சென்னை சுமார் 1.2 கோடி மக்கள் தொகை கொண்டது. மாநிலத்திலேயே அதிக மக்கள் அடத்திக் கொண்டதும் சென்னை நகரமே. சென்னையில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 26,000 முதல் 27,00000 ஆயிரம் பேர் வரை வசிக்கின்றனர். இந்த நகரத்தின் ஒரு நாளுக்கான குடிநீர் தேவை சுமார் ஒரு டி.எம்.சி ஆகும். இதில் 850 மில்லியன் லிட்டர் நீரை சென்னை குடிநீர் வாரியம் வழங்கும். மீதமுள்ள தேவை நிலத்தடி நீர் உள்ளிட்ட பிற ஆதாரங்களிலிருந்து பூர்த்தி செய்யப்படும்.
சென்னையின் பிரதான குடிநீர் ஆதாரங்களாக விளங்கக் கூடியவை ஐந்து ஏரிகள். செம்பரம்பாக்கம், பூண்டி சோழவரம், புழல் மற்றும் சமீபத்தில் கட்டப்பட்ட தேர்வாய் கண்டிகை. செம்பரம்பாக்கத்தின் கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி, பூண்டியின் கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடி ஆகும். புழல் 3,300 மில்லியன் கன அடி நீரையும், சோழவரம் 1,081 மில்லியன் கன அடி நீரையும், தேர்வாய் கண்டிகை 500 மில்லியன் கன அடி நீரையும் இருப்பு வைத்துக் கொள்ள முடியும்.

வற்றிய வீராணம் ஏரி
இவை தவிர 1,465 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கடலூரில் இருக்கும் வீராணம் ஏரியிலிருந்து ஒரு நாளுக்கு அதிகபட்சமாக 180 மில்லியன் லிட்டர் நீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு கொண்டுவரக்கூடும். கடந்த ஆண்டு இதே நேரத்தில் வீராணம் ஏரியில் 712 மில்லியன் கன அடி நீர் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு வீராணம் ஏரி முற்றிலுமாக வற்றி விட்டது.
மேலும், தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் ஆந்திராவிலிருந்து கிருஷ்ணா நதிநீர் சென்னைக்கு கொண்டுவரப்படுகிறது. தமிழகத்தின் வட எல்லையில் உள்ள திருவள்ளூர் மாவட்ட ஊத்துக்கோட்டையை வந்தடையும் கிருஷ்ணா நீர், அங்கிருந்து சென்னையின் குடிநீர் தேவைக்கு பூண்டி ஏரிக்கு அனுப்பப்படும்.
இந்த திட்டத்திலிருந்து ஒரு ஆண்டுக்கு 12 டி.எம்.சி நீர் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும். ஆனால், பல்வேறு காரணங்களால் இதுவரை 12 டி.எம்.சி நீர் தமிழ்நாட்டுக்கு கிடைத்ததில்லை. ஆந்திராவில் மழை காரணமாக கிருஷ்ணா நதியில் வெள்ளம் ஏற்படும் போது, தானாக வரும் நீர், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தேவைப்படும் போது இரு மாநிலங்களுக்கு இடையே பல கடிதப் போக்குவரத்துகளுக்குப் பிறகே கிடைக்கிறது.

கடல் நீரை குடிநீராக்கும் ஆலைகளே தீர்வா?
சென்னையின் ஏரிகளில் வரும் நாட்களில் நீர் இருப்பு மேலும் குறையும் என்று கூறும் நீர் வள மேலாண்மை நிபுணர் எஸ்.ஜனகராஜன், இந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று கூறுகிறார்.
“சென்னையில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகள், குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க உதவும். இந்த ஆலைகளிலிருந்து ஒரு நாளுக்கு 350 எம்.எல்.டி (எம்.எல்.டி - ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் லிட்டர்கள்) நீர் கிடைக்கும். ஜூன் மாதத்துக்கு பிறகு தெலுங்கு கங்கை திட்டத்திலிருந்து சென்னைக்கு நீர் கிடைக்கும். வீராணம் வறண்டு இருப்பதால், ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்துக்கு பிறகு தான், அந்த ஏரியிலிருந்து நீர் கிடைக்கும்,” என்கிறார்.
கடல்நீரை குடிநீராக்கும் ஆலை 2010-ஆம் ஆண்டு சென்னையில் முதன் முதலாக அமைக்கப்பட்டது. சென்னையின் வடக்கில் மீஞ்சூரில் அமைக்கப்பட்ட அந்த ஆலை ஒரு நாளுக்கு 100 மில்லியன் லிட்டர் நீரை அப்பகுதியில் உள்ள 10 லட்சம் மக்களுக்கு வழங்கி வருகிறது. சென்னையின் தென் திசையில் நெம்மேலியில் அமைக்கப்பட்டுள்ள ஆலையும் 100 மில்லியன் லிட்டர் ஒரு நாளுக்கு வழங்கக் கூடியது. நெம்மேலியில் ரூ.1,516 கோடி மதிப்பீட்டில், 150 மில்லியன் லிட்டர் தரக்கூடிய மற்றொரு ஆலை சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது.
நான்காவது ஆலை, சென்னையிலிருந்து புதுச்சேரி வரை வங்கக் கடலை ஒட்டிய கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேரூரில் ரூ.4,276 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. 2026-ஆம் ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படும் இந்த ஆலை ஒரு நாளுக்கு 450 மில்லியன் லிட்டர் வழங்கும் திறன் கொண்டது. தென் கிழக்கு ஆசியாவிலேயே பெரிய ஆலையான இதிலிருந்து சென்னையின் தென் பகுதிகளில் உள்ள 22 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்க முடியும் என்று அரசு கூறுகிறது. இந்தியாவிலேயே 750 மில்லியன் லிட்டர் குடிநீரை கடல் நீரிலிருந்து பெறக் கூடிய நகரமாக சென்னை இருக்கும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
பிற குடிநீர் ஆதாரங்களிலிருந்து நீர் எடுப்பதற்கான செலவை விட கடல் நீரை குடிநீராக்கும் ஆலைகளின் செலவுகள் மூன்று மடங்கு அதிகமாகும்.
எஸ். ஜனகராஜன், “குடிநீர் பற்றாக்குறை இந்த ஆண்டு ஏற்படாது என்றாலும், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை பயன்படுத்தும் சிறந்த தீர்வு அல்ல. சென்னையில் ஒரு ஆண்டுக்கு 1,400 மில்லி மீட்டர் மழை பெய்கிறது. இந்த மழை நீரானது சென்னையின் குநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய போதுமானது. சென்னையை சுற்றி பல நீர் நிலைகளும் உள்ளன. மழைநீர் சேமிப்பு திட்டங்கள் என்னவாயின?” என்கிறார்.
மேலும், "மழைநீரைச் சேமித்து வைக்க நம்மிடம் திட்டங்களும் வசதிகளும் இருக்க வேண்டும். இப்போதும் 19-ஆம் நூற்றாண்டில் இருப்பது போல் இருக்க முடியாது. காலநிலை மாற்றம் காரணமாக மழை பொழியும் விதங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் கொட்டித் தீர்க்கும் மழையைச் சேமிக்கக் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். இந்தப் பிரச்னை உலகின் பெரும்பாலான நாடுகளில் உள்ளது. சாலைகளுக்கு அடியில் பல கிலோ மீட்டர் நீளத்துக்கு கால்வாய்கள் அமைத்து சில நாடுகளில் நீர் சேமிக்கின்றனர். பேரிடர்களை ஆக்கபூர்வமான வாய்ப்புகளாக மாற்ற வேண்டும்,” என்கிறார்.

சென்னையை உலுக்கிய 2019 தண்ணீர் தட்டுப்பாடு
சென்னையில் கடந்த 2019-ஆம் ஆண்டு கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. தண்ணீர் கிடைக்காமல் விடுதிகள் மூடப்பட்டு, உணவக நேரங்கள் குறைக்கப்பட்டத்தையும், குடியிருப்புப் பகுதிகளில் கைகலப்புகளையும் கூட சென்னை எதிர்கொண்டது. அப்போது பிற மாவட்டங்களில் இருந்த விவசாய கிணறுகளிலிருந்தும் கல் குவாரிகளிலிருந்தும் தண்ணீர் எடுத்து வரப்பட்டது.
அதே போன்று அதற்குமுன்னர் 2003-ஆம் ஆண்டு மிகக் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை சென்னை சந்தித்தது. அதன் பிறகே அனைத்து கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்பு வசதிகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற அரசாணை வழங்கப்பட்டது.
அது போன்ற நிலை இந்த ஆண்டு ஏற்படாது என எதிர்ப்பார்க்கப்பட்டாலும், மாறி வரும் பருவநிலைகள் காரணமாக எதிர்காலத்தில் மற்றொரு வறண்ட கோடைக்காலத்தை சென்னை மட்டுமல்லாமல் எந்த பெரிய நகரமும் எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம்.
ஒரு கோடிக்கும் மேலான மக்கள் வசிக்கும் சென்னை நகரத்தின் முக்கிய பலம் இங்கு பெய்யும் மழை ஆகும். ஒரு ஆண்டுக்குத் தேவையான குடிநீரை வழங்கும் அளவு சென்னையில் மழை பெய்கிறது. அதை முறையாகச் சேமித்து வைத்துக் கொள்வதே எல்லா வகையிலும் சிறந்த தீர்வு என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












