LSG vs DC: லக்னௌ சாதனைக்கு முற்றுப்புள்ளி - டெல்லிக்கு யானை பலம் தந்த குல்தீப் செய்தது என்ன?

பட மூலாதாரம், SPORTZPICS
- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
சாதனைகள் என்றுமே சாதனைகளாகவே நீடித்திருப்பதில்லை. கால ஓட்டத்தில் அவை முறியடிக்கப்பட்டால்தான் புதிய சாதனை பிறக்கும். அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றில் லக்னௌ அணி வைத்திருந்த சாதனைக்கு நேற்று டெல்லி கேபிடல்ஸ் அணி முற்றுப்புள்ளி வைத்தது.
லக்னௌவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 26வது லீக் ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது டெல்லி கேபிடல்ஸ் அணி.
முதலில் பேட் செய்த லக்னௌ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சேர்த்தது. 168 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் 11 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்த வெற்றி மூலம் புள்ளிவரிசையில் கடைசி இடத்திலிருந்த டெல்லி கேபிடல்ஸ் 9வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 6 போட்டிகளில் 2 வெற்றிகள், 4 தோல்விகள் என 4 புள்ளிகளுடன், நிகர ரன்ரேட்டையும் மைனஸ் 0.975 ஆக உயர்த்திக் கொண்டுள்ளது. சிஎஸ்கே அணிக்கு எதிரான வெற்றிக்குப் பின் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வந்த டெல்லிக்கு இந்த வெற்றி பெரிய உற்சாகத்தை அளிக்கும்.

பட மூலாதாரம், SPORTZPICS
அதேநேரம் லக்னௌ அணி 5 போட்டிகளில் 3 வெற்றி, 2 தோல்வி என 6 புள்ளிகளுடன் 4வது இடத்துக்குச் சரிந்துள்ளது. இந்தத் தோல்வியால் நிகர ரன்ரேட் 0.436 எனக் குறைந்ததால், 6 புள்ளிகளுடன் இருந்த சிஎஸ்கே அணி 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் லக்னௌ அணி நீண்டகாலமாக ஒரு சாதனையைத் தக்க வைத்து வருகிறது. அதாவது லக்னௌ அணி இதுவரை 13 போட்டிகளில் முதலில் பேட் செய்து 160 ரன்களுக்கு மேல் கடந்துவிட்ட போட்டிகளில் தோற்றது இல்லை. 160 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்ட அனைத்து ஸ்கோரையும் டிபெண்ட் செய்து வெற்றி பெற்றுள்ளது என்ற சாதனையைத் தக்கவைத்திருந்தது.
ஆனால், இந்த ஆட்டத்தில் லக்னௌ அணி 167 ரன்கள் அடித்த நிலையிலும், அந்த அணியை டிபெண்ட் செய்யவிடாமல் தடுத்து, டெல்லி கேபிடல்ஸ் வென்றுள்ளது. இதன் மூலம் 160 ரன்களுக்கு மேல் லக்னௌ சேர்த்தும் வெற்றி பெற்ற முதல் அணி என்ற பெருமையை டெல்லி கேபிடல்ஸ் பெற்றுள்ளது.
டெல்லி அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் காயத்திலிருந்து மீண்டு வந்து, அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ‘சினாமேன்’ குல்தீப் யாதவின் பந்துவீச்சுதான். லக்னௌ அணியின் முக்கிய விக்கெட்டுகளான கேஎல் ராகுல்(39), ஸ்டாய்னிஷ்(8) நிகலோஸ் பூரன்(0) ஆகிய 3 பேட்டர்களை வீழ்த்தினார். குல்தீப் யாதவ் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி ஆட்டநாயகன் விருதும் வென்றார்.

பட மூலாதாரம், SPORTZPICS
அது மட்டுமல்லாமல் பேட்டிங்கில் ஆஸ்திரேலியாவின் இளம் வீரரான ஜேக் ஃப்ரேசர் மெக்ருக் என்ற பேட்டரை டெல்லி கேபிடல்ஸ் கண்டுபிடித்துள்ளது. அறிமுகமான முதல் ஆட்டத்திலேயே லக்னௌ பந்துவீச்சை அநாயசமாக எதிர்கொண்ட ஃப்ரேசர்(55) 31 பந்துகளில் அரைசதம் அடித்து வெற்றியை எளிதாக்கினார்.
இதுதவிர தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா (32), கேப்டன் ரிஷப் பந்த்(41) ஆகியோரின் பங்களிப்பு டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு வெற்றியை எளிதாக்கியது. அதிலும் 3வது விக்கெட்டுக்கு ஃபேரசர், பந்த் கூட்டணி சேர்த்த 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் வெற்றிக்கு அருகே கொண்டு சென்றது.
மிகவும் எளிய இலக்கு இந்தப் போட்டியில் வெல்லாவிட்டால் வாய்ப்பைத் தவற விட்டுவிடுவோம் என அறிந்து பேட்டர்கள் பொறுப்புடன் விளையாடியதால் டெல்லி அணி வெற்றியைப் பெற்றது.
'தோல்விகளுக்குப் பின் கிடைத்த வெற்றி'
டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் கூறுகையில், “நிம்மதியாக இருக்கிறேன், தோல்விகளுக்குப் பின் கிடைத்த வெற்றி. சாம்பியன் போல் சிந்தியுங்கள், கடுமையாகப் போராடுவது அவசியம் என எங்கள் வீரர்களிடம் தெரிவித்தேன். ஒவ்வொரு வீரரும் தனிப்பட்ட ரீதியில் பொறுப்பெடுத்து விளையாடினர்.
குழுவாகவும் சிறப்பாகச் செயல்பட்டோம். காயத்தால் பல வீரர்கள் விளையாடாமல் இருப்பது பெரிய பாதிப்பாக அமைந்துள்ளது. 10 அணிகள் விளையாடுவதால், வீரர்கள் கிடைப்பதும் கடினமாக இருக்கிறது. தோல்வியால் கற்றுக்கொள்ள வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும்.
நீண்ட காலத்துக்குப் பின் எங்கள் அணியில் 3வது வீரராக ஃப்ரேசரை அடையாளம் கண்டோம். முதல் போட்டியிலேயே பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டார்” எனத் தெரிவித்தார்.
சாதனை படைத்த 8வது பார்ட்னர்ஷிப்

பட மூலாதாரம், SPORTZPICS
லக்னௌ அணியைப் பொருத்தவரை அந்த அணியின் பேட்டிங் தோல்விதான் போட்டியை இழக்கக் காரணம். டீகாக்(19), ராகுல்(39), நடுவரிசையில் ஸ்டாய்னிஷ், பூரன், படிக்கல், தீபக் ஹூடா, குர்னல் பாண்டியா என பேட்டர்கள் ஒருவர்கூட சோபிக்கவில்லை. 94 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலையில் இருந்தது.
ஆனால், 8வது விக்கெட்டுக்கு அர்ஷத்கான், ஆயுஷ் பதோனி இருவரும் சேர்ந்து 73 ரன்கள் சேர்த்து லக்னௌ அணியை 160 ரன்களுக்கு மேல் உயர்த்தினர். அதிலும் பதோனி அதிரடியாக ஆடி 31 பந்துகளில் அரைசதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
எட்டாவது விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 73 ரன்கள் சேர்த்தனர். ஐபிஎல் வரலாற்றில் 8வது விக்கெட்டுக்கு சேர்க்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இது. பதோனியும் சரியாக விளையாடமல் இருந்திருந்தால் லக்னௌ அணியின் கதை 120 ரன்களுக்குள் முடிந்திருக்கும்.
அது மட்டுமல்லாமல் லக்னௌ அணியின் புயல்வேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் காயத்தால் அவதிப்பட்டதால் கடந்த 2 போட்டிகளாக விளையாடவில்லை. அவர் அணியில் இருந்திருந்தால் நிச்சயம் ஏதேனும் திருப்பம் ஏற்பட்டிருக்கும். மயங்க் இல்லாதது லக்னௌ அணிக்கு சிறிய பின்னடைவுதான்.
மயங்க் ஏன் விளையாடவில்லை?

பட மூலாதாரம், SPORTZPICS
மயங்க் உடல்நிலை குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “மயங்க் உடல்நலம் தேறிவிட்டார், நலமாக இருக்கிறார். நன்றாக இருப்பதாக தெரிவித்தார்.
இருப்பினும் அவசரப்பட்டு அவரைக் களமிறக்க நாங்கள் விரும்பவில்லை. இளம் வீரர், குறைந்த வயது, அவரின் உடல்நிலைக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும், அதை நாங்கள் பாதுகாக்க வேண்டும்.
மயங்க் களமிறங்க ஆவலோடு இருக்கிறார், நாங்கள்தான் தடுத்து வைத்துள்ளோம். இன்னும் இரு போட்டிகளுக்குப் பின் களமிறங்குவார்,” எனத் தெரிவித்தார்.
யார் இந்த ஃபேரசர் மெக்ருக்?
ஆஸ்திரேலிய அணியின் மெல்போர்ன் நகரைச் சேர்ந்த 22 வயதான இளம் பேட்டர் ஃப்ரேசர் மெக்ருக். லுங்கி இங்கிடி காயத்தால் விலகவே அவருக்குப் பதிலாக ரூ.50 லட்சத்தில் ஃபரேசரை வாங்கியது.
ஆஸ்திரேலிய அணிக்காக 2 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ள ஃபரேசர் கடந்த பிப்ரவரி மாதம் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 221 ஸ்ட்ரைக் ரேட்டில் அரைசதம்(51) அடித்தார்.
ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஃப்ரேசர் இதுவரை சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியதில்லை. ஆஸ்திரேலியாவில் நடந்த உள்நாட்டு டி20 போட்டிகளில் ஃப்ரேசர் 37 போட்டிகளில் விளையாடி 135 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்.

பட மூலாதாரம், SPORTZPICS
அது மட்டுமல்லாமல் “லிஸ்ட்-ஏ” ஒரு நாள் போட்டிகளில் குறைந்த பந்துகளில் சதம் அடித்து ஏபிடியின் சாதனையை முறியடித்து ஃப்ரேசர் உலக சாதனை படைத்துள்ளார். 2023, அக்டோபரில் தெற்கு ஆஸ்திரேலிய அணிக்காக ஆடிய ஃப்ரேசர் 29 பந்துகளில் 13 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் சதம் அடித்து சாதனை படைத்தார்.
ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த பிக்பாஷ் டி20 லீக்கிலும் ஃப்ரேசர் 257 ரன்கள் குவித்திருந்தார், 158 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார். இதனால் டெல்லி கேபிடல்ஸ் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கவனத்தை ஈர்த்து, ஃப்ரேசர் அணிக்குள் வந்தார்.
இந்த ஆட்டத்தில் அறிமுகமான முதல் போட்டியிலேயே ஃப்ரேசர் 157 ஸ்ட்ரைக் ரேட்டில் 31 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். அதிலும் ஃப்ரேசர் தான் சந்தித்த 3வது பந்திலேயே ப்ரண்ட் புட் அடித்து, டீப் மிட்விக்கெட்டில் சிக்ஸர் விளாசி ரன் கணக்கைத் தொடங்கினார்.
ஃப்ரேசர் பேட்டிங்கை பார்த்து பயிற்சியாளர் பாண்டிங் ரசித்துக் கொண்டிருந்தார். குர்னல் பாண்டியா ஓவரில் மிட்விக்கெட், எக்ஸ்ட்ரா கவர் மற்றும் லாங்ஆஃப் திசையில் தொடர்ந்து 3 சிக்ஸர்களை விளாசி ரன்களை குவித்தார். ஃப்ரேசர் தனது கணக்கில் 5 சிக்ஸர்களையும், 2 பவுண்டரிகளையும் விளாசி 55 ரன்களில் ஆட்டமிழந்தார்.
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு 3வது பேட்டராக அருமையான கண்டுபிடிப்பாக ஃப்ரேசர் அமைந்துள்ளார் என்பதில் சந்தேகமில்லை.
பந்தின் கேப்டன் பொறுப்பு

பட மூலாதாரம், SPORTZPICS
ரிஷப் பந்த் இந்த சீசனில் கேப்டனுக்குரிய பொறுப்புடன் ஒவ்வொரு போட்டியிலும் பேட் செய்து வருகிறார். இந்தப் போட்டியில் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பந்த் ஒவ்வொரு ரன்களையும் சேர்த்தார்.
வார்னர்(9), பிரித்வி ஷா(32) ரன்களில் ஆட்டமிழந்தபோது டெல்லி கேபிடல்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் சேர்த்து தடுமாற்றத்துடன் இருந்தது.
ஆனால், 3வது விக்கெட்டுக்கு ஃப்ரேசருடன், பந்த் அமைத்த பார்ட்னர்ஷிப் டெல்லி அணியை வெற்றிக்கு அருகே அழைத்துச் சென்றது. இருவரும் சேர்ந்து லக்னௌ பந்துவீச்சை வெளுத்து வாங்கினர்.
ஃப்ரேசர் ஒருபுறம் சிக்ஸர், பவுண்டரி விளாச, ரிஷப் பந்தும் தனது பங்கிற்கு 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளை விரட்டி ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்றார். அரைசதம் நோக்கி நகர்ந்த பந்த் 41 ரன்னில் பிஸ்னோய் பந்துவீச்சில் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார்.
யானை பலம் தந்த குல்தீப் வருகை

பட மூலாதாரம், SPORTZPICS
சினாமேன் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் காயத்தால் அவதிப்பட்டதால், டெல்லி கேபிடல்ஸ் அணி விரல் ஸ்பின்னர் அக்ஸர் படேலை மட்டும் வைத்து கடந்த சில போட்டிகளை எதிர்கொண்டு தோல்வியும் அடைந்தது. ஆனால், குல்தீப் யாதவ் நேற்றைய ஆட்டத்தில் களமிறங்கியவுடன் போட்டியின் போக்கையே தனது பந்துவீச்சால் மாற்றினார்.
லக்னௌ அணியின் ரன்வேகத்தைக் கட்டுப்படுத்திய குல்தீப், விக்கெட்டுகளையும் வீழ்த்திக் கொடுத்து, லக்னௌவை கடும் சிரமத்தில் தள்ளினார். குறிப்பாக ஸ்டாய்னிஷ், பூரன், கே.எல் ராகுல் ஆகிய 3 முக்கிய பேட்டர்களை வீழ்த்தி, டெல்லி அணியை 77 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழக்கச் செய்து தடுமாறச் செய்தார்.
அதிலும் குல்தீப் பந்துவீச்சைக் குறைத்து மதிப்பிட்டு அடிக்க முயன்றார். ஆனால் பந்து கூக்ளியாகவே, ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். நிகோலஸ் பூரன் அதிரடியாக பேட் செய்யக் கூடியவர், குல்தீப் பந்தை தவறாகக் கணித்து ஆட முற்படவே, க்ளீன் போல்டாகி டக்அவுட்டில் ஆட்டமிழந்தார்.
குல்தீப் பந்துவீச்சில் பவுண்டரி அடித்து ஸ்கோரை உயர்த்திய கேப்டன் ராகுல், வைடாக வீசப்பட்ட பந்தை இறங்கி அடிக்க முற்பட்டு, ரிஷப் பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார். இந்த 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆட்டத்தில் திருப்புமுனையை குல்தீப் ஏற்படுத்தினார்.
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு குல்தீப் வருகை அந்த அணிக்கு யானை பலத்தை ஏற்படுத்தியது. தொடர் தோல்விகளுக்குப் பின் பெற்ற வெற்றியால், கேப்டன் ரிஷப் பந்த், பயிற்சியாளர் பாண்டிங், மென்டர் கங்குலி முகத்தில் நேற்றுதான் புன்னகை தவழ்ந்தது.
தோனியாக மாறிய பதோனி

பட மூலாதாரம், SPORTZPICS
தீபக் ஹூடா 10 ரன்னில் இஷாந்த் ஷர்மா பந்துவீச்சில் வார்னரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முகேஷ்குமார் பவுன்ஸர் பந்துவீச்சில் குர்னல் பாண்டியா 3 ரன்னில் விக்கெட் கீப்பர் பந்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால் 94 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து லக்னௌ அணி தடுமாறியது.
நடுவரிசை பேட்டர்கள் “கொலாப்ஸ்” ஆகியதால் 6 ஓவர்களாக லக்னௌ அணி ஒரு பவுண்டரிகூட அடிக்காததால் ஸ்கோர் படுத்துவிட்டது. 8வது விக்கெட்டுக்கு ஆயுஷ் பதோனி, அர்ஷத் கூட்டணி அணியை சரிவிலிருந்து மீட்டது. பதோனியின் அதிரடிக்கு ஒத்துழைத்து அர்ஷத் ஸ்ட்ரைக்கை மாற்றி பேட் செய்தார்.
அதிரடியாக பேட் செய்த பதோனி ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 31 பந்துகளில் அரைசதம் அடித்தார். அர்ஷத் கான் 20 ரன்கள் சேர்த்தார். இருவரும் 8வது விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்து ஐபிஎல் வரலாற்றில் சாதனையும் படைத்தனர்.
கடைசி நேரத்தில் களமிறங்கி அருமையான ஃபினிஷ் செய்து, தோனியை போன்ற ஃபினிஷராக பதோனி மாறினார். பதோனி, அர்ஷத் இருவரும் நிலைத்து ஆடாமல் இருந்திருந்தால் லக்னௌ நிலை பரிதாபமாகியிருக்கும், டெல்லி அணியும் குறைந்த ஓவர்களில் வென்று, நிகர ரன்ரேட்டை உயர்த்தியிருக்கும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












