இது ஆகச் சிறந்த ஆட்டம் என கம்மின்ஸ் கூறியது ஏன்? - அப்படி என்ன நடந்தது?

கம்மின்ஸ்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், க.போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

டி20 போட்டி என்றாலே விறுவிறுப்பு, திருப்பங்கள், இருக்கையின் நுனியில் அமரவைக்கும் முடிவு, ரத்தக்கொதிப்பை ஏற்றும் தருணங்கள், இதயத்துடிப்பை எகிற வைக்கும் தருணங்கள் பெரும்பாலும் இருக்கும். அவை அனைத்தும் நேற்றைய பஞ்சாப் மற்றும் சன்ரைசர்ஸ் ஆட்டத்தை நேரிலும், தொலைக்காட்சியிலும் பார்த்த ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கும் என்று நம்பலாம்.

கடைசிப்பந்து வரை யார் பக்கம் ஆட்டம் முடியும் என்று கணிக்க முடியாத அளவுக்கு பரபரப்பு நிறைந்ததாக இருந்தது. சிறந்த டி20 ஆட்டங்களுள் ஒன்றாக இந்த ஆட்டத்தைக் குறிப்பிடலாம். கடைசி ஓவரின் கடைசிப் பந்துவரை பஞ்சாப் பேட்டர்கள் வெற்றிக்காகப் போராடினார்கள், அதேநேரம், பதற்றத்தில் சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர் உனத்கட் வெற்றியைத் தவறவிட்டுவிடுவாரோ என்ற படபடப்பு என அனைத்தும் தொற்றிக்கொண்டு ரசிகர்களின் டென்ஷனை உச்சத்துக்கு கொண்டு சென்றது.

உனத்கட் வீசிய ஒரு பந்தில்தான் ஆட்டத்தின் முடிவு தலைகீழானது. கடைசி ஓவரை தொடக்கத்தில் இருந்து மோசமாக வீசிய உனத்கட் அந்தஒரு பந்தையும் வழக்கம்போல் மோசமாக வீசியிருந்தால், வெற்றியை பஞ்சாப்பிடம் தூக்கிக்கொடுத்துவிட்டு சன்ரைசர்ஸ் சென்றிருக்கும். ஆக, பஞ்சாப்பின் தோல்வி, சன்ரைசர்ஸ் வெற்றி அனைத்தும் ஒரு பந்தில்தான் முடிவு செய்யப்பட்டது.

முல்லான்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 23-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 2 ரன்களில் தோற்கடித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

ஐபிஎல் டி20, பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

பட மூலாதாரம், Getty Images

முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் சேர்த்தது. 183 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் சேர்த்து 2 ரன்னில் தோல்வி அடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி 5 போட்டிகளில் 3 வெற்றி, 2 தோல்வி என 6 புள்ளிகளுடன் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது, நிகர ரன்ரேட்டும் 0.344 ஆக இருக்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றிக்காக கடைசிவரை இழுத்தடித்து வந்தது நிகர ரன்ரேட்டை பெரிதாக உயர்த்தவில்லை. மாறாக பஞ்சாப் கிங்ஸ் அணி 5 போட்டிகளி்ல் 3 தோல்விகள், 2 வெற்றி என 4 புள்ளிகளுடன் நிகர ரன்ரேட் மைனஸ் 0.196 என 6-வது இடத்தில் இருக்கிறது.

சன்ரைசர்ஸ் அணி ஒரு கட்டத்தில் 150 ரன்களைக் கடப்பதே கடினம் என்ற நிலையில் இருந்தது. ஆனால், அந்த அணியை பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் சிறப்பாகக் கொண்டு சென்றவர் ‘அன்கேப்டு’ வீரர் நிதீஷ்குமார் ரெட்டிதான். நிதீஷ் குமார் ரெட்டி 37 பந்துகளில் 64(5சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள்) ரன்கள் சேர்த்தும், பந்துவீச்சில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார்.

சன்ரைசர்ஸ் அணி நீண்டகாலத்துக்கு பின் சிறந்த ஆல்ரவுண்டர்களையும், இளம் வீரர்களையும் அடையாளம் கண்டுள்ளது. இளம் வீரர்கள் மீது சன்ரைசர்ஸ் அணி செய்த முதலீடு வீண்போகவில்லை. அப்துல் சமது (25), ஷான்பாஸ் அகமது (14) அபிஷேக் சர்மா (16) என இளம் வீரர்கள் பல நேரங்களில் சன்ரைசர்ஸ் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளனர். அது மட்டுமல்லாமல் இதுபோன்ற இளம் வீரர்கள் இந்திய அணியின் தேர்வாளர்களுக்கு இதுபோன்ற ஆட்டத்தின் மூலம் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர்.

ஐபிஎல் டி20, பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த ஓவரில் அஷுதோஷ் 2 பவுண்டர்கள் உள்பட 11 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு அருகே அணியை நகர்த்தினார்

போராடிய பஞ்சாப் வீரர்கள்

அதேபோல பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டர்கள் அஷுதோஷ், சஷாங் இருவரும் கடைசிப் பந்துவரை தங்கள் அணியின் வெற்றிக்காகப் போராடினார்கள். ஏற்கெனவே குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி என அனைவரும் நினைத்த நேரத்தில் சஷாங்க், அஷுதோஷ் இருவரும் இணைந்து மாபெரும் வெற்றியைத் தேடித்தந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தையும் இருவரும் மாற்ற முயன்றனர். ஆனால், ஒரு பந்தில் அனைத்தும் மாறியது. சஷாங் 46 ரன்களிலும், அஷுதோஷ் 33 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில் “கிரிக்கெட்டின் மிகச்சிறந்த ஆட்டமாக இது இருக்கும். பஞ்சாப் சிறப்பாக பந்துவீசி தொடங்கினாலும் எங்கள் பேட்டர்கள் 182 ரன்கள் அடித்துவிட்டார்கள். அதையும் நாங்கள் டிபெண்ட் செய்திருக்கிறோம். இம்பாக்ட் வீரரின் சிறப்பே பேட்டிங் வரிசையை இன்னும் ஆழமாக கொண்டு செல்ல முடியும். 150 ரன்கள் சேர்த்திருந்தால், நிச்சயமாக தோற்றிருப்போம்.

"புதிய பந்து எப்போதுமே விக்கெட்டை பெற்றுக்கொடுப்பதில் முக்கியம்வாய்ந்தது. எங்கள் பெஞ்ச் வலிமை, வீரர்கள் செயல்பாடு மகிழ்ச்சியாக இருக்கிறது. புதிய பந்தில் நானும், புவியும் சிறப்பாக பந்துவீசி இரு விக்கெட்டுகளை வீழ்த்தியது திருப்பமாக அமைந்தது. இரு அணிகளிலும் ஏராளமான இடதுகை, வலது பேட்டர்களும், பந்துவீச்சாளர்களும் இருப்பதால் ஆட்டம் கடும் நெருக்கடியாகச் சென்றது. நிதீஷ் குமார் சிறப்பான பங்களிப்பு செய்தார். அவரின் பேட்டிங்கால் 180 ரன்கள் வந்தது,” எனத் தெரிவித்தார்.

ஐபிஎல்

பட மூலாதாரம், SPORTZPICS

ஆட்டத்தை மாற்றிய ஓவர்கள்

கடைசி 5 ஓவர்களில் பஞ்சாப் வெற்றிக்கு 78 ரன்கள் தேவை என அசாதாரண இலக்கு இருந்தது. கைவசம் 5 விக்கெட்டுகள் இருந்தன. நிதிஷ் குமார் வீசிய 16-வது ஓவரில் ஜிதேஷ் சர்மா சிக்ஸர் அடித்தநிலையில் விக்கெட்டை இழந்தார். அந்த ஓவரில் பஞ்சாப் 11 ரன்கள் சேர்த்தது.

6-ஆவது விக்கெட்டுக்கு சஷாங்குடன், அஷுதோஷ் சேர்ந்தார். புவனேஷ்வர் வீசிய 17வது ஓவரில் சஷாங் சிங் 3 பவுண்டரிகள் உள்பட 17 ரன்கள் சேர்த்து ஆட்டத்தை பரபரப்பாக்கினார்.

கடைசி 3 ஓவர்களில் பஞ்சாப் வெற்றிக்கு 50 ரன்கள் தேவைப்பட்டது. கேப்டன் கம்மின்ஸ் 18-வது ஓவரை வீசினார். இந்த ஓவரில் அஷுதோஷ் 2 பவுண்டர்கள் உள்பட 11 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு அருகே அணியை நகர்த்தினார். கடைசி 12 பந்துகளில் வெற்றிக்கு 39 ரன்கள் தேவைப்பட்டது.

நடராஜன் வீசிய 19-ஆவது ஓவரில் அஷுதோஷ், சஷாங் இருவரும் தலா ஒரு பவுண்டரி அடித்து 10 ரன்கள் சேர்த்தனர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்டன. பஞ்சாப் அணி வென்றுவிடுமா அல்லது தோல்வியைத் தழுவுமா என்ற பரபரப்பு அரங்கில் ரசிகர்களைத் தொற்றிக்கொண்டது.

திக்..திக்.. கடைசி ஓவர்

20-ஆவது ஓவரை உனத்கட் வீசினார். உனத்கட் வீசிய முதல் பந்தில் அஷுடோஷ் மிட்விக்கெட் திசையில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். இதனால் பதற்றமடைந்த உனத்கட் தொடர்ந்து 2 வைடு பந்துகளை வீசி, கூடுதலாக 2 ரன்களைக் கொடுத்தார். 2-வது பந்தில் லாங்ஆன் திசையில் அஷுதோஷ் மீண்டும் ஒரு சிக்ஸரை விளாசினார்.

இதனால் 2 பந்துகளில் வெற்றிக்கு 14 ரன்களை பஞ்சாப் சேர்த்தது. கடைசி 4 பந்துகளில் 15 ரன்கள் தேவைப்பட்டது. 3வது பந்தில் அஷுதோஷ் 2 ரன்கள் சேர்த்தார். 3 பந்துகளில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவை. 4-வது பந்திலும் அஷுதோஷ் 2 ரன்கள் சேர்த்து ஸ்ட்ரைக்கை தக்கவைத்தார். 2 பந்துகளில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவை. 5-வது பந்தை உனத்கட் மீண்டும் வைடு பந்தாக வீசினார். இதில் கூடுதலாக ஒரு ரன் கிடைக்க வெற்றிக்கு 10 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 5-வது பந்தில் அஷுதோஷ் மிட்விக்கெட்டில்தூக்கி அடிக்க பவுண்டரி செல்லும் என எதிர்பார்க்கப்பட்டு ஒரு ரன் மட்டுமே கிடைத்தது.

இந்த ஒரு பந்து தான் ஆட்டத்தை மாற்றிய சூத்திரதாரியாக இருந்தது. கடைசிப் பந்தில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டநிலையில் சஷாங் சிங் ஒரு சிக்ஸர் அடிக்க 2 ரன்னில் பஞ்சாப் அணி தோற்றது. கடைசி ஓவரில் மட்டும் அஷுதோஷுக்கு 3 கேட்சுகளை பஞ்சாப் அணி கோட்டைவிட்டும், வெற்றிபெற்றுள்ளது.

ஐபிஎல் டி20, பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹர்பிரித் பிரார் ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்ஸர், ரபாடா ஓவரில் ஒரு சிக்ஸர், சாம்கரன் ஓவரில் ஒரு சிக்ஸர் என நிதிஷ் குமார் பந்துகளை பறக்கவிட்டார்

சன்ரைசர்ஸை மீட்ட ஆபத்பாந்தவன்

சன்ரைசர்ஸ் அணியின் ஸ்கோர் நேற்றைய ஆட்டத்தில் 150 ரன்களைக் கடப்பதே கடினமாக இருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் டிராவிஸ் ஹெட் (21),அபிஷேக் (16), மார்க்ரம் (0), திரிபாதி (11), கிளாசன் (9) என விரைவாக ஆட்டமிழக்க 10 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் என பரிதாபமாக இருந்தது. இதனால் 120 முதல் 130 ரன்களில் ஆட்டம் முடிந்துவிடும் என்று ரசிகர்கள் எண்ணினர்.

ஆனால், நிதிஷ் குமார் ரெட்டி (64) அப்துல் சமது கூட்டணி 6-வது விக்கெட்டுக்கு 18 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றனர். ஷான்பாஸ் அகமது கடைசி நேரத்தில் கேமியோ ஆடி 14 ரன்களைச் சேர்த்தார். 10 ஓவர்களில் 64 ரன்கள் இருந்த சன்ரைசர்ஸ் அணியை அடுத்த 10 ஓவர்களில் 182 ரன்கள்வரை இழுத்துவந்தனர், கடைசி 10 ஓவர்களில் மட்டும் சன்ரைசர்ஸ் அணி 118 ரன்கள் சேர்த்தனர்.

ஒரு கட்டத்தில் நிதிஷ்குமார் 18 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார். ஹர்பிரித் பிரார் ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்ஸர், ரபாடா ஓவரில் ஒரு சிக்ஸர், சாம்கரன் ஓவரில் ஒரு சிக்ஸர் என நிதிஷ் குமார் பந்துகளை பறக்கவிட்டார். அதிலும் பிரார்வீசிய 15வது ஓவரில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என அவரைக் குறிவைத்து வெளுத்து 32 பந்துகளில் ஐபிஎல் தொடரில் முதல் அரைசதத்தை பதிவு செய்தார். நிதிஷ் குமார் மட்டும் நடுவரிசையில் நிலைத்து பேட் செய்யாமல் இருந்திருந்தால் சன்ரைசர்ஸ் தோல்வி உறுதி செய்யப்பட்டிருக்கும்.

ஐபிஎல் டி20, பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நிதிஷ் குமார் ரெட்டி (64) அப்துல் சமது கூட்டணி 6-வது விக்கெட்டுக்கு 18 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றனர்

பஞ்சாப் அணி எங்கே கோட்டைவிட்டது?

பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்கள் முதல் 10 ஓவர்களில் சிறப்பாகவே செயல்பட்டனர், கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். அதனால்தான் சனரைசர்ஸ் அணிக்கு நெருக்கடி அளித்து 4 விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்தது. அதிலும் பவர்ப்ளே ஓவருக்குள் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி பஞ்சாப் நெருக்கடி அளிக்க முடிந்தது.

ஆனால், 10 ஓவர்களுக்கு மேல் அதிலும் 16 ஓவர்கள் வரை ஆட்டம் கையைவிட்டு சென்றது. இந்த 6 ஓவர்களுக்குள்தான் நிதீஷ்குமார் ரெட்டி பஞ்சாப் பந்துவீச்சை பஞ்சாகப் பறக்கவிட்டார். அதிலும் சாம்கரன், ஹர்பிரித் பிரார், இருவரின் ஓவர்களும் குறிவைக்கப்பட்டது. பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவண் நேற்று 5 பந்துவீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்தினார், கூடுதலாக வேறு சில பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தி இருந்தால், அல்லது இம்பாக்ட் வீரராக களமிறக்கி இருந்தால், சன்ரைசர்ஸ் ஸ்கோரை கட்டுப்படுத்தி இருக்கலாம்.

கம்மின்ஸ்

பட மூலாதாரம், SPORTZPICS

பேட்டிங்கில் பேர்ஸ்டோ இந்த சீசன் தொடங்கியதில் இருந்து சரியாக ஆடவில்லை. இந்த ஆட்டத்தில் கம்மின்ஸ் பந்துவீச்சை மோசமான ஷாட் மூலம் அடிக்க முயன்று பேர்ஸ்டோ டக்அவுட்டில் வெளியேறினார். கேப்டன் தவண், பிரப்சிம்ரன் சிங் ஆகியோரும் ஓரளவுக்கு பங்களிப்பு செய்திருக்க வேண்டும். இருவரும் குறைந்தபட்ச ஸ்கோர் செய்திருந்தால், கடைசி நேரத்தில் சஷாங்சிங், அஷுதோஷுக்கு நெருக்கடி வந்திருக்காது. இருவரும் இருந்த ஃபார்மிற்கு வெற்றியை எளிதாக பெற்றுக் கொடுத்திருப்பார்கள்.

பேர்ஸ்டோவை அமரவைத்து, ஜிதேஷ் சர்மாவை கீப்பிங் செய்ய வைக்கலாம், பேர்ஸ்டோவுக்குப் பதிலாக லிவிங்ஸ்டோன் அல்லது ரிலோ ரூஸோ இருவரில் ஒருவரை ஆட வைக்கலாம்.

நடுவரிசையில் சாம்கரன் (29) சிக்கந்தர் ராசா (28), ஜிதேஷ் சர்மா (19) ஆகியோர் சிறந்த கேமியோ ஆடி ரன்களைச் சேர்த்தனர். ஆனால், அஷுடோஷ், சஷாங்க் சிங் இருவரின் பேட்டிங்கும் நேற்றை ஆட்டத்தில் மாஸ்டர் கிளாஸ் என்றுதான் கூற முடியும்.

பந்துவீச்சில் சாம்கரன், ஹர்பிரித் பிரார் தவிர்த்து 3 பேருமே சிறப்பாக பந்துவீசினர். அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அர்ஷ்தீப் தனது முதல் இரு ஓவர்களில் 8 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அருமையாகப் பந்துவீசியிருந்தார். டெத் ஓவர்களில் அர்ஷ்தீப் பந்துவீச்சும் கட்டுக்கோப்பாக இருந்ததால்தான் ஷான்பாஸ் அகமதுவால் பெரிதாக அடிக்க முடியவில்லை.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)