மீண்டும் வெற்றிப் பாதையில் சிஎஸ்கே - தோனி, ஜடேஜா, கேப்டன்சி பற்றி ருதுராஜ் கூறியது என்ன?

CSK vs KKR

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், க.போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இந்த ஐ.பி.எல் சீசன் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு சிறப்பாகத் தொடங்கவில்லை. முதல் 4 போட்டிகளில் அவரால் பெரிதாக எந்த ஸ்கோரும் செய்ய முடியவில்லை. ஒரு அரைசதம் கூட அடிக்காமல் 88 ரன்கள் மட்டுமே சேர்த்து 22 சராசரி வைத்திருந்தார். கேப்டன் பதவி தரும் அழுத்தம், நெருக்கடி அவரின் பேட்டிங்கை பாதித்துவிட்டது என்ற விமர்சினங்கள் எழுந்தன.

ஆனால் நேற்றைய (திங்கள் ஏப்ரல் 8) ஆட்டத்தில் மீண்டும் ஃபார்முக்கு திரும்பினார் சிஎஸ்கே கேப்டன் கெய்க்வாட். இந்த சீசனில் முதல் அரைசதத்தை அடித்து அணிக்கு ஆங்கர் ரோல் செய்து கடைசியில் கரை சேர்த்தார். எளிய இலக்காக இருந்தாலும் கேப்டனுக்குரிய பொறுப்புடன் பேட் செய்து கெய்க்வாட் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 22-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் சேர்த்தது. 138 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி, 17.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள்சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

சிஎஸ்கே-வின் 3வது வெற்றி

இந்த சீசனில் சேப்பாக்கம் மைதானத்தில் தொடர்ந்து மூன்றாவது வெற்றியை சிஎஸ்கே பெற்றுள்ளது. அதேசமயம், தொடர்ந்து 2 தோல்விகளைச் சந்தித்தநிலையில் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது. அதேபோல தொடர்ந்து வெற்றிகளைச் சந்தித்த கொல்கத்தா அணி முதல் தோல்வியை எதிர்கொண்டது.

இந்த வெற்றியின் மூலம் சிஎஸ்கே அணி 5 போட்டிகளில் 3 வெற்றி, 2 தோல்வி என 6 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டும் 0.666 என லக்னோ அணியைவிடக் குறைவாகவே இருக்கிறது. கொல்கத்தா அணி 4 போட்டிகளில் 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கிறது. நிகர ரன்ரேட் 1.528 என வலுவாக இருக்கிறது.

ஐபிஎல், சிஎஸ்கே, கொல்கத்தா, தோனி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நேற்றைய ஆட்டத்தில் கெய்க்வாட் தனது ஆங்கர் ரோலை வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்

மாறிய சேப்பாக்கம் விக்கெட்

சேப்பாக்கம் ஆடுகளம் நேற்று முற்றிலும் மாறி இருந்தது. இது இந்த சீசனில் சேப்பாக்கத்தில் நடக்கும் மூன்றாவது போட்டியாகும். முதல் இரு ஆட்டங்களில் சிஎஸ்கே அணியில் சுழற்பந்துவீச்சாளர்கள் யாரும் ஒரு விக்கெட்கூட எடுக்கமுடியவில்லை. ஆனால், நேற்றைய ஆட்டத்தில் ஜடேஜா தனது முதல் 8 பந்துகளில் 3 விக்கெட்டுகளையும், தீக்சனா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆடுகளமும் பவர்ப்ளேவுக்கு பின் மாறத் தொடங்கியது.

பவர்ப்ளே வரை ஆடுகளத்தின் தன்மையை சரியாகக் கணிக்க முடியாமல் வேகப்பந்துவீச்சாளர்கள் பந்துவீசினர். ஆனால், ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியபின், ஆடுகளத்தின் தன்மையைப் புரிந்து கொண்ட வேகப்பந்துவீச்சாளர்கள் தங்களின் பந்துவீச்சின் வேகத்தைக் குறைத்தனர், அதிகமான ஸ்லோவர் பந்துகளையும், ஸ்லோ பவுன்சர்களையும் வீசி கொல்கத்தா பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுத்தனர்.

ஜடேஜா குறித்து கேப்டன் கெய்க்வாட் என்ன சொன்னார்?

வெற்றிக்குப்பின் சிஎஸ்கே கேப்டன் கெய்க்வாட் பேசுகையில், இரண்டு தோல்விகளுக்குபின் வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக இருப்பதாகக் க்றினார்.

“160 ரன்கள்வரை எதிர்பார்த்தோம் ஆனால் நினைத்ததைவிட குறைவாகவே இருந்தது. ரஹானேவுக்கு சிறிய காயம் என்பதால், கடைசிவரை ஆங்கர் ரோல் எடுக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருந்தது. பவர்ப்ளேக்குப் பின் ஜடேஜா பந்துவீசினாலோ ஏதாவது அதியசத்தை நிகழ்த்துவார் அதை இந்த ஆட்டத்திலும் செய்தார்,” என்றார்.

மேலும், “சிஎஸ்கே அணியில், ஒவ்வொரு வீரருக்கும் கூறிக் கொண்டிருக்கத் தேவையில்லை. ஒவ்வொருவரும் சுதந்திரமான மனநிலையில் இருக்கிறார்கள். தோனியும், பயிற்சியாளர் பிளெமிங்கும் அத்தகைய முடிவுகளை எடுக்க உடனிருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை டி20 போட்டியில் இது மெதுவான தொடக்கம், சில நேரம் அதிரடியாகத் தொடங்கக் கூட அதிர்ஷ்டம் தேவை. என்னுடைய பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் குறித்து கிரிக்கெட் வல்லுநர்கள்கூட பேசக்கூடும். ” எனத் தெரிவித்தார்.

"சிஎஸ்கே அணியில் நான் கேப்டன் பதவிக்கு வந்துவிட்டேன் என்பதற்காக அனைத்தையும் மாற்ற வேண்டும் என்று தேவையில்லை. ஏற்கெனவே எப்படிச் சென்று கொண்டிருக்கிறதோ அப்படியே செல்லவே விரும்புகிறேன். துளியளவும் எதையும் மாற்ற நான் விரும்பவில்லை" என்று அவர் மேலும் கூறினார்.

ஐபிஎல், சிஎஸ்கே, கொல்கத்தா, தோனி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜடேஜா தனது முதல் ஓவரிலேயே கொல்கத்தா பேட்டர் ரகுவன்ஷியை ஸ்வீப் ஷாட் ஆடவைத்து விக்கெட்டை வீழத்தினார்

ஜடேஜாவின் புதிய மைல்கல்

சிஎஸ்கேயின் தளபதி என வர்ணிக்கப்படும் ரவீந்திர ஜடேஜா நேற்று புதிய மைல்கல்லை எட்டினார்.

இந்த ஆட்டத்தில் 2 கேட்சுகளை ஜடேஜா பிடித்ததன் மூலம் ஐபிஎல் போட்டியில் 100 கேட்சுகளைப் பிடித்த 5-வது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இதற்கு முன் ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, கெய்ரன் பொலார்ட், விராட் கோலி ஆகியோர் மட்டுமே 100 கேட்சுகளைப் பிடித்திருந்தனர்.

அது மட்டுமல்லாமல் நேற்றைய ஆட்டத்தில் பவர்ப்ளே முடிந்து ஜடேஜா பந்துவீச வந்து, முதல் 8 பந்துகளில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி கொல்கத்தா நடுவரிசை பேட்டிங்கை உருக்குலைத்தார். 4 ஓவர்கள் வீசிய ஜடேஜா 18 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் வென்றார். ஜடேஜா ஓவரில் ஒரு பவுண்டரி மட்டுமே அடிக்கப்பட்டது, 11 டாட் பந்துகளையும் வீசினார்.

கொல்கத்தா பேட்டர் சுனில் நரைனுக்கு எதிராக 5 போட்டிகளில் ஜடேஜா விளையாடியுள்ளார். இதில் 4 முறை நரைனை ஆட்டமிழக்கச் செய்ததும் ஜடேஜாதான். சேப்பாக்கம் மைதானத்தை ஜடேஜா நன்கு அறிந்தவர். பந்து பிட்ச் ஆனால் எங்கு செல்லும், ஆடுகளத்தின் தன்மை, பவுண்டரி எல்லை அளவு ஆகியவற்றை அறிந்தவர் என்பதால் அதற்கு ஏற்றார்போல் பந்துவீசினார்.

ஜடேஜா தனது முதல் ஓவரிலேயே கொல்கத்தா பேட்டர் ரகுவன்ஷியை ஸ்வீப் ஷாட் ஆடவைத்து விக்கெட்டை வீழத்தினார். சுனில் நரைனை ஸ்ட்ரைட் லாங்க் ஆப் திசையில் அடிக்க வைத்து ஆட்டமிழக்கச் செய்து ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். தனது 2-வது ஸ்பெல்லில் வெங்கடேஷை டீப் மிட்விக்கெட்டில் அடிக்கவைத்து மிட்ஷெல் மூலம் கேட்ச் பிடிக்கச் செய்து 3-வது விக்கெட்டையும் ஜடேஜா வீழ்த்தினார்.

ஜடேஜா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியபின் சுழற்பந்துவீச்சு மீது கொல்கத்தா பேட்டர்களுக்கு தனி அச்சம் உருவாகி, பெரிய ஷாட்களுக்கு பயந்தனர். இதைப் பயன்படுத்தி தீக்சனாவும் நெருக்கடி கொடுத்து பந்துவீசினார். தீக்சனா 4 ஓவர்கள் வீசி 28 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இதில் 13 டாட் பந்துகள் அடங்கும்.

சிஎஸ்கே-வின் பலமான பந்துவீச்சு

சிஎஸ்கே-வின் எளிய வெற்றிக்கு அடித்தளமிட்டது பந்துவீச்சாளர்கள்தான். சிஎஸ்கே-வின் சுழற்பந்துவீச்சாளர்கள் மட்டுமின்றி வேகப்பந்துவீச்சாளர்கள் முஸ்தபிசுர், தேஷ்பாண்டே இருவரும் நேற்று சிறப்பாகப் பந்துவீசினர்.

கடந்த இரு போட்டிகளாக முஸ்தபிசுர் இல்லாத வெற்றிடம் பந்துவீச்சில் இருந்தது நேற்று இல்லை. முஸ்தபிசுர் 4 ஓவர்கள் வீசி 22 ரன்கள் கொடுத்து 16 டாட்பந்துகளுடன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தேஷ்பாண்டே 4 ஓவர்கள் வீசி 33 ரன்கள் கொடுத்து 12 டாட்பந்துகளுடன் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இருவரும் சேர்ந்து ஏறக்குறைய 30 டாட்பந்துகள் வீசி 5 விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்தனர், அதாவது இருவரும் 8 ஓவர்கள் வீசி அதில் ஏறக்குறைய 5 ஓவர்கள் மெய்டன்களாக வீசியுள்ளனர்.

ஐபிஎல், சிஎஸ்கே, கொல்கத்தா, தோனி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தொடக்கத்திலேயே ரவீந்திரா ஆட்டமிழந்தபின், ஆட்டத்தை நகர்த்திச் செல்ல வேண்டிய பொறுப்பு கெய்க்வாட்டிடம் வந்தது

‘ஃபார்முக்கு’ வந்த கெய்க்வாட்

கடந்த 4 இன்னிங்ஸ்களாக கெய்க்வாட் பெரிதாக ரன் குவிக்கவில்லை, ஒரு அரைசதம்கூட அடிக்கவில்லை. ‘ஒரு கட்டத்தில் ஆரஞ்சு தொப்பி பெற்ற கெய்க்வாட் இப்படி பேட் செய்கிறாரே’ என ரசிகர்கள் அங்கலாய்த்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் தனது ஆங்கர் ரோலை வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது மட்டுமின்றி முதல் அரைசதத்தையும் கெய்க்வாட் விளாசி 58 பந்துகளில் 67 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அதுமிட்டுமின்றி டேரல் மிட்செலுடன் (25) 70 ரன்கள் பார்ட்னர்ஷிப், ஷிவம் துபேயுடன் (28) 38 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.

தொடக்கத்திலேயே ரவீந்திரா ஆட்டமிழந்தபின், ஆட்டத்தை நகர்த்திச் செல்ல வேண்டிய பொறுப்பு கெய்க்வாட்டிடம் வந்தது. கடந்த சிலபோட்டிகளாக 3-வது வீரராக வந்து தடுமாறிய ரஹானேவுக்குப் பதிலாக மிட்ஷெல் களமிறக்கப்பட்டார். இதை மிட்செலும் சரியாகப் பயன்படுத்தி, கெய்க்வாட்டுக்கு துணையாக பேட் செய்தார். மிட்செலுடன் சேர்ந்த பின் கெய்க்வாட் வழக்கமான ஆட்டத்துக்கு திரும்பினார், அரோரா வீசிய ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசி பவர்ப்ளேயில் 52 ரன்களைச் சேர்த்தார்.

மிட்செலும், துபேயும் கேப்டன் கெய்க்வாட்டுக்கு ஒத்துழைத்து பேட் செய்து வெற்றியை எளிதாக அடைய உதவினர். 3வது வீரராக வந்த மிட்செல் நரைன் ஓவரில் சிக்ஸர், பவுண்டரி விளாசி அதிர்ச்சி அளித்தார். இருவரும் சேர்ந்தபின் அதிரடியாக பேட் செய்யாவிட்டாலும் ரன்ரேட் குறையாமல் பார்த்துக் கொண்டனர். 6 முதல் 12 ஓவர்கள் வரை இருவரும் சேர்ந்து 44 ரன்கள் சேர்த்தனர், இதில் 17 சிங்கில்ஸ், 2 டபுள்ஸ் ரன்கள், 2 பவுண்டரி,ஒரு சிக்ஸர் விளாசினர்.

சிஎஸ்கே அணிக்கும் வெற்றிக்கான ரன்ரேட் ஓவருக்கு 6 ரன்களுக்கு குறைவாக இருந்ததால், நிதானமாகவே இருவரும் பேட் செய்தனர். மிட்செல் ஆட்டமிழந்தபின், துபே களமிறங்கி தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார், சக்ரவர்த்தி ஓவரில் 2 சிக்ஸர்களையும், அரோரா ஓவரில் ஒரு சிக்ஸரையும் விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். சுழற்பந்துவீச்சுக்கு எதிராக துபே 193 ஸ்ட்ரைக் ரேட்டில் வைத்துள்ளார், சிஎஸ்கே அணியில் இந்த சீசனில் முன்னணி ரன் குவிப்பு பேட்டராக துபே இருக்கிறார்.

ஐபிஎல், சிஎஸ்கே, கொல்கத்தா, தோனி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கொல்கத்தா அணியில் 50 ரன்களுக்குக் கூட எந்த வீரரும் பார்ட்னர்ஷிப் அமைக்காததுதான் ஸ்கோர் போர்டில் ரன்வராமைக்கு முக்கியக் காரணமாகும்

கொல்கத்தா அணியின் தோல்விக்கு காரணம் என்ன?

தொடர்ந்து மூன்று வெற்றிகளைப் பெற்றிருந்த கொல்கத்தா அணி நேற்று முதல் தோல்வியை இந்த சீசனில் சந்தித்தது. கடந்த மூன்று வெற்றிகளுக்கு யாரெல்லாம் துணை செய்தார்களோ அவர்கள் யாரும் நேற்றைய ஆட்டத்தில் சிறப்பாக ஆடவில்லை என்பதுதான் நிதர்சனம்

நரைன் (27), ரகுவன்ஷி (24), ஸ்ரேயாஸ் (34), ரஸல் (10), ரிங்கு சிங் (9), வெங்கடேஷ் (3) ஆகிய பேட்டர்கள், கடந்த மூன்று வெற்றிகளுக்கும் முக்கியப் பங்களிப்பு செய்திருந்தனர். ஆனால் இவர்கள் 6 பேரும் நேற்று ஏமாற்றும் அளிக்கும் வகையில் பேட் செய்தனர். கடந்த மூன்று போட்டிகளிலும் பவர்ப்ளேயில் அதிரடியான தொடக்கம் அளித்த நரைன், நேற்று விரைவாக வெளியேறினார். முதல் ஓவர் முதல்பந்தில் பில் சால்ட் ஆட்டமிழந்தது பெரிய அதிர்ச்சியை கொல்கத்தாவுக்கு அளித்தது.

இளம் வீரர் ரகுவன்ஷியும் பெரிதாக சோபிக்கவில்லை. கேப்டன் ஸ்ரேயாஸும் பெரிய பார்ட்னர்ஷிப்புக்கு முயற்சிக்கவில்லை. சிஎஸ்கே கேப்டன் கெய்க்வாட் போன்று ஆங்கர் ரோல் எடுத்து பார்ட்னர்ஷிப்புக்கு முயன்றிருந்தால், இன்னும் கூடுதலாகஸ்கோர் வந்திருக்கும். நடுவரிசையில் வெங்கடேஷ், ரஸல், ரிங்கு ஏமாற்றினர்.

கொல்கத்தா அணியில் 50 ரன்களுக்குக் கூட எந்த வீரரும் பார்ட்னர்ஷிப் அமைக்காததுதான் ஸ்கோர் போர்டில் ரன்வராமைக்கு முக்கியக் காரணமாகும். முதல் 6 ஓவர்களில் 56 ரன்கள் சேர்த்த கொல்கத்தா அணி, அடுத்த 6 ஓவர்களில் 43 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது, இதில் 4 விக்கெட்டுகளையும் இழந்தது.

மிகவும் குறைந்த ஸ்கோரை வைத்துக் கொண்டு கொல்கத்தா அணியால், வலிமையான சிஎஸ்கே அணிக்கு எதிராக டிபெண்ட் செய்வதும் கடினம். இந்த சீசனில் ரூ.24 கோடிக்கு வாங்கப்பட்ட மிட்செல் ஸ்டார்க் இதுவரை 4 போட்டிகளில் பெரிதாக பந்துவீச்சில் பட்டைய கிளப்பினார் என்று ஏதும் கூற முடியாது. சராசரியான பந்துவீச்சாளர் போன்றே ஸ்டார்க் பந்துவீச்சும் நேற்று இருந்தது. சிஎஸ்கே வேகப்பந்துவீச்சாளர்கள் தங்கள் பந்துவீச்சில் வெளிப்படுத்திய வேரியேஷன்கள்கூட ஸ்டார்க், வெளிப்படுத்தவில்லை என்பதுதான் நிதர்சனம்

பந்துவீச்சிலும் கொல்கத்தா அணி பெரிதாக சிறப்பாக் செயல்படவில்லை. நரைன், சக்கரவர்த்தி தொடக்கத்தில் சிறப்பாக பந்து வீசினாலும் கடைசியில் கோட்டைவிட்டனர். நரைனின் முதல் ஓவரிலேயே மிட்ஷெல் வெளுத்து வாங்கினார், சக்கரவர்த்தி 3 ஓவர்கள் சிறப்பாக வீசிவிட்டு, கடைசி ஓவரில் துபே சிக்ஸர்களாகப் பறக்கவிட்டார். ஒட்டுமொத்தத்தில் கொல்கத்தா அணி கடந்த 3 போட்டிகளிலும் வெளிப்படுத்திய துணிச்சல், தனித்திறமை, உற்சாகம், ஆக்ரோஷம் ஆகியவை இந்த ஆட்டத்தில் இல்லை என்பதுதான் தோல்விக்கு காரணம்.

ஐபிஎல், சிஎஸ்கே, கொல்கத்தா, தோனி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒரு ரன்னோடு ஸ்ட்ரைக்கை கெய்க்வாட்டிடம் கொடுத்துவிட்டார் தோனி

ரசிகர்களை ஏமாற்றிய தோனி

மிகச்சிறந்த ஃபினிஷர் என்று கிரிக்கெட் உலகில் வர்ணிக்கப்படும் தோனி, வெற்றிக்கு 3 ரன்கள் இருக்கும்போது களமிறங்கினார். மைதானமே அதிரும் அளவுக்கு ரசிகர்கள் உற்சாகக் குரல் எழுப்பினர். பவுண்டரி, அல்லது சிக்ஸர் அடித்து வின்னிங் ஷாட்டுடன் சிஎஸ்கேவுக்கு தோனி வெற்றி தருவார் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். ஆனால், ஒரு ரன்னோடு ஸ்ட்ரைக்கை கெய்க்வாட்டிடம் கொடுத்துவிட்டார் தோனி.

‘ஏற்கெனவே 20 ஓவர்கள் விக்கெட் கீப்பிங் செய்த தோனியை ரசிகர்கள் பார்த்துவிட்டனர். ஆனால், அவர் கால்காப்பு அணிந்து, பேட்டுடன் களமிறங்கினாலே ரசிகர்களின் ஆரவாரக் குரல் அரங்கையே அதிரவைக்கிறது ஏன் எனப் புரியவில்லை. 20 ஓவர்கள்வரை பார்த்த தோனியைத் தானே மீண்டும் பார்க்கிறார்கள், ஏன் பேட் செய்யவந்ததும் இப்படி ஒரு ஆரவாரம்,’ என்று வர்ணனையாளர்கள் வியந்தனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)