காற்றில் பறந்தபடி லக்னோ வீரர் பிடித்த மாயாஜால கேட்ச்; குஜராத் அணி செய்த தவறுகள் என்னென்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், க.போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
லக்னோவின் வேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் இல்லாத நிலையில் சுழற்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தி, லக்னோ அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் இரண்டாவது வது வெற்றியைப் பெற்றுள்ளது.
லக்னோவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 21-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 33 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.
முதலில் பேட் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் சேர்த்தது. 164 ரன்கள் எனும் இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி 18.5 ஓவர்களில் 130 ரன்களுக்கு ஆட்டமிழந்து 33 ரன்களில் தோல்வி அடைந்தது.

பட மூலாதாரம், Getty Images
முதல் வெற்றி
ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் அறிமுகமானபின், குஜராத் டைட்டன்ஸ் அணியை லக்னோ அணி ஒருமுறை கூட வீழ்த்தியதில்லை. ஆனால், நேற்றைய ஆட்டத்தில் குஜராத் அணியை வென்று லக்னோ அணி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
அது மட்டுமல்லாமல் லக்னோ அணி இதுவரை 160 ரன்களுக்கு மேல் அடித்து அந்த ஆட்டத்தில் தோற்றதில்லை என்ற சாதனையை வைத்திருந்தது. அதை நேற்றைய ஆட்டத்திலும் அந்த சாதனையைத் தக்கவைத்தது. அது மட்டுமல்லாமல் லக்னோ அணி இதுவரை முதலில் பேட் செய்த போட்டிகளில் 80 சதவீதத்துக்கும் மேல் வெற்றி பெற்றுள்ளது, எதிரணியை இலக்கை எட்டவிடாமல் செய்து வெற்றி பெறுவதை சவாலாக வைத்திருக்கிறது. அந்த சவால் நேற்றும் தொடர்ந்து லக்னோ அணி தனது சாதனையைதக்க வைத்தது.
இந்த வெற்றியின் மூலம் லக்னோ அணி 4 போட்டிகளில் 3 வெற்றி ஒரு தோல்வி என 6 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.நிகர ரன்ரேட்டும் 0.775 என்று ஏற்றத்துடன் இருக்கிறது. குஜராத் டைட்டன்ஸ் அணி 5 போட்டிகளில் 2 வெற்றி, 3 தோல்வி என 4 புள்ளிகளுடன் 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது, நிகர ரன்ரேட்டும் மைனஸ் 797 ஆகச் வீழ்ந்துள்ளது.
லக்னோ ஆடுகளம் பேட்டர்களுக்கு உகந்த விக்கெட்டைக் கொண்டது. இந்த மைதானத்தில் 163 ரன்கள் என்பது சேஸிங் செய்துவிடக்கூடிய ஸ்கோர்தான். ஆனால், அந்த ஸ்கோரை அடித்து, குஜராத் அணியை டிபெண்ட் செய்துள்ளனர் லக்னோ பந்துவீச்சாளர்கள்.

பட மூலாதாரம், Getty Images
தோல்விக்கு காரணம் என்ன?
அதிரடியான தொடக்கத்துடன் ஆட்டத்தை ஆரம்பித்த குஜராத் டைட்டன்ஸ் அணி 54 ரன்கள்வரை விக்கெட் இழப்பின்றி பயணித்தது. ஆனால், அடுத்த 48 ரன்களுக்குள் சீட்டுக்கட்டு சரிவதுபோல் 8 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் குழிக்குள் விழுந்தது.
குஜராத் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் சுப்மான் கில்(19), சுதர்சன்(31) ஆகியோர் தவிர நடுவரிசையில் ஒரு பேட்டர்கூட நிலைக்கவில்லை. நடுவரிசை பேட்டர்களின் ‘ஷாட்கள்’ தேர்வு நேற்றைய ஆட்டத்தில் படுமோசமாக இருந்தது, விக்கெட்டுகளை எளிதாக லக்னோ அணிபந்துவீச்சாளர்களுக்கு தூக்கிக் கொடுத்து பெவிலியன் சென்றனர். திவேட்டியா(30) வெற்றிக்காக தனி ஒருவனாகப் போராடியும் பலன் இல்லை. ஒட்டுமொத்தத்தில் பேட்டர்களின் தோல்விதான் குஜராத் அணியை வீழ்ச்சியில் தள்ளியது.
அது மட்டுமல்ல டேவிட் மில்லர் காயத்தால் அணியில் இடம் பெறாதது அந்த அணிக்கு பெரிய பின்னடைவு, நடுவரிசையிலும் பள்ளத்தை ஏற்படுத்தி ஆங்கர் ரோல் இல்லாத வெற்றிடத்தை ஏற்படுத்தியது.
குஜராத் அணியின் திறமையான பல வீரர்கள் இன்னும் பயன்படுத்தப்படாமல் உள்ளனர். அவர்களை இதுபோன்ற நேரத்தில் களமிறக்கி பரிசோதிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடுவரிசைக்கு ஆங்கர் ரோல் செய்யக்கூடிய அனுபவமான பேட்டர் வில்லியம்சனைத் தவிர யாரும் இல்லை.
ஆல்ரவுண்டரான அபினவ் மனோகர் இதுவரை வாய்ப்புத் தரவில்லை, ஆஸ்திரேலியாவின் “சிறந்த ஃபினிஷர்” எனக் கூறப்படும் விக்கெட் கீப்பர் மேத்யூ வேடை, பரத்துக்குப் பதிலாகச் சேர்த்திருக்கலாம் என்றும் விமர்சிக்கப்படுகிறது.
அதேபோல ஆல்ரவுண்டர் ஓமர்சாய்க்கு ஒரு போட்டியில் மட்டுமே வாய்ப்புத் தரப்பட்டது.
குஜராத் அணியில் நேற்றைய ஆட்டத்தில் வில்லியம்ஸனுக்குப்பின், களத்தில் நிலைத்து ஆடுவதற்கு அனுபவமான பேட்டர், சர்வதேச அனுபவம் கொண்ட பேட்டர் யாருமில்லை. பேட்டர்கள் இல்லாமல் பந்துவீச்சாளர்களை மட்டும் தேர்ந்தெடுத்தது அந்த அணிக்கு எதிராகவே அமைந்துவிட்டது.

பட மூலாதாரம், Getty Images
‘நல்ல ஆடுகளம், பேட்டிங் மோசம்’
குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மான் கில் கூறுகையில் “ லக்னோ மைதானம் பேட்டர்களுக்கு உகந்த நல்ல விக்கெட். ஆனால், எங்களின் மோசமான பேட்டிங்தான் தோல்விக்கு காரணம். நன்றாகத் தொடங்கி, நடுப்பகுதி ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்தோம், அதிலிருந்துஎங்களால் மீள முடியவில்லை. எங்களின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு, 163 ரன்களில் கட்டுப்படுத்தினர்.”
“180 வரை எதிர்பார்த்தோம் ஆனால், அதற்குள் சுருட்டிவிட்டனர். எந்த நேரத்திலும்ஆட்டத்தை திருப்பக்கூடிய மில்லர் காயத்தால் இல்லாதது பெரிய பின்னடைவு. இந்த இலக்கு அடைந்துவிடக்கூடியதுதான், ஆனால், பவர்ப்ளேயின் கடைசி ஓவரில்நான் ஆட்டமிழந்திருக்கக் கூடாது. உமேஷ் தனது அனுபவத்தை வெளிப்படுத்தினார், நல்கன்டேயின் பந்துவீச்சும் சிறப்பாக இருந்தது” எனத் தெரிவித்தார்
கட்டுக்கோப்பான பந்துவீச்சு
லக்னோ அணி 160 ரன்களுக்கு மேல் குவித்து இதுவரை தோல்வி அடைந்தது இல்லை என்ற வரலாற்றை மீண்டும் தக்கவைத்துக் கொண்டது. இந்த ஆட்டத்தில் லக்னோவின் “வேகப்புயல்” மயங்க் யாதவ் ஒரு ஓவர் வீசியநிலையில் காயத்தால் போட்டியிலிருந்து விலகியது அந்த அணிக்கு பின்னடைவாக இருந்தாலும், அதை சமாளித்து மற்ற பந்துவீச்சாளர்களை வைத்து கேப்டன் ராகுல் வெற்றியை நோக்கி வழிநடத்தினார்.
அதிலும் குறிப்பாக யாஷ் தாக்கூர், குர்னல் பாண்டியா, ரவி பிஸ்னோய், நவீன் உல்ஹக் ஆகிய 4 பந்துவீச்சாளர்கள் குஜராத் அணியின் பேட்டிங் வரிசையை உலுக்கிஎடுத்தனர்.

பட மூலாதாரம், Getty Images
ஆட்டநாயகன் தாக்கூர்
குறிப்பாக யாஷ் தாக்கூர் தனது ஐபிஎல் வாழ்க்கையில் முதல்முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் வென்றார். அற்புதமாகப் பந்துவீசிய தாக்கூர் 3.5 ஓவர்கள் வீசி அதில் ஒரு மெய்டன் 30 ரன்கள், 14 டாட்பந்துகள் எடுத்து 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
வெற்றிக்கு ஆபத்தாக இருக்கக்கூடிய பேட்டர்கள் கில், திவேட்டியா, விஜய் சங்கர் என பேட்டர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிப்பாதை அமைத்தது யாஷ் தாக்கூர் பந்துவீச்சுதான்.
குருணல் பாண்டியாவின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் குஜராத் பேட்டர்களின் கைகளைக் கட்டிப்போட்டது என்று கூறலாம். 4ஓவர்கள் வீசிய குர்னல் பாண்டியா 11 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார், இதில் 13 டாட்பந்துகள் உள்பட ஒரு பவுண்டரி,சிக்ஸர்கூட அடிக்கவிடாமல் பந்துவீசியது சிறப்பாகும்.
அதிலும் குஜராத்தின் ஆபத்தான பேட்டர் சாய் சுதர்ஷன் விக்கெட்டை வீழ்த்தி குர்னல் பாண்டியா ஆட்டத்துக்கு திருப்புமுனையை ஏற்படுத்தினார். அதன்பின் நடுவரிசை பேட்டர்கள் பிஆர் சரத், நல்கன்டே இருவரின் விக்கெட்டுகளையும் கைப்பற்றி வெற்றிக்கு முக்கியப் பங்களிப்பு செய்தார்.

பட மூலாதாரம், Getty Images
ரவி பிஸ்னோய் நேற்றைய ஆட்டத்தில் 2 ஓவர்கள் மட்டுமே வீசினாலும், அவர் விக்கெட் எடுத்தவிதம், கேட்ச் பிடித்தவிதம் அணிக்கு வலுவாக அமைந்துவிட்டது. வில்லியம்ஸன் அடித்த ஷாட்டை ஸ்பைடர் போல் காற்றில் பறந்து, அந்தரத்தில் 52மைக்ரோ வினாடிகள் இருந்து ஆகச்சிறந்த கேட்சைப் பிடித்தார். வில்லியம்ஸன் விக்கெட்டை எடுத்தது குஜராத் அணியின் முதுகெலும்பை உடைத்தது போன்றதாகிவிட்டது, லக்னோ அணியும் பாதி வெற்றியை அடைந்த மனநிறைவை பிஸ்னோய் ஏற்படுத்திக் கொடுத்தார்.
163 ரன்கள் என்பது வலுவான பேட்டர்கள் இருந்திருந்தால் லக்னோ போன்ற அருமையான விக்கெட்டில் எளிதாக சேஸிங் செய்யக்கூடிய ஸ்கோர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்த குறைவான ஸ்கோரை வைத்துக் கொண்டு டிபெண்ட் செய்து லக்னோ வெற்றி பெற பந்துவீச்சாளர்கள் உழைப்பு முக்கியக் காரணம்.

பட மூலாதாரம், Getty Images
ராகுல்,ஸ்டாய்னிஷ் பொறுப்பான பேட்டிங்
லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர் டீகாக்கிற்கு நேற்று 100-வது ஐபிஎல் ஆட்டமாகும். முதல் ஓவரிலேயே சிக்ஸர் அடித்து அதிரடியாகத் தொடங்கி, அடுத்த ஓவரில் பேட்டில் எட்ஜ் எடுத்து உமேஷ் யாதவ் ஓவரில் டீகாக்(6) விக்கெட்டை இழந்தார். அடுத்துவந்த படிக்கல்(7) தொடர்ந்து 4வதுமுறையாக ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து லக்னோ அணி நிர்வாகத்துக்கு ஏமாற்றம் அளித்தார்.
அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்து லக்னோ அணி தடுமாறியது. 3வது விக்கெட்டுக்கு கேப்டன் ராகுல், ஸ்டாய்னிஷ் சேர்ந்து அணியை மெல்லச் சரிவிலிருந்து மீட்டனர். 3வது விக்கெட்டுக்கு இருவரும் 73ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். கேப்டன் ராகுல் ஸ்ட்ரைக் ரேட் குறித்து பெரிதாக கவலைப்படாமல் நிதானமாக ஆடி 31 பந்துகளில் 33 ரன்னில் நல்கன்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
நீண்டகாலத்துக்குப்பின் ஸ்டாய்னிஷ் அற்புதமான இன்னிங்ஸை நேற்று ஆடினார். ஆங்கர் ரோல் எடுத்து ஆடிய ஸ்டாய்னிஷ் 40 பந்துகளில் அரைசதம் அடித்து, 58 ரன்னில் நல்கன்டே பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
பூரன், பதோனி பங்களிப்பு
கடைசி நேரத்தில் நிகோலஸ் பூரன்(32), பதோனி(20) அருமையான கேமியோ ஆடி ரன்ரேட்டை உயர்த்தினர். பூரன் டெத் ஓவர்களில் அடித்த 3 சிக்ஸர்களும், பதோனி அடித்த 3 பவுண்டரிகளும் லக்னோ அணியை பெரிய சரிவிலிருந்து மீட்டது. இருவரும் கடைசி நேரத்தில் சேர்த்த 52 ரன்கள் லக்னோ அணியை 163 ரன்கள் எனும் கவுரமான ஸ்கோருக்கு கொண்டு செல்ல உதவியது. ஒருவேளை பூரன், பதோனி நிலைக்காமல் இருந்திருந்தால், லக்னோ அணி 120 ரன்களுக்குள் சுருண்டிருக்கும் வாய்ப்பிருந்தது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












