ஹர்திக் தலைமையில் மும்பைக்கு முதல் வெற்றி - ரோகித், பும்ரா புதிய மைல்கல்லை எட்டி அசத்தல்

MI vs DC

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கேப்டன்சி மாற்றத்தால் சொந்த அணி ரசிகர்களின் அதிருப்திக்கு ஆளான மும்பை இந்தியன்ஸ் அணி முதல் வெற்றியை ருசித்துள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடந்த ஐபிஎல் டி20 ஆட்டத்தின் 21-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை 29 ரன் வித்தியாசத்தில் அந்த அணி வீழ்த்தியது.

ரோகித் சர்மா அதிரடியாக அமைத்துக் கொடுத்த அடித்தளத்தை கேப்டன் ஹர்திக் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகியோர் சரியாக பயன்படுத்திக் கொண்டதால் மும்பை அணி இமாலய ரன்களை குவித்தது. அதனைத் துரத்திய டெல்லி அணிக்கு பிரித்வி ஷா, டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் ஆகியோர் சரவெடியாக வெடித்தனர். ஆனாலும், அது டெல்லி அணியின் வெற்றிக்கு போதுமானதாக இருக்கவில்லை.

மும்பை இந்தியன்ஸ் அணி இந்த வெற்றியின் மூலம் படைத்துள்ள சாதனைகள் என்ன? ரோகித் சர்மா, ஜஸ்பிரித்சிங் பும்ரா எட்டியுள்ள புதிய மைல்கற்கள் என்ன? இந்த போட்டிக்குப் பிறகு புள்ளி பட்டியலில் இரு அணிகளும் எந்த இடத்தில் உள்ளன?

மும்பைக்கு முதல் வெற்றி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மும்பை அணியின் ரோஹித் சர்மா, இஷான் கிஷன் அருமையான தொடக்கத்தை அளித்தனர்.

மீண்டும் ஃபார்முக்கு வந்த ரோஹித் சர்மா

டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. மும்பை அணியின் ரோஹித் சர்மா, இஷான் கிஷன் அருமையான தொடக்கத்தை அளித்தனர். கேப்டன் கிரீடம் என்ற சுமை இல்லாமல் ரோஹித் சர்மா தொடக்கத்தில் இருந்தே தனது இயல்பான ஆட்டத்துக்கு திரும்பி, டெல்லி பந்துவீச்சை வெளுக்கத் தொடங்கினார்.

இசாந்த் சர்மா வீசிய 2வது ஓவரில் தொடர்ந்து 2 பவுண்டரிகள் உள்பட 14 ரன்களை ரோஹித் விளாசினார். கலீல் அகமது ஓவரில் இஷான் கிஷன் 2 பவுண்டரிகளையும், கெய் ரிச்சர்ட்சன் ஓவரில் ரோஹித் சர்மா 2 சிக்ஸர்கள் உள்பட 13 ரன்களை விளாசினார்.

இதனால் மும்பை அணியின் ரன்ரேட் ராக்கெட் வேகத்தில் சென்றது. இஷான் கிஷன் நிதானமாக பேட் செய்ய ரோஹித் சர்மா 'பழைய பன்னீர்செல்வம்' போல் டெல்லி பந்துவீச்சை துவம்சம் செய்தார்.

வேகப்பந்துவீச்சை வெளுக்கிறார்கள் என்பதால் 5-வது ஓவரிலேயே அக்ஸர் படேல் அழைக்கப்பட்டார். ஆனால் அக்ஸர் பந்துவீச்சையும் ரோஹித் விட்டுவைக்கவில்லை. சிக்ஸர், பவுண்டரி என 14 ரன்களை ரோஹித் எடுத்தார். லலித் யாதவ் வீசிய 6வது ஓவரில் 3 பவுண்டரி உள்பட 15 ரன்களை ரோஹித் விளாசினார். இதனால் பவர்ப்ளே ஓவரில் மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 75 ரன்கள் குவித்தது.

மும்பைக்கு முதல் வெற்றி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரோஹித் சர்மா, இஷான் கிஷன் அதிரடியால் பவர்ப்ளே ஓவரில் மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 75 ரன்கள் குவித்தது.

360 டிகிரி பேட்டர் ஏமாற்றம்

அக்ஸர் படேல் வீசிய 7-வது ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து ரோஹித் சர்மா ஒரு ரன்னில் அரை சதத்தை தவறவிட்டு 49 ரன்னில் (27 பந்துகள், 3 சிக்ஸர், 6 பவுண்டரி) ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இஷான்-ரோஹித் இருவரும் 80 ரன்கள் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்துப் பிரிந்தனர்.

2வது விக்கெட்டுக்கு களமிறங்கிய 360 டிகிரி பேட்டர் சூர்யகுமார் யாதவ் வந்த வேகத்தில் நோர்க்கியா பந்துவீச்சில் பிரேசரிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட்டில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா, இஷானுடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக ரன்களைச் சேர்த்தனர். ரோஹித் இருந்தபோது ராக்கெட் வேகத்தில் சென்ற ரன்ரேட் சரியத் தொடங்கியது. நோர்க்கியா வீசிய 10-வது ஓவரில் ஹர்திக் பவுண்டரியும், இஷான் ஒரு சிக்ஸரும் என 13 ரன்கள் சேர்த்தனர். மும்பை அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் சேர்த்தது.

ரன்ரேட் சரிவு

அக்ஸர் வீசிய 11வது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் விளாசிய இஷான் கிஷன் அடுத்த பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து 42 ரன்னில் விக்கெட்டை இழந்து வெளியேறினார். 4வது விக்கெட்டுக்கு களமிறங்கிய திலக் வர்மா 6 ரன்னில் கலீல் அகமது பந்துவீச்சில் அக்ஸரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

5-வது விக்கெட்டுக்கு வந்த டிம் டேவிட், ஹர்திக்குடன் சேர்ந்தார். 15 ஓவர்களுக்கு மேல்தான் இருவரும் அடித்து ஆடத் தொடங்கினர். ரிச்சர்ட்சன் வீசிய 16-வது ஓவரில் டேவிட் ஒரு சிக்ஸர் உள்பட 12 ரன்களை மும்பை அணி எடுத்தது. கலீல் அகமது வீசிய 17-வது ஓவரில் ஹர்திக் இரு சிக்ஸர்கள் உள்ளிட்ட 17 ரன்களை விளாசினார்.

நோர்க்கியா வீசிய 18-வது ஓவரில் டேவிட் பவுண்டரியும் நோபாலில் ஒரு சிக்ஸரும் விளாசினார். அதே ஓவரின் 5வது பந்தில் பிரேசரிடம் கேட்ச் கொடுத்து ஹர்திக் 39 ரன்னில் விக்கெட்டை இழந்தார். 5-வது விக்கெட்டுக்கு இருவரும் 60 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

மும்பைக்கு முதல் வெற்றி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நோர்க்கியாவின் பந்துவீச்சை துவம்சம் செய்த ஷெப்பர்ட்.

ஆட்டத்தை மாற்றிய பேட்டர்

அடுத்துவந்த ஷெப்பர்ட், டேவிட்டுடன் இணைந்தார். இசாந்த் வீசிய 19-வது ஓவரின் முதல் பந்தில் ஷெப்பர்ட் பவுண்டரி விளாசி, கடைசி இரு பந்துகளில் ஒரு சிக்ஸர், பவுண்டரி என 19 ரன்கள் குவித்தார்.

கடைசி ஓவரை நோர்க்கியா வீசினார். இந்த ஓவர் தான் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. நோர்க்கியா ஓவரை எதிர்கொண்ட ஷெப்பர்ட் முதல் பந்தில் பவுண்டரியும், அடுத்து ஹாட்ரிக் சிக்ஸரும் அடித்து பறக்கவிட்டார். 5வது பந்தில் மீண்டும் பவுண்டரியும், 6வது பந்தில் சிக்ஸர் என வானவேடிக்கை நிகழ்த்தினார்.

மும்பை அணி கடைசி 8 பந்துகளில் மட்டும் 42 ரன்கள் குவித்தது. ஒரு கட்டத்தில் 200 ரன்களைத் தாண்டுமா என்று கவலைப்பட்ட நிலையில், 20 ஓவர்களில் 234 ரன்கள் குவித்தது. ரொமாரியோ ஷெப்பர்ட் 10 பந்துகளில் 4 சிக்ஸர், 3 பவுண்டரி என 39 ரன்கள் சேர்த்தும், டிம் டேவிட் 45 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ரோஹித் சர்மா பவர்ப்ளேயில் அமைத்துக் கொடுத்த அடித்தளத்தை நடுவரிசை பேட்டர்கள் கொண்டு செல்ல தவறியதால், டெல்லி பந்துவீச்சாளர்கள் ரன்ரேட்டை இழுத்துப் பிடித்தனர். ஆனால் கடைசி 8 பந்துகள் ஆட்டத்தின் போக்கை மாற்றிவிட்டது.

மும்பை அணியில் எந்த பேட்டரும் அரைசதம் அடிக்கவில்லை என்றாலும் கூட அந்த அணி 234 ரன்களைக் குவித்தது. வான்கடே மைதானத்தில் மும்பை அணி அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும், ஐபிஎல் தொடரில் 3வது அதிகபட்ச ஸ்கோர்.

மும்பை பேட்டர் ஷெப்பர்ட் போட்டி தொடங்கும் முன் அளித்த பேட்டியில் “நான் கிரீஸில் இருக்கும் போது எனக்கு பந்துவீசுவது யாராக இருந்தாலும் சரி உங்கள் பலமா அல்லது என்னுடைய பலமா என்று பார்த்துவிடலாம்” எனச் சவால் விட்டிருந்தார்.

அதுபோல் கடைசி ஓவரை வீசிய நோர்க்கியா தனது பந்துவீச்சில் ஸ்லோவர் பால், யார்கர், லென்த்தை மாற்றி வீசியும் ஷெப்பர்டை கட்டுப்படுத்த முடியவில்லை. நோர்க்கியாவின் பந்துவீச்சை ஷெப்பர்ட் துவைத்து எடுத்துவிட்டார்.

மும்பைக்கு முதல் வெற்றி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இதற்கு மேலும் நோர்க்கியாவை ப்ளேயிங் லெவனில் வைப்பது குறித்து டெல்லி அணி நிர்வாகம் யோசிக்க வேண்டும் என்று வர்ணனையாளர்கள் விமர்சித்தனர்.

தொடர்ந்து ஏமாற்றும் நோர்க்கியா

இந்த ஐபிஎல் சீசன் தொடங்கியதில் இருந்து 4 போட்டிகளில் நோர்க்கியா 215 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார். அதாவது சராசரியாக ஓவருக்கு 25 ரன்கள் வாரி வழங்கியுள்ளார்.

அதிலும் கடைசி 4 போட்டிகளிலும் நோர்க்கியா கடைசி ஓவரில் பந்துவீசும் போதெல்லாம் சிக்ஸர்களை வாரிக் கொடுத்துள்ளார். கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் நோர்க்கியா வீசிய 19-வது ஓவரில் ரிங்கு சிங் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி விளாசினார்.

சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் நோர்க்கியா வீசிய 20-வது ஓவரில் தோனி 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளை துவம்சம் செய்தார். ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 20-வது ஓவரை நோர்க்கியா வீசும்போது ரியான் பராக் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளை துவைத்து எடுத்தார்.

இந்த ஆட்டத்தில் ஷெப்பர்ட் 4 சிக்ஸர்கள், 2 பவுண்டர்கள் என உரித்து எடுத்துவிட்டார். இதற்கு மேலும் நோர்க்கியாவை ப்ளேயிங் லெவனில் வைப்பது குறித்து டெல்லி அணி நிர்வாகம் யோசிக்க வேண்டும் என்று வர்ணனையாளர்கள் விமர்சித்தனர்.

மும்பைக்கு முதல் வெற்றி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரித்வி ஷா 66 ரன்கள் சேர்த்த நிலையில் பும்ரா வீசிய யார்கரில் க்ளீன் போல்டாகி வெளியேறினார்.

வார்னரின் சொதப்பல், ப்ரித்வி ஷாவின் அதிரடி ஆட்டம்.

235 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் டெல்லி கேபிடல்ஸ் அணி களமிறங்கியது. வார்னர், பிரித்வி ஷா ஆட்டத்தைத் தொடங்கினர். கோட்ஸி வீசிய முதல் ஓவரில் சிக்ஸரும், பும்ரா வீசிய 2வது ஓவரில் பவுண்டரியும் அடித்து பிரித்வி ஷா அதிரடியாகத் தொடங்கினார்.

பேட்டிங்கில் கலக்கிய ஷெப்பர்ட் பந்துவீச்சிலும் முக்கிய விக்கெட்டை எடுத்துக் கொடுத்தார். ஷெப்பர்ட் வீசிய 4வது ஓவரில் வார்னர் சிக்ஸர் விளாசிய நிலையில் அடுத்த பந்தில் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து 10 ரன்னில் வெளியேறினார்.

அடுத்து அபிஷேக் போரெல் களமிறங்கி, பிரித்வி ஷாவுடன் சேர்ந்து ரன்ரேட்டை உயர்த்த முயன்றனர். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் டெல்லி அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

பியூஷ் சாவ்லா வீசிய 8-வது ஓவரை குறிவைத்த பிரித்வி ஷா 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 16 ரன்கள் சேர்த்தார். கோட்ஸி வீசிய 9-வது ஓவரிலும் பிரித்வி ஷா 2 பவுண்டரிகளும், அபிஷேக் ஒரு பவுண்டரியும் என 15 ரன்கள் சேர்த்தனர். 10 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் சேர்த்தது. பிரித்வி ஷா 31 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

அபிஷேக், பிரித்வி ஷா இருவரும் டெல்லி அணியின் ரன்ரேட்டை மெல்ல உயர்த்தினர், ஒவருக்கு 10 ரன்கள் வீதம் கொண்டு சென்றனர். பும்ரா வீசிய 12வது ஓவரில் திருப்பம் ஏற்பட்டது. பிரித்வி ஷா 66 ரன்கள் சேர்த்த நிலையில் பும்ரா வீசிய யார்கரில் க்ளீன் போல்டாகி வெளியேறினார். 2வது விக்கெட்டுக்கு அபிஷேக்-பிரித்வி ஷா 88 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

மும்பைக்கு முதல் வெற்றி

பட மூலாதாரம், Getty Images

பும்ராவின் யார்க்கர்கள்

அடுத்து டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் களமிறங்கி, அபிஷேக்குடன் சேர்ந்தார். பியூஷ் சாவ்லா வீசிய 13-வது ஓவரில் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்களை விளாசி 16 ரன்கள் சேர்த்தார். கடைசி 6 ஓவர்களில் டெல்லி அணி வெற்றி பெற 97 ரன்கள் தேவைப்பட்டது.

பும்ரா வீசிய 15-வது ஓவரில் அபிஷேக் 41 ரன்கள் சேர்த்த நிலையில் டேவிட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த ரிஷப் பந்த் (1), அக்ஸர் படேல் (8), லலித் யாதவ் (3), குஷாக்ரா (0) ரிச்சர்ட்ஸன் (2) என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.

194 ரன்கள் வரை 4 விக்கெட்டுகளை இழந்திருந்த டெல்லி அணி அடுத்த 7 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. கோட்ஸி வீசிய 20-வது ஓவரில் மட்டும் டெல்லி பேட்டர்கள் 3 பேர் தேவையின்றி விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர்.

கேப்டன் ரிஷப் பந்த் களத்துக்கு வந்ததில் இருந்தே திணறினார். ரிஷப் பந்த் யார்கர் விளையாட திணறுவார் எனத் தெரிந்து பும்ரா தொடர்ந்து யார்கர்களாக வீசி அவரின் விக்கெட்டை வீழ்த்தினார்.

அக்ஸர் படேல் மிகவும் சோம்பேறித்தனமாக ரன் ஓடி தேவையின்றி ரன்அவுட் ஆனார். 2வது ரன் ஓடும்போது, மெதுவாக ஓடி இஷான் கிஷனால் ரன்அவுட் ஆனார்.

இதில் விக்கெட்டுகள் ஒருபக்கம் வீழந்தபோதிலும் டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் மும்பை பந்துவீச்சை வெளுத்துக் கட்டினார். மத்வால் வீசிய 17-வது ஓவரில் நோபால் பவுண்டரி, ஒரு சிக்ஸர், பவுண்டரி என 19 ரன்கள் சேர்த்த ஸ்டெப்ஸ் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

ஷெப்பர்ட் வீசிய 19-வது ஓவரிலும் 3 சிக்ஸர்களை ஸ்டெப்ஸ் பறக்கவிட்டார். 25 பந்துகளில் 71 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார் ஸ்டெப்ஸ்.

ரிஷப் பந்த் கருத்து

டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் கூறுகையில் “பவர்ப்ளேயில் போதுமான ரன்களைக் குவிக்கவில்லை. அடுத்தடுத்து ஆட்டத்தை திருப்ப முயன்றோம், ஆனால் ரன்ரேட் அழுத்தத்தால் கடினமாக இருந்தது. இன்னும் ஒரு ஓவர் இருந்திருந்தால் ஆட்டத்தின் முடிவே மாறி இருந்திருக்கும்.

போட்டியின் முடிவு மீது பழிசுமத்துவதை விட்டு, எங்களை முன்னேற்றுவதற்கு பார்க்க வேண்டும். ஆடுகளம் பேட்டர்களுக்கு ஏதுவாக இருந்தது. டெத்ஓவர் பந்துவீச்சையும், பவர்ப்ளே பேட்டிங்கையும் மேம்படுத்த உழைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

MI vs DC

பட மூலாதாரம், Getty Images

ஹர்திக் பாண்டியா பேசியது என்ன?

பரிசளிப்பு விழாவில் பேசிய மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா, "இந்த உணர்வை(வெற்றி பெறும்) நான் அடிக்கடி பெற விரும்புகிறேன். நாங்கள் எங்கள் திட்டங்களில் வியூக ரீதியாக சில மாற்றங்களைச் செய்வோம், ஆனால் அடிக்கடி இல்லை. நாங்கள் மூன்று ஆட்டங்களில் தோற்றோம் என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் நம்பிக்கையும் ஆதரவும் இருந்தது. எங்களுக்கு ஒரே ஒரு வெற்றி மட்டுமே தேவை என்று அனைவரும் நம்பிோம்.

6 ஓவர்களில் 77 ரன்கள் என்ற நிலையில் தொடங்குவது சிறப்பானது. ரொமாரியோவின் அதிரடி தான் இந்த ஆட்டத்தை வித்தியாசப்படுத்தியது. அவரே ஆட்டத்தை எங்களுக்கு வென்று தந்தார். அவர் முகத்தில் எப்போதும் புன்னகையுடன் இருப்பார், அவர் விளையாடிய விதத்தில் மிகவும் பெருமைப்படுவார், அவரால் அணிக்கு பெருமை. எல்லாம் நல்லபடியாக அமைந்தது. சரியான நேரத்தில் பந்துவீசுவேன்." என்று தெரிவித்தார்.

சாதனைகள்

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி பெற்ற 150வது வெற்றி இதுவாகும்.

ஒரே மைதானத்திலும் 50 போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் அணி என்ற சாதனையையும் மும்பை அணி படைத்துள்ளது.

ஜஸ்பிரித் பும்ரா, ஐ.பி.எல்.லில் 150 விக்கெட்டுகளை கடந்தார். ஐ.பிஎல். தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு அவர் முன்னேறியுள்ளார்.

ரோஹித் சர்மா ஐபிஎல்லில் தனது 100வது கேட்ச்சை பிடித்தார். விராட் கோலி அதிகபட்சமாக 110 கேட்ச்களை எடுத்துள்ளார்.

புள்ளிப் பட்டியலில் என்ன மாற்றம்?

2024 ஐபிஎல் சீசனில், ஹர்திக் பாண்டியா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 போட்டிகளுக்குப் பின் 4வது ஆட்டத்தில் முதல் வெற்றியை ருசித்து புள்ளிக்கணக்கைத் தொடங்கி, 8-வது இடத்துக்கு உயர்ந்துள்ளது. மாறாக டெல்லி கேபிடல்ஸ் அணி 5 போட்டிகளில் ஒரு வெற்றி, 4 தோல்வி என 2 புள்ளிகளுடன் அடுத்தடுத்த தோல்வியால் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)