தோல்வியை மறந்துவிட்டு தோனியைக் கொண்டாடும் சென்னை ரசிகர்கள் - என்ன காரணம்?

பட மூலாதாரம், SPORTZPICS
ஐபிஎல் டி20 கிரிக்கெட்டில் ஒரு அணி வெற்றி பெறும்போது, ஒரு பேட்டர் அல்லது பந்துவீச்சாளர் சிறப்பாக செயல்பட்டால் அந்த அணியின் ரசிகர்கள், அல்லது அந்த வீரரின் ரசிகர்கள் கொண்டாடுவார்கள், சிலாகிப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஆனால், ஒரு அணி போட்டியில் வென்றாலும் ரசிகர்களால் கொண்டாடப்படும், தோற்றாலும் கொண்டாடப்படும் என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டும்தான். காரணம் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி.
சிஎஸ்கே என்றாலே தோனி, தோனி என்றாலே சிஎஸ்கே என்று ரசிகர்கள் மனதில் பதியவைத்துவிட்டார்கள். தோனி பேட்டோடு களத்துக்கு வந்தாலே கொண்டாடுவோம் அவர் சிக்ஸர், பவுண்டரி அடித்தால் விட்டுவிடுவோமா என்று ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்தனர்.
2023ம் ஆண்டு ஐபிஎல் இறுதி ஆட்டத்துக்குப்பின் இந்த சீசனில் 2 போட்டிகள் முடிந்தும் இன்னும் தோனி களமிறங்கவில்லையே என்று ரசிகர்கள் காத்திருந்தார்கள். அந்த காத்திருப்புக்கு நேற்றை ஆட்டத்தில் பலன் கிடைத்தது. வெற்றிதானே…அது கிடக்கட்டும் தோனி களமிறங்கிவிட்டார், அதிலும் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்துள்ளார் என்று ரசிகர்கள் சிலாகித்தனர்.

பட மூலாதாரம், SPORTZPICS
கடைசி ஓவரில் சிஎஸ்கே வெற்றிக்கு 41 ரன்கள் தேவை. சிஎஸ்கே தோல்வி தெரிந்துவிட்டது. ஆனாலும் நார்கியா வீசிய கடைசி ஓவரில் தோனி அடித்த 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களால் ரசிகர்களின் உற்சாகக் குரல் விசாகப்பட்டினம் மைதானத்தை அதிரவைத்தது. 16 பந்துகளில் 4பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 37 ரன்கள் சேர்த்து 231 ஸ்ட்ரைக் ரேட்டில் தோனி பேட் செய்தார்.
ஒரு அணி தோற்றாலும் கொண்டாடப்படும், வென்றாலும் கொண்டாடப்படும் என்றால் அது ‘தோனி இருக்கும்வரை’ சிஎஸ்கே மட்டும்தான். விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 13-வது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி.
முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் சேர்த்தது. 192 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்கோடு களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 20 ரன்களில் தோல்வி அடைந்தது.
இந்த வெற்றி மூலம் டெல்லி கேபிடல்ஸ் அணி தன்னுடைய புள்ளிக்கணக்கைத் தொடங்கியுள்ளது. முதலிடத்தில் இருந்த சிஎஸ்கே அணி தோல்வியால் நிகர ரன்ரேட் சரிந்து 2வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், DELHI CAPITALS/X
‘சிங்கத்துக்கு’ தண்ணி காட்டிய ஆட்டநாயகன்
சிஎஸ்கே பேட்டர்களுக்கு நேற்றைய ஆட்டத்தில் தொடக்கத்தில் இருந்தே தன்னுடைய பந்துவீச்சு வேரியேஷனில் சிம்மசொப்னாக இடதுகை வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமது இருந்தார். 4 ஓவர்கள் வீசிய கலீல் அகமது ஒரு மெய்டன் ஓவர், 15 பந்துகள் டாட்பால், 21 ரன்கள் 2 முக்கிய விக்கெட்டுகள் என கலக்கினார். ஆட்டநாயகன் விருதும் அவருக்கே வழங்கப்பட்டது.
போட்டிக்குப் பிறகு டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் கூறுகையில் “ எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர். கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்றோம். திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி பெற்றோம். பிரித்வி ஷா கடினமாக பயிற்சி எடுத்துவந்தார், அவருக்கு அளித்த வாய்ப்பையும் சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளார். முகேஷ் குமார் டெத் ஓவர்களில்அருமையாகப் பந்துவீசினார். கடந்த ஓர் ஆண்டாக பெரிதாக நான் கிரிக்கெட் ஆடவில்லை, ஆனாலும், என்னால் ஆட்டத்தை மாற்ற முடியும் என்று மட்டும் நம்பினேன். இன்னும் நான் கிரிக்கெட்டை கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், DELHI CAPITALS/X
டெல்லி அணி தீட்டிய திட்டம் என்ன?
டெல்லி கேபிடல்ஸ் அணி தனது திட்டத்தை சிறிது பிசகாமல் செயல்படுத்தி வெற்றி பெற்றுள்ளது. சிஎஸ்கே போன்ற பெரிய பேட்டர்கள், பந்துவீச்சாளர்களை வைத்திருக்கும் அணிக்கு எதிராக வெல்வது கடினம் என்று தெரிந்து திட்டமிட்டு காய்களை நகர்த்தி வெற்றி கண்டுள்ளது.
குறிப்பாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இடதுகே வேகப்பந்துவீச்சில் பலவீனம் என்பதை தெரிந்து கொண்டு கலீல் அகமதுவை பந்துவீசச் செய்து விக்கெட்டைத் தூக்கினர், போனஸா ரவீந்திரா விக்கெட்டும் கிடைத்தது. அடுத்ததாக ரன்ரேட்டில் நெருக்கடி கொடுக்க இசாந்த் சர்மா, நோர்க்கியா பயன்படுத்தினர்.
சிஎஸ்கே பேட்டர்களுக்கு ஒரு பந்தைக் கூட ஸ்லாட்டில் வீசாமல் பெரும்பாலான பந்துகளை ஆப்சைட் யார்கர், யார்கராக வீசி நோர்க்கியா நெருக்கடி அளித்தார். அதிலும் ஷிவம் துபே சுழற்பந்துவீச்சை வெளுத்துவிடுவார், வேகப்பந்துவீச்சில் ஷார்ட் பந்தில் விக்கெட்டை இழந்துவிடுவார் எனத் தெரிந்து அவர் பேட் செய்தபோது சுழற்பந்துவீச்சைப் பயன்படுத்தவில்லை. மாறாக,நோர்க்கியா, முகேஷ் குமார், இசாந்த் சர்மாவைப் பயன்படுத்தி விக்கெட்டை எடுத்தனர்.
இ்ப்படி ஒவ்வொரு பேட்டராக அவரின் பலவீனம்அறிந்து கட்டம்கட்டி டெல்லி கேபிடல்ஸ் பந்துவீச்சாளர்கள் செயல்பட்டனர். பீல்டிங்கிலும் ஓரளவுக்கு சிறப்பாகவே செயல்பட்டனர். பெரும்பாலும் மோசமான பந்துகளை வீசவில்லை, அதேநேரம் பீல்டிங் அமைந்திருந்தற்கு ஏற்றாற்போல் பந்துவீசியதால் பெரிய அளவுக்கு பீல்டிங்கை கோட்டைவிடவில்லை.
தோனி களமிறங்கி முதல் பந்தில் பவுண்டரி அடித்தநிலையில் 2வது பந்தில் தேர்டு மேன் திசையில் கலீல் அகமதுவிடம் அடித்தார். கையில் கிடைத்த பந்தை கலீல் அகமது கேட்ச்பிடிக்கத் தவறிவிட்டார். இந்த கேட்சைப்பிடித்திருந்தால், சிஎஸ்கே ரசிகர்களின் கனவு கலைந்திருக்கும். அதேபோல, கேப்டன் ரிஷப்பந்தும் ஒரு கேட்சைத் தவறவிட்டார்.

பட மூலாதாரம், DELHI CAPITALS/X
பிரித்விஷா வருகையும், அதிரடி தொடக்கம்
ஐபிஎல் ஏலத்தில் டெல்லி அணி தக்கவைத்த 4 வீரர்களில் பிரித்வி ஷா முக்கியமானவர். அவரின் அதிரடி பேட்டிங் திறமை என்னவென்று தெரிந்து அணி நிர்வாகம் அவரைத் தக்கவைத்தது. கடந்த சீசனில் 8 இன்னிங்ஸ்களில் 106 ரன்கள் சேர்த்த பிரித்வி ஷா 13.25 சராசரி வைத்திருந்தார். ஆனால், கடந்த ஓர் ஆண்டில் தீவிரமான பயற்சிகள், உள்நாட்டுப் போட்டிகளில் கவனம் செலுத்தியது என பேட்டிங்கில் பிரித்வி ஷா மெருகேற்றி இருந்தார்.
டேவிட் வார்னருடன் சேர்ந்து இந்த முறை பிரித்வி ஷா களமிறங்கினார். ஒருபுறம் சிஎஸ்கே பந்துவீச்சை வார்னர் வெளுக்க, மற்றொரு ஸ்ட்ரைக்கில் பிரித்வி ஷா தனது டிரேட்மார்க் ஷாட்களை ஆடி ரன்களைக் குவித்தார். குறிப்பாக அவரின் கவர் டிரைவ் ஷாட் சச்சினின் ஷாட்டை நினைவுபடுத்தியது. பந்தின் வேகத்துக்கு ஏற்றாற்போல் தட்டிவிடும் கலையை சச்சினிடம் இருந்து பிரித்வி ஷா கற்றதை நினைவூட்டினார்.
பவர்ப்ளேயில் விக்கெட் இழப்பின்றி டெல்லி கேபிடல்ஸ் 61 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா, ரஹ்மான், தீபக் சஹர் ஓவர்களை வெளுத்த வார்னர் 3 சிக்ஸர்கள், 4பவுண்டரிகளுடன் 32 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதன் மூலம் டி20 போட்டிகளில் 50 ரன்களுக்கு மேல் அதிகமுறை(110) சேர்த்த கிறிஸ் கெயிலின் சாதனையை வார்னர் சமன் செய்தார்.
முதல் விக்கெட்டுக்கு பிரித்வி ஷா-வார்னர் கூட்டணி 93 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச்சில் ரிவர்ஸ் ஸ்கூப் ஆடி வார்னர் அடித்த பந்தை பதிரனா பாய்ந்து சென்று ஒற்றைக் கையில் அருமையான கேட்சாக்கினார். வார்னர் 52 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

பட மூலாதாரம், CSK/X
யார்க்கர்கள் மூலம் மிரட்டிய பதிரணா
அடுத்து கேப்டன் ரிஷப் பந்த் களமிறங்கி, பிரித்வி ஷாவுடன் இணைந்தார். இந்த சீசனின் முதல் போட்டியிலேயே அரைசதம் நோக்கி நகர்ந்த பிரித்வி ஷா 43 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அடுத்துகளமிறங்கிய மிட்ஷெல் மார்ஷ்(18), ஸ்டப்ஸ்(0) விக்கெட்டுகளை பதிரணா யார்க்கர் மூலம் 15-வது ஓவரில் வீழ்த்தி டெல்லி அணிக்கு நெருக்கடி அளித்தார்.
தொடக்கத்தில் ரிஷப் பந்த் தடுமாற்றத்துடன் பேட் செய்து ரன்களைச் சேர்த்தார். 23 பந்து 23 ரன்கள் சேர்த்திருந்தார். அதன்பின் ரன்வேகத்தை டாப் கியருக்கு கொண்டு சென்ற ரிஷப் பந்த், பதிரணா வீசிய 19-ஆவது ஓவரில் பவுண்டரி, சிக்ஸர்களாக வெளுத்தார். 31 பந்துகளில் அரைசதம் அடித்து பதிரணா வீசிய அதேஓவரில் 52 ரன்களில் கெய்க்வாட்டால் கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்தார்.
இந்த 3 பேரும்தான் டெல்லி கேபிடல்ஸ் அணி ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாகும். ஆல்ரவுண்டர் என்ற ரீதியில் மிட்ஷெல் மார்ஷை ஏலத்தில் எடுத்து இதுவரை ஒரு போட்டியில் கூட பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கியும் பெரிதாக சோபிக்கவில்லை. அதேபோல ஸ்டெப்ஸும் பெரிய ஸ்கோருக்கு இதுவரை செல்லவில்லை.

பட மூலாதாரம், CSK/X
சிஎஸ்கே அணி சறுக்கியது எங்கே?
சிஎஸ்கே அணியின் நேற்றைய பந்துவீச்சு படுமோசமாக இருந்தது. அதிலும் பவர்ப்ளே ஓவரின்போது தீபக் சஹருக்கு வாய்ப்பளித்து ரன்களை வாரிக் கொடுக்க வைத்தனர். வார்னருக்கு ஸ்லாட்டில் போடக்கூடாது என்பதைத் தெரிந்துகொண்டே அதே இடத்தில் தீபக் சஹரும், முஸ்தபிசுர் ரஹ்மானும் பிட்ச் செய்தனர்.
வார்னரும் கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சிக்ஸர்களாக,பவுண்டரிகளாக வெளுத்தார். வார்னர் போன்ற டி20 ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக நல்ல எக்னாமி வைத்திருக்கும் பந்துவீச்சாளர்களை பந்துவீச செய்திருக்கலாம் என்ற விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. டெல்லி அணியில் 4 இடதுகை பேட்டர்கள் இருப்பதால், ஆஃப் ஸ்பின்னர் ஒருவரை சிஎஸ்கே ப்ளேயிங் லெவனில் சேர்த்திருக்கலாம், அல்லது சான்ட்னருக்கு வாய்ப்பு வழங்கியிருக்கலாம். இந்த ஆட்டத்தில் தீபக் சஹர், முஸ்தபிசுர் ரஹ்மான், ஜடேஜா மூவரும் சேர்ந்து 132 ரன்களை வாரி வழங்கினர்.
சிஎஸ்கே பேட்டர்களைக் கட்டுப்படுத்த டெல்லி கேப்டன் ரிஷப் பந்த் 7 வகையான பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தினார். ஆனால், சிஎஸ்கே அணி 5 பந்துவீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்தியது. சிஎஸ்கே அணியில் இருந்த டேரல் மிட்ஷெல், ரச்சின் ரவீந்திராவுக்கு கூட சில ஓவர்களை கேப்டன் கெய்க்வாட் வழங்கியிருக்கலாம் என்ற கருத்து எழுந்திருக்கிறது.

பட மூலாதாரம், CSK/X
சிஎஸ்கேவுக்கு ஷாக் அளித்த கலீல்
சிஎஸ்கே அணிக்கு தொடக்கத்திலேயே இடதுகை வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமது அதிர்ச்சியளித்தார். கலீல் தான் வீசிய முதல் ஓவரின் கடைசிப்பந்தில் ரச்சின் ரவீந்திராவை ஒரு ரன்னில் வெளியேற்றி ஷாக் அளித்தார். 2வது ஓவரை இஷாந்த் சர்மா கட்டுக்கோப்பாக வீசி 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.
3வது ஓவரை வீசிய கலீல், கேப்டன் கெய்க்வாட் விக்கெட்டை சாய்த்து, சிஎஸ்கே அணிக்கு அடுத்த ஷாக் அளித்தார். 3வது விக்கெட்டுக்கு ரஹானே, மிட்ஷெல் ஜோடி சேர்ந்தனர். ரஹானே அவ்வப்போது பவுண்டரிகள், சிக்ஸர்கள் அடிக்க, பவர்ப்ளேயில் சிஎஸ்கே 2 விக்கெட் இழப்புக்கு 32 ரன்கள் மட்டுமே சேர்த்தபோதே தோல்வி எழுதப்பட்டுவிட்டது.
ரஹானே-மிட்ஷெல் ஜோடி திணறல்
ரஹானே, மிட்ஷெல் ஜோடியும் அதிரடி ஆட்டத்துக்கு கியரை மாற்ற முடியாத அளவுக்கு டெல்லி கேபிடல்ஸ் பந்துவீச்சாளர்கள் பந்துவீசினர். ரசிக்சலாம் வீசிய 10ஆவது ஓவரில் ரஹானே, மிட்ஷெல் தலா ஒரு சிக்ஸர் விளாசினர்.
10 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 2விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. 11வது ஓவரை அக்ஸர் படேல் வீசினார். 2வது பந்தில் அக்ஸரிடமே கேட்ச் கொடுத்து மிட்ஷெல் 34 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
இம்பாக்ட் வீரராக களமிறங்கிய ஷிவம் துபேவுக்கும் நேற்று இயல்பு ஆட்டத்துக்கு திரும்பமுடியவில்லை. பெரிய ஷாட்களுக்கு துபே முயன்றும், டெல்லி வீரர்களின் பந்துவீச்சு சிறப்பாக அமைந்தது.

பட மூலாதாரம், CSK/X
சிஎஸ்கேவை தோல்வியில் தள்ளிய முகேஷ்
முகேஷ்குமார் 14-வது ஓவரை வீச அழைக்கப்பட்டார். தன்னுடைய முதல் ஓவரிலேயே ஸ்லோபாலில் ரஹானே (45ரன்கள்) விக்கெட்டையும், அடுத்து களமிறங்கிய ரிஸ்வி விக்கெட்டையும் சாய்த்து சிஎஸ்கே அணியை தோல்வியில் தள்ளினார்.
அடுத்துவந்த ஜடேஜா, துபேயுடன் சேர்ந்தார். நோர்க்கியா 150கி.மீ வேகத்தில் வீசும் பந்துகளை எதிர்கொண்டு பேட் செய்ய இருவரும் சிரமப்பட்டனர். அதிலும்நோர்க்கியா திட்டமிட்டு ஆப்சைட் யார்கர், யார்கராக வீசி பெரிய ஷாட்களுக்கு செல்லவிடாமல் தடுத்தார்.
முகேஷ் குமார் வீசிய 16-ஆவது ஓவரின் முதல் பந்தில் துபே18 ரன்னில் ஸ்டெப்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து தோனி களமிறங்கினார். தோனி களத்துக்கு வரும்போது, பாட்ஷா படப் பாடலின் பின்னணி இசைஒலிக்க, ரசிகர்களின் ஆரவாரமும் சேர்ந்து அரங்கை அதிரவைத்தது.

பட மூலாதாரம், CSK/X
தோனி வருகையும், தோல்வியும்
தோனி சந்தித்த முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தார். அதே ஓவரில் மேலும் 2 பவுண்டரிகளை தோனி விளாசினார். கடைசி 3 ஓவர்களில் சிஎஸ்கே வெற்றிக்கு 58 ரன்கள் தேவைப்பட்டது.
உலகின் சிறந்த ஃபினிஷராக அறியப்படும் தோனியால் இந்த ஸ்கோரை அடித்து சிஎஸ்கே அணியை வெல்ல வைக்க முடியும் என்றாலும் பழைய தோனி இப்போது இல்லை.
கலீல் அகமது வீசிய 18-வது ஓவரில் தோனி ஒரு சிக்ஸர் மட்டும் விளாசி 13 ரன்கள் சேர்க்கப்பட்டது. கடைசி 2 ஓவர்களில் சிஎஸ்கே வெற்றிக்கு 46 ரன்கள் தேவை. 19-வது ஓவரை கட்டுக்கோப்பாக வீசிய முகேஷ் குமார் ஒருபவுண்டரி, சிக்ஸர் கூடஅடிக்கவிடாமல் 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.
கடைசிவரை போராடிய தோனி
கடைசி ஓவரில் சிஎஸ்கே வெற்றிக்கு 41 ரன்கள் தேவை. சிஎஸ்கே தோல்வியும் எழுதப்பட்டுவிட்டது. இருப்பினும் ரன்ரேட்டை தக்கவைக்கும் முயற்சியில் தோனி இறங்கினார். நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளை தோனி விளாசினார். தோனி ஒவ்வொரு பவுண்டரியும், சிக்ஸரும் அடிக்கும்போது, ரசிகர்களின் உற்சாகக் குரல் அரங்கை அதிரச் செய்தது. தோனி 37 ரன்களிலும், ஜடேஜா 21 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

பட மூலாதாரம், SPORTZPICS
கவலையை மறந்து கொண்டாடும் சென்னை ரசிகர்கள்
சமூக ஊடகங்களிலும் தோனியே ஆதிக்கம் செலுத்துகிறார்.
ஐபிஎல்லில் சென்னை அணி தோற்ற தருணங்களில் பெரும்பாலும் கடுமையான விமர்சனங்களையே எதிர்கொண்டிருக்கிறது. ஆனால் இந்த முறை தோற்றதையே மறந்துவிட்டு ரசிகர்கள் தோனியை கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர்.
தோனியின் மனைவி சாக்ஷி உள்பட பலரும், தோற்றதைக் கூட உணராமல் தோனியின் ஆட்டத்தில் மெய் மறந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
தோனியின் பேட்டிங் பிரமாதமாக இருந்தது. கடினமான நாளாக இருந்தாலும் தோனி நேர்மறையான உணர்வுகளை தந்திருக்கிறார் என சி.எஸ்.கே பயிற்சியாளர் ஃப்ளெம்மிங் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை சேர்த்தது. பின்னர் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 171 ரன்கள் மட்டுமே எடுத்து நடப்பு தொடரில் முதல் தோல்வியை தழுவியிருக்கிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












